பேராசிரியர் மத்தியாஸ் சாமியல் சவுந்தர ‘எம்எஸ்எஸ்’ பாண்டியன் அவர்களின் அகால மரணத்தை முன்வைத்துச் சில சிந்தனைகள்…

12/11/2014

<எச்சரிக்கை: இது ஒரு அரசியல்சரியற்ற (=politically incorrect) கட்டுரை. சுலபத்தில் வருத்தப்படும் ஆசாமியாக நீங்கள் இருந்தால், இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற பார்வையுடையவராக இருந்தால் – இது உங்களுக்கானதல்ல. ஆனால், உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால், மேலே (=கீழே) படிக்கலாம்>

… … ஒரு காலத்தில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகத்தில் (MIDS – பார்க்க: Madras Institute of Development Studies) ஆய்வாளராக இருந்து – பின்னர் ஜேஎன்யு-வில் (=தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) பேராசிரியராக இருந்த சமூகவியலாளர் எம்எஸ்எஸ் பாண்டியன் அவர்கள் அகாலமாக மறைந்தது வருத்தம் தருவது. இக்காலங்களில் MIDS-லும் பணிபுரியும், நான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரிடம், ஏதோ சொந்த விஷயமாக நேற்றிரவு பேசிக்கொண்டிருந்தபோது அகஸ்மாத்தாக, இந்தச் செய்தி தெரியவந்தது.

இவர் எவ்வளவோ பணி புரிந்திருக்கக் கூடியவர்தான். ஆனால், ஐம்பத்தேழே வயதில் மாரடைப்பு. பாவம் அவர் குடும்பத்தினர்.

சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் முன் – ஒரு கருத்தரங்கம் தொடர்பாக இவரைச் சில முறை சந்தித்திருக்கிறேன். பின்னர் ஓரிருமுறை அவருடன், அப்போதைய ஈபிடபிள்யு-வில் இவர் எழுதிய சில கட்டுரைகளை விவாதிக்க பணிவுடன் முயன்றிருக்கிறேன். (ஏனெனில் என்னுடைய எதிர்வினைகளை ஈபிடபிள்யு பதிப்பிக்கவில்லை; இத்தனைக்கும் பணிவுடனும் தரவுகளுடனும் எழுதப் பட்ட ‘ஆசிரியருக்குக் கடிதம்’ வகையறாக்கள் அவை. ஈபிடபிள்யுவுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதனை நான் தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஏனெனில் அது ஸமீக்ஷா ‘समीक्षा‘ ட்ரஸ்ட் பதிப்பதால், ஈபிடபிள்யு தரமான பகுப்பாய்வுக்கும், தரவுகள் சார்ந்த விமர்சனங்களுக்கும் மேடையாக இருக்கும் என நினைத்துவிட்டேன். கொஞ்ச நஞ்சம் ஸம்ஸ்க்ருதம் தெரிந்தது என் தவறுதான்!)

… அவ்வளவு திருப்திகரமாக இல்லாத நினைவுகள் அவை (அவருக்கும் இந்த உரையாடல்கள் பிடித்தமாக இருந்திருக்கமாட்டா என நினைக்கிறேன், பாவம்). இதற்குப் பல காரணங்கள்: அச்சமயம் நான் ஒரு முதிரா இளைஞனாக இருந்ததும், மேலதிகமாக – தீவிர இடதுசாரி ஈடுபாடு கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால், இவருடைய மென்மையான பேச்சும், அடாவடியற்று நேரில் பழகும் தன்மையும், தரவுகள் இருக்கின்றனவோ இல்லையோ – தான் சரியென்று நினைக்கும்  தன் குறிக்கோட்களில் ஸ்திரமாக இருக்கும் மனப்பான்மை போன்றவையும் எனக்குக் பிடித்திருந்தன என்பதையும் பதிவு செய்யவேண்டும்.

