கல்யாணராமன்: சாதி ஒழிப்பும் சுயசாதி விமர்சனமும்

17/12/2014

என் மரியாதைக்குரிய பல்கலைவல்லுனரான ஆனால், டென்டிஸ்ட் அல்லாத  கல்யாணராமன் அவர்கள் எழுதியுள்ள இந்தச் சிறு கட்டுரையை, அவருடைய முன் அனுமதி பெற்று இத்தளத்தில் பதிவு செய்கிறேன். (இவரைப்பற்றி முன்பே ஒருமுறையாவது எழுதியிருக்கிறேன்: கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பாளர்)

நான் இதுவரை படித்த இந்த ‘வெகு சுலபமாகக் கடந்துவிடப்படும்’ சர்ச்சை பற்றிய பல (ஆனால் எல்லாவற்றையும் படிக்கத் திராணியில்லை) கட்டுரைகளில் – இதற்கு ஸிக்னல்/ நாய்ஸ் (-பொருட்படுத்தக்கூடிய சமிக்ஞை / ஆரவார உரத்தசத்த)  விகிதம் – SNR  >>> 1.

… ஏனெனில், பலருக்குச் சொல்ல என்று ஒரு எழவும் இல்லை. இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தங்களிடம், பொருட்படுத்தக்கூடியதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதையே வெகு நீளமாக, விலாவாரியாக உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாய்ஸ் (=noise!) லெவெல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆக இவற்றின் SNR விகிதம் <<<<<<<<<<< 1/∞  :-(

படித்தபின், முடிந்தால் யோசிக்கலாம். இல்லையென்றால், தாராளமாக வசை பாடலாம். ஆனால், பின்னதை உங்கள் தளத்தில் செய்துகொள்ளவும்.

நன்றி.

பின்குறிப்பு: இவர் கட்டுரையை நான் பதிப்பதால், அவருக்கு ‘மோதி மோகிகளுடன்’ உறவாடிய தீட்டு (=திட்டு) வராது என நம்புகிறேன். அவரவருக்கு அவரவர் வழி. அவருடைய அனுபவங்கள், அவதானிப்புகள் மூலம் அவருடைய கருத்துகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். நானும் அப்படியே. ஆனால்,  ‘சகலதளங்களிலும் மேன்மையை விரும்புதல்’ எனும் செயல்பாட்டில் எங்கள் இருவருக்கும் ஒத்தபார்வைதான் இருக்கிறது எனவும் நம்புகிறேன்.

மீண்டும் நன்றி.
—BEGIN—
சாதி ஒழிப்பும் சுயசாதி விமர்சனமும்
(கல்யாணராமன்)

தமிழ்நாட்டில் பல ஆதிக்க சாதிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அதன் மட்டத்தில் சாதியத்தைப் பேணி அடுத்தவர்களை இழிவு செய்யும் / அதிகாரம் செய்யும் / சுரண்டும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்று ஆட்சி அதிகாரமும் பொதுநிறுவனங்களும் சாதிசார் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுவதாகவும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இப்படி ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ள அனைத்துச் சாதியினரின் சாதியச் செயல்பாட்டையும், அரசு உள்ளிட்ட நவீனச் சமூகத்தின் நிறுவனங்கள் சாதிசார் அடிப்படையில் இயங்குவதையும் விமர்சனம் செய்வது அவசியம் மட்டுமல்ல, நம் கடமையும்கூட.

இந்தச் சொல்லாடல்களினூடே சுயசாதி விமர்சனம் என்பது முன்வைக்கப்படுகிறது. சுயசாதி விமர்சனம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. நம் சாதியச் சமூகத்தில் சாதி ஒழிப்பு வேண்டும் எவரும், தான் பிறந்த சமூகத்தின் சாதியச் செயல்பாடுகளை ஆதரிக்கமுடியாது. பொதுவுடமை இயக்க ஆதரவுடைய எவருக்கும் இது இயல்பாக வரக்கூடியது; ஏனெனில் அவர்கள் சாதி உரிமை மட்டுமன்றி நவீன சமூக அமைப்பின் மூலம் பெறப்படும் இதர சிறப்புரிமைகள் மீதும் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் சமூகம் தழுவிய சொல்லாடலில் சுயசாதி விமர்சனத்தின் வகிபங்கையும் முதன்மைப்பாட்டையும் பற்றி ஆழமாக யோசிக்கவேண்டிய தேவை இருக்கிறது. உணர்வுரீதியில் இது வசீகரமானது; ஆகச் சிறந்த அறச்செயல்பாடாகவும் இன்றியமையாததாகவும் தோன்றக்கூடியது. இந்தக் காரணங்களுக்காகவே இதைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

