வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்

27/11/2019

(இந்தப் புராதன நகரை வாராண்ஸீ அல்லது காஷி என்றுதான் அழைக்கவேண்டும். பிரச்சினை என்னவென்றால் நமக்கு இருக்கும் உச்சரிப்புப் போதாமைகளும், பொதுவாகவே நம் தமிழுக்கு இருக்கும் மலட்டு எழுத்துரு-சொல்லுரு உறவுகளும் நம்மை, வாரணாசி அல்லது காசி என்று அதை அழைத்துத்தான் பழக்கப்படுத்திக்கொள்ளச் சொல்கின்றன. ஆனால் இப்பதிவில் வாராணஸீ அல்லது காஷி என்று மட்டுமே இப்புண்ணிய ஸ்தலம் அழைக்கப்படும்)

மே2019 வாக்கில், காஷியில் உள்ள இந்த பாரதமாதா மந்திருக்குப் போகும் பாக்கியம் பெற்றேன். அதனைப் பற்றிய படங்கள் தாங்கிய ஒருமாதிரியான கட்டுரை இது.

இந்தமுறைதான் ஸெல்ஃபோன் கேமரா-படங்கள் எனக் கொஞ்சமேனும் ஸீரியஸ்ஸாக(!) எடுத்திருக்கிறேன் – இதுவரை நான் இம்மாதிரிச் செய்ததே இல்லை, எங்கு சென்றாலும், சிலபல காரணங்களால் (“ஃபோட்டோ எடுத்து சாந்நித்யத்தைச் சிதைக்கக்கூடாது, முடிந்தவரை mediated experiences பக்கம் போகக்கூடாது” என்பதுபோல) பொதுவாகப் படங்களே எடுத்ததில்லை; ஆகவே, கம்போஸிஷன் கோணம் கோணாமாணம் எனப் பல பிரச்சினைகள் இவற்றில் இருக்கின்றன. கைகளும் நடுங்கின மணியம். ஆக, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும். நன்றி.

கூடியவிரைவில் இதையும் கற்றுக்கொள்கிறேன். ஏனெனில் intermediated experiences போன்றவற்றின் எதிர்மறையற்ற, நேரடிப் பலன்களையும் – மேலும், முக்கியமாக புகைப்படங்களின் மூலமாக விஷயங்களைக் கொண்டுசேர்க்கும் சாத்தியக் கூறுகளையும் அறிந்துகொண்டிருக்கிறேன். ஆகவே.

-0-0-0-0-0-

சரி. என்னுடைய முதல் ஆச்சரியம் என்னவென்றால்.

…வாராணஸீயில் நான் சிலபல நாட்கள் போலத் தங்கியிருந்தது, பக்கத்திலுள்ள ப்ரயாக்ராஜ் (அதாவது – முகலாயர் காலத்தில் இலாஹாபாத் எனப் பெயர்மாற்றப்பட்டு, பிற்காலத்தில் ஜவாஹர்லால் நேரு அவர்கள் அவதரித்துப் பிறந்துவளர்ந்த ஊர் எனப் பெயர்பெற்ற) நகரத்தின் பல்கலைக் கழகத்திலிருந்து பணிமூப்பு பெற்ற அறிவியல் பேராசிரியர் ஒருவர் வீட்டின் ஒரு விருந்தினர் அறையில்.

அவர் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிமீ தொலைவில் இந்த மந்திர் இருக்கிறது. இவரும் சுமார் 70 வருடங்களாக அதே ஊரில் வசிக்கிறார். ஆனால் அவர் இதற்குச் சென்றதேயில்லை. ஒரு குறுகுறுப்புகூட இருந்திருக்கவில்லை, பாவம் – கேட்டால், காஷியில் தடுக்கிவிழுந்தால் வரலாறுதான் என்றார். “அது கொடொலியா பக்கத்தில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.”

நான் எங்கு போகவேண்டும் என்ற பெத்த அறிவுரை வேறு! “அவசியம் இலாஹாபாத்தில் ஆனந்தபவன் ம்யூசியம் போகவேண்டும், நேரு இல்லம்.” அப்டீங்க்ளா சரிங்க. சந்தோஷம்.

