நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை?

19/11/2014

இதைக் கொஞ்சம் சரியாக எழுதவேண்டுமென்றால் –  ஒரு தமிழனால் ஏன், தமிழிலேயோ அல்லது அந்தக் கேடுகெட்ட எழவெடுத்த ஆங்கிலத்திலேயோகூட இப்பாடுபொருட்களைப் பற்றித் தரவுகளுடன், உள்ளார்ந்த நுணுக்கமான பார்வைகளுடன், அறிவுகூர்மையுடன், பரவலான ஆராய்ச்சிப் பின்புலத்துடன் தெளிவாக எழுதவே முடிவதில்லை?

கவனிக்கவும்: இந்தக் கேள்வியை நான் எழுதியிருப்பதற்குக் காரணம் – நான் ஒரு 1) வல்லுனன், 2) சமூக அறிவியலாளன் அல்லது 3) எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் (மூன்றாவது உண்மைதான் என்பதைத் தாழ்மையான தன்னடக்கத்துடனும், சங்கோஜத்துடனும் ஒப்புக்கொள்கிறேன் என்றாலும்) என்பதால் அல்ல – என் அளவு எனக்குத் தெரியும்; ஆனால் – கடந்த 35 வருடங்களாக நான், சமூக மானுடவியலின், நாட்டுப்புறவியலின், வரலாறுகளின் ஒரு தளரா ‘ஒண்ணாங் க்ளாஸ்’ மாணவனாகவும் இருந்து வருகிறவன், இவ்வட்டாரங்களில் கடந்த நூறு வருடங்களில் வந்திருக்கும் புத்தகங்களில் பலவற்றைப் படித்தும், நம் சமூகத்தை ஆச்சரியத்துடன் மலங்கமலங்க விழித்துப் பார்த்துக்கொண்டும் வந்திருப்பவன்  என்கிற முறையில்தான்.

… ஹ்ம்ம். சரி, யோசிக்கிறேன். இவ்வட்டங்களில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் செய்து ஆச்சரியப் படத்தக்க ஆழத்துடனும் வீச்சுடனும் புத்தகங்கள் எழுதிய பலப்பல ஐரோப்பிய அமெரிக்க வெள்ளைக்காரர்களிடம், ஒரு சில ‘புலம் பெயர்ந்த’ இந்தியர்களிடமும் அப்படி என்னதான் இருக்கிறது?

விரிசல்விழுந்த திராவிடக் குண்டுச்சட்டியில் கண் கட்டப்பட்ட கழுதையை ட்ரீயோட்ரீயோட்ரீயோ என ஓட்டிக் கொண்டு புளகாங்கிதம் (= ‘உலகின் முதல்மொழி தமிழ்,’  ‘உலகின் முதல் மானுடன் தமிழன்’ அல்லது பொதுவாகச் சொல்லவேண்டுமானால்,  ‘வொலக வரலாற்றிலேயே முதல்முறையாக தொலைக்காட்சியிலும் (தொலைத்தொடர்புதுணைக்கோள் மூலமாக இப்புவியின் எந்த மூலையில் டிவி பார்ப்பவர்களுக்கும் கூட நாறும்படி) மகாமகோ குசு விட்டவன் நம் தமிழன்’) அடைந்து கொண்டிருக்கும் நம்மிடம், இல்லாத மூளை அவர்களிடம் எப்படி இருக்கிறது?

இந்தக் கேள்வி என்னை மிகப் பல வருடங்களாக, மாமாங்கங்களாகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், மறுபடியும் கவனிக்கவும்: நான் வெள்ளைய மேட்டிமைவாதியல்லன். வெள்ளைக்காரர்களிலும் அவர்களுக்கு வேண்டிய அளவுக்கு மேலாகவே முட்டாட்கள் இருக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக, திருப்தியுடன் உணர்ந்தவன். பாவம், அவர்களுடைய போதாக்குறைக்கு, மேலதிக உதவிக்காக நம் ஆட்கள் வேறு அங்கு புலமும் ஜலமும் பெயர்ந்து என்ஆர்ஐ-க்கள் எனத் திருவுலா வருகிறார்களே! ஆக, அந்தப் பாவப்பட்ட வெள்ளைக்காரர்களை நினைத்தாலும் பாவமாகவே இருக்கிறது, என்ன செய்ய… (எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன், மன்னிக்கவேண்டாம்!)

-0-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… இம்மாதிரி எதிர்மறை எண்ணக் குவியல்களோடு நான் – ஆற்றாமையுடனும் போதாமையுடனும், சிலசமயம் பிற சகோதர இந்திய மொழிப் பண்பாட்டுக்களங்கள் மீதான வெட்கமற்ற பொறாமையுடனும் வெந்து கொண்டிருக்கும் போது, என்னுடைய சில அறிமுகங்களால் திரும்பத் திரும்ப என் மீது வீசப்படும்  ‘குறிப்பிடத் தக்க’ ஆராய்ச்சியாள அறிவுஜீவியப் பெயர்கள் எனச் சில இருக்கின்றன – அவற்றுடன் எனக்கு நினைவிலிருக்கும் சில பெயர்களையும் சேர்த்திருக்கிறேன்; முதலில் எனக்காக என எழுத ஆரம்பித்ததை உங்களிடமும் பகிர்ந்துகொள்வதில் எருமையடைகிறேன்.

அப்பெயர்கள்:  1) எம்எஸ்எஸ் பாண்டியன்,  2) ஆஇரா வேங்கடாசலபதி, 3) எஸ்வி ராஜதுரை, 4) அ மார்க்ஸ், 5) வ கீதா, 6)  ‘பஞ்சு’ பஞ்சாட்சரம், 7) ஏஎஸ் பன்னீர்செல்வம், 8) நிகழ் ‘ஞானி’ பழனிச்சாமி,  9) ஸ்டாலின் ராஜாங்கம், 10)  ‘நிறப்பிரிகை’  ரவிக்குமார் 11) ராஜன் குறை கிருஷ்ணன் 12) நாகார்ஜுனன் 13) இ அண்ணாமலை 14) ராஜ் கௌதமன் 15) தொ பரமசிவம் 16) அழகர்சாமி ராமசாமி 17) சுமதி ராமசாமி 18) பொ வேல்சாமி (இன்னமும் சில பெயர்கள் இருக்கின்றன – சட்டென்று நினைவுக்கு வரவில்லை; மன்சிக்கோபா, பெர்ஸுக்கு வய்ஸாய்டிச்பா!)

