[திருத்தப்பட்ட மறுபதிவு] மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?

08/03/2014

(அல்லது) ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட,  பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?

மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள், தொடர்ந்து மறுபடியும், மறுபடியும்   பரப்பப் படுவதற்கு – இந்த தேங்காய்முதல்வாத ஊடகங்கள் / ஊடகக்காரர்கள்தாம் இதற்கு முழுமுதல் காரணம்.

இந்த உதிரிகளுக்குப் பின்புலத்தில்  ‘கொள்கைக் கூட்டணி’ வைத்து  அணி திரண்டிருக்கும்  தொழில்முறை இடதுசாரி அறிவுஜீவிகளும், மனிதவுரிமைக் காரர்களும்,  ‘எப்படா அடுத்த போராட்டத்தை நடத்தி தொலைக்காட்சியில் தென்படலாம்’ என போங்காட்டம் ஆடும் போராளிகளும், அரைகுறை தட்டச்சு வீரர்களும், சாய்வு நாற்காலிப் பேரறிஞர்களும் – இன்னொரு  காரணம்.

சரி,  இந்த தேங்காய்முதல்வாத ஆட்கள் என்பவர்கள் யார்?


தேங்காய் எனும் தென்னைமரவிதையானது, வெளியே கறும்பழுப்பு நிற ஓட்டுடனும், உள்ளே வெள்ளைவெளேரென்ற பருப்புடனும் இருக்கும் ஒன்று.

இதனைப் போலவே, இந்த தேங்காய்முதல்வாத ஆட்களும், வெளியே நம் எல்லாரையும்போல கறும்பழுப்புத் தோலர்கள்தாம், கொட்டாங்கச்சிகள்தாம்  — ஆனால் உள்ளூர யோசிப்பது, முனைவதெல்லாம் வெள்ளைக்கார மேட்டிமைத்தனத்துடன், வெள்ளைத் தேங்காய்ப் பருப்பு போல மட்டுமேதான்!

இவர்களுக்கு,  தங்களின் பின்புலங்களின் மீது, தங்கள் நாட்டின் மீது, தம் மக்களின் மீது, தம் பாரம்பரியங்களின் மீதெல்லாம் ஒரு வக்கிரமான தாழ்வுணர்ச்சி – ஆனால், இவர்கள் நினைப்பது போலவே இக்கூறுகள் இருந்தாலும் கூட, தங்களையோ தங்கள் சூழல்களையோ மேன்மைப் படுத்துவதை விட்டுவிட்டு – குறை கூறுவதிலேயே, செய்திகளைத் திரிப்பதிலேயே மும்முரமாக இருப்பவர்கள்,  இந்தத் தாழ்வுணர்ச்சியைப் பரப்புவதில் மகிழ்ச்சியடைபவர்கள், இந்த ஜந்துக்கள்.

நம் பாபுஜி சொல்வது போல இவர்களெல்லாம் சாக்கடை ஆய்வாளர்கள்தாம் (காந்தி எழுத்துகளின் தொகை நூல்களில் –  Drain Inspector’s Report, Gutter Inspector எனத் தேடுசொற்களை உபயோகித்துத் தேடினால் வேண்டிய அளவு விஷயங்கள் கிடைக்கும் ); இவர்கள் — முன்முடிவுகளுடனும் திரிபுகளுடனும் நோண்டி நோண்டி சாக்கடையை மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் – அப்படி மட்டுமே பார்க்க நினைப்பதால்  ‘எங்கெங்கு காணினும் சாக்கடையடா’ எனும் அதி அற்புத அனுபூதி நிலைமைக்கு வந்திருப்பவர்கள்.

மேலும், இம்மாதிரி  தருக்க ரீதியாக (?), விஞ்ஞானபூர்வமாக(!) வளர்த்தெடுக்கப்பட்ட ஓரிரு எடுத்துக்காட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு, அவர்கள் கோட்பாடுகளைப் பொதுமைப் படுத்தி, அனைத்துமே சாக்கடைதான் என்கிற தீர்க்கமான முடிவுக்கும் வருபவர்கள் – அவற்றைப் பற்றிப் பிரச்சாரம் செய்பவர்கள்.

