இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?

23/02/2014

… … தமிழகத்தில் ஒன்றுமே  சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி  சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.

எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (24/n)

நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல  விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.

பதில் கிடைத்ததா? சரி.

கிடைக்கவில்லையா, அதுவும்  சரியே.

இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .

ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே  சொல்கிறேன்:

சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத  தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத  நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை.

திராவிட இயக்கங்களால் காயடிக்கப்பட்ட இவர்கள், பெரும்பாலும் குமாஸ்தாக்களாகவும் (= தகவல்தொழில் நுட்பம்(!), பொறியியல், வங்கி, …, …) இன்னபிற முனகும்  மத்தியதர வர்க்க நியதிகளிலும் ஈடுபட்டு,  நேரடியாகவோ மறைமுகமாகவோ வரதட்சிணை பெற்றுக்கொண்டு / கொடுத்து குழந்தைகளைப் பெற்றெடுத்து, அட்மிஷனுக்கு அலைந்து, திரைப்பட விமர்சனங்கள் செய்து, ஃபேஸ்புக் இத்யாதிகளில் மேதாவிலாசத்துடன் கபடியாடிப் பொங்கி, லைக் போட்டு, அனாமதேயப் பின்னூட்டங்களிட்டு  — முடிந்தால், அதுவும் ஆயிரம் நொள்ளை சொல்லிக்கொண்டு, தேர்தல்களில் வாக்கு மட்டும் அளித்து (“எல்லாம் திருடனுங்கதான் சார்!”),  அதைப் பற்றியும் நிறைய இணையத்தில் வாந்தியெடுத்து எழுதி, நம் நடைமுறை சாய்வு நாற்காலி ஜனநாயகப் பங்கேற்பின், அதன் பரிணாம வளர்ச்சியான இணையப்போராளித்தனத்தின் – மிக  முக்கிய அங்கமாகத் திகழ்வர்.

ஆக – பெரும்பாலும், மேல்மாதிரி இளைஞர்களை நான் வெகு சீக்கிரம் இனம் கண்டுகொண்டு அவர்கள் நேரத்தையும் என் காலத்தையும் (முக்கியமாக, என்  வாழ்க்கையையும்) விரயம் செய்வதைத் தவிர்த்துவிடுவேன்.  (ஹ்ம்ம். என்னால் எழுப்பப்படும் இந்தப் பொதுப் பிம்பத்துக்கு, குறிப்பிடத்தக்க சில எதிர்மாதிரிகள் இருக்கிறார்கள்தான் – ஆனால் இவர்கள் அநியாயத்துக்குக்  குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். என்ன செய்ய, சொல்லுங்கள்?)

