எம்எஸ்எஸ் அவர்களுக்கே க்றீச்சிடும்படி, ‘இரண்டாம் பிடில்’ வாசிப்பது எப்படி?

17/11/2014

பயப்படாதீர்கள். நான் நம் மகாமகோ எம்எஸ்எஸ் அம்மணி அவர்களின் விசிறி. அவர்களைக் கடிக்க மாட்டேன். ஆகவே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:

  1. எம்எஸ்எஸ் எம் எஸ் சுப்புலட்சுமி
  2. எம்எஸ்எஸ் = எம்எஸ்எஸ் பாண்டியன்
  3. பிடில் = வயலின்
  4. இரண்டாம் பிடில் முதலாம் பிடில்
  5. இரண்டாம் பிடில் = முதல் பிடில்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஜந்துவகை

ஆமென்.

பின்நவீனத்துவக் கட்டுடைப்புக் கருத்துப் படம்: எம்எஸ்எஸ், எம்எஸ்எஸ், முதலாம் பிடில், இரண்டாம் பிடில் (இரண்டாவதின் அளவும் பராக்கிரமும் பெரிதென்றறிக).

பின்நவீனத்துவக் கட்டுடைப்புக் கருத்துப் படம்: எம்எஸ்எஸ், எம்எஸ்எஸ், முதலாம் பிடில், இரண்டாம் பிடில் (இரண்டாவதின் அளவும் பராக்கிரமும் பெரிதென்றறிக).

அண்மையில் மறுசுழற்சி அடைய ஆரம்பித்திருக்கும்  எம்எஸ்எஸ் பாண்டியன் அவர்களுக்கு உரியதாக இருந்த முன்னாள் அணுக்கள் உவகை கொள்ளும் வண்ணம், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலபல அஞ்சலிகள் வந்து கொண்டிருக்கின்றன – பாவம் அவர். (நான் கூட, இவ்விஷயமாக, ஓருமாதிரியான  கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன், அவர் மெய்யாலுமே பரிதாபம்தான்.)

நம்முடைய செல்ல தமிழ அறிவுஜீவியச் சூழலில் ஒருவரைப் பற்றி, இப்படி அவர் இறந்த பிறகாவது பலர் தெரிந்துகொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்தான்.

ஆனால்…

-0-0-0-0-0-0-0-0-

‘தமிழ் ஹிந்து’வில் பதிப்பிக்கப்படும் கட்டுரைகள் பல, கண்டமேனிக்கும் காட்டுரைகளாக இருப்பதும், அவை படு பயங்கரபீதியையும், துர்சொப்பனங்களையும் அளிப்பதும் – அத்தினசரியின் மகாமகோ பாரம்பரியமாகவே ஆகிவிட்டிருக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டாக – ஆய்வாளர்கள் லக்ஷ்மணன் அவர்களும், அன்புசெல்வம் அவர்களும் ஒரு நீளமான (அஞ்சலி + பிலாக்கணம் )/2 வகையறா இரண்டாம்பிடில்தனமான  கட்டுரையை என்னுடைய செல்ல தமிழ்த் தினசரியான ‘தமிழ் ஹிந்து’வில் பதிப்பித்திருக்கிறார்கள். அதனைப் படித்து இறும்பூதடைந்த பல தமிழர்களில் ஒருவன் நான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நீங்களும் படியுங்கள்: எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின்‌‌ மறதி

பிரச்சினை என்னவென்றால் – இக்கட்டுரை என்னுடையதை விடப் படு மோசமான சிடுக்கல் தமிழில், என்னதான் சொல்லவருகிறார்கள் இவர்கள் எனத் திகைப்புடனும் திகிலுடனும் படிப்பதற்காக எழுதப் பட்டுள்ளது. எனக்கு மிகப் பொறாமையாக இருக்கிறது – தமிழில்(!) எழுதுபவர்களில்(!!) நிரந்தரமான  கடைசி இடம் என்பது எனக்குத்தான் என சர்வ நிச்சயமாக இருந்த, இறுமாப்பு மிக்க எனக்கு, இதுவும் வேண்டும். இன்னமும்  வேண்டும். :-(

ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கட்டுரையைப் படித்து அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ள முயற்சித்த எனக்கு அதிர்ச்சி. ஏனெனில்…

