அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று

08/12/2019

ஏதோ, நம் சகஏழரைகளின் ஏகோபித்த செல்லமான #எஸ்ரா அவர்கள்தாம் புதுயுகப் புதியதலைமுறை முழிபெயர்ப்புப் பராக்கிரமங்களை, தொடர்ந்து சளைக்காமல் அரங்கேற்றுகிறார் என வதந்தி கிளப்பிவிடுகிறார்கள்.

ஆனால் உண்மை அப்படியில்லை.

-0-0-0-0-

இது 1980களின் இறுதியில் உறுதியாக, என் குருதி பெருக நடந்த விஷயம்.

ஒரு இளம் ஆர்வக்கோளாறு அன்பருக்கு ‘இலக்கியத் திறனாய்வு’ முறைமைகள் குறித்த மயிர்பிளப்புக் கட்டுரைகள் எழுதவேண்டும் என ஒர்ரே நமைச்சல். போஸ்ட்மாடர்ன் போஸ்ட்மாடர்ன் என்று அரற்றியவண்ணம் இருந்தார். அவருடைய ஆதர்சங்கள் 1) நாகார்ஜுனன் 2) எம்டி ‘ஸில்வியா’ முத்துக்குமாரசாமி 3) கோணங்கி. சுளுக்குத் தமிழ்க் கோமகன்கள்.

(இவர்களில் – எம்டிஎம் கொஞ்சம் குறைவான சுளுக்குதான், ஆனால், பிரச்சினைக்குரியவகையில் அவருக்கு அப்போது, நாட்டாரியல் காட்டாறியல் அவியல்களுக்கு அப்பாற்பட்டு ஒரு பல்துறைவல்லமைத்தனம் இருந்தது என அவரே தன்னடக்கத்துடன் கிளப்பிவிட்டிருக்கக்கூடும் வதந்தியை அவரே நம்பிவிட்டிருந்தாரென்று நினைக்கிறேன். இப்போது எப்படி என்று தெரியவில்லை)

அக்காலத்திய – இந்த மகாமகோ கலாச்சாரச் சூழற்பின்புலத்தின் மூன்று மகாமகோ கூறுகள் என்னவென்றால்:

#1. இப்போது இருப்பதைப் போல அப்போதும் சுமார் 300 தீவிரத் தமிழ் அலக்கிய வாசகர்கள். அவ்ளோதான். இவர்கள்தாம் எழுத்தாளர்களும், பாவம்.

#2. ரெண்டு பதினாறு பக்க ஃபார்ம்களைப் பின்னடித்து, ஆதிமூலம் அல்லது அந்த பாவப்பட்ட ‘ட்ராட்ஸ்கி’ மருது வரைந்த ஆனால் தொடர்பேயற்ற சித்திரத்தைக் கமுக்கமாகச் சுட்டு அட்டைப்படமாக வெளியிட்ட வண்ணம், எந்த சமயத்திலும், சுமார் 350 ‘தமிழ்ச் சிறு பத்திரிகைகள்’  இருந்தன. ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’   + ‘நன்கொடை ரூ 10/- மட்டும்’ + ‘படைப்புகள் வரவேற்கப் படுகின்றன.’  ஆனால், பதிப்பாளரே வெவ்வேறு பெயர்களில் பலவிதமாக எழுதிச் சுய இன்பம் கண்டதும் நடந்தது, ஆமா இருக்காதா பின்னே?

இவை பொதுவாகவே, மாத இதழாக ஆரம்பித்து அடுத்த மாதம் ரெண்டுமாத இதழாக மாறி (நண்பர்கள் தாம் எழுத்தாளர்கள், இவர்கள் கொடுப்பதைப் பதிக்கவில்லையானால் கோபித்துக்கொண்டு அவர்கள் இன்னொரு ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என ‘சுளுக்கு – ஒரு நவீனக் காலாண்டிதழ்’ ஆரம்பித்து விடுவார்கள் வேறு!) பின்னர் … …. அச்சகக் கூலி, பின்னடிக்கும் கூலி நிலுவை… ஆறு மாதத்திற்குப் பிறகு மூன்றாம் இதழ் வந்தபின்  ஃபுல் ஸ்டாப். ஆயுள்சந்தா கட்டிய முட்டாள்களெல்லாம் ஆயுளுக்கும் சந்தா சாஹிப்பிடம்தான் கேட்க வேண்டும்…

ஆக, ‘பொறுப்பாசிரியர்’ பொறுப்பற்று தாடிவுட்டுக்கொண்டு சோகமாக ‘தமிழகத்தில் இலக்கியத்துக்கு ஒரு  இயக்கம் தேவை’ எனப் பினாத்திக்கொண்டு … தியாகிப் பட்டம். வாழ்க.

