‘லூஸ்ல வுடுவது’ எனும் கலை

28/10/2019

இந்த முக்கியமான உயிர்தரித்தல் கலையை நான், கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, என் செல்ல அட்ச்சிவுட்டாலஜிஸ்ட் அலக்கியகர்த்தாக்கள் என்னதான்  தொடர்ந்து அழிச்சாட்டியத்துடன் எழுதினாலும், அவற்றையும் நான் அகஸ்மாத்தாகப் படிக்க நேர்ந்தாலும் – முடிந்தவரை, மூர்ச்சையாகாமல் மூச்சுப் பிடித்துக்கொண்டு, கண்டுகொள்ளாமல் நைஸாக அகன்றுவிடுவது.

…ஆனால், இப்படியே போனால், நானும் ஒரு சாந்தஸ்வரூபியாக அருட்பெரும் ஜோதிலட்சுமி தனிப்பெரும் ஜெயமாலினியாக மாறிவிடுவேனோ எனப் பயமாகவும் இருக்கிறது… :-(

-0-0-0-0-

இந்த ‘லூஸ்ல வுடுவது’ எனும் பதத்தை எனக்கு முதலில் அறிமுகப் படுத்தியது, நான் மிகவும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளரான ஒருவர்தாம்.

பலவருடங்களுக்கு முன்னர் ஒரு குறுஞ்செய்திப் பரிமாற்றத்தில் இதனைச் சொன்னார் அவர், என நினைவு; என் வழக்கம் போலவே, ‘அந்த ஆள் ஏன் இப்படியெல்லாம் ஆதாரமேயில்லாமல் உளறிக்கொட்டுகிறார், இதற்கென்ன அவசியம்?’ என்று ஒரு தமிழ்ப் பிதாமகர் ஒருவரைப் பற்றி நான் பொருமியதற்கு, அவருடைய சாந்தமான பதில் அது. பின்னர் ‘லூஸ்ல வுடுவது’   என்பதற்கான இடஞ்சுட்டிப் பொருள்விளக்கத்தை ஒருவழியாகப் புரிந்துகொண்டேன். திசைச்சொற்களை இப்படி அழகாகவும் க்ளிப்தமாகவும் உருவகப்படுத்தி உபயோகிக்கும் தமிழ்மொழியின் தற்கால வளர்ச்சியென்பது, பெருமிதம் தருவது. எவ்வளவுவொரு நுணுக்கமான சித்திரத்தை விரிக்கிறது, இந்த ‘லூஸ்ல வுடுவது’ எனும் அழகு.

…ஆனால், அப்போது நான் ரௌத்திரத்தில் இருந்ததால், எனக்குச் சரியாக இந்தக் கலை பிடிபடவில்லை. ஆகவே அந்த மொழிபெயர்ப்பாளர் அவர்கள் மேலும் அப்போது கோபம் வந்தது. ஆதூரமாக நாலுவார்த்தை “1) நீ 2) சொல்வதுதாண்டா  3) ற்றொம்பரொம்ப 4) ஸர்ரீ”  எனச் சொல்லாமல், இப்படியொரு ஸாத்வீக அறிவுரை கொடுக்கிறாரே என்று. ஆனால், அவர்தாம் சரி.

-0-0-0-0-

ஒருவாரம் முன் போல, பெரியவர் பிஏகே பதித்த இரண்டு அண்மைய கருத்துகளுக்கு(ம்) என்னுடைய எதிர்வினை கேட்டு ஒரு அழகான அன்பர் மின்னஞ்சல். ற்றொம்ப முக்கியண்டே! (பலகாலமாக இதுமாதிரி பிஏகே விஷயங்களை தேவைமெனக்கிட்டு, காலையில் எழுந்ததும் முதல்வேலையாக, ஒரு இளம் அன்பர் அனுப்பிக்கொண்டிருக்கிறார்; என்று பிஏகே அவர்கள், இவரைக் கண்டுபிடித்து மாறுகால் மாறுகை மாறுகண் வாங்கி உதைக்கப் போகிறாரோ பாவம். நம் செல்ல இளம் அன்பர், ஒருவகையில் திராவிட மூக்கு இன்னொரு வகையில் ஹிந்துத்துவா மூக்கும்! பெரியவர் நாசி என்று நாட்ஸிகளைக் குறிப்பிடுவதும் என் மூக்கின்மேல் விரலை வைக்கும் சமாச்சாரமே! எப்படியோ நாசிமாப் போங்கடே!)

அதில் ஒன்று, பெரியவருடைய, ‘அமித் ஷா’ குறித்த கருத்து.