அதில் உள்ள திராவிட இயக்கத்தின் தற்கால நிலைக்கான, அதன்மேலான  தர்க்கரீதியான விமர்சனம் என்பது – சாதாரண அறிவுள்ள எந்தவொரு தமிழனானாலும் (அடியேனால் கூட!) புரிந்துகொள்ளக் கூடியதே. நான் ஒப்புக் கொள்கிறேன்கூட. ஆனால் எம்எஸ்எஸ் அவர்களும்  இப்படிச் செய்தார் என்று சொல்வது, கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்பி அதனைப் பறக்கச் செய்வது போலத்தான்…

பாவம் எம்எஸ்எஸ் பாண்டியன் – அவர்கள் மேல் பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம்; உண்மைதான். ஆனால் அவற்றில் நிச்சயமாக – அவர் திராவிட இயக்கங்களை விமர்சித்தார் என்கிற தொனியில் எழுதுவது அபாண்டம்.

ஏனெனில், நான் நேரடியாக அவருடன் உரையாடியிருக்கும்போதும் அவர் அப்படி விமர்சனம் செய்பவராக இல்லை. உரையாடல்கள் நடந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகி விட்டன என்றாலும், எனக்குத் தெரிந்து, அவர் தொடர்ந்து எழுதியவைகளில் எதுவும், அந்த இயக்கத்தைக் கடும்/தொடர்ந்த விமர்சனம் செய்ததாகவும் இல்லை. இத்தனைக்கும் அவர் எழுதியது அனைத்தையும் ஓரளவாவது ஊன்றிப் படித்திருப்பவன் நான். மேலும். அண்மைய வருடங்களில் (2012 -14) அவருடைய மாணவராக இருந்த ஒருவர் மூலம் தெரியவந்தபடி – கடைசி வரை, அவர் திராவிட இயக்கத்தின் க்ஷீணித்த நிலை பற்றி கொஞ்சம் வருத்தத்துடன் இருந்தாரே (= ‘ இந்தக் காலத்தில் ஈவெரா பெரியார் இல்லை!’ வகையறா) தவிர, அதன் அடிப்படைகள், பிறழ்வுகள், பரிணாம வீழ்ச்சிகள் பற்றியெல்லாம் எதிர்மறைக் கருத்து தெரிவித்ததாக எனக்குத் தெரியாது. (ஆனால் நான் அறிவிலியாக இருக்கலாம்; ஒருகால் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அவர் இப்படிப் பேசியிருக்கலாம்; தனிப்பட்ட முறையில் அவர் தம் நண்பர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கலாம் எனும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனதான்; ஆனால் – என் கருத்து என்பது பொதுசபையில், ஊடகங்களில் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் பற்றி மட்டுமே!)

எது எப்படியோ,  எப்படித்தான் இப்படி கற்பனாவாத ஆராய்ச்சிகளை அவிழ்த்துவிடுகிறார்களோ இந்த MIDSவாதிகள். அவரவருக்கு அவரவர் மரீஹ்வானாக்கள், வேறென்ன சொல்ல. ஆனால், பாரதியார் சொல்லாதிருப்பதைப் போல: கஞ்சா அடிப்பதற்கிலார், அது ஏன் என்கிற காரணமும் அறிகிலார்தானோ?

இந்தக் கட்டுரையாளர்களின் இம்மாதிரி ஆராய்ச்சி பலூன்கள், குறைந்தபட்சம் – சர்ச்சைக்குரியவை ஆனால், அதிக பட்சம் சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுட்ற பீலாக்கள்  என்பது என் கருத்து. (இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள், மாற்றுக் கருத்துகளைத் தரவுகளுடன் கொடுத்தால் என் பார்வையை மாற்றிக் கொள்ள நான் தயார்)

-0-0-0-0-0-0-

ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை, இந்த ஆராய்ச்சியாளர்கள்  முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் அதனைத் தமிழ்ப் படுத்தி இருப்பார்களோ? ஆங்கிலத்தில் இது சரியாகவே இருந்திருக்குமோ, எனச் சில வாக்கியங்களை, ஆங்கிலத்திற்கு உருமாற்றிப் பார்த்தேன். ஆனால் அதிலும் எனக்குத் தோல்விதான். எனக்கு இந்தக் கட்டுரை பிரதியின் வரலாறு சரியாகப் புரிபடவில்லை. ஒருகால் இது ஒரு பின் நவீனத்துவப் பிலாக்கண அஞ்சலிக் கட்டுரையோ? :-(

ஆக, நான் இந்தக் கட்டுரையாளர்களில் ஒருவரான அன்புசெல்வம் அவர்களின் தளத்தை திக்திக்விஜயம் செய்தேன்.