அலுப்புடன் நானும் அவரிடம் கேட்டேன், “நீங்கள் ஸ்ருங்கிவேரபுரா போயிருக்கிறீர்களா? நான் நாளை அங்கு போகப்போகிறேன்.” அவர்: “அது எங்கே இருக்கிறது?”

“ஸொரான் தான் ஐயா அது, அப்படிப் பெயரைக் குறுக்கிவிட்டார்கள்.”  அவர்: “அது தெரியுமே, ஆனால் அங்கே சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றுமே இல்லையே!”

சரிதான். (ஆனால் அது, இரண்டாயிரம் வருடங்கள் பழமையான ஒரு பொறியியல் மகோன்னதம்)

“பனாரஸீ லஸ்ஸீ குடித்தீர்களா?” ஆஹா!

ஆனால், அது லோக்சபா தேர்தல்கள் நடந்துகொண்டிருந்த நேரம். ஆகவே, ஆழமாகச் சிந்திக்கும் அறிவுஜீவியாகத் தன்னைக்கருதிக்கொண்ட அவருக்கு, நிறைய அக்கப்போர் கரிசனம், பாவம்: “மோதி நிறைய செய்திருக்கிறார், காஷியில் நிறைய முன்னேற்றங்கள். ஆனால் மோதி திரும்பி வந்தால் சகிப்புத் தன்மை குறைந்துவிடும்.”

…என்ன எழவோ, எங்கு சென்றாலும் இந்த அரைவேக்காட்டு ‘லிபரல்’ அஞ்ஞான தரித்திரங்கள் இளித்து தரிசனம் கொடுக்கின்றன; இருந்தாலும், ‘லிபரல் வந்தால் நகுக’ அல்லவா? ஆக, சிரித்துக்கொண்டே அகன்றேன். (விதிவிலக்காக ஒரு சிறு எண்ணிக்கையில் போலிகளற்ற, சொகுசுகளற்ற, சந்தர்ப்பவாதங்களற்ற, படிப்பறிவுள்ள, களப்பணியும் செய்யும் உண்மையான லிபரல்கள் இருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். நன்றி.)

ஆனால் சகோ – எனக்குத் தெரிந்து, கடந்த ஆறுமாதங்களில், மோதி திரும்பி வந்தபின்னும் கூட, அநியாயத்துக்கு, சகிப்புத்தன்மை கொஞ்சம்கூடக் குறையவே இல்லையே!

‘லிபரல்’ காலம் கெட்டுப்போச்சு, ப்ரோ!

(ப்ரயாக்ராஜும் சரி, ஸ்ருங்கிவேரபுராவும் சரி – போக அவகாசம் கிட்டவில்லை)

-0-0-0-0-0-0-

பாபு ஷிவ்ப்ரஸாத் குப்தா எனும் வாராணஸீவாசி தன் சொந்தப்பணத்தில் கட்டிய அழகு இது. மஹாத்மாகாந்தி காஷி வித்யாபீட வளாகத்தில் ஒரு தனி கட்டிடம்.

இதில் உள்ள பாரதமாதா, ரத்தமும் சதையுமாலும் ஆக்கப்பட்ட உருவம் அல்லள்; மாறாக, அவள் தரையில் வினையப்பட்ட ஒரு  நில/இடக்கிடப்பியல், டோபொக்ரஃபிக் புடைப்பு வரைபடமாகக் காட்சி தருகிறாள். ஸ்ஸ்ஸ், அப்பாடா! finely textured 3D topographic relief map தானுங்க இது.

(மேற்கண்ட படம் இங்கிருந்து)

1918-24  காலகட்டத்தில் ஆறு வருடங்களில் பெரும்பாலும் இது முடிக்கப்பட்டாலும், பணக் கெடுபிடிகளால், அது கனவுக்கேற்பக் கட்டிமுடிக்க மேலதிகமாக 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார், பாபு ஷிவ்ப்ரஸாத் குப்தா அவர்கள்.

பின் ஒருவழியாக, 1936 அக்டோபர் 25 அன்று பாபுஜி அவர்களால் இக்கோவில் திறந்துவைக்கப்பட்டது.

இனி, இக்கோவில் குறித்த சில குறிப்புகளும், புள்ளிவிவரங்களும், படங்களும்.

