சிரியா? நல்லா சிரிய்யா!

05/09/2013

முதல் விதி: சிரியா திரும்.

முதற்கண் — சுஜாதாத்தனமாக, மெலிதாக முறுவலிட்டுக் கொண்டு, சிறியதாகச் சிரித்துக் கொண்டிருப்பவள் சிரியி, அப்படிச் செய்யாதவள் சிரியா — என்பதறிக.

பயப்படாதீர்கள். இவள் செந்தமிழ்ச் செல்வி, செம்மொழிச் செவ்வி நடிகை சிரேயா அவர்களின அத்தை பெண் தான்.

இந்தச் சிரேயா அவர்களே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ்மொழி செம்மொழி மாநாடு கண்ட கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றவர்தான்.

இந்தப் பெண் சிரியா, பாவம் — நம்மூர் பாண்டி நன்னாட்டில், அதாவது பாண்டிச்சேரியில் – ஏதோ, கண்ணைக் கட்டிக் கொண்டு, சகதோழிகளுடன் ஏரோப்ளேன் பாண்டியாட்டம் ஆடிக்கொண்டே போனபோது –  விளையாட்டு சுவாரசியத்தில் துருக்கிக்கும், இராக்கிற்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே உள்ள சிறிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுவிட்டது நமக்கெல்லாம் தெரிந்ததே…

இந்தப் பெண்ணை மீட்கத்தான் நாமெல்லாம் வலைப்பூக்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவெல்லாம் போராளித்தனமாகப் போராடி  வருகிறோம், தெரிந்ததா?

ஹ்ம்ம்ம்… எப்படியாவது இந்தப் பெண்ணை மீட்டு, ஏதாவது ஒரு  தமிழ்ப் படத்திலாவது நடிக்கவைத்து விடவேண்டும்…

<T_’Vijaya’_Rajendher> சின்னக்கிளி சிரியா, இப்ப நீ பிரியா? அப்போ இங்க வர்ரியா? நாஞ் சொல்றது சரியா?? </T_’Vijaya’_Rajendher>

-0-0-0-0-0-

சென்னைய, தமிழிய, இந்திய, அமெரிக்கிய விஷயங்களை யெல்லாம், அவை நடக்க நடக்கச் சூடாகவே சமைத்துப் பரிமாறியாகிவிட்டது. அடுத்த பந்திக்கு என்னதான் செய்வது? குழப்பமாக இருக்கிறதே.

எழவு, புதிய திரைப்படம் எதுவும் வெளியிடப் பட்டது போலவும் தெரியவில்லை.

வேறு என்ன செய்யலாம், எனக் கையையும், கீபோர்டையும், எலிக்குட்டியின் உருண்டைக் கொட்டையையும் பிசைந்து கொண்டிருக்கும்போது, ஆஹாவென்று எழுந்தது பார் ‘அரேபிய வசந்த’ யுகப் புரட்சியின் எச்சமிச்சமாக சிரியா கசமுசா!

அப்பாடா, றொம்ப்  ணண்றீங்க! எங்கடா எங்க அல் ஜஸீரா? எங்கடா வொங்க டைம் பத்திரிக்க?? ந்யூயார்க் டைம்ஸ்??? எட்றா, கணினித் திரையை. ஒத்தி ஒத்தி எட்றா… கொஞ்சம் மாரி அத்து, க்ளீனாவாவது ஆவும்.

இன்னாடா? மேலைநாட்டு சினிமா, மேஜிக்ரியலிஸ்ம், கீழைநாட்டு ஜென் வெஷயமெல்லாம் ரொம்ப நல்லாக் கீதா? அதெ கொஞ்சம் வுல்டா பண்லாண்றியா?? அதெல்லாம் வோணாண்டா.  றொம்ப  அறிவுஜீவித்தனமா இருக்கும். அவுங்க ரெவெலுக்கு அவ்ங்க, நம்ப ரெவல்க்கு நாம்ப…  இன்னா நாஞ் சொல்றது?

இந்த எணையப் பக்கங்கள வெச்சிக்கினு, கமுக்கமா  ஒரு அரசியல், வொலக நடப்புக் கட்ரையா எள்தலாம். சரியா? கவ்லயே படாத, சும்மா ஜம்னு அப்டியே நகலெடுத்து எள்தலாம். மனம் போல் மார்க்கண்டா. மணாளனே மங்கயின் பாக்கியண்டா! சோற் கண்ட எடமே சொர்க்கலோவம்தாண்டா!