இதிலிருந்து எனக்கு ஐந்து விஷயங்கள் தெளிவு.

1. அவர் சில விஷயங்களில், அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் அல்லது சரியாகப் படிக்காமல், பார்க்காமல் – அட்ச்சிவுடுபவர். (சிலபல விஷயங்களில் அப்படியில்லை என்பதும் உண்மை)

2. அவருடைய தனிப்பட்ட காரணங்களால், அவருக்குச் சில விஷயங்களைக் கண்டாலே, தர்க்கரீதியற்ற அலர்ஜி. ஆகவே அவரைப் பீடித்திருக்கும் சிறுபிள்ளைத்தனம் முற்றிப்போய் பெரும்பிள்ளைத்தனமாகவே ஆகிவிட்டதோ என எனக்கொரு பதற்றம். ;-)

3. அவர் என்ன எழுதினாலும் (குறைந்த பட்சம்?) பத்து தண்டக்கருமாந்திரங்கள் ஓடிவந்து, தாம் எழுதியதைப் படிக்காமலேயேகூட ஆட்டோமேடிக்காக ‘லைக்’ போட்டால் போதும் என அவருக்கிருக்கக்கூடிய ஃபேஸ்புக் தன்னடக்கம்.

4. அவருடைய பின்புலம் அவருக்குக் கொடுத்திருக்கும் திரைகள், அதை மீறிப் பார்க்கமுடியாத மனப்பாங்கு.

5. வயதாகிவிட்டால் ‘பெருசு’ என்கிற காரணத்தினாலேயே அவர் கருத்துகளுக்குக் காத்திரமான பின்புலம் இருக்கும் என நம்பும் அவருடைய பாமர வாசகர்களின் பெருந்தன்மை.

ஏனெனில்:

1. அவர் அமித்ஷா அவர்களின் மேடைப்பேச்சைக் கேட்கவில்லை.

2.  ‘த ஹிந்து’ தினசொறிச் செய்தியைச் சரியாகப் படிக்கக்கூட இல்லை.

3. ஆனால், அநியாயமாக அவசரமாக ஓடிவந்து கருத்துகளைப் பொன்னெழுத்துகளில் பொரித்தெடுக்கவேண்டிய அவசியம், பாவம். ‘எழுத்தாளர் பைரவன் சேவை, நாட்டுக்குத் தேவை!

இதுதான் அமித்ஷா சொன்னதன் ‘த குண்டு’ சாராம்சம். (நான் அந்த ஹிந்தி வீடியோவையும் முழுவதும் பார்த்தேன்) – பெரியவரின் வெறுப்பியத்துக்கு ஏதாவது ஒரு முகாந்திரமாவது இருக்கிறதா? அடிக்கோடிடப்பட்ட பகுதிகளைப் படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…

ஆனால் பாவம், இதன் தலைப்பை மட்டும் படித்துவிட்டோ என்ன எழவோ, பெரியவர் அட்ச்சிவுட்டாலஜி செய்துவிட்டார். நிறைய ‘லைக்’ வாங்கிப் புளகாங்கிதம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.

எது எப்படியோ, என் செல்லமான கருணாநிதி அவர்கள் வழக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்ததுபோல, ‘அவருக்கு இறும்பூதென்றால், எனக்கும் அப்படியே!’

-0-0-0-0-0-

சரி.

கடந்த சில வருடங்களாக, பலப்பல விஷயங்களை லூஸ்லவுடக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் – வயதாகிவிட்டதால் எனக்கு விவேகம் வந்துவிட்டதோ என ஏடாகூடமாகக் கவலைப் படவேண்டாம். மாறாக, சிலபல விஷயங்கள் (என்னைக் குறித்தும்) தெளிவாகத் தெரிகின்றன. அவ்வளவுதான்.

1. எதிர்க் கருத்து சொல்வதற்கு சரியான ஆட்கள் இல்லையென்றால், அல்லது அந்த ஆட்களின் ஆகிருதி மட்டையடி அடித்தால் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பது தெரிந்தால், நாம் நம் அட்டைக் கத்தியை எந்தத் திசையிலும் சுழற்ற முடியும். உலகையே உலக்கையால் உலுக்கியெடுக்கமுடியும்.

