தெனிக்கும் எப்டியாவ்து பதிவெள்தணுமே, அரெகொற வாசகக்கூவான்கள ஓடாம இள்த்துப் பிட்ச்சுக்கணுமே, ஆனாக்க வொரு ஐடியாகூட கெடக்யலன்னிட்டு, ங்கொம்மாள, ஏண்டா சும்மா போவறபோக்ல இருட்ல கல் வுட்டு சாணியடிக்கிறீங்க??

26/11/2014

… மூளையத்த கஸ்மாலங்களா, வொங்க்ளுக்கெல்லாம் வேற வேலயே இல்லையா? ஆப்பீஸ்லதான் ஓள்பஜனெ செஞ்ச்சிக்கினே காலம்தள்றீங்க – பொள்துபோவலேன்னாக்க, வூட்டு வேலயயாச்சும் ஒள்ங்கா செய்ங்களேண்டா – பெர்க்கித் தொடைங்கடா பொர்க்கீங்களா, பாத்ரம் கள்வுங்கடா, சாணிய அள்ளுங்கடா – வூட்ல வொங்கம்மா தொணைவி மணைவி ன்னிட்டு அல்லாரும் டயர்டாய்ட்டு கூவுறாங்களேடா! அவ்ங்க்ளுக்கு ஒரு எல்பும் பண்ணாம டபாய்ச்சிக்கினு என்ன மசுத்துக்குடா பெர்த்தியாருக்கு அறிவுர ஸொல்ல வன்டீங்க? ஏண்டா ஸோம்பேறிட் டமிளன்களா, சும்மனாச்சிக்கும் கண்ட வதந்திகளப் பரப்பிக்கினே  கீறிங்க்ளேடா ஸோமாறீங்க்ளா, எதுக்கெட்த்தாலும் மேலான கர்ட்ட்டு ஸொல்றேன்னிட்டு, அயோக்கியப் பஸ்ங்களா… அரெகொற வாஸ்கன அப்டியாவது ஈர்க்கணுமாடா? இன்னா பஜாரி பொள்ப்புடா இது… எப்படா ஒள்ங்கா தெகிர்யமா பொலம்பாம நேர்மயா வேல செஞ்சு ஓள்ச்சு சம்பாரிச்சு,  வொங்க சோத்த சாப்டப்போறீங்க? திர்ந்தவே மாட்டீங்க்ளாடா பேமானிங்களா?

… … ஹ்ம்ம்ம்… எவ்வளவு முறை இந்தத் தமிழகத்தில் இப்படி என்னைக் கேட்டிருப்பார்கள்? எவ்வளவு முறை இந்தக் கேள்வி என் பதிலுக்காகக் காத்திருக்கும்? எவ்வளவு முறை என் டெம்ப்லேட் பதில், இம்மாதிரி கேள்விகளுக்காகக் காத்திருக்கும்? எவ்வளவு… எவ்வளவு…

அய்யய்யோ! மாற்றார் பாதிப்பில் இருந்து என்னால் மீளவே முடியாதா! ஐயகோ!! :-(

மீண்டேன் தோழர். ரேஸ் குர்ரம் படம் பார்த்தேன். பேசி செல்லியது. என் ஃபேவரைட்.  பாட்டு – நான் ஒன்ன நனச்சேன், நீ துணிய நனச்சே. பிழிந்து உதறி கொடியில் துணியை உலர்த்தப்போட்டோம்; போட்டுக்கொள்ள வேறு உடை இல்லாததால் ‘ஐ லவ் யூ.’ ஒரு உழைப்போ படிப்போ வாசனையோயில்லாமல், மற்ற அனைத்து ரசனைகளுமே ஒத்துப்போகும் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை… ஆனால் நிஜ வாழ்க்கைக்கு மீளவேண்டுமே!

அய்யய்யோ! இன்னொரு மாற்றார் பாதிப்பு!

