பிலுக்கல் + பிலிம் காட்டல் = பீலா வுடுதல் —- (1/2)

21/12/2014

மன்னிக்கவும். நான் தமிழ்ப் படமே பார்ப்பதில்லை. #லிங்கா கல்லுளிமங்கா படம் படுபோர். யாருமே அதைப் பார்க்காதீர்கள். நான், தமிழ் பிலிம் உலகை அறவே வெறுக்கிறேன். இருந்தாலும் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் பிலிம்காரர்கள்தான்.

நிற்க. நண்பர் ஒருவர்தான் எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னார்.  விஷயம்: #லிங்கா ஒரு சப்பை.  ஏன்தான் தமிழர்கள் இந்த சினிமாவைக் கட்டிக்கொண்டு அழுகிறார்களோ! அஜித் படம் ரிலீஸ் ஆனபின் தான் விஜய் படமாமே? 2014 பொங்கல் ரிலீஸ் படங்களை எந்த வரிசையில் பார்ப்பது என்றே குழப்பமாக இருக்கிறது. அதுவும் தமிழா தெலுங்கா கன்னடமா என்றெல்லாம். பாவிகள், திராவிட மொழிகளில், படங்களைக் கண்டமேனிக்கும் ரிலீஸ் செய்துவிடுகிறார்கள். வலுக்கட்டாயமாக, வேறு வழியேயில்லாமல், இந்த கருமாந்தரங்களைப் பார்க்க நேர்வது, காலத்தின் கோலம்தான். அற்ப குப்பை வியாபாரிகள், இந்த திரைப்படக்காரர்கள்…

கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குகின்ற தொழிலாமே இது?  எப்படி? நான் முடிந்தவரை திருட்டு டவுன்லோட் செய்து, இல்லாவிட்டால் திருட்டு டீவிடியில்தானே படம் பார்க்கிறேன்? நான் கொடுப்பது திருடர்களுக்கல்லவா? ஒன்றுமே புரியவில்லை.

திருட்டு டீவிடியே ஒரு நேரடி டிஸ்ட்ரிப்யூஷன் சேனலாக தயாரிப்பாளர்களுக்குப் பணம்கொட்டும் தொழிலாக மாறிவிட்டது என நினைக்கிறேன். எல்லாருமே அயோக்கியர்கள்.

திருட்டு டீவிடிக்கு முப்பது ரூவா கேட்பது அறமற்ற செயல்.

ரிலீஸ் ஆன அன்றைக்கே தியேட்டர்களில் முண்டியடித்தல்கள், தள்ளுமுள்ளுகள் — முதல் நாள் முதல் ஷோ பார்த்தேதீரவேண்டுமென்று;  கொஞ்சம் அஆஇஈ எழுதத் தெரிந்தால், 0 விலிருந்து 1 வரை  மட்டுமே எண்ணத் தெரிந்த டிஜிட்டல் கந்தறகோள தலைமுறைக்காரனாக இருந்தால் – வெகுசூடாக, வொலக வரலாற்றிலேயே முதலாக விமர்சனம்(!) எழுதிவிடவேண்டுமென்று, ட்விட்டர் ஃபேஸ்புக்கில் உடனே முக்கி வெளிப்படுத்திவிடவேண்டும் என்று அப்படியொரு  துடிப்பு!

கொஞ்சம் வயதானவனாக இருக்கிறானே எனக்கூட கொஞ்சமாவது மரியாதை கொடுக்காமல் தலைமேலேயே நடந்து போய் டிக்கெட் வாங்கிவிடுகிறார்கள், இந்தக் குளுவான்கள். என் தலையெல்லாம் செருப்பு நாற்றம். தமிழகத்தில் அறிஞர்களுக்கு, மதிப்பேயில்லை.

சராசரித் தமிழ் திரைப்படச் சராசரிக் குளுவான் ரசிகன் ஒரு அராஜகவாதி. தொப்புளைப் பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்ன இவ்வளவு அவசரம். ஆனால், நியாயமாகப் பார்த்தால் நடிகைகளின் தொப்புள்களை க்ளோஸ்-அப் ஷாட்-களில் பார்த்தால் சொர்க்கலோகம்தான் – என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். ‘தொப்புள்களில் பலவகைகள் யாவை – இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக’ என்று சமச்சீரழிவு பத்தாம் வகுப்புத் தேர்வில் கேட்டாலும் ஆச்சரியம் இல்லை – நிலைமை அவ்வளவு கேவலமாக இருக்கிறது.