இவர்களுடைய எழுத்துகளைப் பற்றி என் கருத்துகள்:

1,2,4 : அய்யய்யோ!
3,5 :  வீச்சமும் நெடியும் அப்பழுக்கற்ற ஆங்கிலமும் இருக்கிற அளவுக்கு சமன நிலையுள்ள ஆராய்ச்சி உள்ளதா என்பதைப் பற்றி ஆராய்ந்தால்… ஹ்ம்ம்…
6, 8 : இவர்கள் எழுதினால் அது சமனத் தன்மையோடும், இடதுசாரிப் பார்வையுடனும் இருக்கும். ஆனால் என் மதிப்புக்குரிய ஞானி அவர்கள் இக்காலங்களில் எழுதுவதேயில்லை.
7 : ஓரளவிற்கு நன்றாகவே எழுதிவந்தார்; ஆனால், இக்காலங்களில் இவர் நிறைய எழுதுவதில்லை – பெரும்பாலும் என்னுடைய செல்ல ‘த ஹிந்து’வின் சில்லறைத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கேட்டே அவருக்கும் இடுப்பு ஒடிந்துவிடுகிறது போலும்!
9, 10: இவர்கள் மதிக்கத் தக்க பார்வையுடையவர்கள். தொடர்ந்து இயங்குபவர்கள்; ரவிக்குமார் அவர்களிடம் அவருடைய கட்சியின் பார்வையும் இருக்கும், பாவம்.
11, 12: கட்ரையோட படை எடுத்துக்கினு வர்றாங்கடா, ங்கொம்மாள, ஓட்றா டேய்!  (12 லண்டனிலா இருக்கிறார்? இக்காலங்களின் எழுதுவதில்லையோ??)
13: பல நல்ல புத்தகங்களை  (மொழி அரசியல், திராவிட அடையாளம் மாற்றம் அடைதல், ஆங்கிலம் ஏற்படுத்திய பாதிப்புகள் ++ பற்றி) எழுதியுள்ள இவர், இந்தியாவில் இருந்து தமிழ்ப் பணி புரிந்து இருக்கலாம். ஆனால், சிகாகோவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்…  இவர் இன்னொரு ஆராய்ச்சியாளருடன் சேர்ந்து எழுதிய ஆங்கிலப் புத்தகமான ‘பேச்சுவாக்குத் தமிழ் அறிமுகம்‘ எனக்கு மிகப் பிடித்ததும் தமிழ் கற்றுக்கொள்ள நினைத்த பலருக்கு ஒரு காலத்தில் தானமாகக் கொடுத்ததும் ஆகும்.
14, 15, 16, 18: இவர்கள் எழுதிய சில கட்டுரைகளைத் தான் படித்திருக்கிறேன். நான் படித்தவரை நல்ல, மதிக்கத்தக்க கட்டுரையாளர்கள்தான் இவர்கள். (இவர்கள் எழுதியிருக்கக் கூடிய புத்தகங்களைப் படிக்கவேண்டும்)
17: இவரும் நான் விரும்பிப் படித்த சில புத்தகங்களை எழுதியிருக்கிறார் – லெமூரியா,  மொழிப்போராட்டம் பற்றியெல்லாம். ஆனால் ட்யூக் பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

ஆக, எட்டுச் சொச்சக் கோடி தமிழர்களில், அனைத்து கலாச்சார உச்சகங்களையும் தனக்குள் இழுத்து அழித்தொழிக்கும் படுபயங்கரமான திராவிடத்தன ப்ளேக்ஹோல் (dravidian blackhole)-லிருந்து மீண்டு செயல் படுபவர்கள் சுமார் 10 பேர். (இன்னமும் பெயர்கள் தெரிந்தால் சொல்லவும்; நான் உயிரோடு இருப்பவர்கள் பெயர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன் – பாண்டியன் அவர்களைத் தவிர – மேலும் தமிழ் தெரிந்த தமிழர்களை மட்டுமே தான் கோர்த்திருக்கிறேன்; நான் சேர்க்காத, அறியாத பெயர்கள் சுமார் 10-20  மேற்கொண்டு இருக்கலாமோ என்னவோ.  இதில்  இறந்த தமிழறிஞர்கள் பெயர்களையும் சேர்க்க வேண்டுமென்றால் மேலதிகமாகச் சுமார் 15 பெயர்களை அடுக்கலாம்; மதிக்கத்தக்க வெள்ளைக்கார, இந்தியரல்லாத ஆய்வாளர்களைக் குறிப்பிடவேண்டுமென்றால் அது குறைந்தபட்சம் 40-50 பெயர்களுடன் நீளும்!)

… ஆம். தமிழில் சில ‘ஓரளவுக்கு‘ நல்ல புத்தகங்கள் – ஜாதிகளைப் பற்றிப் பல பார்வைகளுடனும், நோக்குகளுடனும் அலசுபவை இருக்கின்றன. அவற்றில் நான்,  சாதியும் நானும் (கட்டுரைத் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு, பெருமாள்முருகன்), சாதி இன்று (கூட்டறிக்கை, புலம் வெளியீடு, ஸ்டாலின் ராஜாங்கம்) போன்றவைகளைப் பரிந்துரை செய்கிறேன். (சில மாதங்கள் முன்  ‘சாதி இன்று’ புத்தகத்தை நான் படிக்கும்படி பரிந்துரை செய்த மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி; நல்ல திறப்பு. ஆனால், இந்தத் தொகுப்பிலும் சி.லஷ்மணன்+அன்புசெல்வம் கலவை இருக்கிறது. ஐயகோ! :-( )

இருந்தாலும்…

-0-0-0-0-0-0-0-

சரி,  என் முத்தாய்ப்புக் கேள்விக்குக் காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் என யோசிக்கிறேன்; இது ஒரு நீண்ட, ஆனாலும் முடிவடையாத ஜாபிதா.