மீண்டாலும் சரி. அடிக்க வருவார்கள். மீளாவிட்டாலும் சரி. நமக்கெதற்கு வம்பு. சரி. விட்டுவிடுவோம். நான் பதில்கேள்வி கேட்டால் உதைப்பார்கள். நமக்கு எதற்கு நொண்ணாங்கு. ஏதோ அலுவலக நேரத்தில் அலுவலக கணினியைக் கொண்டு அலுவலக வேலை செய்யாமல் வழக்கம்போல இன்னொரு பதிவை அறச்சீற்றத்துடன் தேத்துவோம். எல்லா முதலாளிகள் கார்ப்பரேட்டுகள் அடானிகள் நேர்மையற்றவர்கள் வலதுசாரிகள் ஒழிக என்று சொல்ல ஆசை, அலுவகத்தின் தொழிற்சங்கம் ஆரம்பிக்கவேண்டும். ஆனால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள்.

எல்லாரும் அடிக்கறாங்க நாம்பளும் சும்மா நேரடியாக தர்மகல்லடிக்கலாம் என்றாலும் கலக்கம், நமக்கெதற்கு அந்தப் பேச்சு. ஆனாலும் மையமாக எழுதி அந்த எழவெடுத்த உளைக்கும் வர்க்கமூலத்தின் ஆதிமுழுமூலமாக பிலிம் காட்டவேண்டுமே!  முதலாளிகள், லாபம் சம்பாதிப்பவர்கள் இல்லையென்றால் யார் நமக்கு வேலை கொடுத்து, நாம் வேலை செய்கிறோமோ இல்லையோ மாதாமாதம் சம்பளம் தருவார்கள்? முதலாளி இல்லையென்றால் எப்படி ஆனந்தமாக, நான் இணையத்தில் உலா வருவது? அதனால்தான் நான் முதலாளிகளை வெறுக்கும் வினவுத்தோழன்.

நான் ஆறாங்க்ளாஸ் படிக்கும்போது ஒரு பொட்டிக்கடை முதலாளி பத்துபைசா சில்லறை கொடுக்காமல் ஏமாற்றினார். சென்றமுறை ஈரோடுபக்கம்  உள்ள என் சொந்த ஊருக்குப் போனபோது அவர் பையனைப் பார்த்தேன். அவனும் அதே பொட்டிக்கடையில்தான் இருக்கிறான். பரம்பரைத் தொழில்.  அவன் என்னுடன் படித்தவன். இருந்தாலும், இவனும் ஒரு ரூபாய் சில்லறைக்குப் பதிலாக ரெண்டு சாக்லேட் கொடுத்தான். சாக்லேட் மொத்தமாக வாங்கினால் ஒன்று 40 பைசாவுக்குக் கிடைக்கும். என் பேக்கரி நண்பர் சொன்னார். ஆக இவன் என்னிடமிருந்து 20 பைசா அடித்திருக்கிறான். போகட்டும். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்று என் பாட்டி சொல்வார். சொல்லட்டும். என் எல்லாம்​தெரிந்த நண்பர் ராஜாஜியின் குலக்கல்வியால் தான் இந்த நிலைமை என்று கருத்தைத் தெரிவிப்பார். தெரிவிக்கட்டும்.

ஆனால் எல்லா முதலாளிகளுமே இப்படித்தான் சுரண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இருந்து தொலைக்கட்டும். ஆகட்டும். இதைப்பற்றி வினவுதான் எழுதவேண்டும். எழுதட்டும். ஏனோ முதலாளிகளை ஏசும்போது, நமக்குக் கூச்சமேயில்லை. பரவாயில்லை விட்டுவிடலாம். நமக்கு வெட்கம் கிடையாது.  ஆனால் நல்லவேளை,  நம்மால் முடிந்தது புலம்பல். புலம்பினாலும் யாரும் கேட்கப் போவதில்லை. பின்னர் எதற்கு இது என்று கேட்கலாம். கேட்பார்கள்தான். விட்டுவிடலாம். ஆனாலும் முடியவில்லை. நாளைக்கு என்ன பதிவு என யோசிக்கவேண்டும்.