… இவர் திராவிட இயக்கம் பற்றி, தமிழக சமூக அரசியல் ஊடக நிலவரங்கள் பற்றி பல புத்தகங்களும் கட்டுரைகளும் – ஒரு மாதிரி எனக்கு ஒவ்வாத திராவிடவாடையில் எழுதியிருக்கிறார். இவர் புத்தகங்களில் எனக்கு ஓரளவாவது ஒத்து வந்தது என்பது – எம்ஜியார் பற்றிய The Image Trap – MGR in Politics & Films   – இது படிக்க ஜனரஞ்சகமாக இருந்தாலும் (ஸேஜ் புத்தகாலயமா இதைப் பதிப்பித்தது? இது ஒரு புதிர்தான்!)  புதிய பார்வைகளோ, நுணுக்கமான புரிதல்களோ, ஆழ்ந்த சிந்தனைகளோ, சமகால ஆராய்ச்சிக்கூறுகளோ இல்லை. ஆனால் இது வெளிவந்தது கிட்டத்தட்ட 25 வருடங்கள் முன் – பாண்டியன் அவர்களுக்கு, இப்புத்தகம் எழுதும்போது வயது, முப்பது போல இருந்திருக்கலாம் என அனுமானிக்கிறேன். ஆகவே இந்த அளவு புலமை பரவாயில்லையோ?

இவருடைய இன்னொரு புத்தகமான Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Present   பற்றி எனக்கு ஏகப்பட்ட குறைகள், பெருமூச்சுகள். இதில்  – அயோத்திதாசர் பற்றிய நம்பவே முடியாத அரைகுறைக் கருத்துகள், அபுரிதல்கள் – தொடர்பற்ற, தருக்கமற்ற புள்ளிகளை நேர்க்கோட்டில் விரிப்பது போன்ற பார்வைப்பிழைகள்; சும்மனாச்சிக்கும், தொடர்பேயில்லாமல் ஸபால்டர்ன் (subaltern) பார்வைகள் என்றெல்லாம் விரியும் புள்ளிகள்; வேதனைதான். தன்னை ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளராகக் கருதிக் கொள்ளும், அடிப்படையில் புத்திசாலியான ஒருவர் ஏன் தான் இப்படி எழுதுகிறாரோ என்ற ஏக்கங்கள்  என்னை இன்றளவும் ஆட்கொண்டிருக்கின்றன.

இவற்றையும் இன்னும் சிலவற்றையும் டி தர்மராஜ் அவர்கள் அழகாக ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கிறார்: REBEL’S GENEOLOGY – A REVIEW ON M.S.S. Pandian’s Brahmins and Non- Brahmins – தர்மராஜ் போன்றவர்களெல்லாம் ஏன் தமிழில், தொடர்ந்து எழுதக் கூடாது? எனக்கு ஏக்கமாக இருக்கிறது.

-0-0-0-0-0-0-0-

… ஆனால் – மசாசோ பாண்டியன் அவர்களுடன் கருத்துவேற்றுமைகள் பல (ஜாதிகள் பற்றிய பார்வை, காலனியம்+க்றிஸ்தவகுருமார்களுக்கும் ஜாதிவெறிக்கும் உள்ள தொடர்புகள், ஜாதிவெறிக்கு ஒரே ஊற்றுக்கண்னாக பார்ப்பனர்களை மட்டுமே பார்ப்பது, பார்ப்பன-அபார்ப்பன பிரிவு மூலமாக மட்டுமே தமிழகச் சமூகத்தை, அதன் க்ரியா ஊக்கிகளை அவதானிப்பது, ஹிந்து நம்பிக்கைகள் அவற்றின் வளர்ச்சி போன்றவை பற்றிய அபுரிதல்கள், தலித்களின் நிலையில் அனைத்து ஜாதிகளின் பங்கு, சடங்குரீதியான சுயசார்பு X பொருளாதாரச் சுயசார்பு, இஸ்லாம்+க்றிஸ்தவ மதங்களிலும் உள்ள ஜாதி/வகுப்பு வெறி இன்னபிற;  சமூகச் சிடுக்கல்களை மிகச்சுளுவாக தீர்க்க முனையும் நம்பவே முடியாத சிறுபிள்ளைத்தனமான கறுப்பு-வெள்ளைப் பார்வை) இருந்தாலும், முடிந்தபோதெல்லாம் இவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். இவருடைய அனைத்துப்  புத்தகங்களையும் படித்துள்ளேன். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை – தமிழில் தமிழக  சமூக, பொருளாதார, ஊடக, அரசியல் சூழல் பற்றி – நாம் ஒப்புக்கொள்ள முடிகிறதோ இல்லையோ – சரியோ, தவறோ – ஓரளவுக்காவது  கோர்வையாக எழுத நிறைய தமிழ் ஆய்வாளர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம். (அப்படி ஏதாவது விடிவெள்ளிகள் மினுங்கிக் கொண்டிருந்தால், தயவுசெய்து எனக்குத் தெரிவிக்கவும்)