(அக்காலத்தில் பொள்ளாச்சி நசன் பொள்ளாச்சி நசன்எனவொருவர் இருந்தார், இன்னமும் இருக்கிறாரா எனத் தெரியவில்லை – இவர் வேறு, வெறி பிடித்து, இந்தச் சிறுபத்திரிகை சுயமைதுன விந்துமணிகளைச் சேகரித்த வண்ணம் இருந்தார், பாவம் – இச்சேகரிப்பின் கனம் காரணமாகவே பொள்ளாச்சி டவுன் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவுக்காவது நிலமட்டத்திலிருந்து அதலபாதாளத்துக்கு அமிழ்ந்திருக்கச் சாத்தியக் கூறுகள் இருக்கும். “ஸார், இதுதான் சார் பொள்ளாச்சி நீர்த்தேக்கம்!  இதை ஒரு தனிமனிதனாக உருவாக்கியவர் பொள்ளாச்சி நசேந்திர சோழன்!!” ஊக்கபோனஸாக, அனேகமாக இவர் வீட்டில் இண்டேன் கேஸ் தேவையே இருக்காது எனவொரு அனுமானம்)

#3. சுமார் 300 பதிப்பகங்கள். ‘கவர்னமெண்டு’ கொடுக்கும் சொத்தை ‘லைபரி ஆடர்’ எழவுக்காக ஏங்கிக்கொண்டு… பலப்பல பெயர்களில் ஒரே முகவரியிலிருந்து  விடியல், குளியல், சோப்பு, சீப்பு, சீகைக்காய், முற்றம், திண்ணை, கழிப்பறை என மிகக் கவிதைத்தனமான பெயர்களில், ‘மேன்மையை நோக்கிய எத்தனங்கள்’ வகையறா பதிப்பகங்கள் – தலா பத்து புத்தகங்கள் பதித்து அவையும் பரணில் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் – பாவம்.  ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, நன்றி!

பழையன கழிதலும் புதியன கழிதலும்… … … ஒரு மசுருக்கும் பிரயோஜனம் இல்லை; அலக்கியம் என்றால், இப்போதும் அதே 300 பேர்தான். அதுவும் அதிகபட்சம்.

(ஆனால்… வெண்முரசு பாகங்களைத் தமிழ்மாக்கள் ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள் எனவொரு வதந்தியைக் கேள்விப்பட்டேன்; இது உண்மையாக இருந்தால் தமிழகத்தில் கர்ல்-ஆன் வகையறா மெத்தை விற்பனை மெத்தனமாகத்தான் இருக்கவேண்டும்)

-0-0-0-0-0-0-

சரி. அன்பரிடம் வருவோம்.

அப்போது நானும் ஒருமாதிரி பின்னடிப்புச் சிறுபத்திரிகைக்கு ‘பொறுப்பாசிரியர்’ போல இருந்தேன். ஆனால் என் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை. புனைபெயரிலும் எழுதவில்லை. கவலைப் படாதீர்கள், சரியா?

என்னைப் பார்த்துப் பேச என(அப்போது சிலபல விஷயங்கள் காரணமாக தினமணி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் அவர்களிடம் கொஞ்சம்போல நெருக்கமாக இருந்தேன்) என் அலுவலகத்துக்கு வந்திருந்தார், இந்த அன்பர். அவருக்கு 1) வேலை வேண்டும் 2) எழுத்து நமைச்சல்களைப் பதிக்கவேண்டும்.

1) = முடியாது என்று சொல்லிவிட்டேன்; ஏனெனில் அவரைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது கவைக்குதவாத கேஸ் என்று. பின்னர் எப்படி நான் வலிந்து என் பெயரைக் கெடுத்துக்கொள்வேன்?

2)  = “எடுத்துக்காட்டாக ஒரு  மூன்று-நான்கு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டு வாருங்கள், பின் பார்க்கலாம்.”

அவர் எதைப் பற்றி எழுதலாம் எனக் கேட்டபோது நான் சொன்னேன் – “உங்கள் விருப்பம். சுளுக்கெழுத்தாக இல்லாமல் இருந்தால் நலம்.”

ஆனால் அவர் மேற்சொன்ன மும்மூர்த்திகளில் அருள்பாலிப்பில் இருந்ததால் ‘போஸ்ட் மாடர்னிஸ்ம்’ அமைப்பியல் என்கிறரீதியில் ஏதோ சொன்னார். நானும், எனக்கிருந்த அலுப்பில் விட்டுவிட்டேன்.

