விடுதலை வீரமணியின் அவதூறுகள்: விமலாதித்த மாமல்லன் அய்யங்காராம்!

23/08/2013

“விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் இணைய தளத்தில் உலா வருகிறார்கள் எச்சரிக்கை என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சரி – கணிதத் தருக்கபூர்வமாக மேற்கண்டதைப் படித்தால்:

விமலாதித்த மாமல்லன் = முகமூடி
முகமூடி = மாஸ்க்
மாஸ்க் என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடம் = மசூதி.

ஆக, திராவிடத் தருக்கவியலை உபயோகித்து, யோசித்தால் — மசூதித் தளங்களில் அய்யங்கார்களும் இணைந்து உலவிக் கொண்டிருந்தால், அது மத நல்லிணக்கத்தைத் தானே காட்டும்? இது ஒரு நல்ல விஷயம்தானே? இது தொடர்பாக இந்த வீரமணி அவர்கள், எவருக்கு  எச்சரிக்கை கொடுக்கவேண்டும். எனக்கு இது புரியவில்லை. ஹ்ம்ம். குழப்பம். குழப்பம்.

ஹ்ம்ம். இணைய விடுதலையில் வந்த இந்த அக்கப்போர்ச் செய்தியை நண்பர்கள் எடுத்துக் காட்டவில்லை. நானேதான் படித்தேன்! எனக்கு, ‘சாரய்யா, வொங்ளப் பத்தி அவ்தூற் வந்த்றுக்’  என்று சொல்லும் சிஷ்யகேடிகள் கிடையாது. கடவுளுக்கு நன்றி.

ஆனால் இந்தக் கட்டுரை இப்படித் தொடர்கிறது…

“இப்பொழுது 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. 18 வயது நிரம்பியவர்கள் பெரும்பாலும் பொறியாளர்களாக இருக்கிறார்கள்.”

ஒரு தொடர்புமே இல்லாமல் இப்படியே விரிகிறது இந்தக் கட்டுரை. வாக்குரிமை வாக்கியம் சரி. ஆனால் அடுத்த – என்னை மிகமிகமிக திடுக்கிடவைக்கும் வரி — ”இவர்களில் பெரும்பாலோர் பொறியாளர்களாக இருக்கிறார்கள்” என்பது தான். எனக்கு இப்போது வரும் படுபயங்கர பீதியில் எங்கே, எப்படி ஓடுவதென்றே தெரியவில்லை.

இருக்கும் பொரியாளர்கள் பொரோபொரோ என்று பொரியைப் பொரிந்து கொண்டிருப்பது போதாதா? நம் நற்றமிழ் நாட்டில் இன்னமும் இந்தப் பொரியாளர்கள் பொரிக்கப் பட்டால், நாம் தாங்குவோமா? 18வயதிற்கு மேம்பட்டவர்களில் பெரும்பாலோர் இப்படிப் பொரிகடலை விற்க ஆரம்பித்தால் தமிழகம் தாங்குமா? அல்லது இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பொளேர் என்று அடிப்பதுதான் திராவிட இனமானப் பகுத்தறிவா?

ஆனால் என்னவோ நோஸ்ட்ரடாமஸ் போல இனமானத் தலைவர் பகர்கிறார் – நாமெல்லாம் பகபகவென்று சிரிப்பதற்கு…

-0-0-0-0-0-

“நம்முடைய இளைஞர்கள் இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால், நம்முடைய இன எதிரிகள் இருக்கிறார்களே, குறிப்பாக பார்ப்பனர்கள், அரசியல் எதிரிகள் இவர்கள் இணைய தளத்தைத்தான் அதிகமாக நம்புகிறார்கள். அதனால் இணைய தளத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் கண்டிப்பாக பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.”