 • ஏனெனில் – கடந்த சுமார் 45 ஆண்டுகளாக திராவிட இயக்க ஆட்சியினால் பீடிக்கப் பட்டிருக்கிறது, நம் தமிழகம்.
 • ஏனெனில் – திராவிட அரசியல் என்பது – சரியான அறிவுபூர்வமான ஆராய்ச்சியை, படிப்பை, நுண்ணறிவை இன்னபிறவை ஒரு எதிரி போலப் பார்ப்பதொன்று.
 • ஏனெனில் – திராவிட இயக்கத்திற்குத் தேவையானவை மயிர்க் கூச்செறிதல்களே. முட்டியடி உணர்ச்சிவச எதிர்வினைகளே. கேளிக்கைகளே. திரைப்பட அடுக்குமொழிக் காதல் கந்தறகோளப் புல்லரிப்புகளே!
 • ஏனெனில் – திராவிட அரசியல் என்பது சில ஜாதிகளின் (பொருளாதார, நிலவுடமை ரீதியான – கொஞ்சம் குறைவான அளவில், சடங்குகள் ரீதியான) தேவைகளுக்காக மட்டுமே ஜோடிக்கப் பட்டு, புறவயமான உணர்ச்சிப் புல்லரிப்புகளினூடே பொழுதன்னிக்கும் நடத்தப் படுவது. அதன் அரசியல் தேவைகளுக்கு ஆழ்ந்த, நேர்மையான ஆராய்ச்சிகள் தேவையே இல்லை. ஏனெனில் ‘பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும்!’
 • ஏனெனில், திராவிட அரசியலைப் பற்றி விமர்சனப் பார்வை வைத்தவர்கள் – புறம் தள்ளப் பட்டனர். கல்வி, ஊடக வட்டாரங்களில் இருந்து விரட்டப் பட்டனர். நொதுமல் நிலைப்பட்ட மக்களுக்கு புல்லரிப்புகள் மட்டுமே போதுமன்றோ?
 • ஏனெனில் – விட்டுவைக்கப் பட்டுள்ள பல ஸ்காலர்ஸ்(!) – தமிழ ஆராய்ச்சியாளர்கள் பலர் – திராவிட இயக்கத்திற்கு ஒத்து ஊதுபவர்கள் மட்டுமே. ஆகவே ஆராய்ச்சிப் புலங்களே பெரும்பாலும் அழிந்தொழிந்து விட்டன.
 • ஏனெனில் – திராவிட இயக்கத்தின் அறிவுஜீவிய எதிர்ப்பு என்பது (anti-intellectualism) தாங்கொண்ணாதது. அதற்கு அறிவு, அனுபவம் சார்ந்த உரையாடல்களோ, கருத்துக் கோர்ப்புகளோ அவசியமேயில்லை – உணர்வு ரீதியில் மக்களை உசுப்பும் உவகையும் ஏற்றிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என  நினைக்கிறது.
 • ஏனெனில் நம்மிடம் தரமான சமூகவியல் மாணவர்கள் என்பது பெரும்பாலும் இல்லை; ஆனால், ஒரு சில நம்பிக்கை நட்சத்திர மாணவர்களை அறிவேன் என்கிற பின்புலத்திலும் சொல்வேன் – வரலாறு, சமூகவியல், அரசியல் போன்ற துறைகளில், பெரும்பாலும் ‘நல்ல’ முனைப்புள்ள மாணவர்கள் சேர்வதில்லை. இதற்குப் பொருளாதார எதிர்காலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.
 • ஏனெனில் – நம்மிடம் தரமான ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள்தாம் – ஆனால் அவர்களை ஊக்குவிப்பதற்கோ, செழுமைப் படுத்துவதற்கோ தகுந்த ‘அகாடெமிக்’ சூழலோ, தரமான முன்மாதிரிகளோ இல்லை. தரம்வாய்ந்த முன்மாதிரிகள் ஒருகாலத்தில் பலர் இருந்தாலும் இக்காலங்களில் பெரும்பாலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றும் இந்தச் சிறுபான்மையினர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். பாவம்.
 • ஏனெனில் – எந்தவித சித்தாந்த, அறிவார்த்தமான உள்ளீடும் இல்லாத திராவிட இயக்கத்திற்கு, அறிவுசார், நடைமுறை முரணியக்கங்கள் சார் ஆராய்ச்சி என்பது தேவையற்ற ஒன்று.
 • ஏனெனில் – ஆராய்ச்சிக்கு தோதான மொழி நம்மிடம் இல்லை. தமிழ் மொழியை மேன்மைப் படுத்துதல், கலைச் சொல்லாடல்களை உள்வாங்குதல், அவற்றைப் பரந்துபடச் செய்தல் போன்றவற்றில் திராவிட இயக்கங்களுக்கு ஈடுபாடு இல்லை. அவைகளுக்கு ‘அந்தக் காலத் தமிழில் மேன்மை’ ஒன்று மட்டுமே போதும். அடுக்குமொழி பொறுக்கி நடை ஒன்றை மட்டுமே நம் மொழியின் பரிணாம வளர்ச்சியின் உச்சம் எனும் நிலைப்பாட்டிற்கு வசதிப் படாத புத்துருவாக்கங்களை எப்படி அவை அனுமதிக்கும்?
 • ஏனெனில் – நாம் தமிழிலும் சரியாக சிந்திக்க முடிவதில்லை (நம்மிடம் அதற்குத் தேவையான தற்காலத்துக்கும் உரிய ஸிம்பல்கள்/உருக்கள்/சொற்கள் இல்லை); ஆங்கிலத்தையும் சொதப்பி கலந்தடித்து விட்டுச் சாணியாக அடிக்கிறோம்.
 • ஏனெனில் – நாம் செய்யும் ஆராய்ச்சி என்பது மதிக்கக்கூடிய வெளியூர், வெளிநாட்டு சஞ்சிகைகளில் வெளிவருவதேயில்லை. நாம் செய்யும் ஆராய்ச்சியின் தரமும், அதனை வெளிப்படுத்தும் மொழியும் அந்த நிலையில் நம்மை வைத்திருக்கின்றன. ஆக, ‘பியர்-ரிவ்யு’ எனச் சொல்லப் படும் மதிக்கத்த, உலகளாவிய சமகால ஆராய்ச்சியாளர்களின் பார்வை/விமர்சனம் என்பது நம் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைப்பது மிகவும் அரிது.
 • ஏனெனில் – நம் செல்லத் தமிழில் – பொருட்படுத்தத்தக்க, உலகளாவிய மரியாதை பெற்ற – மொழியியல், நாட்டுப்புறவியல் (‘தன்னானே’ என்று ஒரு ஓரளவுக்கு இதமான (half-decent) நாட்டுப்புறவியல் ஆய்விதழ் வந்துகொண்டிருந்தது. இது இன்னமும் வருகிறதா என்ன?), மானுடவியல் சஞ்சிகைகள் இல்லவேயில்லை; ஆகவே இவ்வட்டாரங்களிலிருந்து, கல்வி-சமூகப் புலங்களில் வார்த்தெடுக்கப் பட்ட, தமிழகப் பாடுபொருட்கள் கொண்ட தமிழக ஆராய்ச்சிகள் சார்ந்த ஆங்கில/பிறமொழிச் சஞ்சிகைகளும் இல்லை!
 • ஏனெனில்  – திங்க்டேன்க்ஸ் (Thinktanks) – எனும் தொழில்முறை ஆய்வாள நிறுவனங்கள் நம் பின்புலத்தில் இல்லை. MIDS போன்றவையெல்லாம் வேறு விதமான டேன்க்குகளாகி பல்லாண்டுகளாகிவிட்டன. ஆய்வு செய்யவேண்டிய பல்கலைக் கழகங்கள் – தரம் வாய்ந்த பல் மருத்துவர்களையாவது, கலைச்சுவை சொட்டும் பல்லழகர்களையாவது தயாரித்தால் தேவலை!
 • ஏனெனில் – தரமான ஆய்வுப் புத்தகங்களை அழகுணர்ச்சியுடன் வெளியிட பதிப்பகங்கள் இல்லை – இதற்கும் பல காரணங்கள்… எவ்வளவு பேர் வாங்குவார்கள், என்ன முதலீடு, புத்தகங்களைத் தேர்வு செய்வது எப்படி, அவற்றின் தரத்தை எப்படி நிர்ணயம் செய்வது எனப் பலவிதமான காரணங்கள்…

