அன்றன்று நடக்கும் விஷயங்களுக்கு, பெருந்தொடரில் புகலிடம் கொடுப்பது எப்படி

October 6, 2018

பிரச்சினைதான்.

இது சுமார் 40-45 வருடங்கள்முன் நான் படித்த / கேள்விப்பட்ட விஷயம்.

கல்கி க்ருஷ்ணமூர்த்தி அவர்கள் பொன்னியின் செல்வன் (அல்லது சிவகாமியின் சபதம்) பெருந்தொடர்களை எழுதிவந்தபோது, பாவம், அவரும் கிண்டல் செய்யப்பட்டார்; இவற்றையும் செய்தது – இந்தக்காலப் பொச்சரிப்பாளர்களின் மூதாதையர்களான அந்தக்கால மேட்டிமைவாதிகள், பொறாமைக்காரர்கள், ஆவேசக் காரர்கள், வெறியர்கள், வம்பர்கள், தும்பர்கள்.

ஏனெனில், பலருக்கும் அவர் எழுதிய கதைக்களம் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அமோக எதிர்பார்ப்புகள் ஆகவே இருந்தன என்றாலும், அவர் என்ன எழுதினாலும் ஆவலுடன் அப்படியே ஹல்வாபோலப் புளகாங்கிதத்துடன் முழுங்க வாசகர்பெருமக்கள் இருந்தாலும் – அய்யன்மீர், வேளாவேளைக்குத் தொடரின் அத்தியாயங்களை எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமே!

…மஹாபாரத மசாலா ஏற்கனவே இருக்கிறது / இருந்தது ஆகவே பேராசானுக்கு அது கொஞ்சம் வசதி – ஆனால் பொன்னியின்செல்வ மசாலா எங்கிருந்துதான் கல்கிக்குக் கிடைக்கும்? நீலகண்ட ஸாஸ்திரி கொஞ்சம் உதவியிருப்பார் என்றாலுமேகூட?

கல்கி யோசித்திருக்கவேண்டும்: இதென்னடா முதுகில் வேதாளம்! என்னடா செய்வது!! நாயர் பிடித்த புலிவால் கதையாகிவிட்டதே! வாராவாரம் தேற்றவேண்டுமே! பற்றாக்குறையை ஈடு செய்வதற்காகப் பத்தாவது அவதாரமா எடுக்கமுடியும்?

பெருந்தொடரின் அனைத்துப் பாத்திரங்களும் பளபளாவென்று தொங்கல்கேஸ்களாக சரவணா கடையில் இல்லாமல், பிரிண்டிங் ப்ரெஸ்ஸுக்குக் குடிபெயர்ந்தால் அது பிரச்சினைதானே! மேலும் – வேலை கொடுக்காவிட்டால் திரியாவரங்களான பெரிய பழுவேட்டரையரும் மழவராயரும் நந்தினியுடன் – பேசாமல் வாளாவிருக்காமல், கொள்கைக் கூட்டணி வைத்துக்கொண்டு புத்தகத்தை விட்டுக் குதித்தெழுந்து வாளையும் பிச்சுவாவையும் வீசி கல்கிக்கே விழுப்புண் வரச் செய்துவிடுவார்களே! ஐயகோ!

ஊக்கபோனஸாக – இந்த சுப.வீரபாண்டியனின் ஆபத்துதவிச் சனியன்கள் வேறு!

வந்தியத் தேவன் கோபப்பட்டு ஆழ்வார்க்கடியானின் அடியைக் கிள்ளி எறிந்துவிட்டால் – வாசகர்களை இன்று நேராக சதுப்பு நிலப் பிசாசுகளிடம் எப்படித்தான் நம் பூங்குழலி கூட்டுக்கொண்டு போவதாம், சொல்லுங்கள்? தேம்பித் தேம்பி அழுதுகொண்டு அந்தத் சேந்தன் அமுதன் வேறு, மூக்குச்சளியொழுக… கண்றாவி.

மகாமகோ ஆசானளவுக்கு ஆகிருதி இல்லையென்றாலுமேகூட கல்கியின் படைப்புசக்தி பெரிதென்றாலும் – அதென்ன வற்றாத கங்கையா என்ன? பாவம்.