யோசித்தாலும் உபயோகமில்லை. சரி விட்டுவிடலாம் என்றாலும்… இப்படி எழுதியே அடுத்தபதிவை தேத்திடலாமா? ஒரே பிரச்சினை. எவருக்குத்தான் பிரச்சினையில்லை. பிரச்சினையில்லை என்று சொன்னால் பிரச்சினை கொடுத்துவிடுவார்கள். அதுவும் பிரச்சினைதான். இப்படியே தொடரவேண்டாம் என்றால்… அதிலே நுணுக்கமாக அரசியல் இருக்கிறதே! நமக்கெதுக்கு அரசியல். நமக்கு ஜெயில்பெயில் என்று பேயாகஅலைந்து பதிவு தேத்துவதே பெரும்பாடாகிவிட்டது – அதற்கு ஆயிரம் அற்பப் பொய் சொல்லி நேர்மையாக செய்தி சேகரிக்கவேண்டியிருக்கிறது.

உண்மையைச் சொன்னால் ரவுண்டு கட்டிக்கொண்டு உதைக்க வருவார்கள். ஆகவே உண்மையைச் சொல்லவேண்டாம். ஆனால் பொய் சொல்லவேண்டும். யார்தான் பொய் சொல்லவில்லை… பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது என்கிறார்கள். இதுவே பொய்தான். பொய் என்றாலே பெரிய இடத்து விவகாரம், நாம் ஏன் நம் மூக்கை நுழைக்கவேண்டும். நுழைத்தால் மூக்கையே உடைத்துவிடுவார்கள், நமக்கேன் வம்பு  …

அய்யய்யோ! இது யாருடைய பாதிப்போ? ஈஸ்வரா!! :-(((

… சரி. இது ஒரு ரசக்குறைவான நகைச்சுவைக்க வைக்கும் பகடிக் கட்டுரையல்ல என்பதை முதலில் எனக்கு நானே தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இதை அடிக்கோடும் இட்டுவிட்டேன். கண்டமேனிக்கும் மாற்றார் கட்டுரைகளை, நேரம் இருந்தால் கூட – அவர்கள் மாறியிருப்பார்களோ, தவறுகளைத் திருத்திக்கொண்டு தமிழ எழுத்தை உய்விக்க ஆரம்பித்திருப்பார்களோ என்றெல்லாம் நப்பாசை பிடித்துப் படிக்கக் கூடாது என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன். :-((

என்னுடைய அரைகுறைத்தனமான எதிர்பார்ப்புகளை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது. கூடவே தளர்வும் கோபமும்.
-0-0-0-0-0-0-0-0-
ஹ்ம்ம்… விட்டுவிடலாம். 8-)

மிகப்பல காரியங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும் இந்த அக்கப்போர். மனித மனதின் வெறிகளே வினோதமானவைதான்.

ஒரு காரியம்: ஒரு நண்பரின் புத்தகம், இந்தியாவைப் பற்றியது, எனக்கு எடிட் செய்து மாளவில்லை. ஒரு நாளைக்கு 20 பக்கத்துக்கு மேல் வேலை செய்யமுடியவில்லை. சென்ற வருடம் அவரிடம் இதன் முந்தைய மேனுஸ்க்ரிப்டைத் திருப்பி அனுப்பிவிட்டேன் – ஏனெனில், ஒரு எழவு களப்பணிசார் அனுபவங்களோ, புதிய பார்வையோ, மெனக்கிடலோ, கூர்மையான அவதானித்தல்களோ, வரலாற்றுப் பின்புலமோ இல்லாமல் கண்டமேனிக்கும் ஒரு ஸெக்யூலரிஸ புத்தகமாக, முழுவதும் மேற்கோட்களை அள்ளித் தெறித்து ஒன்றுமே ஒத்திசையாமல் அது இருந்தது. அவர் பின்னர் எட்டு மாதம் எடுத்துக்கொண்டு அடிப்படை வரைவை மாற்றி, ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளக்கூடியாதான ஒன்றை அனுப்பியிருக்கிறார் – இருந்தாலும், அவருடைய 1200 பக்கத்தை 750 பக்கமாகக் குறைத்திருக்கிறேன் (இதுவரை). சிறிதாக, சீரியதாக எழுதுவதும் கஷ்டம்தான் – அதேபோல தலையணைதலையணையாக புத்தகம் எழுதுவது பெரிய விஷயம்தான் – ஆனால் எல்லா தலையணைகளும்  மாஹ்ஸெல் ப்பூஹ்ஸ்ட் (=மார்ஸெல் பூரூஸ்ட், Marcel Proust)-இன் இன் ஸேர்ச் ஆஃப் லாஸ்ட் டைம் அல்லவே! வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு, திருப்பித் திருப்பி திருப்பி எழுதி தேவைக்கு அதிகமாக ஒரு வரியுமோ அல்லது ஒரு வார்த்தையுமோ கூட அதிகமில்லாமல் அழகாக செதுக்கப்பட்டு க்ளிப்தமாக வெளிப்படும் புத்தகங்கள் மிகமிகக்குறைவு.