… ஆனால் – இவ்வெல்லாப் போதாமைகளுக்கும் மூல காரணமாக இருப்பது என்பது – திராவிட இயக்கம் எனும் கயமைக் கந்தறகோளம் – தமிழகத்தை அடியோடு  காயடித்ததற்குப் பின், தமிழர்களின் மூளையை மழுங்கச் செய்ததும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் குலைத்ததும், தமிழர்களை கமுக்கமாக  ஜாதிவெறியில் மூழ்கடித்ததும், தமிழகத்தின் பண்பாட்டை, பொருளாதாரத்தை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டிக் கொள்ளையிட்டதும், தமிழர்களைத் திரைப்பட மாயைகளில் – அதிமனித அரைகுறைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியதும்,  கல்வியைச் சூது கவ்வவிட்டதும் தான்.

தொடரத் தொடர வேதனை மிகும். :-(

-0-0-0-0-0-0-0-

ஆனால் – நல்லவேளை! இவ்வட்டங்களில் குறிப்பிடத்தக்க பார்வைகளுடன், பின்புல ஆராய்ச்சித் தொகுப்புகளுடன் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்தாம். ஏனெனில் ‘அந்தக் காலத்தில் திராவிட  இயக்கம் இல்லை!‘ (குறிப்பு: அயோத்திதாசர் அவர்கள் சென்ற நூற்றாண்டின் ஆரம்பித்திலேயே (=1914) போய்ச் சேர்ந்துவிட்டார். ஜஸ்டிஸ் பார்டி கந்தறகோளம் 1917 வாக்கில் தாம் ஆரம்பித்தது; தப்பிக்கிப்பி 1920களில் இந்த பாவப்பட்ட பண்டிதர் பிறந்திருந்தால், எழுதமுடிவதையே விடுங்கள், அவரால் யோசிக்கக் கூட முடிந்திருக்காது! தலைப்பாகைக்குள் திராவிடப்பேன்படைகள் புறநானூற்று வீரத்துடன்  மூளையைக் குதறிக் கொண்டிருக்கும்போது நாசூக்காகச் சொறிவதும்கூடக் கஷ்டம்தானே, புரிந்துகொள்ளுங்கள்!)

-0-0-0-0-0-0-0-

… இந்தச் சூழலில்தான் டாக்டர் தருமராஜ் தம்புராஜ் போன்ற ஆய்வாளர்கள் மிகுந்த நம்பிக்கை தருகிறார்கள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாகவும் – அயர்வடைக்கவைக்காமலும் சிடுக்கல்களில்லாமலும்  (தேவைப்பட்டால் நையாண்டி நடையுடன்) – ஆழமும் வீச்சும் மிக்க சமூகவியல் சார்ந்த கட்டுரைகளை இவர் எழுதி வருகிறார். இவர் எழுதுவதில் மேட்டிமைத் தன்மையில்லை – அதே சமயம், அவர் தம் வாசகனை மதிக்கும் தளத்தில், மரியாதையுடன் எழுதுகிறார். மனதுக்கும், மூளைக்கும் மிக இதமாக இருக்கிறது.  May his tribe increase!
எனக்கு உவப்பான தமிழ்ச் சமூக அறிஞரான ராபர்ட் தலியெழ் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். :-)

இவர் போன்றவர்கள் (எனக்கு, இப்போதைக்கு இவர் ஒருவரைப் பற்றித்தான் தெரியும்!) எதிர்காலத்தில் எழுதி பதிப்பிக்கப் படக்கூடிய சீரிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஆவலுடனும் ஏக்கத்துடனும்  எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 • தருமராஜ் அவர்களின் தமிழ்த் தளம்: http://tdharumaraj.blogspot.in/
 • ஆங்கிலத் தளம்: http://tdharmarajan.blogspot.in/ (இதில் கடந்த நான்கு வருடங்களாக ஒரு புதியபதிவுமில்லை; ஆனால் இவருடைய எழுத்துகளை நான் முதலில் படித்தது என்பது எம்எஸ்எஸ் பாண்டியன் அவர்களின் புத்தகம் ஒன்றின் விமர்சனத்தை அவர் 2010 நவம்பர் வாக்கில் எழுதியது மூலமாகத்தான்; பின் அவர் தொடர்ந்து எழுதாததால், அவர் தளத்திற்குச் செல்வதை விட்டுவிட்டிருந்தேன்.)