என்னுடைய கருத்தில், இவருடைய புத்தகங்களில் பல – மிக மேம்போக்காக, ஆராய்ச்சி நோக்கில்லாமல், சரியான தரவுகளல்லாமல், கேள்விகேட்கத்தக்க முன் முடிவுகளுடன் – சிலசமயம் உணர்ச்சிவசப்பட்டும்  எழுதப் பட்டவை. நிலைமை இப்படி ஆனாலும் – இவருடைய ஆங்கிலமும், படிப்பறிவும், ஆய்வுக்கூர்மையும் – சர்வ நிச்சயமாக தற்போதைய  மகாமகோ MIDS நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரும் என் செல்லமும் ஆன ஆஇரா வேங்கடாசலபதி அவர்களை விடப் பலமடங்கு அதிகம் என்பதைச் சொல்லவேண்டும்.

…பொதுவாக, இவர் ஒரு சமூகவியல்காரர் என ஒப்புக் கொள்ள முடிந்தாலும், என்னுடைய செல்ல ‘த ஹிந்து’ தினசரி சொல்வது  போல – அவர் ஒரு சமூக அறிவியல் அறிஞர் என்றெல்லாம் இல்லை. ஏனெனில் அறிவியலின் பாதை என்பது முன் முடிவுகளில்லாமல், ஒப்புக்கொள்ளத்தக்க தரவுகள் சார்ந்து இயங்குவது. ஆனால் ஒன்று – பாண்டியன் அவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தால், அவை சரியான திக்கில் சென்றிருந்தால் அடுத்த 20-30 வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வாளராக வளர்ந்து செறிவடைந்திருக்கக் கூடிய புத்திகூர்மையும் சாதுர்யமும் உடையவர், நாமெல்லாம் மதிக்கக்கூடிய பெருந்தகையாகியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

-0-0-0-0-0-0-0-0-

பாண்டியன் அவர்களின் சமூகவியல் ஆராய்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக – 2013ல் நடந்த மகாமகோ டாப்டக்கர் ஜோக்கான, என்னைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்த, தமிழக மாணவக் குஞ்சாமணிகள் அமர்க்களமாக நடத்தி வைத்த  ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ கோமாளித் தனங்களை நினைவு கூர்வோம். இதனைப் பற்றி நானும் மாங்கு மாங்கென்று எழுதியிருக்கிறேன்.

ஆனால் பாண்டியன் அவர்கள் (இன்னொரு கட்டுரையாளருடன் இணைந்து) ஈபிடபிள்யு பத்திரிகையில் எழுதிய ‘தமிழ வசந்தகாலம்?’ — ‘ஆராய்ச்சிக்’ கட்டுரையின் சாராம்சம் (அவர்களே எழுதியது!)  இப்படி இருக்கிறது:

“A new generation of college students in Tamil Nadu has taken up the cause of the Tamils of Sri Lanka. Articulate, wellinformed and uncontaminated by the influence of time-serving politicians they have successfully forced an agenda on the three main political parties in the state.”