… இந்தக் கட்டுரையில் நான் செய்ய நினைப்பது — இந்த தேங்காய்வாதிகளைப் பற்றி, ஒரு புரிந்து கொள்ள முயலல், அவ்வளவே…

-0-0-0-0-0-0-

நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம் –  கோத்ரா (2002; ரயில்பெட்டியெறிப்பு, அதிலிருந்த ஹிந்து யாத்ரீகர்கள் வேகவைப்பு நடந்தது. பின்னர் கலவரம் நடந்தது. முஸ்லீம், ஹிந்து கலவரவாதிகள் பலர் ஒருவரையொருவர் கொன்றுகொண்டனர். ஹிந்து, முஸ்லீம் கலவரவாதிகள் / திரியாவரக் குண்டர்கள் பலர் பொலீஸ்காரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர்; சுபம்.

இந்தச் சோக நிகழ்ச்சிகளுக்குப் பின் நடந்த, மனிதவுரிமைக் காரர்களாலான – மிக முக்கியமாக, அந்த தீஸ்தா செதல்வாட் (தீஸ்தா சீதளவாதியின் நகரஆங்கிலமாக்கம்) அம்மணி போன்றவர்களின் அற்ப ஜோடிப்புகள் / பொய் வழக்குகள் / தளரவைக்கும் வியாஜ்யங்கள், மல்லிகா சாராபாய் போன்ற வெறுப்புமுதல்வாத மனிதவுரிமைக்காரர்கள் மூலமாகத் தான், நம்முடைய தேங்காய்முதல்வாதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டேன் – இந்த அறிதல், எனக்கு மேலதிகச் சோகத்தை வரவழைத்தது என்றாலும்!

ஏனெனில், இந்த ஜோடிப்புகளினால், இவை பற்றிய செய்திகள் சுற்றிச் சுற்றி, ஒவ்வொரு சுற்றுக்கும் மசாலா சேர்த்துக் கொண்டே வந்ததினால், அயோக்கிய பப்பரப்பா ஊடகங்களினால் ஊதப் பட்டு – இது மோதி மீது ஒரு ‘நீங்காப் பழி’ போன்ற மாயையை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவாக, அகில இந்திய அளவில் அரைகுறை இளைஞர்களிடையே, படிப்பிலிகளுக்கிடையே, அறிவிலிகளுக்கிடையே (=கீபோர்ட் போராளிகளிடையே) மோதியைப் பற்றிய இனம் புரியாத வெறுப்பை உருவாகியிருக்கிறது.


இச்சமயத்தில் – 2002 முதல் 2008 வரை, நான் ’த ஹிந்து,’ ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா,’ ‘ஔட்லுக்’ போன்ற பிரபலமான மஞ்சள் பத்திரிக்கைகள் ஒரே விஷயத்தை ஒவ்வொரு அதிகப் படிச் செய்தியிலும், மேலும் மேலும் முகாந்திரமில்லாமல் பொய்களைப் பெருக்கிப் பெருக்கி – பின் ஒருவர் செய்த திரிப்பை மேற்கோள் காட்டி, பின்னொருவரும், பின்னர், இவர் செய்த அதிகப்படித் திரிப்பை மேற்கோள் காட்டி முதலாமவர் மேலதிகத் திரிப்பைச் செய்வதும் — போலவான செய்திக் கொண்டாட்டங்களை (தேதிவாரியான செய்தித் தாள் பத்திக் கத்தறிப்புகளுடன் – ஒரு ஆல்பம் போல!) ஆச்சரியத்துடன் கவனித்து வந்திருக்கிறேன்.  (நான் ஒரு தொலைக்காட்சி எதிர்ப்புப் போராளியாதலால், ;-)  ஆக அதைப் பார்க்காததினால், அங்கு நடந்திருக்கும் அயோக்கியத் திரிப்புகளைப் பற்றி அவ்வளவு தெரியாது)