இச்சமயம் பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் – அவர்தான் தருமராஜ் அவர்களின் தமிழ் வலைப்பூ சுட்டியைப் பற்றி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.

தருமராஜ் தம்புராஜ் அவர்கள், ஆழமாகவும் செறிவாகவும் நையாண்டியுடனும் தொடர்ந்து புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத என் வாழ்த்துகள், நன்றிகளும்கூட. (இவருடைய புகைக்காதபடத்தைப் பார்த்தால், இந்த தருமராஜ் அவர்கள், என்னைவிட வயதில் சின்னவராகத் தான் இருப்பார் போல இருக்கிறது; ஆகவே, என்னுடைய செல்லமான திராவிட ஃப்லெக்ஸ் தட்டிமொழியில் – எனக்கு அவரை வாழ்த்த வயதிருக்கிறது; வணங்கி மகிழவும் தயக்கமில்லை. ஆமென்!)

பின்குறிப்பு: அப்போ மெல்லட் டமில் இணிச் சாவாதா? இப்ப இன்னாண்றீங்க??

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…

10 Responses to “நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை?”

 1. murugan Says:

  சார் ,

  இந்த பட்டியலில் ஷோபா சக்தி, யமுனா ராஜேந்திரன் ஆகியோரை சேர்க்கலாம் .. OMG !! வகையறா தான் ….

  1, 3, 4, 5 — இவை எல்லாமே ஐயோ !!! OMG !! வகையறா ….
  2 – வ .உ .சி கடிதங்களுக்காக , மேலும் சில நல்ல கட்டுரைகள் …
  14 – கண்டிப்பாக படிக்கவேண்டும் . தமிழினி பதிப்பகத்தில் சில புத்தகங்கள் உள்ளன ..
  15 – அழகர் கோயில் — கண்டிப்பாக படிக்கவேண்டும் .. இப்போது மதுரை பல்கலைகழகத்தில் மறு பதிப்பு உள்ளது .. குறைவான புத்தகங்களே உள்ளன … மற்ற ஆய்வுகள் , கவனமாக படிக்க வேண்டும் …. கொஞ்சம் அடித்து விட்டு இருப்பார்… உ.தா .. தேங்காய் பற்றி சங்க இலக்கிய நூல்களில் இல்லை என்றார். இதற்கு நாஞ்சில் நாடன் நல்ல பதில் கொடுத்து உள்ளார்.. ( திகம்பரம் கட்டுரை தொகுப்பு – கோவை விஜயா பதிப்பு)
  7,8,9,10,11,12 – படிக்கலாம், சில பல தவறுகள், முன் முடிவுகள் உடையவர்கள் .. ஆனாலும் கண்டிப்பாக படிக்கலாம்
  6,16,17 – மன்னிக்கவும், நான் படித்ததில்லை
  18 – படிக்கலாம், ஆனால் முன்முடிவுகள் இருக்கும்
  —-
  இவர்களை தவிர்த்து
  ஆ .சிவசுப்பிரமணியன் , கா,மா வேங்கடராமையா (மோடி ஆவணங்கள்) ,
  புலவர் ராசு , மு கு ஜெகன்னதராஜா – இவர்களுடைய சில கட்டுரைகள் கண்டிப்பாக படிக்கலாம்

 2. thumbi Says:

  //(= ‘உலகின் முதல்மொழி தமிழ்,’ ‘உலகின் முதல் மானுடன் தமிழன்’ அல்லது பொதுவாகச் சொல்லவேண்டுமானால், ‘வொலக வரலாற்றிலேயே முதல்முறையாக தொலைக்காட்சியிலும் (தொலைத்தொடர்புதுணைக்கோள் மூலமாக இப்புவியின் எந்த மூலையில் டிவி பார்ப்பவர்களுக்கும் கூட நாறும்படி) மகாமகோ குசு விட்டவன் நம் தமிழன்’)//
  ஆழமான விஷயத்தை எழுதும் போதும் நகைச்சுவை வரவேற்கப்படும்: ஆனால் இது போன்ற வரிகளைத் தவிர்க்கலாமே

 3. thumbi Says:

  //•ஏனெனில் – திராவிட இயக்கத்தின் அறிவுஜீவிய எதிர்ப்பு என்பது (anti-intellectualism) தாங்கொண்ணாதது. அதற்கு அறிவு, அனுபவம் சார்ந்த உரையாடல்களோ, கருத்துக் கோர்ப்புகளோ அவசியமேயில்லை – உணர்வு ரீதியில் மக்களை உசுப்பும் உவகையும் ஏற்றிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என நினைக்கிறது.//

  இது தான் சாரம்.

 4. a.k. Says:

  Hi Ram – I have been reading you on-and-off from your “you-don’t-know-jackass-about-solution-architecture” days. I concur with most of your bullet-list and will also add a few more.

  * Fuzzy demarcation among fields & disciplines in TN academia, leading to everything being passed off as “sociology” and “social history.” Especially b/w humanities and social sciences. Although this issue is evident in the American and European academia too, it is not as serious as what we observe here. While I do like inter/multi/trans- disciplinary research and all that jazz, I do believe that there are certain benefits to maintaining disciplinary boundaries. Having a (reasonably) clear evaluative standard on what passes for good sociology or social history or anthropology is one such. A lot of people you talk about here have advanced degrees in humanities & related disciplines – especially folklore, linguistics, history, & tamil literature. But their research is often labeled here as sociology or social history. Of course, nothing wrong about it. And in fact some of my intellectual heroes are people whose research spanned multiple disciplines. However, the issue here is the evaluative standard – how is their research vetted, and by whom?