இம்மாதிரி கேள்விகள் கேட்கப் படுமானால்,  நான் கடும்சிரமம் பாராமல் எழுதிய அதற்கான  300 பக்க கோனார் உரையை (வண்ணப் படங்களுடன்)  கலைஞர் பெருமானாரின் அணியாதுரையைப் பெற்று உடனே வெளியிடுவதற்கு நான் தயாராக  இருக்கிறேன். பத்ரி சார்  இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கவும் தயாராக இருக்கிறார். ஆனால் பாழாய்ப்போன கல்வித் துறைக்காரர்களுக்கு, தமிழன் புதிய முறைகளில் உலகைப் பார்த்து, எழும்பிவரும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில், அவற்றை நம் தமிழ்க் குழந்தைகளுக்குப் புகட்டுவதில், ஆவலேயில்லை. :-(

-0-0-0-0-0-0-

நான் கொஞ்சம் பழைய ஆசாமி. எனக்கு ஜோதிலட்சுமி மேடம் அவர்களின் தொப்புள்தான் பிடிக்கும். ஜெயமாலினி மேடம் அவர்களுடையது கூட, அவ்வளவு அழகுணர்ச்சி உடையதல்ல. ஹிந்தி பட ஹெலென் மேடம் அவர்களின் தொப்புளும்தான் அப்படித்தான் – திராவிட ஆராய்ச்சிப் பார்வையுடன், தொப்புள்ஞான மரபில், நன்றாகக் கூர்ந்து கவனித்தால் தெரியும், எளிதில் பிடி கிடைத்துவிடும். கேடுகெட்ட தமிழன், தொப்புள் பின்னால் அலைந்தே திராவிட நாட்டைக் கோட்டை விட்டுவிட்டான். வெறுப்பாக இருக்கிறது.

ஆனால், வருந்தத் தக்கவகையில் அந்தக் காலத் தொப்புள்கள் போல இக்காலங்களில் இல்லை. அந்தக் காலத் தொப்புள்களில் ஆழமும் வீச்சும் தனித்தன்மையுடன் இருந்தன. என்னைப்போன்ற 60 வயதானவர்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும். தமிழனுக்கு,  வரலாற்றுணர்வும் நுண்ணுர்வும் இல்லை – அவை என்ன புதிய ஸன் டீவி கலைஞ்சர் டீவி சேனலா என்று கேட்பான்!

இதை விடச் சங்கடமான செய்தி – நம்மிடம் உள்ள சங்ககால, பஃறுளியாற்றுக் கரையில் வார்த்தெடுக்கப்பட்ட லெமூரிய தொப்புளாலஜி என்கிற தத்துவ ஞானத்தையே மட்டித் தமிழன் தொலைத்துவிட்டான். வேலை வெட்டியற்று ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்த ஜெஸூய்ட் பாதிரிமார்கள் மட்டும் இந்தத் துறையிலும் முழுஅர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தால், நாம் இப்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோஂமா – ‘உலகின் முதல் தொப்புள், திராவிடத் தொப்புள்‘ என்று! :-(

இப்படிப்பட்ட தொப்புளியல் பாரம்பரியமுள்ள நாம் – இன்று, நம் திரைப்படங்களுக்காக – ஒரு அற்ப தொப்புள் வடிவமைப்பைக் கூட ஹாலிவுட் காரர்களிடமிருந்து தேடி காப்பியடிக்க வேண்டிய நிலையில் தான்  இருக்கிறோம்! தொப்புள் முஹம்மது மீரான் போன்ற தமிழகம் சார்ந்த, அற்புதத் தொப்புள் வடிவமைப்புக் கலைஞர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு, ஹாலிவுட் ஸ்பெஷலிஸ்ட்களிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்து விடுகிறோம்! படுகேவலம்.

கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு” என்ற பரிபாடலுறுப்பு வரியிலிருந்து ஆரம்பித்து சீறு நடை போட்டு அதிரவைக்கும் திராவிடத் தொப்புள் டிஸைன்  பாரம்பரியத்தை நாம் அறவே மறந்துவிட்டது, ஒரு சோகம்தான். :-(

ஔவையாரும் ஆண்டாளும் காக்கைபாடினியாரும் தொப்புளின் கீழ் பாவாடை கட்டியவர்கள்தான். பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்கூட இதுபற்றிய ஒரு ஆராய்ச்சியைச் செய்தார். ஒரு தடவை நம் அறிவார்ந்த ஆசாமிகள் நிரம்பிய சட்டசபையிலே கூட ‘பாவாடை’ என்றெல்லாம் நவரசத்துடன் பேச ஆரம்பித்து, ஆனால் மேலோகீழோ செல்லாமல் விட்டுவிட்டார், பாவம். இதைப்பற்றியெல்லாம் யாருக்குத் தெரியும், சொல்லுங்கள்.

திராவிடக் கொழுந்துகள் இவை பற்றி ப்ராக்டிகல் பரீட்சைகள் மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். நம் சமச்சீரழிவுக் கல்வியின் நிலை இதுதான். ப்ராக்டிகல் மட்டுமல்லாமல் தியரி பரீட்சைகளும் வைக்க வேண்டாமா?  ஞானத்தேடல் வழிகளை, முறைமைகளை – பயன்பாட்டு ரீதியாக மட்டுமல்லாமல், கோட்பாட்டு ரீதியாகவும் அணுலவேண்டியது அவசியமல்லவா?

மேலே ஏழுதினால் அடிக்க வருவார்கள். நமக்கெதுக்கு வம்பு. பம்மிப் பதுங்கி நிசப்தமாகி அடங்கி ஒடுங்கி விடுவதே நல்லது.

-0-0-0-0-0-0-

ஒற்றைச்சூத்தர் என்றழைக்கப்பட்ட  கன்யாகுமரி திருவள்ளுவர் அளவிற்குப் பெரிய சங்ககால நடிகர் ஒருவர் இருந்தார் என்பது எவ்வளவுபேருக்குத் தெரியும். அவர் தமிழர். என்னைப் போலவே பௌத்தர். லெமூரிய திராவிட இயக்கச் சார்பினர். இவரும் நானும் பலதடவை சங்ககாலத்திலேயே சங்கோலி விளையாடியிருக்கிறோம். , அந்தப் பசுமையான நினைவுகள்… இப்போது நினைத்தாலும் இனிப்பவை. கே பாலச்சந்தர் சாரிடம் சொல்லவேண்டும்.

ஒற்றைச்சூத்தர் சார், ஒரு சுவாரசியமான மனிதர். பல்கலை வல்லுநர். அதாவது, அடிப்படையில் ஒரு டென்டிஸ்ட்.  கம்பரை அறிவுமதி கேட்டதுபோல,  என்ன பெரிதாகப் பிடுங்கினார் என்று யாரும் இவரைக் கேட்கவே முடியாது. திறமைசாலி.  பல்வகைத் திறமை மிக்கவர். பண்பாளர். இருந்தாலும், ஆச்சரியப்படவைக்கும்படி ஒரு தமிழர்.

ஒரேயொரு மகாமகோ கணிதச் சூத்திரம் (சூத்திரம் என்பது பாலி மொழியில் சூத்தா என அறியப்படும்)  ஒன்றையும் கண்டுபிடித்த கணித விஞ்ஞானியும்கூட! அதனால்தான் அவர் ஒற்றைச்சூத்தர் என லெமூரியத்தில் பரவலாக அறியப்பட்டார், என்பது கொசுறுச் செய்தி.  இக்காலத்தில், மிக அநியாயமாக இந்த சூத்திரமானது,  சென்னைத் துறைமுக மாஜிகுமாஸ்தாவான ராமானுஜன் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது என்பது, ஆரிய-பார்ப்பன-பனிய சதிதான்! ஆனால், சொன்னால் அடிக்கவருவார்கள்.