இன்னொன்று: நேற்று, இன்னொரு நண்பர் தன்னுடைய நாவல் வரைவை, என் கீழான பார்வைக்காக அனுப்பியிருக்கிறார். இதுவும் சுமார் 800 பக்கம். ஆனால், அவரிடம் முன்னமே ஒப்புக்கொண்டது போல் இதன் மீதான எதிர்வினைகளைக் கூடியவிரைவில் கொடுக்கவேண்டும். படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுவாரசியமாகவே இருக்கிறது.

ஆயிரம் பிறவேலைகள். இருந்தாலும் இப்படியொரு கந்தறகோள மனப்பான்மை; மன நோய்?… … ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சமயம் சொன்னதைப் போல: “ஒட்டகமானது, வாயில் ரத்தம் வடிந்து கொண்டேயிருந்தாலும் முட்செடிகளை, கள்ளிகளைத் தொடர்ந்து விரும்பிச் சாப்பிடும்; மேன்மேலும் விஷய ஞானத்தை அடைய நினைப்பவர்களின் நிலை அத்தகையது.” :-(  (இதனை என் நினைவிலிருந்து எழுதுகிறேன். தவறிருப்பின் சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறேன்.)

-0-0-0-0-0-0-0-0-

எல்லாம், ஆஸ்ட்ரேலியாகாரரான இந்த பக்கிரிசாமி பக்கிரிசாமி என்பவரால் ஆரம்பித்தது; இந்த மனிதரை இனிமேல் பின்னூட்டமிட அனுமதிக்கவேபோவதில்லை. அவர் ஒரு சுட்டியைச் சிலகாலம் முன்பு அனுப்பி (கிண்டலாகத்தான் என நினைக்கிறேன்) படித்தீர்களா எனக் கேட்டிருந்தார்.  நானும் கொஞ்சம் சமயம் கிடைத்தபோது அதனைப் படித்து, அதை எழுதிய(!) ஆசிரியப்பெருமகனாரின் ஞான வளர்ச்சியை அவதானித்துத் துணுக்குற்றேன். நான் அதோடு நிறுத்தியிருக்கலாம். மேலதிகமாக  இன்னொரு கட்டுரையைப் படித்துவிட்டேன். தொலைந்தது! கிழிந்தது க்ருஷ்ணகிரி!! :-(

அதில், பல விஷயங்களை, பல உச்சங்களைக் கூச்சமில்லாமல், குமாஸ்த்தாத்தன அறச்சீற்றத்துடன்  தொட்டிருக்கிறார் ஆசிரியப்பெருமகனார் அவர்கள். எடுத்துக்காட்டாக – என் ரத்தத்தை மேலதிகமாகவே கொதிக்கவைத்த, முட்செடிகளால் கீறப்பட்டு என் வாயிலிருந்து ரத்தத்தை ஒழுகவைத்த பகுதி:

“சமீபத்தில் ஈராக் தீவிரவாதிகள் இந்திய நர்ஸ்களை பிடித்து வைத்திருந்தார்கள். மோடி அரசாங்கம் பதவியேற்ற சமயம் அது. பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தி அவர்களை விடுவித்தார்கள். என்ன பேசினார்கள் என்ற விவரம் எந்தவிதத்திலும் கசியவில்லை. இங்கு யாருக்குமே என்ன பேரம் பேசப்பட்டது என்று தெரியாதா என்ன? ஏதேதோ விவகாரங்களை பிரித்து மேய்கிறோம். இதைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை? ‘இந்திய அரசாங்கம் பணம் கொடுத்தது என்று தெரிந்தால் வேறு தீவிரவாத அமைப்புகளும் இந்தியர்களை குறி வைத்துக் கடத்தி அரசாங்கத்திடம் பேரம் பேசும்’ என்று சொல்வார்கள். இப்பொழுது மட்டும் தீவிரவாதிகளுக்குத் தெரியாதா என்ன?. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.”

(இந்தப் பதிவின் தலைப்பு – “பயப்படுறியா கொமாரு?” எனக்குப் புரியவில்லை. ஏதாவது திரைப்பட வசனத் துணுக்காக இருக்கலாம் என நினைக்கிறேன். மரத் தமிழனுக்கு வேறேது  புகலிடம்!)

0. இதனால் யான் யாவருக்கும் உரைப்பது: ஞானி ஞாநி போன்ற பெயர்களுக்கு  உரிமை கொண்டாடுபவர்கள் ஏற்கனவே நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால், ட்ரிகாலமும் உணர்ந்த நம் எழுட்டாளர்வால் அவர்களின் பெயர் இனிமேல் ஞாணி. (இதனைப் படித்தவுடன் ஏணி, ஞானத்தின் முடிவேயில்லாத ஏணிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருப்பது, அரைஞாணி, இடுப்பு நாடா, கோமணம் போன்ற தொடர்புள்ள விஷயங்கள் உங்களுக்கு, சங்கிலித்தொடர்போல நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல; எனக்கேன் வம்பு!)

1. ஞாணி அவர்களுக்கு, இந்த ‘பேரம்’ தொடர்பாக அவருடைய ஞாணக்கன் (=துப்பாக்கி முனையில், அவர் குருவான தவிட்டுக்குருவியிடமிருந்து பெற்ற ஞானம் ஈதேன்றறிக!) மூலமாகப் பல நுணுக்கமான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. அவரிடம் பல தரவுகள் இருக்கின்றன. அவற்றை அவர் அறிந்திருந்தும் யாருக்கும் அதைத் தெரிவிக்காமல் கமுக்கமாக ‘இங்கு யாருக்குமே என்ன பேரம் பேசப்பட்டது என்று தெரியாதா என்ன?’ எனச் சொல்கிறார்; அவர் சன்னிதானப் பீடத்தின் உச்சிக்கும், மகோன்னதத்துக்கும் இது தகுமா?
2. அவர்கள் இராக் தீவிரவாதிகள் அல்லர்; ஸிரியாவில் தொடங்கி தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி,   ஜனநாயகமற்ற  அவர்கள் பாணி ஏதேச்சாதிகார ‘இஸ்லாமிய உலகம்’  ஒன்றை ஸ்தாபிக்கும் கனவை (=கொடுங்கனவு) முன்னெடுத்துச் செல்பவர்கள். இவர்களில் பலர் அரேபிய/மத்தியதரைக்கடல் சார் இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்தவர்களல்லர். இஸ்லாமிக்ஸ்டேட் என்று தங்களைக் கம்பீரமாக அழைத்துக்கொள்ளும் இவர்கள் வெறும் தீவிரவாதிகள் அல்லர். (வினவுக்காரர்கள் தீவிரவாதிகள் என்பதை இங்கு அறியவும், ஏன் ஞாணி™அவர்களேகூட ஒரு தீவிரவாதிதான் – தீவிரவலைப்பூவாதி!)

3. இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் கொடியதுதான். ஆனால் அவர்களை நம் திராவிட இயக்கங்களோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. அந்த கும்பல், பெரும்பாலும் – கொர்ரான் எனும் ஒரு மதப்புத்தகம் பற்றிய அவர்களுடைய சொந்த அணுகுமுறைகளால் கச்சாத்தனமாக வடிவமைக்கப் பட்டது. இஸ்லாமியப் பண்பாட்டில் உள்ள பல தத்துவார்த்தப் புத்தகங்களை, ஞானிகளை, மெய்த்தேடல் பாரம்பரியங்களை அது நிராகரித்து, அவற்றின் செழுமைகளை மறுதலித்து, பன்முக இஸ்லாம் என்பதையே அது ஒழிக்க முற்படுகிறது.  அவர்கள் அறிந்த மத அளவின் பெயரால், அப்பாவிகள் பலரை அயோக்கியத்தனமாகக் கொன்றொழிக்கிறது. இவையெல்லாம் உண்மைதான்.

4. ஆனால் அவர்கள் பணத்துக்கு அலைந்து, கடத்தல், பிணைத்தொகை என வீரப்பத்தனமாக அலைபவர்கள் அல்லர்.  இது ஒரு முக்கியமான விஷயம். அது ஒரு மிகைப்பணக்கார (சூறையாடிய பணம்தான்!) கும்பல். இதுவரை, அவர்கள் வரலாற்றில் ஒருமுறை கூட எனக்குத் தெரிந்து பிணைத்தொகை சார் கடத்தல்களைச் செய்யவில்லை. இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் மேல் இப்படி ஒரு பழி சுமத்துவது அபாண்டம். இது எப்படி இருக்கிறது என்றால் – திராவிட இயக்கம், கருணாநிதியம் போன்றவைகள் – தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்கு (பரந்துபட்ட இந்தியாவையே விடுங்கள்) – மகத்தான பல பணிகளை ஆற்றியிருக்கின்றன, மக்களின் செழுமையாக்கத்தை விரும்புகின்றன என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அபாண்டம்? அண்டப் புளுகு??  இப்படிப்பட்ட புளுகைத்தான் நம் ஞாணி அவிழ்த்து விடுகிறார்.

5. அங்கிருந்து திரும்பிவந்த செவிலிய இளம்பெண்கள் (இவர்களில் பெரும்பாலோர் பாவப்பட்ட க்றிஸ்தவர்கள், நடுங்கிக்கொண்டிருந்திருப்பார்கள்) – இந்தப் பணவிவகார வதந்திகளைப் பற்றி ஒரு சுக்கும் அறியவில்லை; அவர்கள் திரும்பி வந்தும் கூட, அந்த இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் பற்றி, அவர்கள் தங்களை நடத்திய விதம் பற்றிக் குற்றம் சொல்லவில்லை. இது ஒரு பக்கம்.

6. அதே சமயம் – அவர்களில் ஒருவருக்குக் கூட பல விஷயங்கள் பிரக்ஞையிலேயே இல்லை; இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி, மாய்ந்து மாய்ந்து, பல இடர்பாடுகளுக்கு இடையில், போர்க்கள ரத்தச் சகதியின் நடுவில்,  நம்முடைய அற்ப பரப்பூடக வெறிநாய்களின் வதந்தி பப்பரப்பாக்களுக்கு நடுவில் – நம் ரா அமைப்பும், வெளி நாட்டுத் துறையும், சில தனிமனிதர்களும் மூன்றாம்பேருக்குத் தெரியாமல் மகத்தான உழைப்பைக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியதைப் பற்றி ஒரு சுக்கும் அறியவில்லை.

7. அரசின் சார்பாக, ஒவ்வொரு நடவடிக்கையையும் – அரைகுறைகளுக்கு, ஊடகங்களினால் மழுங்கடிக்கப்பட்ட மூடங்களுக்கு விவரிக்கவேண்டிய அவசியமேயில்லை. இதில் பல சங்கடங்கள் உள்ளன. எப்படியும் இந்த மாக்கள் அனைவரும் (பல இணைய விசிலடிச்சான், பதிவெழுதினான், ஸ்டேட்டஸ் போட்டான், ட்வீட்டினான் குஞ்சப்பர்களும் இதில் அடக்கம்) – எப்போதுமே அடுத்த பப்பரப்பாவில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் மட்டுமே!