2. ஒரு துறையில் சிலர் நேர்மையாகக் கருத்து சொல்லமுடியுமானால், பிற துறைகளிலும் அவர்கள் அப்படியே அதே ஆழத்துடனும் விரிவுடனும்  அடிப்படை நேர்மையுடனும் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. (பிரச்சினை என்னவென்றால் – அவர்களுக்கே, பல விஷயங்களில் தாங்கள் டம்மிபீஸ்கள் எனத் தெரியாது! எடுத்துக்காட்டாக, அடியேன். நன்றி!)

3. நண்பர்களின் தரம், சுற்றுச் சூழல் சகவாசம், ‘லைக்’ போடப்படுவது, ‘ஆஹோவோஹோ முகஸ்துத்யாம்’ வகையாளர்களுக்கு அளவுக்கு மீறி மரியாதை கொடுத்து, தான் உண்மையிலேயே சான்றோன் என வரித்துக்கொள்வது என்பது நகைக்கத் தக்கது என்றாலும், இதுதானே ஐயா, படுஈஸி.

4. ஒரு வகைச் சித்தாந்தத்திலேயே ஊறி ஊறி நாறுவதால் – அந்தவகை ஸ்படிகம் வழியான கருத்துப் பிரிகைகளாகவே உலகத்தைப் பார்க்கும் தன்மை இயல்பாகி விடுகிறது. ஆகவே, தம் கருத்தாக்கங்களை செழுமைப் படுத்திக் கொள்ளாமை என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே?

5. Transference of critical thinking skills across domains is NOT possible – ஒருவர் ஒரு துறையில் கருதுகோட்களைக் கறாராக சமைத்துக்கொள்ளமுடியும் என்றாலும், பிற துறைகளுக்கு அவற்றை நீட்டமுடியாது எனும் சோகம்! (இந்த மகாமகோ டேனியல் வில்லிங்கம் அவர்களின் இதுகுறித்த கட்டுரையை அவசியம் படிக்கவும்!)

இவை அனைத்தையும் விட, ஒரு முக்கியமான விஷயம்:

டமாலென்று ஒரு கருத்தை மேதாவித்தனமாக அட்ச்சிவுடுவது எளிது. இந்தக் கொடுமைக்கு வீழாதவர்கள் என ஒருவருமில்லை, தமிழ்ச் சூழலில் விரல்விட்டு எண்ணும்படிக்குக் கூட அவர்கள் இல்லை.

ஆனால் இந்த மாதிரி டமால்டுமீல் கருத்தாக்கங்களை அக்கக்காகப் பிரித்து மேய்ந்து தரவுகளுடன் தீவிரமாக எதிர்கொள்வது என்பது ஒரு சிக்கலான, மிக அநியாயத்துக்கு அதிக நேரத்தையும் உழைப்பையும் காவுவாங்கும் தன்மையுடைத்தது. இது என்னைப்போன்ற கோமாளிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினை. பணிமூப்பு பெற்றுவிட்டு பொழுதன்னிக்கும் இதனைச் செய்துகொண்டிருந்தால்கூட இது முடியாத காரியம்.

+ நம்முடைய அதிசராசரித் தமிழ் அறிவுஜீவியச் சூழலில் இதுதான் நிலவரம்.

மேலும் ஒருவரி அழிச்சாட்டியத்துக்கு ஆயிரம் வரி எதிர்கொள்ளல் என்றால், அதற்குள் அழிச்சாட்டியக் காரர் மேன்மேலும் அட்ச்சிவுட்டுக்கொண்டு லைக் வாங்கிக்கொண்டு மேலே பறந்துகொண்டிருப்பார்…

தமிழர்களாகிய நமக்கும் மறதி என்பது மிகவும் அதிகம். மேலும் இந்த அட்ச்சுவுடல்களைப் படித்தும் குறிப்பிட்டும் சிலாகிக்கும் லும்பன் கும்பல்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

எல்லோரும் ஒருவரி ஒருவரி என ஏகத்துக்கும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருப்பார்கள். சுபிட்சம்.

-0-0-0-0-0-

இதே விஷயத்தைப் பற்றிப் பேசும் ‘bullshit asymmetry principle‘ என ஒன்று இருக்கிறது. ‘சமச்சீரற்ற காளைச்சாணிக் கோட்பாடு’ என இதனை முழிபெயர்க்கலாம்.

சரி… இந்த புல்ஷிட் என்பதன் ஆகிருதியே தனிதான். இதை வெறுமனே பசுஞ்சாணி என முழிபெயர்த்தால், அது கொஞ்சம் சாதுவாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. ஆனால் காளைச்சாணி என்றால், அதற்கு ஒரு களையும் வீரியமும்  தினவும் திமிலும் டகீலும் டக்கும் வந்துவிடுகிறது பாருங்கள்! :-)

காளைச்சாணியம் என்றாலே, கனகம்பீரத்துடன் அட்ச்சிவுட்டாலஜி செய்து மினுக்குவது + திராவிடர்களால் போற்றப்படுவது என்பதறிக.