1. பாரதமாதா இங்கு அகண்டபாரதமாக – இப்போதைய பாகிஸ்தான் (பலூசிஸ்தான் உட்பட), பங்க்ளாதேஷ், பர்மா, ஸ்ரீலங்கா நிலப்பரப்புகள் உட்படக் காட்சியளிக்கிறாள்.

2. இந்த மாபெரும் நிலப்பரப்பின், நதிகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், மலைகளும், தக்ஷிண் பீடபூமியும், கடலோரப் பிரதேசங்களும், கண்டத் திட்டுகளும், கடல்களும், தீவுகளும் அவ்வளவு அழகாகவும் துல்லியமாகவும் கல்வெட்டுகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன. முறையாகவும் துல்லியமாகவும் காட்சியளிக்கும் லக்ஷத்வீபத்தின் சின்னஞ்சிறு தீவுகளும், சோகொரி (K2) , ஸாகர்மாதா (எவரெஸ்ட்) மலையுச்சிகளும், சீனப் பெருஞ்சுவரும் காணக் கண்கோடி வேண்டும்.

3. அனைத்தும் சதுர வடிவு பளிங்குகற்களால் உருவாக்கப்பட்டவை, தொகுக்கப்பட்டவை. பளிங்குச் சுரங்கம் – இப்போதைய பாகிஸ்தானில் உள்ள மக்ரனா.

4. பாரதமாதாவை அறிவியல்பூர்வமாக, பூகோளரீதியாக வடிவமைத்தது பாபு ஷிவ்ப்ரஸாத் குப்தா. சுமார் 25 மேஸ்திரிகள்/ஸ்தபதிகள் செதுக்குவேலையில் ஈடுபட்டனர். சுமார் 30 சிற்றாட்கள் பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரின் பெயர்களும் கட்டிடத்தில் ஒரு கல்வெட்டாகக் காணக்கிடைக்கின்றன.

5. வேலை ஏறத்தாழ சுமார் 6 வருடங்களுக்கும் மும்முரமாகவும், பின்னர் இடைவெளிகள் நிரம்பி விட்டுவிட்டும் நடந்தது.

6. இந்த பாரதப் படத்தின் ஸ்கேல் – 1 இஞ்ச் =  நிஜத்தில் 6.4 மைல்கள் = சுமார் 10.30 கிலோமீட்டர்கள்.

7. ஒவ்வொரு பளிங்குக்கற்சதுரமும் 11 இஞ்ச் * 11 இஞ்ச் அளவு; மொத்தம் 762 அம்மாதிரியான கற்சதுரங்கள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

8. பாரதப் படத்தின் விஸ்தீரணம் = 9.5 மீட்டர் * 9.2 மீட்டர். இது இருப்பது ஒரு ‘முற்றம்’ போன்ற தாழ்வான பகுதியில். அதனைச் சுற்றி நடந்து பார்க்கலாம்.

9.  இதன் உயரத்து அளவில் கீழே தாழ்வாக அமைந்த ஒரு நிலவறை இருக்கிறது. அங்கிருந்து ஒரு போர்ட் ஹோல் வகை செவ்வகத் திறப்பு வழியாகப் பார்த்தோமானால்  ஹிமாலய மலைத்தொடர்களிலிருந்து நம் நீல்கிரி வரை ஆனந்தமாகத் தெரியும்.

10. பொதுவாக குடியரசு, சுதந்திர தினங்களன்று பூ அலங்காரமும், கடற்பகுதிகளில் நீர் நிரப்பப்பட்டும் காட்சியளிக்கும் என்றார்கள் – ஆனால்,  இம்மாதிரி விஷயங்களால் பளிங்கு தேய்மானமாக, நிறம் மாற வாய்ப்பிருக்கிறது – மேலும் துல்லியங்கள் பின்னப்படலாம் என்பதால் இது மறுபரிசீலனை செய்யப்படவிருக்கிறது என்று (இந்த மந்திரைப் பற்றிய வரலாறு அறிந்த) பெரியவர்கள் சிலர் சொன்னார்கள். மேலும் – பக்கத்திலுள்ள காய்கறிச் சந்தை லாரியோட்டம் தொடர்புள்ள புழுதிகிளப்பலால், பளிங்கும் நிறம் மாறியிருக்கிறது என நினைக்கிறேன். இதனை குளிரூட்டப்பட்ட இடமாக மாற்றினால்தான் நன்றாக இருக்கும்.