மேலதிகமாக — எனக்கு செங்கொடி, புரட்சி, புண்ணாக்கு, கோஷ்டம், ஊர்வலம், மனிதசங்கிலி,  ‘அடையாள’ உண்ணாவிரதம், கடிதம் எழுதுதல்,  மனிதவுரிமை என ஒரு எழவுக்கும் உபயோகமில்லாமல் பேசிக்கொண்டே சுயகாரியப்புலி ப்ரொடெஸ்ட்வாலாவாக இருத்தல், உபயோககரமாக ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் குற்றம் மட்டுமே  சொல்லிக்கொண்டிருத்தல்,  ஒருவிதமான பின்புலச் சிந்தனையுமில்லாமல் ‘டொனேஷன்’ கொடுத்து அல்லது தொகுத்தளித்து குற்றவுணர்ச்சிகளைத் துடைத்துக் கொள்ளுதல்  — — மேல் எல்லாம் சுத்தமாகவே நம்பிக்கையில்லை.  ஆனால் – நேரடி செயல்பாடுகளில், அவை சரியோ தவறோ, அரைகுறையோ முழுகுறையோ, அவற்றின் மீது என் கவனம் சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு நன்மை, விட்டுப்போன-பாதிக்கப்பட்ட ஒருவருக்கும்கூட முடிந்தவரை  தீமை இலாத செயல்கள், அப்படியே குளறுபடிகள் ஏற்பட்டாலும் – அவர்களுக்கும் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து வழிசெய்தல்கள், தொழில் அறம் சார்ந்த அறிவியல், தொழில்நுட்பங்கள் (அணுக்கரு சக்தி, விசும்புச் சாகசங்கள், ராணுவத்திற்கான அதிநவீன ஆராய்ச்சிகளானவை, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளானவை பரந்துபட்ட மக்களுக்கும் ஆங்கே பொசிதல்  உட்பட), காந்தியக் கொள்கைகள் (காந்தியம் என்பது பொத்தாம்பொதுவாக தொழில்நுட்பத்துக்கும் அறிவியலுக்கும் எதிர் என்கிற கோட்பாட்டை நான் நிராகரிக்கிறேன்) மூலம் வாழ்க்கைத்தரம் முன்னேற்றப்படல், நம்மை மேலெடுத்துச் செல்லும் சுயபரிசோதனைகள்  – போன்றவற்றில் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, பாரதீய வாழ்வியல் அறங்கள் சார்ந்து தழைத்தோங்கும் பாரம்பரியம், நவீனகாலங்களை வரவேற்று நம்மை மேலெடுத்துச்செல்லும் மனப்பான்மை – சார்ந்த மேலாண்மைக் கோட்பாடுகளில், அவற்றின் திடமான, திட்டமிடப்பட்ட செயல்பாடுகளில் மிகுந்த   நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

-0-0-0-0-0-0-0-0-0-0-

முரணியக்கங்களிலும், அவற்றினூடே, உரையாடல்களிலான சமரசங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், ‘காம்ப்ரமைஸ்’ எனும் இந்தச் சமரசம் தமிழ்ச்சூழலின் அயோக்கிய இளக்காரத்தன உச்சாடனங்களில் ஒன்று. இது பொறாமை எண்ணங்களின், ஜ்வாலை விட்டெறியும் அசூயையின் விளைவு, அவ்வளவுதான்.

… விஷயம் என்னவென்றால், இந்த சமரசம் என்ற ஒன்று இல்லாவிட்டால், இந்த அரைகுறைப் பொறாமை உச்சாடனவாதிகளின் தாயார்கள், தங்கள் துணைவரைக் கிட்டவே வரவிட்டிருக்க மாட்டார்கள் அல்லவா? தமிழ்ப் பெண்களுக்குத் தெரியாதா தமிழ் ஆண்களின் கீர்த்தி? இந்தச் ‘சமரசம்’ இல்லாவிட்டால் இந்த ‘அடுத்தவன் சமரசம் செய்யக்கூடாது’வாதிகளின் பிறப்பே நிகழ்ந்திருக்காதே! (சரி, எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன்!)

-0-0-0-0-0-0-0-

ஆம். நான் என்னளவில் (என்னிலும் என் குழந்தைகளிலும்) வளர்த்தெடுக்க விரும்புவது, முயல்வது – ஆய்ந்தறிந்து ஒழுகும் சமரசவாதிகளை மட்டுமே. பொறுப்பற்ற அற்ப  வெற்று அட்டைக்கத்தி வீரர்களை அல்ல,  ஊருக்கு உபதேசம் செய்பவர்களை அல்ல, செயல்வீர வெட்டிகுண்டர்களை அல்ல.

இளைஞர்களுடன் நிறையவே பணி(!) புரிந்திருக்கிறேன் – ஆனால் பல வருடங்களுக்குப் பின் தான் எனக்குத் தெரியவந்தது – என்னுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் (அதாவது, bang for the buck, or the emotional ‘highs’) – அங்கே, அம்மாதிரி முனைவுகளில் கிடைக்கவில்லை, கிடைப்பதில்லை  என்பது… (ஆனால், இப்போதும் பல மதிக்கப்படவேண்டிய , நான் மிகவும் மதிக்கும்  இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்தான்)

இன்னொன்று: பொதுவாக, நம் பள்ளிகளில் படிப்பு சொல்லிக்கொடுப்பது என்பது ஒரு ஆபாசமான  தொழிலாக இருக்கிறது என்கிற ஆற்றாமை எனக்குப் மிகப்பல பத்தாண்டுகளாக உண்டு.  இதைப்பற்றிச் சும்மனாச்சிக்கும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்காமல், ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும் எனவும் என்னுடைய 16 வயதிலிருந்து முயன்று கொண்டிருக்கிறேன்.