இது மட்டுமல்ல – இந்த பொய்யான எதிர்மறைச் செய்திகளை வைத்துக் கொண்டு – வென்டி டோனிகர், மார்த்தா நுஸ்பாம் போன்ற வெள்ளைக்கார அறிவுஜீவிகள், படிப்பாளிகள் — இந்தியவியலாளர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு, மதம்சார் படிப்பாளர்களாக பாவித்து — மேற்படி தங்கள் பங்குக்கு, மோதிக்கு எதிராக ஊதும் கடமையை, பொய்ச் செய்திகளை வெறி கொண்டு  ஆற்றினர் – முடிந்தவரை அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டே பத்தி பத்தியாக, புத்தகம் புத்தகமாக எழுதினர்.

பின்னர் நம்மூர் தேங்காய்மூடி அறிவுஜீவிகள் பக்கம்பக்கமாக மேற்படிப் புத்தகங்களிலிருந்து உருவியும் காப்பியடித்தும் தழுவியும் (“வெள்ளைக்காரங்களே எழுதிட்டாங்கன்னா, அதில் உண்மை நிச்சயம் இருக்கும்!”) மோதியைப் பற்றியும் குஜராத்தைப் பற்றியும், ஹிந்து இயக்கங்களைப் பற்றியும் எதிர்மறை கருத்துருவாக்கங்கள் செய்தனர்…

… இந்த மார்த்தா நுஸ்பாம் அம்மணியும், நொபெல் பரிசு பெற்றவரான மேதகு  அமர்த்யா ஷென் அவர்களும் ஜிகிரி தோஸ்த்கள். இந்த மார்த்தா அவர்களின் போராளி வெறுப்பின் காரணமாக, அவரும் அவருடைய தோஸ்த்தும் மேலதிகமாக இந்திய அரசியல் உதிரிகளும் சேர்ந்து அமெரிக்க செனட்டர்களுக்கு எழுதி, மோதிக்கு அமெரிக்க விஸா கிடைக்காமல் இருப்பதற்கு உழைத்திருக்கின்றனர். வெற்றி(!)யும் பெற்றனர்.

இதற்குப் பிறகு, வழக்கம்போல நம்மூர் குளுவான் தட்டச்சுப் போராளிகள், இந்த வெள்ளைக்காரக் கருத்துகளைக் கடன்வாங்கியும், காப்பியடித்தும் – ‘காக்கி டவுசர்,’  ‘மதவெறிப் பாம்பு,’ ‘கோத்ரா படுகொலைகள்’ எனக் கண்டமேனிக்கும் உளறிக் கொண்டு , நரேந்திர மோதிக்கு விஸா கிடைக்காமல் இருப்பதில் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்…

-0-0-0-0-0-0-0-

இம்மாதிரிப் போராளிகளை, சாக்கடை ஆய்வாளர்களைக் குறிப்பிடும்போது –  வெறுப்பு வணிகர்கள்   என எழுதுகிறேன் – இவர்கள் யாரென்றால், பெரும்பாலும் அரசுசாரா தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், முறையற்ற வழியில் நிதி பெறுபவர்களும்,  வேலை வெட்டியற்ற அறிவுஜீவிகளும் தான்.

இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வி பெற்றவர்கள். சுயசிந்தனையும், செறிவான வாழ்க்கை அனுபவங்களும் இல்லாமல், ஆங்கிலச் செய்திகளின் / புத்தகங்களின் மூலம் மட்டுமே,  கடன் வாங்கிய காலாவதியான மேற்கத்திய கோட்பாடுகளின், சிந்தனைகளின் மூலம் மட்டுமே,  தங்கள் கிழக்கத்திய சுற்றுச்சூழலை, பாரம்பரியத்தை, பண்பாட்டை அணுகுபவர்கள்.  தாய்மொழிகளைச் சரியாக அறியாதவர்கள் – அவற்றைப் பற்றி ஒரு வக்கிரமான தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் – ஆனால் தாய்மொழி வளர்ச்சியென்று பேச மட்டும் செய்பவர்கள். தங்கள் சுற்றுச்சூழலைப் பற்றி வெறுப்பும், தங்கள் மேதாவித்தனத்தைப் பற்றிய மேட்டிமைத்தனமும் மிக்கவர்கள். சுயமோகிகள்.