ஆகவே – அந்த வாரம் பார்த்த/கேட்ட எம்எஸ் சுப்புலட்சுமி கச்சேரி, ரசவாத மாற்றம் பெற்று ஒரு இசை நிகழ்ச்சியில் பழுவேட்டரையரும் பொன்னியின் செல்வனும் எல்ஆர் ஈஸ்வரி ‘செல்லாத்தா காளி மாரியாத்தா’ இசைவெள்ளத்தை ஆபேரியில் பாடியதைக் கேட்டது போல் மாறும். பத்மினியின் நடனம் – சிவகாமியின் ரௌத்திரதாண்டவமாக மாறும். மானேதேனே கலப்பாலஜிஸ்டுகளில் முதன்மையானவர் கல்கிதான்.

ஜவ்வு போல இழுத்து இஸ்த்தால் தானே ஐயா, நீட்டி முழக்கமுடியும்?

இதைப் பற்றி சிசு செல்லப்பா அல்லது கநாசு அல்லது தருமுசிவராமு அல்லது வெங்கட்சாமிநாதன் (உங்களுக்குச் சரிபார்க்கமுடியாத வகையில் ஏற்கனவே சுளுவாக இறந்துவிட்ட) வேறெவராவது எழுதியோ பேசியோ முறையே படித்த அல்லது கேட்ட நினைவு… (தவறாகவும் இருக்கலாம், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொல்லுங்கள்)

-0-0-0-0-0-0-

அரசிடம் நான் ஒரு விண்ணப்பத்தை வைக்கிறேன்: பெருந்தொடர்கள் பேரிடர்களாக அறிவிக்கப்பட என்ன வானிலை வகையறா சுற்றுச்சூழலிய நிமித்தங்கள் இருக்கவேண்டும்?

இதைப் பற்றி நம் அற விழுமியங்கள் என்ன சொல்கின்றன?

யாரங்கே? எங்கே அந்த  ‘இந்தியாவின் தலைசிறந்த சம்ஸ்கிருத அறிஞர்?’ அவரிடம் இதுகுறித்துக் கேட்டு அவருடைய சிறுகருத்துத் துளிகளை ஆகச்சிறந்த காப்பியப் பொறிகளுக்கான பிரத்தியேகக் குறியீடுகளாக மாற்றுவதைத் தவிரப் பிறிதாக வேறொன்றில்லை வேலை – அதாவது அடுத்த பாகத்துக்காக.

-0-0-0-0-0-0-

இன்னொரு படுபீதிக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் – காலையில் எழுந்தவுடன் மாசிலா உண்மைக்காதலுடன் காலைமுரசு படித்தேயாகவேண்டிய நிலையில் கவலைக்கிடமாக இருக்கும் பல போதைவாசகர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.  ஆனால் இது மாறுமோ வெண்முரசு முடிந்தபோதிலே?

பரமண்டல ஜெபத்தில் வருவதுபோல,  அன்றைய அப்பம் அவர்களுக்குக் கிடைக்கவில்லையானால் கொஞ்சம் தவித்துப் போய்விடுவார்கள் அல்லவா? அனுதினமும் கிடைத்த ஆகச்சிறந்த இன்பலாகிரி இனிப்பு மிட்டாய் திடீரென்று கிடைக்கவில்லையானால் அவர்கள் என்னதான் செய்வார்கள், பாவம், சொல்லுங்கள்?

நான் என்ன நினக்கிறேன் என்றால் – கூடிய விரைவில் பெருந்தொடர் முடிந்த கையோடு அது முற்றியது என்றாகும்போது – பலப்பல முற்றிய வாசகர்கள் உடன்கட்டை (இதென்னடா ஒண்ணரைத்தனமான ஜெனட்டிகல்லி மாடிஃபைட் இரட்டைக்கிளவி  உடன் கட்டை? கட்டை என்றாலே அது வுடன் / wooden தானே!)  ஏறிவிடுவார்கள் என.