வாழ்க காளைச்சாணியம்!

வளர்க காளைச்சாணியர்கள்!!

ஆல்பர்ட்டொ ப்ரேண்டலினி எனும் இளம் கணிப்பொறியாளர் 2013 வாக்கில் கொடுத்த விவரணையின் படி, “காளைச்சாணியத்தை மறுதலிக்கத் தேவையான ஆற்றலின் அளவு, அதை உற்பத்தி செய்வதை விட மிகப்பெரிய அளவினதானவொன்று.” :-(

-0-0-0-0-

ஆகவே.

நம் தமிழகத்தின் காளைச்சாணியச் சூழலின் அழகில், மிகவும் கஷ்டப்பட்டுத்தான் சுயசிந்தனையால் பீடிக்கப்பட்டு வாடும் ஒருவன் ‘லூஸ்ல வுடும்’ கலைஞனாக, உயிர்தரிக்கும் திறமை வாய்ந்த ஒரு லூஸ்லவுட்டாலஜிஸ்டாக பரிணாம வீழ்ச்சி அடைய முடியும்.

ஆனால், நான் என்னுடைய ஆரம்ப நிலை லூஸ்லவுட்டாலஜியைத் தாண்டிவிட்டேன் – கம்பீரமாக கீழே பீடை நடை போடுவதாக ஒரு படுதீவிரத் திட்டமும் கைவசம் இருக்கிறது.

என்னை, இதற்கு லைக் செய்யவேண்டாம். வெறுமனே வாழ்த்தி ஆளை விட்டாற்போதும்.

கடைசியாக சில கோரிக்கைகள்: எவர் (அடியேன் உட்பட) என்ன சொன்னாலும் சரி – அதை அப்படியே உண்மையென எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களுடைய தரவுகளையும், எண்ணப் போக்குகளையும், கடந்த கால நடவடிக்கைகளையும் பாருங்கள். அசைபோடுங்கள்.

இதெல்லாம் ஒவர், நம்மால் முடியாதென்றாலும் (நம் தமிழைப் பொறுத்தவரை) நாமிருக்கும் அழகில், நம் லட்சணத்தில், நம் இளம் துறைவல்லுந அகழ்வாராய்ச்சிக்கார அமர்நாத்ராமகிருஷ்ணாக்களும் இளம் ஐஏஎஸ்அதிகார உதயசந்திரன்களும் இருக்கும் அதலபாதாளங்களில் — ‘கருத்துசொல்பவர்களெல்லாம் கோமாளிகள்‘ என்ற நிலைப்பாடு இருந்தாலும் போதும். ஏதேஷ்டம்.

நன்றி.

இப்படிக்கு,

காளைச்சாணியக் கருத்து சொல்லும் இன்னொரு கோமாளி

-0-0-0-0-0-

நீங்கள் அதிகப்படியாக இறும்பூதடையவேண்டுமென்றால், இந்தச் சுட்டிகளுக்குச் செல்லலாம்.

5 Responses to “‘லூஸ்ல வுடுவது’ எனும் கலை”

 1. Ramesh Narayanan Says:

  கடேஸியா, வுண்மய்யா வந்துட்டுது, ஞானன்டே, ஞானம்!
  உம்மோடு சேந்து அல்லா ஏழரைகளுக்குந்தான்.
  போற போக்குல நீவிர் போட்டக் காளைச்சாணிதேன்
  /×கருத்துசொல்பவர்களெல்லாம் கோமாளிகள்‘ என்ற நிலைப்பாடு இருந்தாலும் போதும். ஏதேஷ்டம்×/ ஞானத்தோட உச்சி


 2. இன்னாதூ? அல்லா ஏழரையா? இன்னா சொல்ல வர்றீங்கோ?

  (மகிழ்ச்சிக்குரிய செய்தி) இன்றைய காளைச்சாணியமும் இன்றுகாலை இனிதாக வந்து சேர்ந்ததே! 🐸🙄


 3. இன்றைய காளைச்சாணியங்களில் ஒன்று, அந்த எழவெடுத்த ‘தமிழ் இந்து’ பொந்திலிருந்து வந்த விஷயம். எப்படி முனைந்து நம் தமிழச் சமுதாயத்தை முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்கள், இந்தக் கூறுகெட்ட மூதிகள்!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s