இவர்களுக்கு –  ஏழ்மை (=சுரண்டலால் ஏற்படுகிறது), மதம் (=இந்து மதம் அயோக்கியமானது), ஜாதி, பாரம்பரியக் கட்டமைப்புகள் (=காப் பஞ்சாயத்துகள் மோசம்), உயர் தொழில்நுட்பம் (=கூடங்குளம் ஒரு கொலைக்களம்), நடைமுறை அரசியல், அரசியல்சட்டமுறைகள், அரசியல்வாதிகள் (அரசியல்வாதிகள் அயோக்கியர்கள், அரசியல் ஒரு சாக்கடை, பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்), காவல்துறையினர் (=அதிகாரவர்க்கத்தின் ஏவல் நாய்கள்), அதிகார அமைப்புக் கட்டுமானம் (= ஒன்றுமே தெரியாத ஊழல்வாதிகளால் நிறைந்தது), ஆசிரியர்கள் (=அயோக்கியர்கள், பக்கத் தொழில் செய்பவர்கள்) – போன்றவைகளுக்கு, அடைப்புக் குறிகளில் கோடிட்டுக் காண்பித்திருப்பது போல, பொத்தாம் பொதுவாக எதிர்ப்பு காண்பிப்பது – அதுவும் ஒன்றுமே புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டுவது, புரிந்து கொண்டாலும் கயமையுடன் எதிர்ப்பு காண்பிப்பது என்பது தான் உயிர்தரிக்கும் செயல் – நெய்யொழுகும் பாதாம் ஹல்வா சாப்பிடுவது போல.

இந்த எதிர்ப்புதான், எதிர்ப்பு மட்டுமே  தான்,  இவர்களுக்கு மூலதனம்.

இந்த எதிர்ப்பு இல்லையென்றால் அவர்களுக்கு வண்டி ஓடாது. எதிர்ப்பு இருப்பதற்கு பிரச்சினைகள் தொடர்வது முக்கியம். ஆகவே, இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படவே கூடாது. என்பதில், இவர்களுக்கு மிகுந்த அக்கறை. எதிர்ப்புக்கான காரணங்களை அடுக்கி, அடுத்தவர்களிடம், மேட்டிமைக்கார பிச்சையிடும் வெள்ளைக்கார ஆண்டைகளிடம் பிச்சை எடுப்பதை ஒருபொருட்டாகவே கருதாதவர்கள் இவர்கள்.

சமூக,  அரசியல், தொழில் நுட்பக் கட்டுமானங்களின் அனைத்து வசதிகளையும் நுகர்ந்துகொண்டு, அதனால் மிகப்பல பலன்கள் அடைந்து அதேசமயம், இவைகளுக்கு எதிராக என்று பேசியும் எழுதியும் வருபவர்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல, இந்த அறிவுஜீவிகள் ஒருவருக்கொருவருக்குச் சொறிந்து கொடுத்து, ஒருவர் திரித்ததை இன்னொருவர் மேலதிகமாகத் திரித்து, பின் மேலதிகமாக அனைத்தையும் இன்னும் அயோக்கியமாகத் திரித்து – ஒரு மகாமகோ எதிர்மறை சித்திரத்தை உருவாக்குவதைச் சிரத்தையாகச் செய்பவர்கள்.

இம்மாதிரிச் செயல்பாடுகள்,  மோதி அவர்களுக்கு எதிராக மட்டுமென்பதில்லை. அணுக்கருவுலைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளும் அப்படித்தான்.