நடக்கப்போகும் இந்தப் பரிதாபகரமான நிகழ்வு, சிலபல அலக்கியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றாலும் 1) உடன்கட்டை ஏறப்போகும் வாசகர்களுக்குக் குழந்தை குட்டிகள் இருக்குமே, அதுகள் பாடு பாவமாகிவிடுமே 2) அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈட்டை யார் கொடுப்பார்கள் 3) அவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசுவேலை அல்லது வெண்முரசு டீவி ஸீரியலில் ஒரு துணை நடிகர் வேடமாவது கிடைக்குமா?

…ஆனால் ஐயன்மீர்! பெருந்தொடர் இல்லாத காப்பியக்காலம் எனவொன்றும் இருக்கக்கூடுமோ? இருக்கத்தான் வேண்டுமோ? வாசகர்கள் தற்கொலைவதைத் தடுத்தாட்கொள்ளவேண்டாமா? தற்கொலைகளை விட ஆகச்சிறந்த விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றனதானே – வெண்முரசின் அத்யாத்மிக வாசகர்கள் அதற்குத்தானே ஏங்குகிறார்கள்!

ஆகவே ஆசானின் சமூகத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

வெண்முரசின் கொட்டத்தை அடக்கியபின் – பேராசான் ஏன், ராமாயணத்தையும் ஒரு காப்பியப் பிடி பிடிக்கக்கூடாது? அதற்குப் பிறகு பைபிள், கொர்-ஆன் என எல்லாவற்றையும் மடச்சார்புடன் ஒரு கை பார்த்துவிடலாமே!

தயவுசெய்து ‘எனக்கெதுக்கு வம்பு’ என மட்டும் பைனரி ஆசான் போல, பேராசான் சொல்லிவிடமாட்டார் என நினைக்கிறேன்! ஏனெனில், இராமபக்தர்கள் அனைவரும் மலைபோல அவரை நம்பிக்கொண்டே இருக்கிறார்கள்! அவராவது அல்லல்களை நீக்குவாரா என்று! அவருடைய அளவற்ற அலகிலா அருள்பாலிப்பை அனுதாபத்துடன் அள்ளியள்ளி வழங்குவார் என்றும்!

ஆனால் ஐயா! என்னுடைய இப்போதைய தலையாய பிரச்சினை: ஆசானிய ராமாயணத்திற்கு என்ன தலைப்பைப் (head bag) பரிந்துரை (horse lord) செய்வது?

மஹாபாரதம், வெண்முரசு எனவானால், ஐயகோ, ராமாயணம் என்னவாகும்?

கும்தலக்கடிகும்??

:-(

5 Responses to “அன்றன்று நடக்கும் விஷயங்களுக்கு, பெருந்தொடரில் புகலிடம் கொடுப்பது எப்படி”

  1. Sridhar Tiruchendurai Says:

    “கல்கி மர்மக்கதை அல்லவா எழுதுகிறார்” என்று க நா சு சொன்னதாகப் படித்த ஞாபகம்.


    • ஹ்ம்ம். 8-) உண்மைதான். எனக்கும் நினைவிலிருக்கிறது, மேற்கண்டதைச் சொன்னதும் கநாசு அவர்கள்தான் என நினைக்கிறேன்.

      அவர் மர்மக்கதை எழுதினால் – இவர் தொடுவர்மம் படுவர்மம் என எழுதுவார். கேட்டால் உனக்குப் படு வன்மம் என்பார்.

      பாவம்தான். (அதாவது நாம்​)

  2. Chandramouli R Says:

    துவர்ப்பு ராமம்,
    வரவர ஹாஸ்ய ரஸம் போய் வன்ம ரஸம் தலைதூக்குகிறது.
    உமது பாண்டித்தியத்திற்கு இவர் இலக்கல்ல.
    விட்டொழியும் இந்த பிலாக்கணத்தை.


    • ஐயா, நீங்கள் சொல்வது சரிதான்.

      ஆனால், மேற்கண்டவற்றையெல்லாம் எழுதுவது இன்னொரு ஆசாமி. சுப்ரமணிய பாரதி – Subrahmanya Parody.

      இதைக் கணக்கில் கொள்ளவும். நான் அவனில்லை.

      நன்றி.

      ரா.


Leave a reply to Chandramouli R Cancel reply