8. இந்தியாவின் பல ‘தன்னார்வ’ நிறுவனங்கள் இதே விவகாரத்தின் மேலதிக விவரங்களைக் கிண்ட முயன்றன. ஆனால் அவைகளுக்கு ‘வாய்க்கு அவல்’ ஒன்றும் கிட்டவில்லை. வெறுமனே மென்று துப்பிவிட்டு, அடுத்த பப்பரப்பாவின் பக்கம் போய்விட்டார்கள்.

9. எனக்குத் தெரிந்து, நான் மிகவும் மதிக்கும் காமன்காஸ் நிறுவனமும் இதன் பின்புலங்களை அறிய முயன்றது. எனக்கு அங்குள்ள பலரிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. அவர்களுக்கு கிடைத்த தகவல்கள், நம் மகாமகோ ஞாணி அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருபவவை. பின்புலத்தில் இந்திய அதிகாரிகளும் அரசாங்கமும் செய்ய முடிந்துள்ள பல விஷயங்களைப் பற்றிச் சில துணுக்குகளை அறியும்போது ஆச்சரியம் தருபவை – ஆகவே அரசாங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகளைப் பற்றி நம்பிக்கையளிப்பவை. பிரதிபலன் பார்க்காமல், புகழுக்கு ஆசைப்படாமல் பின்புலத்தில் மட்டுமேயிருந்து, சமூகத்தின் மேன்மைக்காகப் பாடுபடுபவர்கள் பலர் இன்னமும் இருக்கிறார்கள் – ஞாணி™ அவர்களுக்கு,  இது ஆச்சரியமாக இருக்கலாம்.

10. ஆனால், காமன்காஸ் நிறுவனத்தை, ஞாணி அவர்கள், தன்னுடைய பிரத்தியேக துப்புகளுடன் (அவரிடம் அவை இருந்தால்) தொடர்பு கொள்ளலாம். அவர் இன்னொரு ஸ்னோடென் ஆகலாம். அவர்களிடம் சரியான தொடர்புகளையோ, ஆவணங்களையோ கொடுத்தால், அவர்கள் இன்னமும் இந்த விஷயத்தை ஐயம்திரிபற உணரவே முயல்வார்கள். நான், அங்கு பணிபுரியும் என் நண்பர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை அனுப்ப முடியும் – அவர்களை நேரடியாகவே தொடர்பு கொண்டும் தேவையான துப்புகளைக் கொடுக்கலாம். செய்திகளை/தரவுகளை அளிப்பவரைப் பற்றிய விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப் படும்; பலபத்தாண்டுகளாக இவர்களை நான் அறிந்திருப்பவன் என்கிற முறையில், இதற்கு நான் உத்திரவாதம். (குறிப்பு: இந்த காமன்காஸ் நிறுவனம்தான் 2ஜி விஷய ஊழல்களை, இன்னும் பலப்பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிறுவனம்; அதுமட்டுமல்ல, இந்தியாவின் மேன்மைக்காக  பல சட்டரீதியான, நிர்வாகரீதியான பரிந்துரைகளையும் அளித்திருக்கும் இந்த நிறுவனம், நம் அரசியல் களத்திலும் இன்றியமையாத பங்கை ஆற்றி வருகிறது)

 11. ஹ்ம்ம்ம். ஒருவேளை – தாம் எந்த விஷயத்தையும் (எடுத்துக்காட்டாக, ஓட்டுனர் உரிமம்) லஞ்சம் கொடுக்காமல் சாதித்துக் கொள்ளவில்லையென்பதை நீட்டித்து – எந்தவொரு விஷயத்தையும் லஞ்சம் கொடுக்காமல், பிணைத்தொகை அழாமல் யாராலும் எப்போதும் சாதிக்கமுடியாது என்று அறச்சீற்றக்காரர் நினைக்கிறார் போலும்.  பாவம்.