-0-0-0-0-0-0-

ஆனால், இக்காலங்களில், அவர்களுடைய பருப்பு சரியாக வேகமுடியாமல் இருக்கிறது,

ஏனெனில் — மோதி அவர்களால் மத்திய அரசை அமைக்கமுடியுமோ என்னவோ, தேர்தலுக்கு முன்னும்பின்னும் எத்தகைய சதிகளும் கந்தறகோளங்களும் நடக்கப் போகின்றனவோ தெரியாது  —  ஆனால் அவர் பிரதமராக வந்து விட்டால் தங்கள் பாடு திண்டாட்டமாகிவிடும் என்று அவர்களுக்குப் படுகிறது, பாவம். ஆகவே, பயங்கர படுபீதியில் இருக்கிறார்கள் – ஒருவேளை, பிரச்சினைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப் பட்டுவிடுமோ, அவர் இப்படியெல்லாம் முயன்றுவிடுவாரோ என்று!

ஆக இந்த ஜந்துக்களுக்கு,  ‘தொழில்முறை மோதி எதிர்ப்பு’ என்பது மட்டும்தான் வாழ்வாதாரம்.

இவர்களை இப்படிச் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே, இவர்களுடைய மதச்சார்பின்மை கோமாளித்தனங்களையும், தங்களுடைய சொந்தப் பாரம்பரியத்தைப் பற்றிய வாயோர நுரை தள்ளல்களையும் புரிந்து கொள்ள முடியும். எள்ளி நகைக்க முடியும்.

இவர்கள் அந்த ’பொய்ச்செய்தி பப்பரப்பா’ புகழ் ஜெர்மானிய கீபல்ஸ் அவர்களின் நேரடி வாரிசுகள். ஆம், இது உண்மைதான். ஆனால் இவர்கள் தொடர்ந்து இப்படிச் செய்யட்டும், பாதகமில்லை. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக தேசத்தில், பதர்களுக்கும்  வாழ்வுரிமை உண்டு.

ஆனால், தேங்காய்முதல்வாதிகளை நாம் இனம் கண்டு கொள்வோம் – ஆனால் வெறுக்கவேண்டிய அவசியமேயில்லை. நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு, இவர்களை இடங்கையால் புறமொதுக்கவும் கற்றுக் கொள்வோம்.

-0-0-0-0-0-

ஆக, இந்த தேங்காய்வாத வெறுப்புமுதல்வாதிகளை, அவர்களின் செயல்பாடுகளை மீறித்தான் நம் நாடும் நம் மக்களும் முன்னேடுத்துச் செல்லப் படவேண்டும் என்பது நிதர்சனம்.

வேறு வழியில்லை. பலவிதமான பிரச்சினைகளுக்கிடையில் (= கருணாநிதி, வடிவேலு, சோனியா, குஷ்பு,… ,… வகையறாக்கள்) சிக்கியிருந்தாலும் ஊழலும், பொறுப்பின்மையும் கரைபுரண்டு ஓடினாலும், இந்தியாவானது, ஆச்சரியம் தரும் வகையில்,  ஒரு சர்வாதிகார நாடல்ல.  நிச்சயம்,  இது எனக்கு மகாமகோ சந்தோஷமளிக்கும் விஷயம்தான்.  இதனை, பொதுவாகவே , பாரதீயத்தின் மாளா சகிப்புத் தன்மையின் தொடர்ச்சியில் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன்.

ஆக, இந்தத் தேங்காய்களையும், (நம்)  மண்டையில் அடித்துக்கொண்டு, அரவணைத்துச் செல்லத்தான் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, ஏன், இந்தியக் குடிமக்களாகிய நம்மைப் பொறுத்தவரையும் கூட – மோதி போன்ற செயலூக்கமும், உறுதியும், தெளிந்த பார்வையும், அனுபவமும் மிக்க ஒரு மனிதர் தலைமையில் ஆட்சி அமைவது மட்டுமேதான் நம்முடைய இந்தியாவை நவீன காலங்களை நோக்கி, சுபிட்சத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்லமுடியும் என நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: இந்தப் பதிவில் குறுக்கப்பட்ட, ‘சுத்திகரிக்கப்பட்ட’  ;-) ஒரு வடிவம், தினமலர் நாளிதழில் இன்று பிரசுரமாகியிருக்கிறது. ஹெச்டிஎம்எல் பக்கம்; மின்பத்திரிக்கையிலிருந்து ஜேபெக் பிம்பம். படித்துத் துன்புறவும்.

நரேந்த்ர மோதி!

10 Responses to “[திருத்தப்பட்ட மறுபதிவு] மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?”

 1. A.seshagiri Says:

  நீங்கள் சிறிது காலமாக திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வேண்டுகோளின்படி தமிழர்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தீர்கள்.
  பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் முன்பு மோதி பற்றிய தொடர் கட்டுரை எழுதிய நீங்கள் சமீபத்தில் ஒன்றும் செய்யவில்லையே என்று நினைத்தேன்.இப்பொழுது இதை தொடங்கி உள்ளீர்கள்.தொடர்ந்து இந்த தேர்தல் முடியும் வரை அடிக்கடி இது போன்ற கட்டுரைகளை எழுதுமாறு வேண்டுகிறேன்.இதில் வரும் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் பதிய தங்கள் அனுமதியும் தேவை.


  • அய்யா, நான் எழுதுவதற்கெல்லாம் காப்பிரைட் டீலெஃப்ட் என்றெல்லாம் கிடையாது. தாராளமாக எங்கு, எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுங்கள். முடிந்தால், தேவையிருந்தால், அவசியம் என்று தோன்றினால் இந்தச் சுட்டியை அங்கு கொடுங்கள். ஆனால், அங்கு எழக்கூடிய சலசலப்புகளுக்கெல்லாம் என்னை ஜவாப்தாரியாக்காதீர்கள். அவ்வளவுதான். சரியா?

 2. poovannan73 Says:

  நீங்க தமிழகத்தை ,அதன் ஆட்சியாளர்களை அவர்களிடம் குறைகள் மட்டுமே உண்டு என்று பற்றி எழுதுவதை பற்றி உங்கள் நண்பர் கூட மேலுள்ள கட்டுரையின் கருத்து மாதிரி தான் நினைப்பார் போல

  Badri Seshadri ‏@bseshadri Jan 27

  Except for the power situation, Gujarat has a long way to go to catch up with TN.


  • … சரியான பதிலைப் பெற்றாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பூவண்ணன் குசர்பீ வேதாளத்துடன் முருங்க மரத்தில் மறுபடியும் ஏறினார்… :-)

   அய்யா பூவண்ணன் – இந்த பத்ரி எந்த சந்தர்ப்பத்தில் எப்போது எந்தப் பின்புலத்தில் இப்படி எழுதினாரென்று எனக்குத் தெரியாது.

   இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு – யாருக்கும் எந்த கருத்தும் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது.

   நான் தமிழகத்தை டம்மிபீஸ் என்று சொல்லவில்லை. தீரா விடத்தைத் தான் அப்படிச் சொல்கிறேன். :-)

 3. poovannan73 Says:

  எப்படி பொய் சொல்றாங்க பாருங்க சார்

  உண்மையான தகவல்களை அடித்து விட்டு அவர்களின் முகத்திரைகளை கிழிங்க மோடி supporters

  http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modis-turf-flops-on-education-health/articleshow/31814890.cms