எது அப்படி – இனமானஎதிரிகள் அனைவரும் விரும்பும் தளம் என்று தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தாலும் அந்தத் தளத்தை வெறுத்து ஒதுக்கவேண்டியதுதானே இனமானஎதிரெதிரிகள் வேலை. ஏன் இந்த எழவுக்கெல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்? இதுவும் எனக்குப் புரியவில்லை… ஒருவேளை விமலாதித்த மாமல்லன் அவர்களின் சுத்தசன்மார்க்க அய்யங்காரிய தளத்தைத் தான் இவர் சொல்கிறாரோ? அல்லது – இணையம் ஒரே தளம் என்று விரியும் விசாலமான பார்வையினால் விளைந்த அனர்த்தமா இது?

புரியவில்லையே தேவுடா!

ஓஓ... மறந்துவிட்டேன். நகைச்சுவைக்காக மட்டுமேதானே நான் ‘விடுதலை’ படிக்கவேண்டும். கொஞ்சம் தீவிரமாக இதனை எடுத்துக் கொண்டு விட்டேன். மன்னிக்கவும்.

-0-0-0-0-0-

எது எப்படியோ, விமா அவர்கள் விடுதலை வீரமணிக்கு எதிராக ஒரு மகாமகோநீள அவதூறு நோட்டீஸ் அனுப்ப பரிந்துரைக்கிறேன். இதற்கு ஜெயமோகன் அவர்களுக்கெதிராக, எஸ் வி ராஜதுரை அவர்கள் சார்பாக ஒரு ஸென்டமிள்  வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய வழக்குரைஞரைப் பரிந்துரை செய்கிறேன். (குறைந்தபட்ச டமாஸுக்கு நான் உத்திரவாதம்! ம்ம் – ஒரு வக்கீல் நோட்டீஸ் இவ்வளவு கேவலமாகவா இருக்கும்?)

சரி, விடுதலை இணைய தளத்தில், பகிரங்கமாகப் பதிவாகியிருக்கும் செய்தியில் உள்ள சில அவதூறுகளை, விமா அவர்களுடைய வக்கீலின் பார்வைக்காக விரிக்கிறேன், குறிப்புகளைக் கொடுக்கிறேன்.

முதல் அவதூறு:

எப்படி விமா அவர்களை இந்த விவீ அவர்கள்,  அய்யங்கார்  என்று நாக்கின் மீது பல்லைப்போட்டு அவதூறாகச் சொல்லலாம்? இப்படிப் பட்ட தமிழ்க் கொடுஞ்சொல்லை, கெட்ட வார்த்தையை விமா மேலே கவிழ்த்தியதற்கு, விவீ பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல், நஷ்டஈடாக, தினமும்  ஒரு முறை, அவருடைய விடுதலை.இன் தள அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவேண்டும். இவை இரண்டும் முடியாத பட்சத்தில் வக்கீல் நோட்டீஸ்  பாயும். ஆமென்.

ஆனால் நரசிம்மன் என்ற பெயரைப் படித்துவிட்டு விமா ஒரு அய்யங்கார் என்ற அதி அற்புத பகுத்தறிவு முடிவுக்கு வந்து விட்டார், நம் மேதகு விவீ அவர்கள் என நினைக்கிறேன்.

அப்படியானால் ஸ்டாலின் என்ற பெயர் படைத்த ஒரு குறிப்பிட்ட இளைஞர் அணித் தலைவர் (வயது: சுமார் 60 போல, இளைஞர்தான், பாவம்!) ஒரு ரஷ்யர்.

கருணாநிதி என்று அழைக்கப் படும் நபர், ஒரு பரஸ்பர சகாய நிதி நிறுவனம் (= கோபாலபுரம் குடும்ப சகாய நிதி ப்ரைவேட் லிமிடெட்) நடத்துபவர்.

ஏன், வீரமணி என்பவரே, ஒரு அழகான கணீர்க் குரலில் ஐயப்பன் பக்தி பஜனைப் பாட்டுக்கள் பாடுபவர்தாமே!! … ஹ்ம்ம்… எனக்கு, புல்லரிப்பு எழவு  நிற்கவே மாட்டேன் என்கிறது.