  [Below, I’m sharing something that I wrote to a few friends in a different venue]

  *****
  * இருந்தும் இவர்கள் செய்தது முக்கியமான பணி தான். அந்த மரியாதை எப்போதும், எனக்கும், என் தலைமுறையினருக்கும் எப்போதும் உண்டு. ஆனால் இதன் மூலம் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் குறித்து யாராவது பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதாவது தமிழில் கலைஇலக்கியம் மற்றும் ஹ்யூமானிடீஸ் துறையில் இருப்பவர்களால் எடுக்கப்பட்ட தொடர் விவாதங்கள் உளவியல், சமூகவியல், பொருளியல் போன்ற துறைகள் குறித்த ஒரு மிகத் தவறான சித்திரத்தை ஏற்படுத்திவிட்டது என்பதே எனது எண்ணம்.

  * பாட புத்தகங்களை தவிர்த்து சமூக அறிவியல் துறைகள் குறித்த குறைந்த பட்ச அறிமுகம் கூட தமிழில் நிகழவில்லை என்பதே உண்மை. எஸ். நீலகண்டன் செவ்வியல் அரசியல் பொருளாதாரம் குறித்து எழுதிய நூலை தவிர்த்து சமூக அறிவியலின் எந்தத் துறை குறித்தும் அறிமுக புத்தகங்கள் தமிழில் கிடையாது என்றே நினைக்கிறேன் [முன்பு எப்போதாவது வந்திருக்கலாம். தெரியவில்லை. நான் தேடியவரை எதுவும் சிக்கவில்லை]. ‘சமூகவியல்’ குறித்து இங்கு பேசப்படுவது பெரும்பாலும் ’மார்க்ஸிசம்’ மற்றும் ‘கிரிட்டிக்கல் தியரி’ சார்ந்த கோட்பாட்டுகள். அல்லது
  ’சாதி’ குறித்த மார்க்ஸிய, பின்-காலனிய நோக்கிலான ஆய்வுகள். மாக்ஸ் வெபர், எமில் டர்கைம், எர்விங்க் காஃப்மன் போன்றவர்கள் அறுவது எழுபதாண்டுகளுக்கு முன் எழுதிய சமூகவியலின் அடிப்படைகள் குறித்து கூட இங்கு இத்தனை நாட்களில் முறையாக எதுவும் பேசப்படவில்லை. பிறகுதானே அவற்றை வைத்தோ அல்லது இங்குள்ள சமூகச் சூழலுக்கு ஏற்றவாரி மாற்றி அமைத்தோ ஒரிஜினல் ஆய்வுகளை செய்ய முடியும்?
  பள்ளியில் நாம் நியூட்டன், கிளாஸிகல் மெக்கானிக், தெர்மோடைனமிக்ஸ் எல்லாம் படித்து முடித்த பிறகுதானே குவாண்டன் மெக்கானிக்ஸ் பற்றி படித்தோம்?

  *Sociology என்பதை Critical theoryயுடன் குழப்பிக் கொள்வதே இங்கு தமிழ் அகடமியா மற்றும் சிற்றிதழ் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோட்பாட்டையோ, கொள்கையையோ முன்வைப்பதல்ல, சமூக வாழ்வு குறித்த புதிர்களை [puzzling patterns] தெளிவான தரவுகள் [via survey, archival, ethnographic or field experimental research] மூலம் எதிர்கொள்வதே சமகால சமூகவியல் முறைமை. இந்த புரிதல் இன்மையால் தான் தியரி-சார்ந்த விவாதங்கள் இங்கு அதிகமும் முன்னெடுக்கப்படுகின்றன.

  *இந்த இணைப்பை பார்க்கவும். http://www.princeton.edu/~starr/101syl13.html . சமூகவியல் அறிமுக வகுப்புக்கான பாடதிட்டம் இது. Sociology 101. இதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான ஆய்வுகளும், பெயர்களும் தமிழ்ச் சூழலில் இதுவரை முறையாக அறிமுகப் படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். . நாற்பது ஐம்பது வருடங்களாக தொடர்ந்து சமூகவியலில் பேசப்படும் அடிப்படைகள் இவை. இவற்றை அறிந்து கொள்வதற்கு முன்னதாக நாம் நேரடியாக ஃபூக்கோ, தெரிதா, நுண்அதிகாரம் என்று போய்விட்டோம். ‘அதிகாரம்’ மற்றும் ‘அறிவுருவாட்கம்’ குறித்து மரபான சமூகவியலாளர்கள் எப்படி யோசித்தார்கள், அது குறித்து நடந்த ஆய்வுகள் எவை என்பது பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் நுண்அதிகாரம், அறிவதிகாரம் (power/knowledge) குறித்தோ, ஃபூக்கோ எழுதிய மற்ற எழுத்துகள் குறித்தோ நமக்கு ஒரு தெளிவான புரிதல் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. வேறு மாதிரி சொல்வதென்றல், நிருபணவாதம் [empiricism] என்பது என்ன, அதன் அடிப்படையில் செய்யப்படும் ஆய்வுகள் எவை, அதன் சாதக, பாதங்கள் என்ன என்பதை ஓரளவேணும் தெரிந்து கொள்வதற்கு முன்னரே நாம் ஒரேடியாக நிருபணவாதத்திற்கு எதிரானதொரு [anti-empirical] மனநிலைக்கு சென்றுவிட்டோம். அதனால் நமக்கு நிருபணவாதத்தின் முறைமைகளும் புரியவில்லை, நிருபணவாதத்திற்கு எதிரான சிந்தனைகளிலும் தெளிவில்லை.