காஷி போகும் ஒவ்வொரு நபரும் இதனை அவசியம் தரிசிக்கவேண்டும். இவள் ஒரு வித்தியாசமான பாரதமாதா!

-0-0-0-0-

அழகாக, அளவிலாக் காதலுடன் பராமரிக்கப்படவேண்டிய இடம் இது. ஆனால்,  நான் சென்றபோது – ஒரே ஒரு அன்பர் தாம்  மேற்பார்வைக்கு இருந்தார். (இவர் தம்மை பாபு ஷிவ்ப்ரஸாத் குப்தா குடும்பத்தைச் சார்ந்தவர் என்றார் – உண்மையா தெரியவில்லை; பார்த்தால் வெறும் கூலிக்கு வேண்டாவெறுப்பாக மாரடிக்கும் ஒரு ஐடி குமாஸ்தாமேனேஜர் போலத்தான் நடந்துகொண்டார்!)

நான் சுமார் ஒன்றரை மணி நேரம்தான் அங்கு இருந்தேன் – ஆனால் அவர், அதற்குள். ‘கெளம்புங்க, கெளம்புங்க – நான் இதைப் பூட்டிக்கொண்டு காலைச் சிற்றுண்டிக்குப் போகவேண்டும்!’ எனக் கொஞ்சம் தொணதொணத்து விட்டார். அங்கு இருந்த சொற்ப புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பதற்குள், “நீங்கள் வாங்குவதாக இருந்தால்தான் இவற்றைத் தொடமுடியும். இங்கேயே நின்றுகொண்டு புத்தகங்களைப் படித்துமுடிக்கக் கூடாது!’ ஆஹா, நன்றி.

வெளியே நல்ல கொளுத்திப்போடும் வெயிலாக இருந்தாலும், கட்டிடத்துக்குள் கொஞ்சம் இருட்டாக இருந்தது.  ஆனால், விளக்குகளையும் போட்டால், மின்சாரச் செலவு அதிகமாகிவிடும் என்றார். நான் வேண்டுமானால் நன்கொடை கொடுக்கிறேன் ஐயா, உதவுங்கள் என்றதற்கு அவர் ‘உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை’ என்றார். மேல்மாடி போகவிடவில்லை, அங்கிருந்து பார்க்க முடிந்திருந்தால் அகண்டபாரதம் இன்னமும் அழகாகக் காட்சியளித்திருக்கலாம்.

வேண்டிக்கேட்டால், இளம் காதலர்கள் தொல்லை தாங்கமுடியவில்லை என்றார். கரிக்கட்டியால் ஸ்ப்ரேபெய்ண்ட்களால் அசிங்கம் செய்கிறார்கள் என்றார். உண்மைதான், நம் காதலங்கிளிகளின் பராக்கிரமத்தை நானே அனுபவித்திருக்கிறேன்.

..எது எப்படியோ. அவர் சிடுமூஞ்சித்தனத்துக்கு காத்திரமான காரணங்கள் இருக்கவேண்டும் என நினைத்தேன், பார்த்தால் பாவமாக இருந்தது, மாரடைப்பில்தான் போவார் என நினைத்தேன். (ஆனால், நான் கிளம்பிக்கொண்டிரும் சமயத்தில், இரண்டு அரைடவுசர் வெள்ளைக்காரர்கள் ஆடிக்கொண்டே, அவர்களை விட நீளமான ஸெல்ஃபிகுச்சியோடு வந்தார்கள். அவர்களிடம் பவ்வியமாகத்தான் இருந்தார். தொடரும் காலனியம், என்ன சொல்ல…)

பாரதமாதாவைச் சுற்றியிருந்த ப்ராஹாரச் சுவர்களில் அழகான, பல காலகட்டங்களைச் சார்ந்த பாரத வரைபடங்கள் இருந்தன, கொஞ்சம் அழுக்காகவும் நிறங்கள் நீர்த்துப்போயும். இவை செப்பனிடப்படவேண்டும்.

-0-0-0-0-

இதுவே, அமெரிக்காவாக இருந்தால் இந்த அழகான கருத்தாக்கத்தை, துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ள தேசாபிமானச் சின்னத்தை, தலைமேல் ஏற்றிக்கொண்டு போற்றிக்கொண்டிருப்பார்கள். (இதே சமயம், பாரதத்திலும் பல இடங்களில் இப்படி செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும் – பிரச்சினை என்னவென்றால், எல்லா இடங்களும், போற்றத்தக்க தலங்களும் அப்படியே இருக்கவேண்டுமல்லவா?)