(நான் அறிந்தவரை விமா ஒரு மராத்தி அல்லது கன்னட பிராம்மணப் பின்புலம் கொண்டவர் – நிச்சயம் ஒரு கேடுகெட்ட திராவிடவிரோத(!) இனம்(!!)  சார்ந்த  ஒரு அய்யங்காரல்லர்! எனக்குத் தெரிந்தவரை, வூட்டுக்குள்ற ஜாதி-மத பேதம் பார்த்து வூட்டுக்கு வெளீல பகுத்தறிவு பகரும் அற்ப ஆசாமியில்லை இந்த விமா)

இரண்டாம் அவதூறு:

“இங்கிருந்து வெளிநாட்டிற்கு கணினித் துறை யில் வேலைக்குப் போனவர்கள் ஓய்வு நேரத்தில் உட்கார்ந்துகொண்டு, இணைய தளத்தில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவது; திராவிட இயக்கத் தலைவர்களைக் கொச்சைப் படுத்துவது, தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப்படுத்துவது, அந்த உணர்வே தேசத் துரோகம் என்று சொல்வது,  ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையா? அதைப்பற்றிப் பேசக்கூடாது; பகுத்தறிவா? அதைப்பற்றிப் பேசக்கூடாது. பகுத் தறிவை மறுப்பதற்கு இப்பொழுது அவனுக்குத் துணிவில்லை.  அதனால் என்ன செய்கிறான் –  பகுத்தறிவைப்பற்றி  பேசுவார்களே தவிர, அவர் கள் இரட்டை வேடம் போடுவார்கள்; அதை யெல்லாம் நீங்கள் நம்பாதீர்கள் என்று சொல்வார்கள்.”

இதில் தொக்கி நிற்கும் விஷயம் – விமா, ’வெளிநாட்டிற்கு கணினித் துறையில் வேலைக்குப் போனவர்’ என்பது. விமா அவர்களைப் பற்றி
ஆயிரம்  விமர்சனங்கள் இருக்கலாம் – ஏன், எனக்கே பல இருக்கின்றன.

ஆனால் படு அநியாயமாக, இவர் பேரில் ஒரு கொலைப் பழியைச் சுமத்தி – அதுவும் ஒரு கணினித்துறை  ப்ரம்மஹத்திப் பாவம் செய்பவராகச் சித்திரித்துள்ளார், விவீ!  விமா நிச்சயம், இந்தியாவிலிருந்து வெளிநாடு போய் — ஒரே சமயத்தில் இந்தியாவுடைய வெளிநாடுகளுடைய சராசரி அறிவு நிலையை உயர்த்திய  கணினி அறிவுக்கொழுந்து ஆசாமியல்லர். விவீ அவர்களின் இந்த அவதூறு எப்படியிருக்கிறதென்றால் – காந்தியைத் திராவிடன் என்று மலினமாகச் சொன்னால் அது எவ்வளவு அவருக்கு அசிங்கம் – அதுபோலத்தான் இது.

(நான் அறிந்தவரை இந்த விமா ஒரு மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்; இப்போது சென்னையில் பணிபுரிகிறார் என நினைக்கிறேன் – ஹ்ம்ம் – எப்படியும், குறைந்த பட்சம் சில வருடங்கள் முன்வரை, இப்படிப் பணிபுரிந்து கொண்டிருந்தார் என, என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்)

மூன்றாம் அவதூறு:

“திராவிடத் தலைவர்களைப்பற்றி திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை இணையத்தில் வந்துள்ள செய்தியை படிக்கின் றேன் கேளுங்கள். இந்த இணைய தளம் யாரு டையது என்றால், விமலாதித்த மாமல்லன். இந்தப் பெயரைக் கேட்டவுடன், இவரைவிட தமிழறிஞர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நினைப்பீர்கள்.

அய்யோ! விமலாதித்த மாமல்லன் – முழுப்பெயரும் தமிழல்லாத ‘அவாள் மொழியில்’ உள்ள பெயர். எப்படித்தான் இந்தப் பெயரைக் கேட்டவுடன் ‘இவரைவிட தமிழறிஞர் வேறு யாரும் இருக்க முடியாது என்று’ நினைக்கமுடியும். இம்மாதிரி நகைக்கத்தக்க பார்வை – தமிழும் தெரியாது, ‘அவாள் மொழி’யும் அறியவில்லை என்பதைத்தானே காண்பிக்கிறது.