(A Tamil Spring? | Vol – XLVIII No. 15, April 13, 2013 | M S S Pandian and Kalaiyarasan A – முழுக் கட்டுரையையும் படிக்க நீங்கள் ஈபிடபிள்யு-வின் சந்தாதாரராக இருக்கவேண்டும்)

என் கேள்விகள்:

Tamil Spring! (off shutterstock.com) ... இப்படித்தான் நம் மாணவமணிகள், சுருள்கம்பியை மாட்டிக்கொண்டு சிங்சிங்கென்று உணர்ச்சிவசப்பட்டு குதித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? ஒருகால் இதனைக் தான் கிண்டலாக குறிப்பிட்டிருந்தாரோ பாண்டியன் அவர்கள்?

Tamil Spring! (off shutterstock.com) … இப்படித்தான் நம் மாணவமணிகள், சுருள்கம்பியை மாட்டிக்கொண்டு சிங்சிங்கென்று உணர்ச்சிவசப்பட்டு குதித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? ஒருகால் இதனைக் தான் கிண்டலாக குறிப்பிட்டிருந்தாரோ பாண்டியன் அவர்கள்?

 • இது என்ன எழவு கல்லெறி வசந்தம்? தமிழ வசந்தம்?? இங்கு நடந்தது என்ன –  செக்கஸ்லாவாகியாவின் ப்ராக்? மத்தியதரைக்கடல் நாட்டு கோஷ்டங்களா? தியன்அன்மென் சதுக்கக் கொலைகளாமா? அல்லது அந்தக் கேடுகெட்ட கொலைவெறி (=நக்ஸல்பாரி) ‘வசந்தத்தின் இடிமுழக்கமா?’
 • எப்போது இந்த ‘புதிய தலைமுறை’ கல்லூரி மாணவர்கள் – ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள்? சும்மனாச்சிக்கும் பிரபாகரன் பையன் பிஸ்கெட் புகைப்படம், முள்ளிவாய்க்கால் போட்டோஷாப் படம் தூக்கிக்கொண்டு இனவெறி ஒழிக எனக் கூவிக்கொண்டு தமிழகத்தில் கல்விட்டெறிந்து பொதுச் சொத்துகளை நாசம் செய்தால் அது பாவப்பட்ட ஸ்ரீலங்காகாரர்களுக்கு உதவிசெய்வதையே விடுங்கள், எப்படி குரல்கொடுப்பதாக ஆகும்?
 • டமிளக மானவர்கல் நண்றாக ரோஸ்ச்சி கரீட்டா பேஸ்வார்கலாமே? ஏதோ ஒரிருவர் பேசக்கூடுவதை வைத்து இப்படியா அனைத்துக் குஞ்சாமணிகளையும் ஆர்ட்டிக்யுலேட் ஆசாமிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு மிரட்டுவது? அல்லது farticulate என்பது articulateஆக தட்டச்சு செய்யப்பட்டுவிட்டதா?
 • ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  குஞ்சாமணிகள் – விஷயங்களைச் சரியாக அறிந்தவர்களாமே? என்ன வெல் இன்பார்ம்ட்? பாழுங் கிணற்றில் தமிழகத்தைத் தள்ளக் கூடிய அளவு பராக்கிரம சாலிகள் இவர்கள் எனச் சொல்லவருகிறாரா?
 • கயமை அரசியல்வாதிகளின் கலப்படமற்றுத் திகழ்ந்தார்களாமே? ஏன், அவர்கள் அடிப்படை அறிவு+தர்க்கவாதம் போன்றவற்றாலும் கலப்படம் செய்யப்படாத சுத்த சுயம்புக்களாகத் திகழ்ந்தார்களாமா? என்ன எழவோ!
 • அப்படி என்ன பெரிதாக – அந்த மூன்று கட்சிகளிலும் விளைந்தது? அது என்ன அஜென்டா? இந்த அஜென்டா ஜந்து என்றால் என்ன என்றாவது அந்த உணர்ச்சிக் குவியல்காரர்களுக்குத் தெரியுமா?
 • முட்டியடி எதிர்வினையாக,  உணர்ச்சிவசப்பட்டு, தொலைக்காட்சி ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  குஞ்சாமணிகளின் கோஷ்டங்களைப் பார்த்துவிட்டு எழுதப்படும் ஆழமான புரிதல்களில்லாத இம்மாதிரிக் கட்டுரையை – அந்த மதிக்கத்தக்க ஆசிரியர் சச்சின் சௌதுரி  உயிருடன் இருந்தால் பதிப்பித்திருப்பாரா?
 • இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியாளர், அதுவும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர் என்று தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவர் அணுகவேண்டிய விஷயங்களா? அப்படியே அணுகினாலும், இப்படியா தன் திராவிட, தமிழின, தமிழீழ சார்பினைக் காட்டிக் கொண்டு ஒரு போராளித்தன்மை வாய்ந்த கட்டுரையை சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து ஆராய்ச்சி பலூன்களாக இந்த அரசியல்பொருளாதாரவாராந்தரியில் விடுவது? :-(