முதலில் தனியார் வசமிருக்கும் இந்த இடத்தினை அவர்களுக்கு உரித்த மரியாதையையும் நிதியையும் கொடுத்து அந்த வளாகத்தை தடுத்தாட்கொள்வார்கள்.

பின்னர், அரசு செலவிலோ அல்லது தனியார் நிதிகளைத் திரட்டியோ இம்மாதிரி இடங்களை மேம்படுத்தி, நவீன மயமாக்கி, தூசுதும்பில்லாமல் ஒழுங்காக பராமரிப்பார்கள். அனுமதிக் கட்டணம் வைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடக்கும். சுத்தமான கழிப்பறை, தூய குடிநீருக்கான முஸ்தீபுகள் இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக்காட்டி விவரிக்க கைடுகளும் ஏகத்துக்கு இருப்பார்கள். இக்கோவிலை உள்ளடக்கிய ஒரு சுற்றுலா சுற்று ஒன்று உருவாக்கப்பட்டு, காஷி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்பவர்கள், கங்காஜியை தரிசிக்க வருபவர்களும் அங்கு செல்ல ஆவன செய்யப்படும்.

‘I Visited Kashi Bharat Mata Temple’ டீஷர்ட்களையும், அதன் குட்டிமாதிரி மாடல்களையும் தயாரித்து விற்பனை செய்து, அதன் கதையையும், பாரததத்வம் குறித்த புத்தகங்களையும் வெளியிட்டு  ஒரு ஸூவனீர் கடை வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். (+அதில் விற்பனைக்கு இருக்கும் புத்தகங்களைப் புரட்ட அனுமதிப்பார்கள்!)

… நாமும் கூடியவிரைவில் இவற்றையெல்லாமும் அதற்கும் மேலாகவும் செய்ய, பாரதமாதாதான் அருள்புரியவேண்டும்.

-0-0-0-0-0-

எனது கோரிக்கை: (எனக்கு இக்கோவில், தனியார்வசத்தில்தான் தற்போது இருக்கிறது என்பது தெரியும்)

வாராணஸீ நகரின் மேம்பாட்டுக்கும்  நரேந்த்ரமோதி தலைமையில் உள்ள பாரத அரசும், யோகி அவர்களின் தலைமையில் உள்ள உத்தரப்பிரதேச அரசும் எவ்வளவோ செய்திருக்கின்றன; இன்னமும் செய்வார்கள். அதே அளவு முனைப்புடன், இந்த பாரதமாதா கோவிலும் கவனிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

-0-0-0-0-0-

யோசிக்கிறேன். தம் சொந்தக்காசையும் வாழ்க்கையையும் செலவழித்து இம்மாதிரி விஷயங்களைச் செய்திருக்கும் குப்தா போன்றவர்களை எது உந்தியிருக்கிறது? எது இன்னமும் மகத்தான பலரை தொடர்ந்து உந்திக்கொண்டே இருக்கிறது? எது இம்மாதிரியாக காத்திரமான செயலூக்கங்களுக்கும் அழகுகளுக்கும் சூத்திரதாரி? வேறெந்த கலாச்சாரம் இப்படிக் குறைந்த பட்சம் 4000-5000 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது? வளர்ந்துகொண்டிருக்கிறது?? பழமையும் புதுமையும் சேர்த்துத் தன்னளவில் தொகுத்துக்கொண்டு மிளிர்கிறது?

அதுதான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் பாரத சக்தியென நினைக்கிறேன்.(பட்டி பார்த்து டிங்கரிங் செய்யவேண்டியவைகளும் இருக்கின்றனதாம் – ஆனால் அவையும் செய்யப்படும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை)

…நம் பாரதமாதா தொடர்ந்து வெற்றி பெறட்டும், வளரட்டும், மேன்மைகளை அடையட்டும், அதன் குடிமக்களுக்கு அமைதியையும் சுபிட்சத்தையும் அளிக்கட்டும். பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்காமல் அவற்றையும் போஷகம் செய்து மேலெடுத்து அவற்றின்மேல் நவநிர்மாணங்களையும் அறிவியல் தொழில்நுட்பங்களையும் மேற்கட்டுமானங்களாக அமைக்கட்டும்.