”இந்தப் பெயரிலேயே புத்தகம்; இந்தப் புனை பெயரிலேயே முழுவதும் இருக்கும். இவர்கள் எல்லாம் கையாள்கின்ற புதிய டெக்னிக்.

விமா, எனக்குத் தெரிந்து, இந்த டெக்னிக்கினை குறைந்தபட்சம் கடந்த 30 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கிறார்.

ஆக, இப்படிச் சரியாக  தர்க்கரீதியாக விவாதத்தை வளர்க்காமல், விமா அவர்களை விவீ அவர்கள் – ஒரு தமிழறிஞராகவும் புது டெக்னிக் காரராகவும் வரிப்பதும் ஒரு அவதூறு தானே?

நான்காம் அவதூறு:

“நண்பர்களே, விமலாதித்த மாமல்லன் தமிழன் அல்ல; இவருடைய சொந்த பெயர் என்ன வென்றால், நரசிம்ம அய்யங்கார். இவர் மத்திய அரசில் மிக முக்கியமான பதவியில் இருந்து கொண்டு, இந்தச் செயலை செய்கிறார் இணைய தளத்தில்.”

தவறு. முழுத்தவறு!

விமா அவர்களுடைய சொந்த முழுப்பெயர்:

பிரதிவாதி பயங்கரம்  அண்ணங்கராச்சாரிய  ந்ருஸிம்ஹப் ப்ரிய நரசிம்ம ராமனுஜதாச அய்யங்கார்வாள்.

கொசுறுத் தகவல்: விவீ அவர்களின் இக்கால  நண்பர் கருணாநிதி அவர்களின் சொந்தப் பெயர் முத்துவேல் தட்சிணாமூர்த்தி. இவரும் ‘தமிழர்’ அல்லர்.

(எனக்குத் தெரிந்த வரை விமா கலால் துறையில் பணி புரிகிறார். ஆனால், இவருடயது ’மத்திய அரசின் மிக முக்கியமான பதவி’ என்றெல்லாம் அதிஒருமையில் சொல்வது ஏதோ விமா அவர்கள் ஒரு கேபினெட் செக்ரட்ரி போலச் சித்திரம் விரிகிறது. இது ஒரு பெரிய அவதூறுதான். ஆனால் ‘எல்லா வேலைகளுமே மிக முக்கியமான வேலைகள்’  என்கிற நோக்கில் விவீ அவர்கள் பொதுவாக, ‘18 வயதுக்கு மேல அனைவரும் ஹார்மோன் சுரந்து பொறியாளர்களாகிவிடுகிறார்கள்,’ என்பது போலச் சொல்லியிருக்கலாம்தான்.  

ஐந்தாம் அவதூறு:

“ஆகவே, இவர்கள் மாதிரி இருக்கக்கூடிய பொறியாளர்களுக்கு, உங்களுடைய சொந்த வேலை மட்டுமல்ல; இந்த மாதிரி இருக்கக்கூடிய வந்த வேலை இருக்கிறது பாருங்கள்,” (இந்தப் பத்தியில் விவீ அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் உதவ முடியுமா? பொதுவாக, இந்தப் பேச்சே/கட்டுரையே மிகவும் சப்பையாக, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கந்தறகோளமாக இருக்கிறது…ம்ம்)

அய்யய்யோ!  விமா ஒரு பொறியாளர் அல்லர். பாவப்பட்ட ஒரு தமிழ் எழுத்தாளனை இப்படி அபாண்டமாக, ஒரு பொறியாளர் என்றழைப்பதன் விஷமத்தனம் கண்டிக்கத் தக்கது.