ஆக, நான் என்னளவில் முடிந்தவரை — குழந்தைகளுடனும் முதிரா இளைஞர்களுடனும் மட்டுமே பழகுவது (=catching ’em young!) எனப் பல வருடங்களாக இருக்கிறேன் – பகுதி நேர ஆசிரியனாக இருந்திருக்கிறேன்; சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு,  முடிந்தால் நம் கிராமப்புறப் பள்ளிகளில், முடிந்தால் தமிழ்நாட்டில் பணி புரிவது, பயிற்சி கொடுப்பது, கேள்விகள் கேட்க வைப்பது, பதில் பெறுவது, தொடர்ந்து யோசிப்பது – மிக முக்கியமாக, எனக்குப் பிடித்த வேலையை மட்டும்  செய்வது என முடிவெடுத்து இப்படி முழு நேரத்  தன்னார்வக்காரனாக இருக்கிறேன், அவ்வளவுதான். ஒரு பெரிய கிழிப்பும் இல்லைதான். இது பிடிக்கவில்லையென்றால், ஒத்து வரவில்லையென்றால் வேறொரு தொழிலுக்குப் போய்விடுவேன். ஒரு புண்ணாக்கு சேவை மனப்பான்மை பிரமையும் எனக்கு இல்லை, என்று நான் புரிந்துகொள்ளப்படுவது இங்கே முக்கியம்.

… தமிழகத்தைப் பொருத்தவரை, என்னுடைய இனிமையான குழந்தை / இளம் பருவத்துக்கு நான் காமராஜ், ராஜாஜி, கக்கன், பக்தவத்சலம் போன்றவர்களுடைய ஆளுமைகளுக்கு (ஏன், நம் எம்ஜிஆருக்குக்கூடக் கொஞ்சம்) நேரடியாகவோ மறைமுகமாகவோ கடமைப்பட்டிருக்கிறேன்.

அனைத்துக் குழந்தைகளுக்கும், குறைந்த பட்சம், எனக்குக் குழந்தைப் பருவத்தில் கிடைத்த சூழல் போலவாவது வாய்க்கப்படவேண்டும் என மனதாற விரும்புகிறேன். இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என என்னமோ செய்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் என் குழந்தைகளின்மேல் நான் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கிறேன். இவர்கள் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களளவில், வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்கு அவர்களை உடன்படுத்துவதில், அவர்களைச் சிந்திக்கச் செய்வதில் – நான் என் பங்கைச் செய்ய முனைவதில், எனக்குச் சந்தோஷமாகவே இருக்கிறது.

என்னால் முடிந்தது இதுவரை  இவ்வளவுதான். பெரிதாகப் பிடுங்கிவிடவில்லை. ஒப்புக்கொள்கிறேன்.

-0-0-0-0-0-

ஆனாலும் சொல்வேன். தமிழர்களாகிய நம்மில் பெரும்பாலோர், அடிப்படையில் கொஞ்சம் நேர்மையானவர்கள்தாம் —  ஆக, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் உபத்திரவமாவது கொடுக்காமல் இருக்க விரும்புவோமானால்…

ஒன்று: ஸ்ரீலங்காவின் பிரச்னைகளை தீர்த்தல் (#1), ஸ்ரீலங்கா தொடர்பான தமிழக அரசியல் சடுகுடுமிப்பிடிப் பிரச்னைகளைத் தீர்த்தல் (#2) – என்றால் என்ன, அவற்றின் பின்புலம் என்ன, அடிப்படை வித்தியாசங்கள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இரண்டு: #1-க்கு நம் பங்கு சொற்பம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நாம், நம்முடைய கோமாளித்தனங்களால், மேலும் மேலும்  பிரச்னைகளை வளர்க்கத்தான் ஆசைப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் போக்கை நிறுத்தவேண்டும்.