அத்தோட்டு, மவனே  ரோசிச்சி கீசிச்சி அல்லாம் எள்த வோணாம், பிர்ஞ்திதா? இத படிக்கறவன் அல்லாம் நம்ப  தமிளனுங்கதான். வேற எவனாச்சி வெவரம் புர்ஞ்சவனிங்க்ளா படிக்கப் போறானுவ நாம்ப எள்தறத… இன்னா நாஞ் சொல்றது?

… இன்னாடா மொனவற…  இது நாயம் இல்லயா? இன்னாடா பொளக்யத் தெர்யாத பய நீ, நாயம் பூனயம்னிட்டு… ங்கொம்மாள, ஒளுங்கா லைக் போட்டுக்கினு ஃபால்லோ பண்ணிக்கினு போவியா…  பெருஸ்ஸா அறிவுர சொல்ல்வன்டான், சோமாறி… செரி, இப்போ இன்னாண்ற? என்னோட சொம்பேறீ வாசகர்கள  எனக்கு  நல்லாவே தெரியும். ஆங் – படிக்காமலேயே போட்டிபோட்டுக்கினு லைக் போட்ருவாங்க. கோமாளிப்  பயலுவ…

வோக்கே, வோக்கே. சரி. சிர்யான்னாக்க இன்னா?  கிலோ எவ்ளோ வெல? இன்னாடா,  ங்கொம்மாள, இன்னாடா பம்முற…

ஓஓஓ நான் நெனச்சுகிட்டேன் — சிர்யான்னாக்க வெங்காயம் மாத்ரி ஒரு காயி, பெர்யா வெங்காயம் சிர்யா வெங்காயம்,  அத்து கெடக்யலேன்னிட்டு ஏதோ அங்க ஒரு கசாமுசான்னிட்டுதான… அப்போ ங்கொம்மாள, சிர்யா எங்கேடா  எளவு கீது? எங்கனாச்சியும் ஜுஜாதாத் தனமா ‘ஙே’ன்னு முளிச்சிட்ருக்கும் பாரு?

-0-0-0-0-0-

ஆக,

1. வரலாறு என்பதே நமக்குத் தெரிந்ததை (எங்கிருந்து என்றெல்லாம் கேள்விகளே வேண்டாம்) அல்லது சுரந்து வருவதை ஆறு போல பீச்சியடித்து ஆற்றொழுக்கு நடையில் எழுதப்படுவதுதான். அக்கால வரலாறு என்றால் கங்கை காவிரியில் நேரடியாக மூத்திரம் அடிப்பது; சமகால வரலாறு என்றால், முட்டுச் சந்து மதில்களிலுள்ள திரைப்படச் சுவரொட்டிகளில் கதாநாயகியின் முகத்தின் மேலே குறிவைத்த்டிப்பது – இவ்வளவுதான் வித்தியாசம்.

2. புவியியல் என்றால், இயல்பாகவே நாம் புவிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான் – என்பதை நாம் எப்போது தான் புவிந்து கொள்ளப்போகிறோம், எனச் சோகமாக யோசித்தால் எனக்கு எதுவுமே புவிபடமாட்டேன் என்கிறது.

3. புத்தகம் கித்தகம் என்றெல்லாம் மானாவாரியாகப் படித்து படிப்பறிவை விசாலமாக்கிக்கொண்டு நேரத்தை வீணடிக்கவேண்டாம், பூகோள ‘அட்லஸ்’ வரைபட இழவுகள் என்றெல்லாம் பார்க்க வேண்டாம், ஆராய்ச்சி கீராய்ச்சி எல்லாம் ஒரு முடிக்கும் பண்ண வேண்டாம், தொடர்ந்து யோசித்து சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டாம், விஷயம் தெரிந்தவர்களுடனெல்லாம் பேசி அவர்கள் கருத்துகளையெல்லாம் பெறவேண்டாம், எந்த எழவுக்கும் பின்புலங்களை அறிந்து கொள்ளத் தேவையேயில்லை, சிரத்தை எனும் ஊர் கிட்டவே போகமாட்டோம் – எனும் முக்கியமான  முடிவுகளை எப்போதுதான், நாம் அனைவரும்  எடுக்கப் போகிறோம்; எனக்கு மிகவும் ஆயாசமாகவே இருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்கவே மாட்டோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் இந்த பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் வகையறாக்களையெல்லாம் சிண்டைப் பிடித்துக்கொண்டு, நம் பக்கம் தரதரவென்று இழுத்து வந்து விட்டால், நிம்மதியாக பல நூற்றாண்டுகளுக்கு கொர்கொர்ரென்று குறட்டை விட்டுக்கொண்டு ஆனந்தமாகத் திராவிடத் தூக்கம் தூங்கிக் கொண்டேயிருக்கலாம்.