முதலாவதாக, இந்த சுயசாதி விமர்சனங்களின் மூலமாக சாதி எப்படியெல்லாம் இயங்குகிறது என்ற அறிவை சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். அடுத்தவர் சொல்வதைவிட இத்தகைய விமர்சனங்களுக்கு கூடுதலான நம்பகத்தன்மை உண்டு. ஆனால் ஒரு நூற்றாண்டாக சாதி தொடர்பான அரசியல் இயக்கங்கள் கண்ட தமிழ்ச் சூழலில் இவை அரிதாகவே தோன்றியிருக்கின்றன. சுயசாதி விமர்சனங்கள் இல்லாமலேயே திராவிடக் கழகம் ‘சாதி மறுப்பு’ இயக்கமாகத் தோற்றமளிக்க முடிந்திருக்கிறது. எனவே, பரவலான சுயசாதி விமர்சனம் என்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும் நெடுநாள் திட்டமாகத்தான் இருக்கமுடியும். அது உடனடியாக நடக்கக்கூடியதல்ல.

இது இப்படி இருக்க, திராவிட இயக்கத்தையோ, இடைநிலைச் சாதி அரசையோ விமர்சனம் செய்யும் பிராமணர்கள் (மட்டும்) முதலில் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வலுவாக முன்வைக்கப்படுகிறது. பத்ரி பிராமணர்கள் ஒரு குழுவாகத் தூற்றப்படுவதைக் கண்டித்து எழுதியபோது ராஜன் குறை எனும் திராவிட இயக்கப் பற்றாளர் இப்படித்தான் சுயசாதி விமர்சனத்தைப் பரிந்துரைத்தார். இன்னொருவர் சுயவிமர்சனத்தை மட்டுமன்றி தூற்றுபவர்களின் ’குறைந்தபட்ச நியாயத்தை’ அங்கீகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். வேறொரு பிராமணர், ஆட்சியிலிருக்கும் இடைநிலைச் சாதியினர் தலித்துகளுக்கு இழைத்துவரும் கொடுமையைக் கண்டிக்கத் தலைப்படும் பிராமணர்கள் முதலில் சுயசாதி விமர்சனம் செய்துகொண்டால்தான் அத்தகைய விமர்சனம் செய்வதற்கேற்ற அறத் தகுதியைப் பெறமுடியும் என்று கூறுகிறார். இவையனைத்துக்கும் அடிப்படையாக சாதிய அமைப்பில் வழிவழியாக பிராமணர்கள் பெற்றுவந்திருக்கும் சிறப்புரிமையையும் அதனால் அடைந்திருக்கும் மேட்டிமையையும் மேற்படி நபர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தப் பரிந்துரைகளையும் அறிவுறுத்தல்களையும் நான் தெளிவாகவும் திண்ணமாகவும் நிராகரிக்கிறேன். அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு.

1. சாதி அமைப்பால் பிராமணர்கள் மட்டும் ஆதாயம் பெறவில்லை. ஒவ்வொரு வரலாற்றுத் தருணத்திலும் அனைத்து ஆதிக்க சாதிகளும் அத்தருணத்தின் அதிகாரக் கட்டமைப்பில் தத்தம் இடங்களுக்கேற்ப ஆதாயத்தைப் பெற்றுத்தான் வந்திருக்கிறார்கள். இன்று எண்ணிக்கைப் பெரும்பான்மை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் இடைநிலைச் சாதியினர் பெற்று வரும் ஆதாயங்களும் இந்த வகைமையைச் சேர்ந்தவைதாம். எனவே, சாதியத்தை விமர்சிக்கும்போது இவ்வனைத்துவகை ஆதிக்கங்களையும் சேர்ந்தே விமர்சிக்க விரும்புகிறேன். இவையனைத்துமே அம்பேத்கர் தன் மக்களை ஒடுக்குவதாகக் குறிப்பிட்ட பிராமணியம்தான். (பார்க்க; http://mooknaayak.freeblogforum.com/t151-brahmanism-according-to-dr-br-ambedkar-by-nikhil-sablania) நடைமுறையில் பிராமணியம் பிராமணர்களுக்கு மட்டுமே தொடர்பானது எனும் திராவிட இயக்கக் கருத்தியல் பொய்மையை, எதார்த்தத்துக்கும் உண்மைக்கும் புறம்பாக இருப்பதை, நான் நிராகரிக்கிறேன். எனவே நிகழ்காலத்தில் காணப்படும் பிராமணியத்தை முழுமையாக அடையாளம் கண்டு விமர்சிப்பதற்கே என் முன்னுரிமை, வெறும் சுயசாதி விமர்சனத்துக்கன்று.

2. எந்த ஒரு சமூகக் குழுவையும் சாராம்சப்படுத்தி இழித்தும் பழித்தும் பொதுவெளியில் பேசுவது பற்றி:  இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அநாகரிகமானது; ஆபாசமானதும்கூட. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதற்கு நான் எவ்வித முன்நிபந்தனையையும் ஏற்கவேண்டிய கட்டாயம் கிடையாது. இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கும் நடத்தைக்கும் எவ்விதமான ‘குறைந்தபட்ச நியாயமும்’ கிடையாது. சாதியைச் சுட்டிக்காட்டி எவரையும் இழிவு செய்வது கூடாது. இதற்கு எந்த விதிவிலக்கும் இருக்கமுடியாது.