இவருடைய தற்கால மாணவர்களில் ஒருவர் – என்னுடைய நண்பர் ஒருவரின் மகன். புத்திசாலிப் பையன். இம்மாதிரி இளம் அறிஞர்களுடன் பேச, உரையாட – கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவன் பேச்சுவாக்கில் சொன்ன பலவற்றில் சில பாண்டியன் அவர்களைப் பற்றியும் இருந்தன. இந்தப் பையன் சொல்வதைப் பார்த்தால் – சமீப காலங்களில் பாண்டியன் அவர்களின் ஆராய்ச்சிக் குவியம், கஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி / பிரிவினை வாத முனைவுகளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் (முறையே – முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும்) உள்ள ஒற்றுமைகள், ஊடாடல்கள் பற்றி இருந்திருக்கிறது. இதைச் சில மாதங்கள் முன் கேள்விப்பட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டு மாரடைப்பு வருவது போல இருந்தது. இப்படியெல்லாம் கூட ஒருவர் ஆராய்ச்சி செய்யமுடியுமா என்பது…

நம்மூரில் தமிழ் பிஹெச்டி-க்காக ‘ஷெல்லியும் மணிகண்டனும்,’ ‘போர்ஹெஸ்ஸும் ராமகிருஷ்ணனும்,’ ‘அலாஸ்காவும் ரோட்டோர குஸ்காவும்,’  ‘ஐஸ்ஸக் அஸிமோவும் பாம்பாட்டிச் சித்தரும்’ போன்ற மகாமகோ ஆராய்ச்சிகள் நடப்பதை அறிந்து இறும்பூதடையும் எனக்கே  இப்படியென்றால்…

சரி.

-0-0-0-0-0-0-0-0-

இருந்தாலும் — தமிழகத்தில் திராவிட இயக்கங்களைப் பற்றிச் சாதகமாக ஆராய்ச்சி செய்யும் அனைவரும், அவற்றின் சொல்லாடல், கதையாடல்களை, பரப்புரைகளை நம்பும் மனப்பாங்கு உடையவர் அனைவரும் – அடிப்படையில் ஆய்வு மனப்பான்மை உள்ளவர்களாகவும் மகாமகோ புத்திசாலிகளாகவும் இருக்கும் சாத்தியக் கூறுகள் இருந்தாலும் கூட – ஏன் சராசரி ஜோதியில் கலந்து ஐக்கியமாகி மங்கி விடுகின்றனர்?

திராவிடம் எனும் கருதுகோளே, கறாரான ஆராய்ச்சிமூலம் அணுகமுடியாதவொன்றா என்ன?

ஏனெனில் – அதற்கு உள்ளீடு, தருக்கரீதியான அடிப்படைகள் போன்றவை இல்லவேயில்லை என்பதுதான் காரணமோ?