அந்தக் காலத்தில் உலகமெல்லாம் கருப்பு வெள்ளைப்படம் மட்டும்தான்.  ஆனால், ஒற்றைச்சூத்தர் சார் அப்போதே கறுப்புசிவப்பு படங்களில் நடித்து  ‘மூன்றெழுத்தில் என் மூ-ச்-சா இருக்கும்’ என மிகத்தைரியமாக, மிகக் கணீரென்று பாடியவ்ர்.  (இதற்கு ஆதாரம்: வாசக மாக்களின் பேராதரவு பெற்ற !நிசப்தம் தளத்தில், ஒட்டக்கூத்தரை (இவர் ஒற்றைச்சூத்தரின் மருமகனார் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்), உலகவரலாற்றிலேயே தமிழகத்து அறிவிலி மக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் பதிவு ஒன்று வந்திருக்கிறது. அவசியம் படிக்கவும்)

-0-0-0-0-0-0-0-0-

தமிழ்த் திரைப்பட உலகத்தில் என் நண்பர்கள் அனைவரும் படு கேவலமான அயோக்கியர்கள். எதிரிகள். முதுகில் குத்துபவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். பொழுதன்னிக்கும் குடி கூத்து கும்மாளம்தான். முடிந்தபோதெல்லாம், அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் படுகேவலமாகத் திட்டிக்கொள்வார்கள். ஆனால் தனிப்பட்ட  முறையில் அவர்களெல்லாரும் நண்பர்கள்தான். அவர்களுடைய பாட்டாளி வர்க்கச் சார்பு என்பது அசைக்க முடியாதது. அவர்களில்லாவிட்டால் திரையுலகம் இல்லைதான். முட்டாளோழி சூழ் உலகம் என்று கம்பன் அன்றே சொன்னானல்லவா? இந்த நடிப்புச் சுதேசிகளை நான் வெறுக்கிறேன்.

ஆகவேதான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே, நடிகர்கள் தம்பெயரில் நற்பணி மன்றங்கள் ஆரம்பிக்க ஆதரவு தருவதை நான் மெச்சுகிறேன். ஏதோ அவர்கள் தயவில்தான் பாலாபிஷேகமும் பியராபிஷேகமும் முக்கால பூஜைகளும் தியேட்டர்களில் நடைபெறுகின்றன. பொருளாதார முன்னேற்றமும் பரவலாக்கப் படுகிறது.

மேலும் இந்த ரசிகத் திரியாவரங்களை தியேட்டர்களுக்குள் அவ்வப்போது அடைத்து வைக்காவிட்டால்,  வெளியே சுயநினைவுடன் வந்து நாட்டையே நாறடித்து விடுவார்கள் என்பதும் சரிதான். இருந்தாலும், நான் ரசிகர்களை இவ்வளவு கேவலமாக நினைப்பவனில்லை. நானே எங்கள் பகுதி விஜய் சார் ரசிகர் மன்ற உறுப்பினன் தான். ஒரு ஃபோட்டோகூட அவருடன் எடுத்துக் கொண்டிருக்கிறேன். சார் என்னுடைய ரசிகர். எனக்குத் தமிழ்ப்படக் குப்பைகளே பிடிக்காது. ஒரே ஆபாசமும், நகைச்சுவை என்கிற பெயரில் காட்டுக் கூச்சலும் தான். ஆனால், செந்தில்-கவுண்டமணி ஜோக்குகள் போல வருமா?

-0-0-0-0-0-0-

… வழக்கம்போல அந்த பெரிய, புகழ்பெற்ற நடிகர் சார் (படத்திற்கு 20 கோடிரூபாய் மட்டும்தான் வாங்குகிறாராம், என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார் பாவம்!) என்னிடம் ஒரு விஷயம் குறித்து அறிவுரை கேட்க வந்திருந்தார்.

எனக்கோ சமயமேயில்லை. எப்போதுமே என்னைச் சுற்றி 200, 000, 000, 000, 000, 000  தமிழ்ப் பட அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் – ஒரே கொண்டாட்டம்தான். இவர்கள் 99.99%  நேரம் கோடம்பாக்கத்தில் டென்ட் அடித்துகொண்டு தவமாய்த் தவமிருப்பவர்கள்.  கண்களில் கனவைச் சுமந்துகொண்டு திருட்டு டீவிடிக்களில் டார்ரென்ட் டவுன்லோடுகளில் உல்ட்டா செய்வதற்காக படம் பார்த்துப்பார்த்து பஞ்சடைத்த கண்களுடன் – உட்கார்ந்து கொண்டேயிருப்பவர்கள்! மிச்ச நேரத்தில் என்னுடன் மனம் விட்டுப்பேச வருபவர்கள். அடிப்படையில் அயோக்கிய சோம்பேறிகள். இருந்தாலும் அனைவரும் தன்னளவில் நேர்மையானவர்கள்தாம்.