வெள்ளைக்காரனை எக்காரணம் கொண்டும் பொதுவெளியில் தூற்றாமல் ஒரு எண்பது வருடப் போராட்டத்தை கண்ணியத்துடன் நடத்தி விடுதலை பெற்ற நாடு இது. எனவே முப்பதுகளில் யாரோ தொடங்கி வைத்த ஆபாசத்தைத் தூக்கியெறியும் நேரம் வந்துவிட்டது. யாரையும் சாதி சொல்லித் தூற்றாமலிருக்கக் கற்றுக்கொள்வதே இந்த நாட்டுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை.

3. இறுதியாக: பிராமண குலத்தில் பிறந்த ஒருவர், இடைநிலைச் சாதியினர் தலித்துகளுக்கு இழைக்கும் வன்கொடுமைகளையும் உரிமை மறுப்புகளையும் பற்றிப் பேசுவதற்குமுன் அவர் சுயவிமர்சனம் செய்து ”சாதிய சுத்தி” அடையவேண்டும் என்ற நிபந்தனையை நான் ஏற்க முடியாது. என் பிறப்பு சாதி அடையாளம் என் பன்மைத்துவ அடையாளங்களில் ஒன்றுதான். அது எனக்கு முக்கியமல்ல. அதுவும் குடிமைச் சமூக உறுப்பினனாக தீண்டாமை ஒழிப்பு போன்ற அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது சாதி அடையாளத்தைச் சுமக்கவேண்டிய தேவை என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. இன்றும் மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சிதான் தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்புக்காக தலித்துகளை அணிதிரட்டிப் போராடி வருகிறது. இதற்கு சாதி அடிப்படையில் நுழைவுத் தகுதியெல்லாம் வைப்பது பிற்போக்கான அணுகுமுறையாக எனக்குப் படுகிறது. எதையும் விட செயலின் உண்மையே நம்பகமானது என்றுதான் நினைக்கிறேன்.

திராவிட இயக்கத்தின்/கட்சிகளின் வகுப்புவாத அரசியல் பிராமணர்களை ஒரு தொகுப்பாக சாதி அடையாளத்துக்கு உட்படுத்துவதை இன்றியமையாத கூறாகக் கொண்டிருக்கிறது. அது அவர்களுடைய தேவை; என்னுடையதல்ல. எனவே அவர்களுடைய சட்டகத்துக்குள் நானோ வேறு யாரோ பொருந்தவேண்டியதில்லை. தலித்துகளுடைய உரிமைகளுக்கான போராட்டத்தை சாதி கடந்த அமைப்புகளே முன்னெடுக்கும். ஆட்சியிலிருப்பவர்கள் அதை சாதிய அடையாளச் சொல்லாடல் கொண்டு எதிர்க்கமுடியாது.

=====

திராவிட இயக்கத்தின் வகுப்புவாதச் சொல்லாடல் ஒரு புதிய சாதியத்தைத் தான் கட்டமைத்திருக்கிறதே தவிர சாதி ஒழிப்பு என்பது அதன் கற்பனைக்கும் திறனுக்கும் அப்பாற்பட்டது. சாதியச் சொல்லாடல் கொண்டே சாதி ஒழிப்பை நடத்த முயல்வதாகச் சொல்வது அபத்தமன்றி வேறல்ல.

திராவிட இயக்கப் பற்றாளர்கள் பிராமண துவேஷத்தை அங்கீகரித்து தாங்கள் சமூகநீதியையும் மக்களாட்சியையும் பேணுவதாக எண்ணலாம். உண்மையில் அவர்கள் ஒரு புதிய சாதிய அதிகாரத்துக்குத்தான் முட்டுக்கொடுக்கிறார்கள்.

அதிகாரப் போட்டியின் அடிப்படையில் துவங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் சாதி அரசியல் சாதியத்திலும் அதிகார வேட்டையிலும் பொருளீட்டும் பேராசையிலும் மீளமுடியாதபடி சிக்கியிருக்கிறது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

உண்மையான சனநாயகத்தை வேண்டும் அரசியல், தலித் உரிமைகளுக்கான பரந்த மக்கள் போராட்டத்திலிருந்துதான் துவங்கவேண்டும். மற்றவையெல்லாம் நண்பர் ரவிக்குமார் சொன்னது போல் அதிகார மையங்களுக்கிடையேயான போட்டி மட்டுமே.

நன்றி.

—-END—

Advertisements

One Response to “கல்யாணராமன்: சாதி ஒழிப்பும் சுயசாதி விமர்சனமும்”

  1. பெரியார் தடி Says:

    சாதி ஒழிப்பைப்பற்றி பார்ப்பன/பார்ப்பனீய பருந்துகள் கவலைப்படுவது உண்மையிலேயே நகைப்புக்குரிய விடயம்தான்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: