அமரேஷ் தேஷ்பாண்டே, ப்ரிட்ஜ், சீட்டாட்ட வெறி, பில் கேட்ஸ்

11/01/2020

இந்த, நண்ப எழவெடுத்தவனும் அழக மராத்தியனுமான அமரேஷ் பற்றிச் சிலமுறை எழுதியிருக்கிறேன்.

ஏதேதோ யோசனைகளுடன், குவிந்து கிடக்கும் வேலைகளை நினைத்து மிரண்டு கொண்டு, மூன்று நாட்களுக்குப் பின், என் வீட்டிற்குச் சென்றால், அங்கு என்னை ஹோஹோவென சிரித்துக் கொண்டு வரவேற்றது அமரேஷ் தேஷ்பாண்டே – எங்கள் நண்பன். அதி புத்திசாலி. ப்ரிட்ஜ் என்கிற அழகான சீட்டுக்கட்டு விளையாட்டில் நிபுணன். கணித ஆசிரியன், கொஞ்சம் கிறுக்கனும் கூட..

அவன் கேட்டான், “யோ, ஊட்டிக்குப் போயிருந்தியாமே? வாட் ஈஸ் த ஸ்டோரி?”

ஆம். The Universe is made of stories, not of atoms.

https://othisaivu.wordpress.com/2012/06/11/post-123/

குறைந்த பட்சம் – இன்னொரு முறையும், இவன் ராய்பீட்புரா எனும் மத்தியப்பிரதேச மலைக்கிராமத்தில் குழந்தைகளுடன் ப்ரிட்ஜ் விளையாடுவதையும் அங்கிருந்து ஒரு பெரிய ஏழை+புத்திசாலிக் குழந்தைகள் குழாமை, துருக்கியில் ஒரு டோர்னமெண்ட் விளையாட அழைத்துச் சென்றதைப் பற்றியும் எழுதினேன் என நினைவு. (ஆனால் ஒத்திசைவிலா, வேறெங்காவது ஐஆர்ஸி எழவிலா அல்லது ஏதாவது மின்னஞ்சலிலா என்பது நினைவிலில்லை)

இவன் தற்போது அமெரிக்காவைத் தடுத்தாட்கொண்டு இருக்கிறான் என ஒரு செய்தி.

-0-0-0-0-0-

என் ப்ரம்மச்சாரிப் படிப்புக் காலங்களில், நானும் சிலகாலம் வெறிபிடித்ததுபோல ப்ரிட்ஜ் விளையாடியிருக்கிறேன். சர்வ நிச்சயமாக, இது புத்திசாலிகளுக்கான விளையாட்டுதான். போதை.

ஆக – பகலிலும் இரவிலும். தொடர்ந்து, சாப்பாடு தூக்கம் இல்லாமல் இந்தக் காலட்சேபம். வகுப்புகளுக்குச் செல்லாமலும். கூட விளையாடிவர்கள் பலர் மகாமகோ புத்திசாலிகள். இவர்களில் பிற்காலத்தில் தன்னை அசிங்கப்படுத்திக்கொண்ட ஃபன்னீஷ் மூர்த்தியும், அகாலத்தில் இறந்துபோன விஜய் நம்பீஸனும் அடக்கம்.

ஆனால் – இதில் வெறித்தனமாக ஈடுபட்டதன் மூலம் ஏற்பட்ட பல இழப்புகளை உணர்ந்தேன்.  ஏழெட்டு மாதங்களில் எந்தவிதமான படிப்போ வாசிப்போ செய்யாமல், ஒரு பைசாகூடச் சம்பாதிக்காமல் தண்டச்சோற்றுக் கூமூட்டையாக இருந்திருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன்; ஏனெனில் எனக்கு, கூடப்படித்த பல மாணவர்களைப்போலல்லாமல் குடும்பத்தின் பொருளாதார நிலை செழுமை வாய்ந்ததாக இருந்திருக்கவில்லை; மேலதிகமாக, ஒப்புக்கொள்ளக்கூடிய மதிப்பெண் பெறாவிட்டால், கிடைத்துக்கொண்டிருந்த உதவித்தொகை (மாதத்துக்கு ரூ 170/- என நினைவு) நின்றுவிடும் எனும் கலவர நிலையும்.

ஆக – இதற்குப் பிறகு – இந்த மாதிரி லாகிரி தரும் விஷயங்களில் அனாவசியமாக ஈடுபடவே கூடாது எனச் சபதம் செய்து இன்றுவரை கடைபிடித்துவருகிறேன்.

இதனால் – அமரேஷ் எவ்வளவோ முறை கெஞ்சிக்கேட்டுக் கொண்டாலும், ப்ரிட்ஜ் பக்கமே மறுபடியும் போகவில்லை.