(எனக்குத் தெரியும், விமா தன் பெயரை ‘Er Vimalaadiththa Maamallan’ என்று போட்டுக் கொள்வதில்லை. சுயமரியாதையுள்ள ஒவ்வொரு எஞ்சினீயரும் அவசியம் இப்படி, தம் பெயருக்கு முன்னால்  Er என்றுதாம் தமிழகத்தில் போட்டுக் கொள்வார்; ஆகவே விமா ஒரு பொரிவிற்பவருமில்லை – ஆக, விவீ அவர்களை மிக அநியாயமாக ஒரு தொழிலைக் குறித்த இழிசொல்லினை உபயோகப்படுத்திக் குறிப்பிடும்  விவீ அவர்களின் பேச்சும் ஒரு அவதூறுதான்)

ஆனால், ஆனால்… மேற்கண்ட அவதூறுகளை விட மிக மோசமானது…

ஆறாம் அவதூறு:

அந்தக் காலத்தில் ரஸ்வந்தி, சரோஜாதேவி போன்ற கிளுகிளுப்பு ரக மஞ்சள் பத்திரிக்கைகள் வந்து கொண்டிருந்தன. (இக்காலத்தில் அவை குங்குமம், நக்கீரன், ஆனந்தவிகடன் என, பொதுவாக அறியப் படுகின்றன). இம்மாதிரிப் பத்திரிக்கைகளில் ‘கற்புக்கரசி’ கண்ணகி பற்றி அவதூறுச் செய்தி வந்தால் கொஞ்சம் அசிங்கம் தானே? கடைந்தெடுத்த அயோக்கியத்தனமிக்க அவதூறு தானே? இதே போல, விடுதலை  போன்ற ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ பத்திரிக்கையில் விமா போன்றவர்களைப் பற்றி வசை வந்தால் அதுவும் சரியல்ல தானே?

ஆகவே, விமா அவர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவும் ஒரு அவதூறுப் பிரச்சினையை எழுப்பலாம்.

-0-0-0-0-0-0-

பரிந்துரை 1: விமா அவர்களை அய்யங்கார்  என்று அழைத்திருக்கிறார் விவீ அவர்கள். இதற்கெதிராக ஏதாவது அய்யங்கார் சமூகக் குழு, வெகுண்டெழுந்து  ஒரு அவதூறு நோட்டீஸை விவீ  அவர்கள் மீது பாய்ச்சலாமே?

பரிந்துரை 2: 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களில் பெரும்பாலோருக்கு பொறியாளர்களாக ஆக இடஒதுக்கீடே கிடையாதா? ஆக இந்த மைனர் குளுவான்களும் தங்கள் உரிமைக்காகப் பெரியார் திடல் வாயிலில் தொடர் உண்ணும் விரதம் நடத்திப் போராடலாம்.

பரிந்துரை 3: எனக்குத் தெரிந்து, திராவிட இயக்க இளைஞர்கள் சிலர் ஏற்கனவே இணையக் காப்பிக்கடைகள் நடத்துவதில், கட்டுரைகளையும் விஷயங்களையும் கூசாமல்  சுடுவதில், விற்பன்னர்களாக இருக்கிறார்கள். இவர்களை வைத்து, மற்ற குளுவான் இளைஞர்களுக்காக – காப்பிப் பணிமனைகளை நடத்தி – திராவிட இயக்க அடலேறுகளை, இணையப் போராளிகளாக மாற்றுவது, விவீ அவர்களின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

பின் குறிப்பு: விமா அவர்களின் ‘நம்பினால் நம்புங்கள்’ கட்டுரையைப் படித்தேன். அதில் விவீ அவர்களின் பெயர்த்தி போன்ற விவரங்கள் சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல ‘திராவிட இயக்கக் காரர்களுடைய’ தனிப்பட்ட அறிமுகமும் அதில் சிலருடன் நீண்ட நாள் நட்பும் உள்ள எனக்கு, இவர்களுடைய தலைவர்களின் பெரும்பாலோரின் தராதரம் அறியும் பாக்கியம்  பெற்ற எனக்கு, இம்மாதிரி விஷயங்கள் – நெருப்பில்லாமல் புகையா என்றுதான் படுகிறது.

பின்வாழ்த்து: ஸாக்ரடீஸ் – கலைமகள் தம்பதியினர் நெடுங்காலம் மன நிம்மதியுடனும், நிறைவுடனும் வாழ, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

One Response to “விடுதலை வீரமணியின் அவதூறுகள்: விமலாதித்த மாமல்லன் அய்யங்காராம்!”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s