கேள்விகள், கேள்விகள்…

-0-0-0-0-0-

ஹ்ம்ம்… எது எப்படியோ, மசாச பாண்டியன் அவர்களாக இருந்த அணுக்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு காலவெளியில் கலக்கப்போகும் இத்தருணங்களில், அவருடைய புன்னகையை நினைவு கூர்கிறேன்.

பாண்டியன் அவர்களின் சிரித்தமுகப் புகைப்படம் (https://i1.wp.com/www.outlookindia.com/images/pandian_thumb_20071217.jpg)

பாண்டியன் அவர்களின் சிரித்தமுகப் புகைப்படம்

(off: http://www.outlookindia.com/images/pandian_thumb_20071217.jpg)

பாண்டியன் அவர்களின் இறப்பு, ‘திராவிட இயக்கச் சித்தாந்தவாதி’களுக்கு ஒரு அகால இழப்புதான்.

தொடர்புள்ள பதிவுத்தொகுப்புகள்:

5 Responses to “பேராசிரியர் மத்தியாஸ் சாமியல் சவுந்தர ‘எம்எஸ்எஸ்’ பாண்டியன் அவர்களின் அகால மரணத்தை முன்வைத்துச் சில சிந்தனைகள்…”

 1. Vijayaraghavan Says:

  I suspect the student’s “Tamil spring” was the creation of catholic hierarchy; after all it was incubated in Loyola College with the full blessings of venarable padres and started from there. So, MSS put high hopes in “Tamil spring” , which was even more illusory phenomenon than MGR Images, on which he is supposed to be the authority.


 2. எப்படி எல்லாம் மனிதர்கள் (எம்.எஸ்ஸ்) இருக்கிறார்கள்? தான் மதம் மாறியவுடன், தனது முன்னோர்கள் இருந்த தாய்மத்த்தை, தனது ஒரு சாண் வயிற்றுகாக, பழிக்கும் இவர்களை, என்னென்பது?

 3. தமிழ் Says:

  இன்னும் ஒரு பத்தாண்டுகள் அல்லது அதிகபட்சம் இருபதாண்டுகள்.அதற்குப் பின் பாண்டியன்,ராஜதுரை,கீதா,ராஜன குறை, அ.மார்க்ஸ் வகையாறக்களின் பெரியார்,திராவிட இயக்க ‘ஆய்வுகள்’ சீந்துவாரின்றி ஆய்வுலகில் புறக்கணிக்கப்படும். 1990 களில் OBC அரசியல், இந்த்துவ அரசியல்,அடையாள அரசியல் கவனம் பெற்ற போது இவர்கள் எழுதியது காரணமாக திராவிட அரசியல் குறித்த கவனம், நம்பிக்கை ஏற்பட்டது. பெரியார் குறித்து பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது நிலை வேறு. இரு பெரும் கட்சிகள் வீழ்ச்சியடைந்தால் அல்லது சிதறி விட்டால் காலம் செய்த கோலம், மோசமான தலைமை, பார்பன-பனியா-பன்னாட்டு அரசியல் சதி என்று ‘காரணம்’ சொல்லிக் கொள்ளலாம். நம் காலம் பின் நவீனத்துவ கலி காலம் :)

 4. bseshadri Says:

  தமிழில் http://tdharumaraj.blogspot.in இப்படி ஒரு வலைப்பதிவு உள்ளது. இவரும் நீங்கள் குறிப்பிடும் தர்மராஜனும் ஒருவரா என்று தெரியவில்லை. ஆங்கில வலைப்பதிவு (http://tdharmarajan.blogspot.in/) 2010-லேயே நின்றுவிடுகிறது. தமிழ் வலைப்பதிவு புதிதாக உள்ளது.

 5. bseshadri Says:

  இரு பதிவுகளும் ஒருவருடையவையே. உங்கள் சுட்டியில் உள்ள ஆங்கில விமர்சனத்தின் தமிழ் வடிவம் இங்கே (காலச்சுவட்டில் வெளியானது) http://tdharumaraj.blogspot.in/2014/11/m-s-s.html


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s