12. ஆக, அற்ப வதந்திகளை வாயோர எச்சில் ஒழுகும் ஆர்வத்துடனும், தாங்கொணா எளிமைப் படுத்தல்களுடனும் கமுக்கமாக சொல்வதற்கு, தேவை மெனக்கெட்டுக்கொண்டு பரப்புவதற்கு, ஒரு கயமை சார்ந்த திறமைவேண்டும்தான்; நான் ஒப்புக்கொள்கிறேன்.

-0-0-0-0-0-0-0-

சரி. என்னதான் நான்,  ஞாணி அவர்கள் மீதான பொறாமையின்பாற்பட்டு (அல்லது விரக்தியடைந்து) பிலாக்கணம் வைத்து சோர்வடைந்தாலும்…

… இணையத் தொடர்பின் முன் கமுக்கமாகக் குசுவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாலும், டாப்-செய்திகளின் சுருக்கங்களை மட்டும் மேலோட்டமாக மேய்ந்து கருத்துகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தாலும்,  இணைய வானில் பட்டொளி வீசிப் பறந்து வதந்திகளைப் பரப்பும் மகாமகோ இரண்டாம் ஸ்னோடென்களுக்கு,  ‘சுஜாதா’ விருதாக்காரர்களுக்கு  – என் வாழ்த்துகள். இன்னும் முயன்றால், நீவிர், திகிலூட்டும் திரைப்படவசனகர்த்தாவாகக்கூட ஆகிவிடலாம். மறுபடியும்  வாழ்த்துகள்.

எச்சரிக்கை: ஆனால், இந்த நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு எனக்கும் தேவையில்லைதான். இருந்தாலும், ஒத்திசைவு ஓட்டகத்திற்கு அஞ்ஞானப் பசி எடுக்கும்போது, அது மறுபடியும் சப்பாத்திக்கள்ளிகளை வாயில் ரத்தம் ஒழுகஒழுகச் சாப்பிடலாம்.

பின்குறிப்பு: மேதகு ஞாணி™ அவர்கள், சரியான-ஒப்புக்கொள்ளத்தக்க தரவுகளுடன், அவருடைய வதந்தியை – உண்மை என நிரூபித்தால் (என்னிடம் அல்ல – நேரடியாக காமன்காஸ் போன்ற நேர்மையான அமைப்புகளுடன் செய்தால் போதுமானது) நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கத் தயார். :-(

பின்பின்குறிப்பு: இணையக் குளுவான்களின் ஞானப் பிரகடனங்கள் உவகையூட்டுவதைப் போல, வேறொன்றுமறியேன் பராபரமே!

சுபம்.

 

 

3 Responses to “தெனிக்கும் எப்டியாவ்து பதிவெள்தணுமே, அரெகொற வாசகக்கூவான்கள ஓடாம இள்த்துப் பிட்ச்சுக்கணுமே, ஆனாக்க வொரு ஐடியாகூட கெடக்யலன்னிட்டு, ங்கொம்மாள, ஏண்டா சும்மா போவறபோக்ல இருட்ல கல் வுட்டு சாணியடிக்கிறீங்க??”

  1. Anonymous Says:

    firt one s. ramakrishnan, second yuvakrishna, third manikandan. correct-a?

  2. ஆனந்தம் Says:

    நகைக்கழுத்தனார் காமன் காஸ் என்பதைக் காமன் காசு என்று புரிந்துகொண்டால் என்னென்ன விபரீத விளைவுகள் நேரும் என்று யோசித்தீரா ஒத்திசைவாரே? சொந்தக்காசே நிறைய செலவாகிறது. மசால்தோசை 38 ரூபாய். காமன் காசு என்றால் வெறும் தோசைக்கே 380 வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள். இதை எடுத்துச் சொல்லப்போனால் யாரேனும் அடிக்க வருவார்களோ? நிசப்தமாக இருக்கலாம் என்றாலும் முடியவில்லை. தவிட்டுக்குருவி உள்ளே வருகிறது. அதைத் தடுக்க வலை மாதிரி ஏதாவது அடித்துவிடலாம் என்று திருப்பூர்ப் பக்கம் போய்க் கார்ப்பெண்டரை விசாரித்தால் 760 ரூபாய் கூலி கேட்கிறார்கள்……


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s