ஸ்வதந்த்ரதேவி பாரத்மாதா, நின்னை அனுதினமும் தொழுதிடல் மறக்கிலேனே.

18 Responses to “வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்”

 1. vijay Says:

  திரு இராம் இந்த ஆலய விபரத்தை மத்திய,மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தி,நீங்கள் குறிப்பிட்டதுபோல்,அவர்கள் இதை பொறுப்பேற்று நடாத்த வலியுறுத்துங்கள்.

 2. K.Muthuramakrishnan Says:

  அப்பாடி!! நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு பின்னூட்டம் இடும் படியான பதிவு!

  நீங்கள் பாக்கியவான். எங்கேயோ எப்படியோ கேள்விப்பட்டு பாரதமாதாவை தரிசித்துவிட்டீர்கள்.2000ல் நான் போன போது யாரும் எனக்குக் கூறவில்லை. இந்த வயதிற்குப்பின்னர் மீண்டும் போக முடியுமோ என்ற ஐயமும் கூட. இதற்காகவாவது ஒருமுறை போய் விட்டு வரவேண்டும்.

  அரசின் கவனத்தைத் திருப்ப இங்கே எழுதினால் மட்டும் போதுமா? மேலே மோதிஜி வரை செய்தி போகவேண்டும்.

 3. Ramakrishnan SN Says:

  Dear Ramasamy sir, thank you for this wonderful article. By seeing and reading this article, I am getting the romanjanam. My kashi visit, i will definitely go there along with my children. Today I posted the same to Prime minister’s site in Idea. I am not sure what will happen.


  • oh, thanks so much. sweet of you. (a suggestion: there are so, so many nice to things to internalize in Kashi; but before visiting this temple, it would be a nice idea to tell the children about the various landforms that make up Bharat. So that, they can identify various features etc.

   good luck, thanks again!

   __r.

 4. A. Seshagiri Says:

  சமீப காலங்களில் இந்த கீழடி,மேலடி,கவிஞ்சர்,போலி கணிதமேதைகளை கட்டி மாரடித்ததற்கு பிராயசித்தமாக ஒரு உருப்படியான பயனுள்ள பதிவு!

 5. RC Says:

  மிக்க நன்றி.
  அதிலும் பதிவின் இறுதி பத்திகளுக்காக மேலதிக அன்பும் நன்றியும்.

  மற்றபடி ‘mediated experience’ குறித்து – மலிந்திருக்கும் இன்றைய தகவல் யுகத்தில், என் குறைந்த பட்ச அனுபவத்தில் கைப் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளதென்றே நினைக்கிறேன் தனிப்பட்ட முயற்சியும் எத்தனமும் முக்கியமெனினும்..