  * இங்கு தமிழில் இப்போதும் கூட ’உளவியல்’ என்பது இலக்கிய விமர்சனத் துறைகளில் பயன்படுத்தபடும் உளவியல் தான் (ஃபிராய்ட், யூங், லக்கான், பெர்ல்ஸ்/கெஸ்டால்ட் இன்ன பிற). ஃபிராய்ட், லக்கான் எல்லாம் மற்ற உளவியல் அறிஞர்களை விட, ஐரோப்பிய கலைஇலக்கிய விமர்சகர்களால் முன்னெடுக்கப் பட்டவர்கள். இன்றும் கூட இவர்களின் பெயர்கள் உளவியலில் அல்ல, இலக்கிய விமர்சனம் சார்ந்த துறைகளில் தான் அதிகமும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் நமக்கோ இவர்களை படித்திருப்பதால் உளவியல் தெரியும் என்ற நம்பிக்கை! இத்தகைய மனநிலை உளவியலின் முறைமைகள் குறித்தோ, கடந்த ஐம்பது வருடங்களாக அந்தத் துறையில் நடந்து கொண்டிருக்கும் பரவலான மாற்றங்கள் குறித்தோ ஒரு எளிய அறிமுகம் கூட ஏற்படுத்தவிடாமல் தடுக்கிறது.

  *‘பொருளியல்’ போன்ற மற்ற துறைகளின் நிலையும் இதுதான். தமிழ் சிறுபத்திரிக்கை சூழலில் பொருளியல் குறித்த அறிமுகம் முதலாளித்துவம், சந்தை பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் போன்றவற்றின் மீதான அரசியல்-விமர்சனமாகவே நமக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படைகள் என்ன, அவற்றை உருவாக்கிய பொருளியல் விவாதங்கள், ஆய்வுகள் எவை (உ.ம். கீன்ஸ் மற்றும் ஃப்ரெட் ஹையக் இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள், யூஜின் ஃபாமாவின் ‘efficient-market hypothesis’, ஃபாமா மற்றும் ஜென்சனின் ‘agency theory’ சார்ந்த ஆய்வுகள்) போன்றவை குறித்த கட்டுரையை தமிழில் எங்காவது படித்திருக்கிறீர்களா? நானும் நிறைய தேடிப் பார்த்து விட்டேன். எஸ். நீலகண்டன் அவரது நூலின் அடுத்த பாகத்தில் எழுதினால் தான் உண்டு. யூஜின் ஃபாமாவிற்கு போன வருடம் நோபல் பரிசு கொடுக்க்பட்ட பிறகு தான் அவரது அவரது பெயரே நம் சூழலில் அடிபடுகிறது.

  ***

  * One final thing. And this might be a big assumption to make, but I’m going to say it out load anyways. I guess another very important reason is the jarring inaction of people such as yourself – the ones who had the right opportunity structure, access to good libraries, connections with scholars of repute, endless curiosity & awareness of what is going on in the sciences/social sciences, bi-lingual knowledge in english & tamil etc etc did nothing about it except throwing a few tantrums here and there, indulging in personal debates & not following-it-through enough, therefore not adding anything new to the stock of a society’s ‘common knowledge.’ Of course, you might have done a lot of other worthwhile & very honorable things in different areas (which I’m aware of and have great respect toward) , but in this arena of making a difference to the “intellectual” discourse within TN, you folks let us down. If you (and by this, i mean people such as yourself) cared enough, at least you should have written an introductory book or two (or a few articles) in Tamil in any of these subjects. Instead, here you are – 20 years late, still doing all sort of “sisyphus-on-crack” stuff, still complaining and trying to figure out the “root cause” of all causes, still trying to move the unmoved mover, offering inane disclaimers (e.g., “oh, i’m-not-a-writer”/oh, i’m-not-a-social-scientist”/”oh-i’m-not-this-not-that-” “i’m-just-a-simple-guy-but-jushhht-a-little-eccentric” blah blah) which are nothing more than lame backdoor escape routes (no pun intended), still reminiscing about the good-ol’-days (where you & your buddies used to smoke pot & solve third-order-differential equations while listening to Grateful Dead, holding a ‘Kalappai’ on the other hand & doing hardcore ‘vivasaayam,’ wondering about the Kalappai’s design elegance a la Don Norman, and then when really tired, saying a word or two to each other about Max-Neef, Barefoot Economics, Shankar Guha Niyogi, SICP, GEB, Six easy pieces, Marvin Minsky, Mogamul Yamuna, Realpolitik etc etc. Oh my!), and all the while abusing the current generation of its puny vacuousness and intellectual bankruptcy!

  While you might very well be genuinely genuinely concerned about the state-of-affairs in TN (again, no pun intended here), all I got to say is – Leave us alone, please. My generation will write its books (that folks from your generation have failed to write) and will produce its own scholars and writers. Nandri.

 5. A.Seshagiri Says:

  தாங்கள் மதிக்கும் எழுத்தாளரிடம்(டி. தருமராஜ்) இருந்து கீழ் கண்ட பாராட்டை பெற்று விட்டீர்கள்.ஆனால் அவர் குறிப்பிடும் “பராக்கிரமங்கள்” எவை என்றுதான் புரியவில்லை.

  “வழக்கம் போல் ஆளண்டாமல் கிடந்த இதனை தங்களது பராக்கிரமங்கள் மூலம் ரங்க நாதன் தெரு போல் மாற்றியமைத்த ஒத்திசைவு என்ற வலைப்பூவில் எழுதும் வெ. ராமசாமிக்கும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றி! (தமிழில் ‘நன்றிகள்’ இல்லை என்பதால் இரண்டு பேரும் ஒரே நன்றியை சண்டை போடாமல் பப்பாதியாய் பிரித்துக் கொள்ளுங்கள்.”