இன்னொரு காரணம்: முக்கியமாக, வெண்முரசு படித்து உய்யவேண்டிய ஆன்மிக அவசியமும் எனக்கு இருந்தது என வைத்துக்கொள்ளுங்கள். அதனால், பிறகாரியங்களில் ஈடுபட அவகாசமில்லைவேறு!

-0-0-0-

சரி.

அமரேஷ், ப்ரிட்ஜ் விளையாட்டுபோன்ற இரு சிறு அன்ட்ராய்ட் ஆப் வழி விளையாட்டுகளை, குழந்தைகள்/வயதானவர்கள் விளையாடும் வகையில் வடிவமைத்திருக்கிறான். ஒன்று கிடா.

இன்னொன்று ஹூல். இவற்றில் என் பங்கு, எப்போதோ அளித்தது, அதன் பர்ஃபார்மன்ஸ் ட்யூனிங் குறித்தது – கொஞ்சமேகொஞ்சம் இருக்கிறது. என் மகள் அதன் வடிவமைப்புக்கு உதவியிருக்கிறாள். (முடிந்தால் இவற்றைத் தரவிறக்கி உங்களுடைய + பக்கத்துவீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிப் பார்க்கவும்; அமரேஷின் மூளைக்கும், அழகான விளையாட்டு அனுபவத்துக்கும், வடிவமைப்புக்கும் நான் உத்திரவாதம்!)

…இந்த விளையாட்டுகளைப் பரப்புரை செய்ய, அமரேஷ் வடைஅமெரிக்கா ஐரோப்பா சீனாவென அலைந்துகொண்டிருக்கிறான் எனத் தெரியும். அதைத் தவிர, குழந்தைகளுக்கு இதன்மூலமாக ‘சிந்திக்கும் திறனை வளப்படுத்துதல்’ எழவுகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் எனவும் தெரியும்…

ஆனால் திடுதிப்பென்று நேற்றுவந்த மின்னஞ்சல் செய்தியில் இந்தப் படம்! :-)

பில் கேட்ஸ் ஒரு மகாமகோ புத்திசாலியும், ப்ரிட்ஜ் விளையாட்டு விற்பன்னரும்கூட என்பதை அறிவேன். இதன் காரணமாகவும், இதன் வழியாகவும் அமரேஷ் ப்ராண்ட் வளர்ந்தால் நல்லதே.

அமரேஷுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், அவனுக்குச் சுபிட்சத்தை, மேற்கொண்டு சந்தைப்படுத்தல் சந்தர்ப்பங்களை உருவாக்கினால் நான் மகிழ்வேன்.

சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால்… பொதுவாகவே, அமரேஷ் என் நண்பன் என்றாலும் கொஞ்சம் லிபரல்-இடதுசாரி வியாதி பிடித்தவன். முதலாளியம் தரகு, கம்யூனிஸத்தின் மேன்மை(!) என்றெல்லாம் (பிற ‘லிபரல்-இடது’சாரிகளின் வழக்கம்போலவே முதலாளியத்தின் சகல சாத்தியக்கூறுகளையும் உபயோகித்துக்கொண்டு மட்டுமேதான்!) உதார் விடக்கூடியவன். ஓரிருமுறை ஒட்ட நறுக்கியபின், என்னிடம் வாலை ஆட்டுவதில்லை. இருந்தாலும் அவன் பிறரிடம் பேசும்போது இந்தச் சரடு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவேன். ஆனால், என்னிடம் பேசும்போது கவனத்துடன் அச்சரடை விட்டுவிட்டு, பிற – ஹிந்துஸ்தானி சங்கீதம், மாம்பழச் சந்தை, லிச்சிக்களும் ஓலிவ்களும் தென்னிந்தியாவில்  விளையுமா அதுஇது என மிகைச் சாத்வீகமாக உரையாடல் ஓடும். :-)

பேசுவது முதலாளிய அமெரிக்கவியத்துக்கு எதிராக — ஆனால், முதலாளியத்தின் மாபெரும் சின்னமான பில் கேட்ஸ் அவர்களுடன் தன் விளையாட்டைக் கொண்டாடுகிறான்… அடுத்தமுறை நேரில் பார்க்கும்போது, இது குறித்துச் சண்டை போடவேண்டும். (நானும் திருந்துவதாக இல்லை)

பின்குறிப்பு: ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் – பொதுவாக, இந்த ஐடி தண்டக்கருமாந்திரங்களிடம் ஓடும் சரடு, பில் கேட்ஸ் அவர்கள் ஆப்பிள் பொருட்களுக்கு எதிரானவர். ஆப்பிளுக்கும் மைக்ரொஸாஃப்டுக்கும் ஒத்துவராது. டட்டடா டட்டடா. ஆனால், இதில் பில் உபயோகிப்பது ஒரு ஆப்பிள் உருவாக்கத்தை! அவர் முகபாவமும் வருத்தப்படுவது போலில்லையே! ஐயய்யோ!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s