ஒருவாரத்திற்குப் பின் நல்ல ஃபூல்ஸ்கேப் காகிதத்தில் பென்ஸில் கோடிட்டு, பச்சை மசியில் (எனக்குப் பொறாமை வரும் வகையில்) மணிமணியான கையெழுத்தில் கட்டுரை ஒன்றைக் கொணர்ந்தார். பக்கத்து ஹோட்டல் ஒன்றுக்கு அவருடன் சென்று படித்தேன், என் முகத்தையே அவர் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார். “புதிய தமிழாக்கங்களை, தமிழ்வார்த்தைகளை உருவாக்கியிருக்கிறேன்!”

ஆனால் தலைப்பைத் தாண்டுவதற்குள்ளேயே…

‘தபால்நவநாகரீகம் –  டாஸ்டாவ்ஸ்கி முதல் நாகார்ஜுனன் வரை’

இதைத் தாண்டுவதற்குள்ளேயே என் ஜட்டி ஈரமாகிவிட்டது, என்ன செய்ய… :-(

அவரிடம் கொஞ்சம் ஆதூரத்துடன் பணிவாகவும் சொன்னேன் – “கட்டுரை நன்றாக வந்திருக்கலாம்; ஆனால் இப்படித் தபால்கிபால் என்றெல்லாம் எழுதாமல் கொஞ்சம் தமிழில் சரியாக மொழிபெயர்ப்பு செய்து எழுதுங்களேன் + தாஸ்தயெவ்ஸ்கியை எப்படி ஒரு போஸ்ட்மாடர்ன் ஆசாமி எனக் கருதமுடியும்? போஸ்ட்மாடர்ன் என்றே எழுதலாமே!”

“கொஞ்சம் ஒருமாதம் போல நேரம் எடுத்துக்கொண்டு, முடிந்தால் க. பூரணசந்திரன் போல யாரிடமாவது உங்கள் பிரதியைக்காட்டித் திருத்திப் பின்னர் கொடுக்கிறீர்களா? பிறகு பார்க்கலாம்.”

வெற்றிபெற்றேன் என அப்படியொரு இறுமாப்பு, எனக்கு. :-(

-0-0-0-0-

ஆனால், ஒரு வாரத்திலேயே திரும்பி வந்தார் கஜினி மொஹம்மது.

தலைப்பு: ‘அஞ்சல்நவநாகரீகம் –  க.பூரணசந்திரன் முதல் நாகார்ஜுனன் வரை

“வீட்டுக்குப் பக்கத்திலயே வடபழநி போஸ்ட் ஆஃபீஸ். எப்டீ இவ்ளோ நாளா இத மிஸ் பண்ணிருக்கேன்?”

<திரை>

பின்குறிப்பு: நம் பின்மனிதர் தற்போது தமிழ்த் திரையண்டத்தில் இருக்கும் சுமார் இரண்டுகோடி அஸிஸ்டென்ட் இயக்குநர்களில் ஒருவர் + அவ்வப்போது திரைப்பாடல்களையும் எழுதுகிறார் எனக் கேள்விப்பட்டேன். நன்றி. தமிழ் அலக்கியம் தப்பித்தது.

5 Responses to “அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று”

 1. suswilc Says:

  :-D

  LMAO

 2. Kannan Says:

  :)

  suggest him to try comedy instead of direction.

 3. dagalti Says:

  இதைத்தான் கம்பர் அன்றே சொன்னார்:

  சஞ்சலம் கலந்த போது மையல்ஆர உய்ய வந்து
  அஞ்சல் அஞ்சல் என்றிடாத பான்மை என்ன பான்மையே

 4. K.Muthuramakrishnan Says:

  போஸ்ட் என்பதற்கு கம்பம் (கோல் போஸ்ட்), பதவி என்ற் அர்த்தம் எல்லாம் உண்டே!.

  நான் சரியாக மொழி பெயர்க்கிறேன் பாருங்கள்.
  கம்பம் நவ நாகரீகம். பதவி நவ நாகரீகம். இப்போ சரியாகிவிட்டதா? நானும் சினிமா டைரக்டொர் ஆகப் போகட்டுமா?


 5. ஐயா! ஐயகோ! :-)

  ஒருவர் எள்ளி நகைத்து எள்ளுமாவு என்கிறார்.

  ஒருவர் கம்பனை மேற்கோள் மூட்டுகிறார்,

  இன்னொருவர்  காமெடியென்கிறார், நீங்களோ கம்பத்தால் அடிக்கிறீர்கள்!

  எனக்கு இதெல்லாம் தேவையா? ;-)

  ஏன், நீங்கள் திரைக்கதைவஜனம் டைரடக்கரிங் கூடச் செய்யலாமே!

  படத்தின் பெயர் இதோ – ‘தந்திரன்!’

  பின்நவீனத்துவ  ‘டெலிகிராம் ஓட்டம்’ என ஜமாயுங்கள்!


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s