மூன்று:ஆச்சரியப்படும்வகையில், இந்திய அரசு ஒரு பக்குவத்துடன் #1-ஐ அணுகுகிறது (திமுக போன்ற அரைகுறைக் கூட்டணிக் கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனங்களையையெல்லாம் மீறி) என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்; இந்திய அரசை இவ்விதத்தில் மெச்சவேண்டும். காங்க்ரெஸ் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கட்சியும் இந்தப் பிரச்னையில் கடந்த சில வருடங்களில் காட்டிவரும் நிதானத்தையும் நேர்மையையும் மெச்சவேண்டும். இந்திய அரசு, ஸ்ரீலங்கா அரசுக்கு நேரடியாக அளிக்கும் உதவிகளும், மறைமுகமாகக் கொடுத்துவரும் உதவிகளும், ராஜரீக அறிவுறுத்தல்களும் தொடர, நாம் தமிழர்கள் வாயையும் (+அனைத்து ஓட்டைகளையும்) மூடிக்கொண்டிருக்கவேண்டும். நல்லவேளை, டெல்லியின் ஸௌத்ப்லாக் (south block), இந்த விஷயத்தில் திமுக ஆட்சிபோலப் பொறுப்பற்ற, கயமை முறையில் நடக்காதமைக்கு, ‘இயற்கைக்கு’ நன்றி.

நான்கு: #2 (ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளைத் தீர்த்தல்) என்பதை ஒரு குதூகலமான தமிழகக் கேளிக்கை என்றவகையில் புரிந்துகொள்ளுவதே சரி.

-0-0-0-0-0-0-

“வயதானவர்கள், வளர்ந்தவர்கள் எப்போதுமே எவற்றையும் தாங்களாகவே புரிந்துகொள்ள மாட்டார்கள்; ஆக, குழந்தைகளுக்கு, எல்லா விஷயங்களையும், எப்பொழுதும், இவர்களுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லி விளக்கிக்கொண்டிருப்பதில் ஒரே ஆயாசமாகவே இருக்கும்.”

அந்த்வான்த் செந்த் எக்ஸூபஹ்ரி,  (‘குட்டி இளவரசன்’ எனும் குறு நாவலிலிருந்து இவ்வரிகள் எடுக்கப்பட்டுள்ளன; இந்தப் புத்தகம் எனக்கு அவ்வளவு ஒத்துவராது என்றாலும், இந்த வரிகளை மேற்கோள் காட்டுவது பிடிக்கும். இவருடைய  (ஒருமாதிரி) சுயசரிதையான காற்று, மணல், நட்சத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று)

-0-0-0-0-0-0-0-0-0-

இருபத்தி நான்கு பதிவுகள் + சில விவாதங்கள் – இத்தோடு, இப்போதைக்கு இந்த ‘தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??’  முடிந்தது. சந்தோஷம்தானே? ;- )

குறிப்பு: கேள்விகளை திடுதிப்பென்று கேட்டு இந்தப் பதிவுகளின் காரணகர்த்தாவாக இருந்த பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு, வேண்டுமானால்  நீங்கள் நன்றியையோ, கோபத்தையோ  நேரடியாகவே தெரிவிக்கலாம்.

சுபம்.