 4. Venkatachalam Says:

  அன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய ராமசாமி அவர்களே!
  ஏன் திடீரென்று இவ்விதம் அழைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என்ன செய்வேன். உங்கள் கட்டுரையைப் படித்தபின் உங்கள் மீது இருந்த பாசிடிவ் அபிப்ராயம் பல மடங்கு பலப்பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய தினம் ஹிந்துவில் ஒரு பெண்மணியின் கேஜரிவால் மகோத்ச்வக் கட்டுரையில் மோடி மீது துப்பப்பட்ட காழ்ப்பினைத் தாங்கிய கட்டுரையைப்படித்துவிட்டு நேற்று ராம் ஒரு தொலைகாட்சியில் குஜராத் அடிமட்டத்தில் இருக்கிறது என அடித்துக்கூறியதை செவிமடுத்து கண்ணால் பார்த்து அதிர்ந்திருந்த நிலையில் உங்கள் கட்டுரை பெரும் அமைதியையும் உற்சாகத்தையும் தருகிறது. ஆகையால் தங்களை மனதாரபாரட்ட வேண்டி அவ்வாறு அழைத்தேன்.
  தங்களுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்.
  அது சரி வெண்டி டோனிகர் பற்றி எழுதி உள்ளீர்களே அது எங்கு உள்ளது என்று கூறமுடியுமா? அவருடைய ஆல்டர்னேடிவ் நேரேடிவ் என்ற அம்சமும் நான் திருக்குறளுக்கு ஆல்டர்னேடிவ் விளக்கம் தருவதும் ஒருவாறாக இருப்பதால் அவருடைய நூல்களைப் படிக்கவேண்டும் என்று கருதி என் அமரிக்க நண்பர் ஒருவர் மூலம் அவருடைய சர்ச்சைக்குரிய இரண்டு புத்தகங்களையும் பெற முயற்சித்ததில் ஆன் ஹிண்டுயிசம் மட்டும் கிடைத்தது மற்றது இன்னமும் கிடைக்கவில்லை.
  தங்களை வரும் கோடை விடுமுறையில் சந்தித்து சில நாட்கள் தங்களுடன் செலவிட விரும்புகிறேன்.

 5. சரவணன் Says:

  என் கணிப்பு-
  1. தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பெரும்பான்மை கிடைக்காமல் ஆதரவு திரட்டுவதற்காக மோடி நாயாக அலைய விடப்படுவார் (இப்போது தமிழக பிஜேபி விஜயகாந்த் பின்னால் அலைவது போல)
  2. அதன் பிறகு ஒரு வழியாக ஆட்சி அமைத்ததும், தன் எதேச்சதிகார ஸ்டைல் கூட்டணிக் கட்சிகளைப் பிடித்து வைத்திருக்க வேலைக்காகாது என்று விரைவில் புரிந்துகொள்வார்.
  3. முன்பு வாஜ்பேயி அரசை ஓராண்டில் 1 ஓட்டில் கவிழ்த்தது போல இப்போதும் ஜெயல்லிதாதான் அநேகமாக மோதி ஆட்சியைக் கவிழ்ப்பார்.

  சில மாதம் முன்பு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் குஜராத் என்கவுன்டர்கள் பற்றி ஒரு விவாதம். மோதி சார்பாகக் கலந்து கொண்டவர் மது கிஷ்வர். எதிர் தரப்பில் பிரஷாந்த் பூஷண் (பொது நல வழக்கு தொடுத்தவர் என்ற முறையில்) மற்றும் தெஹல்காவின் ஒரு (பெண்) நிருபர். மது கிஷ்வரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. டெல்லியில் (இது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதற்குப் பல மாதம் முன்பு) என்கவுன்டர் நடக்கவில்லையா, பீகாரில் நடக்கவில்லையா என்பதுதான் அவரால் எடுத்துவைக்க முடிந்த ஒரே வாதம். பிரஷாந்த் பூஷண் தன் வழக்கமான நிதானமான தோரணையில் அமைதியாக, ‘ஆம், பல இடங்களிலும் நடந்துள்ளது, அவற்றுக்கும் நானே வழக்கு நடத்திவருகிறேன்’ என்ற போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

  மோதி ஆட்சியை இழந்தபிறகு விரைவில் காணாமல் போவார். 800 பேர் (எந்த மதமாகவும் இருக்கட்டுமே) உயிரிழக்கக் காரணமாக (மறைமுகமாகக்கூட) இருந்துவிட்டு அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது.