  • அய்யோ அய்யா, பாம்புமலையாரே! அவர் நமட்டுச் சிரிப்புடன், பராக்கிரமம் அக்கிரமம் என்றெல்லாம் கிண்டல் செய்கிறார் என்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று பார்த்தால், இப்படி என்னை இக்கட்டில் மாட்டிவிடுகிறீர்களே! உங்களுக்கு இது தகுமா? :-(

   பல நாட்களாகக் காணோமே – எங்கு சென்றிருந்தீர்? :-)

 6. Hema Says:

  ஏனெனில் – திராவிட இயக்கத்தின் அறிவுஜீவிய எதிர்ப்பு என்பது (anti-intellectualism) தாங்கொண்ணாதது. அதற்கு அறிவு, அனுபவம் சார்ந்த உரையாடல்களோ, கருத்துக் கோர்ப்புகளோ அவசியமேயில்லை – உணர்வு ரீதியில் மக்களை உசுப்பும் உவகையும் ஏற்றிக் கொண்டிருந்தால் அதுவே போதும் என நினைக்கிறது.//
  இப்படி நீங்கள் மட்டையடி அடித்தால் கூட, இதுவாழை மட்டை தான்.
  நன்றி ஐயா.

 7. Venkatesan Says:

  //ஏனெனில் – நாம் செய்யும் ஆராய்ச்சி என்பது மதிக்கக்கூடிய வெளியூர், வெளிநாட்டு சஞ்சிகைகளில்
  வெளிவருவதேயில்லை.
  …..
  ஆகவே இவ்வட்டாரங்களிலிருந்து, கல்வி-சமூகப் புலங்களில் வார்த்தெடுக்கப் பட்ட, தமிழகப்
  பாடுபொருட்கள் கொண்ட தமிழக ஆராய்ச்சிகள் சார்ந்த ஆங்கில/பிறமொழிச் சஞ்சிகைகளும் இல்லை!
  //

  மற்ற துறைகளும் இவ்வாறுதானே உள்ளன? உதாரணமாக, தாவிரவியல் துறையில் தமிழத்தில்
  இருந்து ஏதேனும் peer-reviewed சஞ்சிகைகள் வெளிவருகின்றனவா? தமிழக ப.கழக
  ஆய்வாளர்கள் உலகத்தரத்திலான தாவிரவியல் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள்
  வெளியிடுகிறார்களா? எனவே, இந்த விஷயத்தில் சமூகவியல் துறையை தனித்துத் பார்க்க முடியாது.

  நீங்கள் சொன்னபடி மேலை நாடுகளில் கூட எல்லோரும் அப்பாடக்கர்கள் இல்லை. அங்கும்
  பெரும்பாலானோர் என்னைபோன்ற மொக்கைகள் தான். ஆனால், சிறப்பான ஆசாமிகளும்
  உருவாகிறார்கள். இதற்கு காரணம் பிரமிட் கோட்பாடு என நினைக்கிறேன். மக்கள் பிரமிட் போல
  அமைகின்றனர். சிறப்பான ஆசாமிகள் பிரமிடின் மேலுழுந்து நுனியில் ஜொலிக்கின்றனர். நுனிவாசிகளின் தரம் பிரமிடின் தரத்தால் நிர்ணயமாகிறது. பிரமிடின் தரம் அதன் அடிப்பாகத்தால் நிர்ணயமாகிறது. சிறப்பான நுனி உருவாக பிரமிடின் அடிப்பாகம் சிறப்பாக அமைய வேண்டும்.

  தமிழகத்தில் மட்டுமே மோசமான அடிப்பாகம் இருப்பதாக கூற முடியாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதே நிலை. உகாண்டா, உருகுவே என மற்ற பல மூன்றாம் உலக நாடுகளும் இப்படியே.
  தமிழத்தில் சிறப்பான ஆய்வுகள் உருவாகாமல் போக திராவிட இயக்கம் என்றால் உகாண்டாவில் என்ன காரணம்? உருகுவேயில் என்ன காரணம்? ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் ஒரு இயக்கம் காரணம் என கூற முடியுமா? இந்த நாடுகளின் பொதுவான அம்சம் ஏழ்மை. பெரும்பாலானோர் வசதி, வாய்ப்புகள் அற்று இருக்கும்போது, கணிசமானோர் கூவத்தின் கரை போன்ற சூழலில் வாசம் செய்யும்போது பிரமிடின் அடிப்பாகம் மோசமாக அமைகிறது. நுனியும் மோசமாக அமைகிறது.

  ஒரு படி மேலே போய், சிவப்பு சாயம் பூசிக்கொண்டு, திராவிட இயக்க பாணியில் உணர்சிகளை தட்டி எழுப்பி, தடவி எழுப்பி யோசித்தால் “பிரமிட் மோசமாக இருக்கும் போது, அதை சரி செய்யாமல், நுனி முக்கியம்தானா?” என்ற கேள்வியும் எழுகிறது. வேறு விதமாக சொன்னால், “பரதேசிக்கு மங்கள்யான் எதுக்கு? தொடப்பகட்டைக்கு எதுக்கு பட்டு குஞ்சலம்?” அறிவியல் ஆர்வம் காரணமாக, இந்திய அறிவியல் ஆய்வுகளை கை தட்டி வரவேற்றாலும், மேலே சொன்ன சிவப்பு கேள்வியையும் தள்ளி விட முடியவில்லை.

  மற்ற துறைகளை போல மொக்கையாக இருக்கும் தமிழக சமூகவியல் ஆய்வுச் சூழல், நீங்கள் சொன்னதுபோல சமனத்தன்மையின்மை, முன்முடிவுகள் என்ற இரண்டு எக்ஸ்ட்ரா சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டுள்ளது. இந்த அதிகப்படி விஷயங்கள் திராவிட இயக்கத்தின் கைங்கர்யம் என கூறலாம்.

  இன்னும் தெளிவு கிடைக்க ‘தமிழகத்தின் மொக்கைத்தனமான ஆய்வுச் சூழலுக்கு காரணம் திராவிட இயக்கமா? அல்லது ஏழ்மையா?’ என பட்டிமன்ற நடத்தலாம். ஆனால், அந்த பட்டிமன்றமும் மொக்கை ஜோக்குகள் நிறைந்து மொக்கைத்தனமாகத்தான் இருக்கும் :-(

 8. Rajaram Says:

  மானுடவியல் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் பற்றிய கலாச்சாரப் புதிர்கள்’. துக்காராம் கோபால்ராவ் இரு பகுதிகளாக மொழிபெயர்த்துள்ளார்.

  http://www.jeyamohan.in/21


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s