4. கருத்துதிர்த்தல் என்றால், நம்முடைய சாயம் வெளுக்கும் வரை ஆடும் போங்கு ஆட்டம் எனக் கருதலாம். சுட்ட கருத்துகளுக்கிடையே உள்ள இடைவெளிகளை, சுஜாதாவுக்குச் சமர்ப்பணம் செய்யலாம், மன்னிக்கவும், மெலிதாக, மையமாக, புன்முறுவலிட்டு சமர்ப்பணமிடலாம்.

5. சிரியாவில் ரத்த ஆறு (வெகு திராவிடத்தனமாக) ஓடுகிறது அல்லது ஓடலாம் என வைத்துக் கொள்வோம். அப்படியே அது ஒடினாலும் அது மத்திய தரைக்கடலுக்கு ஓடி அதனை ரத்தக்கடலாக்காது என்பது அடிப்படைப் புவியியல். ஆனால் திராவிடப் புவியியல் என்பது 1800களில் கற்பனை செய்யப்பட்ட லெமூரியாவில் ஆரம்பித்து கற்பனை செய்யப்பட்ட கடற்கோளில் முடிந்தது என்கிற முக்கியமான விஷயம் — கோளாறில்லாமல் நமது கோளறு பதிகத்தைப் பலமுறை வாசித்ததினால் தெரிய வரும். ஆகவே.

6. அறிவிலிகள் நிரம்பிய அமெரிக்காவிற்கு, ராணுவத் தொடர்பான ஆலோசனைகளையும் தந்திரோபாயங்களையும் (உதாரணம்: கத்திக் கப்பல்களைக் காற்றாடி போல, செங்கடலில் தாழ்வாகப் பறக்கவிடவேண்டும்) வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் வேறு, நம் டமிளர்கள் இருப்பதை நினைத்தால் – எனக்கு உள்ள படியே மிகப் பாவமாக இருக்கிறது. (கவனிக்கவும்: நான், நம் டமிளர்களின் மீது இப்படிக் கவியும் மேலதிக வேலை அழுத்தங்களைத் தான் சொல்கிறேன் – நான் இவர்களைப் பார்த்துதான் பரிதாபம்தான் படுகிறேன்; அந்தக் கேடுகெட்ட அமெரிக்கா எப்படி ஒழிந்தால் எனக்கென்ன  கவலை?)

6. பொதுவாக, இதுவரை என்னுடைய துணிபு என்னவென்றால், நம் தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி என்பது குறைவு. இப்படி அநியாயமாக இதுவரை யோசித்து வந்திருக்கும் என்னை, நீங்கள் தயவுசெய்து மன்னிக்க வேண்டும். எனக்கு, இன்றுமுதல், தமிழர்களின் நகைச்சுவையுணர்ச்சி மேல் அதீத  நம்பிக்கை வந்து விட்டது.

7. மேலதிகமாக உங்களுக்கு சிரியா பற்றி, அங்கு நடந்துகொண்டிருக்கும் கந்தறகோளங்கள் பற்றியெல்லாம் தெரிய வேண்டாமென்றால், அவசியம் நீங்கள் படிக்க வேண்டியது: ‘சிரியா : சிரிப்பை துறந்த தேசம்’ எனும் தலைப்பில் வந்திருக்கும் ஒரு ஜனரஞ்சகமான நகைச்சுவை இணையக் கட்டுரையை. (கவனிக்கவும்: இது ஒரு இணைய நகைச்சுவைக் கட்டுரையல்ல)

7.5 இதற்கு சுட்டி முட்டியெல்லாம் கொடுக்க முடியாது. கூக்லுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

யாம் பெற்ற பேறு, கொஞ்சமாகத் தேடிப் பெருக இவ்வையகம்.

ஆமென்.

பின்குறிப்பு: இது தேவையா?

பின்பின்குறிப்பு: கண்டிப்பாக, இதுவே கடைசி தடவை. ஆம்.

தொடர்பில்லாத ஆனால் தொடர்புள்ள பதிவுகள் / பக்கங்கள்:

One Response to “சிரியா? நல்லா சிரிய்யா!”

  1. ஆனந்தம் Says:

    //நெருப்புக்கு நடுவில் எரியாத கற்பூரமாய் சிரியா மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும்?//
    இந்த உதாரணம் நம்ம இனமானத்தலைவர் மதுவிலக்கை நீக்குவதற்கு முன்னால் சொன்ன ‘தண்ணி’லை விளக்கமாச்சே! புல்லரிக்க வைத்துவிட்டீர்கள் போங்கள்!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s