 6. நல்ல கட்டுரை. ஒரு சிறு மொழியியல் பின்னூட்டம். ‘வாராணஸீ’ என்று தான் இன்று ஹிந்தியில் அழைக்கப்படுகிறது என்றாலும் ‘வாரணாஸி’ என்ற வழக்கு சம்ஸ்க்ருதத்தில் மஹாபாரதத்தில் பல இடங்களில் பயின்று வருவதைக் காணலாம். ‘வாரணாஸீ, வாராணஸி, வாராணஸீ’ என்று பல பிரயோகங்களும் வெவ்வேறு (சைவ, சாக்த, பௌத்த) நூல்களில் வழங்கி வந்துள்ளன. அதன் விளைவாகத் தான் தமிழிலும் (நான் அறிந்த வரை தெலுங்கிலும்) வாரணாசி என்று பரவலாக அழைக்கப்படுவது. ‘காஶீ’ என்பதில் வரும் தாலவ்ய ‘ஶ’ காரம் தமிழில் வேறுபடுத்திக் காட்ட வராது என்பதாலும் (இன்று உள்ள இந்திய மொழிகளில் மலையாளம்-கன்னடம் தவிர வேறு எந்த மொழி பேசுவோருக்கும் இந்த தாலவ்ய ஶ-கரத்திற்கும் மூர்த்தன்ய ஷ-கரத்திற்கும் உச்சரிப்பில் வேறுபாடு காட்டத் தெரியாது என்பதாலும்) காசி என்று எழுதி அவ்வாறே உச்சரிப்பதும் பிழையல்ல. உதாரணங்கள்: ‘பாஶம்’ – பாசம், ‘ஶிவ:’ – ‘சிவன்’, ‘ஶும்ப:’ – சும்பன் என்று ஶகரத்தை சகரமாக்கியே உச்சரிக்கிறோம். அதே மூர்த்தன்ய ஷகரத்தை ‘ட’கரமாக்கியோ ‘ழ’கரமாக்கியோ உச்சரிக்கிறோம். உதாரணங்கள்: ‘வேஷம்’ – வேடம், ‘நிஷ்களங்க’ – ‘நிட்களங்கம்’, ‘ஸுஷும்னா’ – ‘சுழுமுனை’ , ‘இஷ்டம்’ – ‘இட்டம்’ முதலியவை. ஆக இன்று ‘வாராணஸீ’ என்ற வழக்கு ஹிந்தியில் பரவலாக இருந்தாலும் அது தான் மொழியியலளவில் சரி என்று கருதி மாற்றுப் பிரயோகங்களைத் தள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. இது இன்றைய ஹிந்தியில் ‘ஸன்ஸ்கார், மான்ஸ், அன்ஶ்’ என்று சொல்வதைக் கண்டு நாமும் ‘சம்ஸ்காரம், மாமிசம், அம்சம்’ போன்ற சொற்களை மாற்றி எழுத முற்படுவதற்குச் சமம்.


  • ஐயா, தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. புரிந்துகொள்கிறேன்.

   இருந்தாலும். அதுவேண்டாம் இதுவேண்டாம் அந்தக்கலப்பு கூடாது எனத் தமிழின் வசதிகளை, மேம்படுவதற்கான வாய்ப்புகளை நாம் ஒதுக்கிக்கொண்டே வீழ்ந்துகொண்டிருக்கிறோமோ எனும் என் கவலைகளை, நான் இங்கு பிரதிபலித்திருப்பதற்காக, என்னைப் பொறுத்துக்கொள்ளமுடியுமா?

   வாரண், அஸ்ஸீ எனும் இரண்டு உபநதிகள் கங்காஜியில் கலக்குமிடத்தில் இருக்குமிடம் காஷி, சரி காசி.

   ஆக அது வாராணஸீ என அழைக்கப்படுகிறது எனவொரு வியாக்கியானம். மற்றபடி, வாரணாஸீ என சாக்த, பௌத்த மரபுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை நானறியேன். என் போதாமை. இடஞ்சுட்ட முடியுமா?

   மறுபடியும், நன்றி.

 7. Vettri Says:

  உங்கள் பெயரை ராமஸ்வாமி என்று எழுதாமல் ராமசாமி என்று எழுதுவதற்கும் மலட்டு சொல்லுரு எழுத்துரு தான் காரணமா? ஆனாலும் தமிழின் தனித்தன்மையை இப்படி போதாமையாக கேலி பேச ஒரு தனி காழ்ப்பு வேண்டும். சரி விடுங்கள்.


  • >>  உங்கள் பெயரை ராமஸ்வாமி என்று எழுதாமல் ராமசாமி என்று எழுதுவதற்கும் மலட்டு சொல்லுரு எழுத்துரு தான் காரணமா?

   ஆம். பிற முக்கியமான காரணங்களும் இருக்கின்றன.

   ஆனாலும், தமிழ் எனக்கும் தாய்மொழிதான். அவள் சிலவழிகளில் மலடாக இருப்பதால் மரியாதைக்குறைவாக இருக்கமாட்டேன்.

   >> ஆனாலும் தமிழின் தனித்தன்மையை இப்படி போதாமையாக கேலி பேச ஒரு தனி காழ்ப்பு வேண்டும்.

   ஐயா. காழ்ப்பு இல்லை. வருத்தம்தான். தமிழ் எனக்கும் பிடிக்கும். அதில்தான் யோசிக்கிறேன்.