4 Responses to “இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?”

 1. சரவணன் Says:

  தொழில் தர்மம், செய்நேர்த்தி, நேரம் தவறாமை, குவிந்த உழைப்பு, பல மொழி-மதத்தினருடன் நட்பு, பற்பல வேலை-தொழில்களைக் கற்றுக்கொள்வது, சுயசார்பு, வெட்டிப் பேச்சுக்குப் பதில் தன்னால் முடிந்த நேரடி செயல்பாடு போன்ற விஷயங்களை நீங்கள் வலியுறுத்துவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம் சூழலில் மிக மிக அவசியமான, தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டிய, கற்றுக்கொடுக்கப்பட வேண்டியவை இவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

  ஆனால் உங்கள் அரசியல் பார்வைகளுடன் சற்றும் உடன்பட முடியவில்லை. குறிப்பாக, நரேந்திர மோடியை ஆதரிப்பது, சுப்பிரமணியன் சுவாமிக்குப்போய் சர்டிபிகேட் கொடுப்பது (!!!), இலங்கை அரசையும், அதை ஆதரிக்கும் காங்கிரஸ் அரசையும் அங்கீகரிப்பது -பாராட்டுவது, திராவிட இயக்கத்தை முற்றிலும் நிராகரிப்பது, ஆர். எஸ்.எஸ்-ஐ இளைஞர்களுக்கு ஏற்ற மூன்று இயக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டது, கருணாநிதியைத் தொடர்ந்து காட்டமாக விமர்சிக்கும்போது ஜெயாவை விமர்சிக்காமல் இருப்பது (கருணாநிதி ஆட்சியில், அவரது அரசை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட சவுக்கு இணைய தளத்தை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்- அது ஜெயா அரசையும் ‘முட்டாள் அரசு’ போன்ற தலைப்புகளில் தொடர்ந்து விமர்சிக்கிறது) போன்றவை. மேலும் மாணவர்கள்- இளைஞர்கள் ஹிந்தி படிப்பது முற்றிலும் தேவையற்றது. ஆங்கிலம் வழியாகக் கற்க முடியாத அறிவுத்துறை எதுவும் ஹிந்தி மூலம் கிடைக்கப்போவது இல்லை. இந்தியாவைப் புரிந்து கொள்ளத் தமிழும் ஆங்கிலமும் போதும்.

  • A.seshagiri Says:

   இருப்பதில் நல்ல திறமையானவர் என்பதால் மோதியை ஆதரித்து அவருக்கு மத்தியில் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை. ஹிந்தி தெரியாமல் வட மாநிலத்தில் பணி புரிந்த/பணி புரிபவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும்.குறிப்பாக கட்டுமானப்பணி போன்றவற்றில்

  • பொன்.முத்துக்குமார் Says:

   சரவணன், சு.சாமிக்கு சர்டிபிகேட் கொடுக்காமல் வெற்றிகொண்டானுக்கும் தீப்பொறி ஆறுமுகத்துக்கும் கொடுப்போமா ?

   அதே போல, ஆர்.எஸ்.எஸ் வேண்டாம், வேறு நீங்கள்தான் உருப்படியான ஒரு இயக்கத்தை சொல்லுங்களேன் பார்ப்போம்.

   சு.சாமியின் அரசியல் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் முயற்சி எடுக்காவிட்டால் ஜெயாவின் மெகா ஊழல்களோ, ஸ்பெக்ட்ரம் ஊழலோ வெளியே தெரியாமல் புதைக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். அதுவும் ஊழல் ராணியின் 96 ஆட்சிகாலத்தில் விமர்சிக்கவேண்டியவர் அனைவரும் வாய்பொத்தி இருக்க, தனிமனிதராக உயிருக்கு ஆபத்து இருந்த நேரத்தில் போராடி அதன்மூலம் அம்மணியை உள்ளே தள்ள காரணமாக இருந்தவர்.

  • பொன்.முத்துக்குமார் Says:

   சரவணன்,

   ’தமிழும் ஆங்கிலமும் போதும்’ எல்லாம் நமக்கு நாமே நாக்கில் இனிப்பு தடவிக்கொள்ள மட்டுமே. மும்பையிலோ டெல்லியிலோ வேலைக்குப்போனால் இந்தி தெரியாமல் எப்படி அன்றாட வாழ்வை ஓட்டுவீர்கள் ?

   அதுவும் இந்தியாவைப்புரிந்து கொள்ள தமிழும் ஆங்கிலமும் மட்டுமே போதும் ?? நிஜமாகவா ?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s