  குஜராத் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது ‘செயலூக்கமும், உறுதியும், தெளிந்த பார்வையும், அனுபவமும் மிக்க ஒரு மனிதர்’ ஆன இந்த நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது உங்களுக்கு வேண்டுமானால் ஞாபகம் இல்லாமல் போகலாம்–எல்லோருக்கும் அப்படி அல்ல என்பதை நீங்களும் மது கிஷ்வரும் தேர்தலுக்குப் பிறகு புரிந்துகொள்வீர்கள்.

  • A.seshagiri Says:

   அய்யா சரவணன் அவர்களே தங்கள் அருள் வாக்குக்கு(?!) மிக்க நன்றி.
   அதே உச்ச நீதிமன்றம் அமைத்த அதன் நேரடி கண்காணிப்பில் இயங்கிய சிறப்பு புலானாய்வு துறை மோதிக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியது. அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மோதி மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்று சமீபத்தில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.ஒரு மத கலவரத்தை எதிர்த்து இந்த நாட்டில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத
   (அண்மையில் நடந்த முசாபர் நகர் கலவரம் வரை)நடவடிக்கை எடுத்து ராணுவத்தை வரவழைத்து கலவரத்தை அடக்கி இன்று வரை நிகழாமல் பார்த்து கொண்டிருப்பவர் மோதி அவர்கள் தான்.
   இன்று நாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எத்தனையோ என்கௌன்ட்டர் நடந்தாலும் உங்களை போன்றவர்களாலும்,பரபரப்பு பொய் ஊடகங்களாலும்,வெட்டி மனித உரிமை (?) ஆர்வலர்களாலும் குஜராத்தில் நடந்தவைதான் ஊதி,ஊதி, பெரிதாக்கப்படுகின்றன.என்கௌண்டரில்
   கொல்லப்பட்ட தீவிர வாதிகளையும்,
   கிரிமினல்களையும்,ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் மாதிரி சித்தரிப்பதும் நடக்கின்றன.
   பஞ்சாப் இன்று நம்முடன் இருப்பதற்கு காரணமே,அன்று காலிஸ்தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியபோது,அதை முழுவதும் இது போன்றஎன்கௌண்டர்கள் மூலம் ஒடுக்கிய பெருமை அப்போதைய போலீஸ் அதிகாரி திரு.கன்வர் பால் சிங் கில் அவர்களையே சேரும். தமிழ்நாட்டில் தருமபுரி பகுதியில் இதேபோல் நக்சலைட்டுக்களை முழுவதும் ஒடுக்கிய வால்ட்டர் தேவாரம் அவர்களும் பாராட்டுக்கு உரியவர். இது எல்லாம் நக்சலைட்டுக்களை தாங்கி பிடிக்கும், காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் பூஷன் போன்றவர்களை தூக்கி பிடிக்கும் உங்களை போன்றவர்களுக்கு தெரியாது.


 6. அன்புள்ள சரவணன், தங்களுடைய கணிப்புகளுக்கும் மது கிஷ்வர் மீதான பரிதாபத்துக்கும் நன்றி.

  நான் எதிர்த்தொலைக்காட்சிக்காரனாகவே தொடர்வதற்கு, இன்னொரு உதவி செய்துள்ள உங்களுக்கு நன்றி!

  ஆனால் ஒன்று: ரோம் எரிந்துகொண்டிருக்கும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது அடிப்படையில் சரியான வரலாறே அல்ல! இது திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு சுவாரசியமான பொய் – அவ்வளவே! இம்மாதிரி அரைகுறை வரலாற்றறிவை வைத்துக் கொண்டு உச்சநீதி மன்றக் காரர்கள், இக்காலங்களின் அவதானிப்பை எப்படித்தான் செய்கிறார்களோ என்பதை நான் தலையில் அடித்துக்கொண்டுதான் நகைச்சுவையுடன் அணுக முடியும்.

  __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s