   ஆனால், தமிழில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. மொழிரீதியாகவும் சரி, நம் பண்பாடு போன்றவற்றிலும் சரி. திராவிட(!) அரசியலாக்கப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். ஆனால், நம் போதாமைகளை நான் தனித்தன்மையாகக் கருதுவதில்லை. அவற்றைக் களையவேண்டுமெனத்தான் நினைக்கிறேன். அதனால்தான் முடிந்தவரை தொடர்ந்து தமிழ் போன்ற ஒரு மொழியில் தொடர்ந்து எழுதி(!), அதனையும் உங்களையும் கஷ்டப்படுத்துகிறேன். என்னையும் சுயதுன்புறுத்தலில் ஈடுபட வைக்கிறேன். வைகிறேன்.

   >> சரி விடுங்கள்.

   விடவேண்டாம். தொடரலாம். ஆனால், உங்கள் விருப்பம்.

   • Vettri Says:

    உச்சரிப்பு மொழிக்கு மொழி மாறுபடும் எழுதும் முறையும் தான். தமிழில் தேவையான இடங்களில் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்த நாம் தவறுவதில்லை. எனக்கு குமரி மைந்தன் போல சப்பான் இசுடாலின் என்றெல்லாம் எழுதுவதில் உடன்பாடில்லை. வாராணசி என மிக நெருக்கமாக வரும் சொல்லை பயன்படுத்தலாம். ஷ உச்சரிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல வடவர்களுக்கும் தடுமாற்றம் தான். இந்த பேச்சு வழக்கில் தவறொன்றுமில்லை. ஒரு முறை ஈஷாவிற்கு போயிருந்த போது அங்கே சிவன் என்பதை ஷிவா என்று தான் அனைவரும் கூற வேண்டும் அதுவே சரியான உச்சரிப்பு என்றார்கள். அதுவும் அழுத்தமாக ஷிவ்வா என்று. சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழர்கள் ராமா கிருஷ்ணா ஷிவ்வா என்பதையெல்லாம் ன் பண்ணி விடுகிறார்கள் என்பார். அதாவது ராமன் கிருஷ்ணன் சிவன் என்று மாற்றி விடுகிறார்களாம். நான் அவரது சீடர் ஒருவரிடம் கூறினேன் முதலில் சமஸ்கிருதத்தில் ஷிவா கிருஷ்ணா என்பதே பெண்பால் தான். சத்குரு பிறந்த கர்நாடகாவில் தான் இவ்வாறு உச்சரிப்பார்கள். அதில் தவறில்லை. ஆனால் அதுவே ஒரிஜினல் என்பது போல் சொல்வது தான் சரியில்லை. சமஸ்கிருதத்தில் ஷிவஹ கிருஷ்ணஹ என்பது தான் ஆண்பால். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் நம் நாயன்மார்கள் இதில் ஒரு குழப்பமும் அடையாமல் சிவன் என்றே கூறியிருக்கிறார்கள். எனக்கு அதுவே முக்கியமானது. இன்னொன்று சமஸ்கிருத ஷிவ-வில் வருவது அழுத்தமான ஷ அல்ல. ஸ வுக்கும் ஷ வுக்கும் இடையே மிக மெலிதாக உச்சரிக்கப்பட வேண்டியது. சைவ குடும்பங்களில் போன தலைமுறை வரை இவ்வாறே உச்சரித்தார்கள்.


    • ஐயா, விளக்கத்துக்கு நன்றி. புரிந்துகொள்கிறேன். தாங்கள் சொல்லவருவதுடன் ஒத்தும் போகிறேன்.

 8. Vijay Vanbakkam Says:

  Vettri

  ராமசாமி தமிழ் எழுத்துருவில் உள்ள எழுத்துகளைத்தானே உபயோகித்தார் . ஆங்கில அல்லது தெலுங்கு எழுத்துகளையா உபயோகித்தார், இல்லையே. இதை ஏன் ‘தமிழின் தனித்தன்மையை இப்படி போதாமையாக கேலி ‘ என வீணாக உங்களையே வருத்துகிறீர்கள்.

  தமிழின் “தனித்தன்மையை” இங்கு பாருங்கள் , எந்த எழுத்தையும் நீங்கள் வேன்டிய இடங்களில் பயன்படுத்தலாம்.

  https://en.wikipedia.org/wiki/Tamil_(Unicode_block)


 9. […] பதிவில் குறிப்பிட்ட விவரிக்கவியலாத பாரதஷக்தியோ அதன்வழியான பண்பாட்டுத் […]


Leave a Reply to languageismagic Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s