இதன் முதல் பக்கத்தில், அவர் இப்படி எழுதியிருக்கிறார்:

“By finding out the penis, all were in a great gay and merry that the vaaththiyar (teachers) had given birth to a patriarchal male baby.

But, within a friction of few seconds they had started another ritual gossip that the boy was born on Aadi New (no) Moon day mid night (Aadi Amavasai Raaththiri). Hence he would not steady well, he would not come up in future life, definitely he would become a vandalised, at slaughter or he would be a pick pocketed.

Through the elementary school day whatever my friend’s pen, pencil, eraser and other stationary things had gone astray immediately all were keenly observed and gave a title that he only took all those things.

Because, I was born on New (no) Moon day mid night from that day onwards, they had gossipy baptised the false title for me. Likewise many Dalits living in this soil with these so called false titles of Avarna, Chandala, Panchma, Harijan etc…

From their voice corridor with:

Few Truthfully

Veppur Thirudan “

இதனையும் தமிழ்ப் படுத்திப் பின்னர் அதனை மிகுந்த பிரயத்தனப்பட்டு ஆங்கிலப் படுத்திப் பார்த்தேன். ஆனால் – மேலதிகமாக எந்தவிதப் புரிதல்களும் எனக்குக் கிடைக்காதது என் குறைதான்.

ஆனாலும் – பின்னர் இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் எனப் படித்தபோது, இவர் க்றிஸ்தவ மதபோதகப் பார்வையுடையவரென்றும், ஆகவே ஹிந்து மதத்தின்மீது விமர்சனம் வைப்பவரென்றும், ஆனாலும்  பலவிதமான உபயோகமான, பொறுப்புணர்வுள்ள பணிகளை முன்னாட்களில் செய்திருக்கிறார் என்றும் தெரியவந்தது. சுபம். (முடிந்தால், இவருடைய எம்ஃபில் ஆராய்ச்சிக் குறிப்புகளைப் படித்துப் பார்க்கவேண்டும்)

-0-0-0-0-0-0-

இன்னொன்று: இவர் பறை வடிவமைப்பாளரும் வித்வானுமான அலங்காநல்லூர் ஆறுமுகம் அவர்களுடன் ஒரு நேர்காணல் செய்திருக்கிறார். இது இயல்பான பேச்சு நடையில் ஓரளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது. அவசியம் படிக்கவேண்டிய பேட்டி இது.

ஆனால், இந்தப் பேட்டியின் கடைசியில் அன்புசெல்வம் அவர்கள் கொஞ்சம் திரித்திருக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது – ஏனெனில், என் ஜவுளி தொடர்பான தொழில் விஷயமாகத் தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது ஆறுமுகம் அவர்களின் பறை இசையை நான் கேட்டுள்ளது மட்டுமல்லாமல், அவருடன் சிறிது அளவளாவியுமிருக்கிறேன்; ஆனால் இவை நடந்தது பற்பல வருடங்களுக்கு முன்பு. ஆக, இக்காலங்களில் அவர் பார்வைகள் மாறியிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

இருந்தாலும், இது முக்கியமான பேட்டி.

–0-0-0-0-0-0-0-0–

நம் கண்ணெதிரேயே வரலாறுகள் திரிக்கப்பட்டு, புனைகதைகள் சேர்க்கப்படுவதை அவதானிப்பது, நிச்சயம் ஆச்சரியம் தரும் விஷயம்தான். (திராவிடக் கதையாடல்களில் இதெல்லாம் சகஜமப்பா!)

இருந்தாலும் திரிப்பதைத்தானே  செய்கிறார்கள், பாவம் விட்டுவிடலாம் என்று பார்த்தால் – அந்த எழவையாவது சரியாகச் செய்கிறார்களா என்றால், அதுவும் இல்லை.

காலத்தின் கந்தறகோளம் என்பது சகிக்கமுடியாதவொன்றுதான்.

மெல்லட் டமிள் இணிச் சாவும், ங்கொம்மாள, பாத்துக்கினே இரு. :-(

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s