நான் ட்விட்டரில் இல்லை. அதை வெறுக்கிறேன். தமிழ்த் திரைப்படக் காரர்கள் எல்லோரும் திருடர்கள். ட்விட்டரில் கூட அவர்களுக்கு நடிப்புதான். ஜப்பானிய டைரக்டர்களின் ட்வீட்டுகளைத் திருடி தம்பேரில் ட்வீட் செய்துகொண்டிருப்பார்கள். என் டைம்லைனில் எவ்வளவு களவிட்ட ட்வீட்டுகள் வருகின்றன என எனக்குத் தெரியாதா என்ன, ஹ்ஹ!

அவர் ஒரு பெரிய நடிகர் சார். தவிட்டர் – அதாவது தமிழ் ட்விட்டரில் அவருடைய பிலிம்கள்தாம் தாம் எப்போதுமே #டாப்ட்ரென்டிங். ஆனால் அவர் பெயர் வேண்டாமே! அவரும் என்னைப் போலவே இணைய விளம்பரப் பிரியர் அல்லர்தான்.  அதாவது, அவரும் என்னைப் போலவே ஒரு தனிமையிலேஇனிமை விரும்பி. சுயவிளம்பரப் பிரியர் அல்லர் – என்னைப் போலவேதான். இருந்தாலும் அவர் என் நண்பர். நான் ஒரு சங்கோஜி. இணைய விவகாரங்களில் எனக்கு ஆர்வமேயில்லை. ஆனால் பெரியபெரிய இடங்களில் எனக்கு நண்பர்கள். அவர்களுக்கு நான் தேவைப் படுகிறேன், அவ்வளவுதான். எவர்தாம் புத்திசாலிகளுடன் தொடர்பில் இருக்க விரும்பாதவர். தற்பெருமைக்காகப் பேசவில்லை. எனக்கு பலான இடத்தில் மச்சம். அவ்வளவுதான்.

இருந்தாலும் அவர் கவலை அவருக்கு, நட்பிற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அறிவுரை அளித்தேன். அந்த நடிகர் சார்  என்ன சொன்னார் என்பதை இப்போது சொல்ல முடியாது.

நாளை என் ஃபேஸ்புக் பதிவில் அதனை வெளியிடுவேன். மறக்காமல் ஒடி வந்து லைக் போடவும். சமூகவலைத்தளங்கள் சுத்த வேஸ்ட்.  பொழுதன்னிக்கும் அங்கேயே தவம் கிடக்க எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?

ஆ… நான் என் அபிமான நடிகர் சார் பின்னால் 100 அடி தூரத்தில் நின்றுகொண்டிருக்கும் போது என் நண்ப அஸிஸ்டென்ட் டைரக்டன் ஒருவன் எடுத்த  ஃபோட்டோவை அவன் ஷேர் செய்திருக்கிறான்! அட, பத்து வினாடிகளுக்கு முன்னால் தானா இந்த அதிசயம்! பதினைந்து வினாடிகளுக்கு முன் நான் செக் செய்தபோதுகூட இது என் ஃபேஸ்புக் வாலில் இல்லையே! இதற்குக் காரணம் நான் ஒரு வாலூட்டியல்லன் – வெறும் பாலூட்டி என்பதாலா? ஒரே பெருமிதமாக இருக்கிறது. இதனை நான் ஷேர் செய்யவேண்டுமே, உடனடியாக.

என் கருத்து என்னவென்றால், மூளையுள்ளவர்கள் சமூகவலைதளங்களில் சீரழிய மாட்டார்கள்.

-0-0-0-0-0-0-
இதன் அடுத்த பாகம்: பிலுக்கல் + பிலிம் காட்டல் = பீலா வுடுதல் —- (2/2)
தொடர்புள்ள பதிவுகள்:

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s