4500 வருடங்களுக்கு முந்தைய திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் எகிப்தில்!

12/01/2020

நம் திராவிடர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள், புதைக்கப்பட்ட புத்துயிர்ப்புகள், ஒழிக்கப்பட்ட ஓளிர்வுகள் –  வெளிச்சத்துக்குக் கொணரப்படும் இந்தத் தொடர் வேள்வியில் இன்னொரு அத்தியாயம்…

-0-0-0-0-

…அக்காலத்தில் திராவிட நாகரீகம் மட்டும்தான் இவ்வுலகில் இருந்தது. ஏனெனில் – பூவுலகின் இளமையிலேயே கல் தோன்றிவிட்டாலும், உடனடியாகத் தோன்றியது திராவிட நாகரீகம்தான் எனும் வரலாற்று உண்மையை நாம் எப்படி மறக்கக்கூடும்? சொல்லப்போனால் – மற்றைய நாகரீகங்களெல்லாம் மண் தோன்றுவதற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தன, பாவம்.

கீழே, 3600 வருடங்களுக்கு முந்தைய (அதாவது பொதுயுகத்துக்கும் 1600 வருடங்கள் முன்னே!), திராவிட-எகிப்திய நாகரீகத்தின் கோடரிச் சின்னம்.

குறுந்தொகையில் கணியன் ராமராசனார் எழுதிய ‘எங்களுர் க்கேளிர்வா த்துக்காரன்’ பாடல் உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? இல்லையானால் பரவாயில்லை – ‘வாத்துண்டாம் நல்ல மனமுண்டாம்?’ – இதுவாவது??

வாத்தின் கீழே வாத்தை வாக் அழைத்துச்செல்லும் பண்டமிழ் திராவிடச் சிறுமியும் சிறுவனும்; அதற்குமேலே வாத்தின் வாக்கினை மட்டுறுத்த ஒரு வாத்திங் ஸ்டிக்.

வாத்திங் ஸ்டிக்-ன் இடதுபக்கத்தில் ஒரு கதை. இந்தப் பதிவுதான் அது.

அதற்குக் கீழே, புறநானூற்றுத் தாய், மகனிடம் ஒரு கோடரியைக் கொடுத்து, எதிரியின் ‘குலத்தை ஒழிக்கவந்த கோடாலிக் காம்பே’ என தன் மகனை வாழ்த்தி வழியனுப்பும் கண்கொள்ளாக் காட்சி!

அதற்கும் கீழே, ஒரு பறக்கும் குதிழி. இதைத்தான் பொன்னியின்செல்வன் ஓட்டினார் என மணிரத்னம் சொல்கிறார்.

நெல்லை கண்ணன் சொல்வதுபோல, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் திராவிடனின் புணர்ச்சிவிதிகளின் இலக்கணங்கள், வித்தியாசமாக இருந்தன; இந்த ஆச்சரியப் படத்தக்க உண்மையின் எடுத்துக்காட்டாகத்தான், குதிரையும் அன்னமும் ஒருசேர ஒரு கோழியைப் புணர்ந்ததால் பிறந்த குதிழி, இந்தக் கோடரியில் குறிப்பிடப்பட்டுள்ளது என, அகழ்வாராய்ச்சிச் சான்றோர் ஆஇரா வேங்கடாசலபதி சொல்கிறார்.

திராவிடக்கோடரியின் விளிம்புகளிலும், கிடைத்த மற்ற இடங்களிலும் தமிழ் ப்ராம்மி, தமிழி வகை எழுத்துகள் காணக்கிடைக்கின்றன. சொல்லப்போனால், இந்தக் கோடரியின் அந்தப்புரத்தில் நிறைய கற்புடைப் பெண்டிரும் காணக் கிடைக்கின்றனர் என அகழ்வாராய்ச்சிச் செம்மல் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களால் குறிப்பிடப் படுகிறது.

-0-0-0-0-

கீழே 2700 வருடங்களுக்கு முந்தைய திராவிட லச்சினை மோதிரம். இதுவும் எகிப்தில் தான் கிடைத்தது.

அது அக்காலத்திய விடுதலைப்பூனை எனச் சொல்பவர் உளர்.

இந்த ரீதியில் பார்த்தால், விடுதலைப் புலி பிரபாகரனை, இக்கால பாரோ எனச் சொல்லலாம்கூட.

இதற்கும் ‘கிருஷ்ணா, நீ பேகனே பாரோ’ எனும் கர்நாடகச் சங்கீதப் பாடலுக்கும் உள்ள தொடர்பினை அறிஞர் டிஎம் கிருஷ்ணா அழகுற விளக்குவார்…

“பேகன் (கடையேழு வள்ளல்களில் ஒருவன்- பொதினி மலை அரசன்), பாரோ (எகிப்து!) – போன்ற தெள்ளிய சொற்களால் திராவிட-எகிப்தியக் கலாச்சாரத் தொடர்புகள் விளக்கப்படும் அழகுதான் என்னே!

அதாவது, இந்தப் பாடல்வரி சொல்வது: மாயோனே! நீ கடையேழு வள்ளல்களில் ஒருவன் மட்டுமல்லன், நீ தான் திராவிடஎகிப்திய பாரோ!

அடுத்தமுறை எகிப்திய துடங்கம்மானின் கல்லறையில் இதே பாடலைப் பாடவேண்டும். எகிப்திய பாரோக்கள் போட்டுக்கொள்ளும் தொப்பியும், அவர்கள் வைத்துக்கொள்ளும் தாடி மேக்கப்பும் எந்தக் கடையில் வாடகைக்குக் கிடைக்கும் எனத் தெரியவில்லை, இருந்தாலும்…

…வாழ்க நீ துடங்கம்மான்.”

-0-0-0-0-0-

‘நல்லார் ஒருவர் உளறேல், பொய்யெனப் பொய்யும்’ எனச் சும்மாவா சொன்னார்கள், நம் திராவிட மூடாதையர்கள்?

வாழ்க திராவிடம்! வளர்க எகிப்தாதிபத்தியம்!

9 Responses to “4500 வருடங்களுக்கு முந்தைய திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் எகிப்தில்!”

 1. நாம்திராவிடர் Says:

  சார், அற்புதமான பதிவுக்கு நன்றி. இந்த உண்மைகளை நாம் மக்களிடம் பரவாலாக எடுத்துச்செல்ல என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்


  • இவ்வளவு கோர்வையுடனும் ஆர்வத்துடனும் ஓரளவுக்கு நல்லதமிழிலும் எழுதியிருக்கிறீர்கள்; ஆனாலும், ஆச்சரியத்தில் எனக்கு எப்படி பதிலளிப்பது என்றே தெரியவில்லை! 🙏🏿

   பதிவை முழுவதும், அதனைச் சரியாகப் புரிந்துகொண்டுதான் படித்தீர்களா என்ன? நீங்கள் ஏழரைகளில் ஒருவர் அல்லரே! எது எப்படியோ… 😳

   1. நீங்கள் ‘நாம்’ எனக் குறிப்பிட்டதை – என்னைக் குறிப்பிட்டதாக நான் எடுத்துக்கொண்டால், நான் என்ன செய்யவேண்டும்?

   ஒத்திசைவு தளத்தை உடனடியாக, போர்க்காலரீதியில் மூடவேண்டும். :-(

   2. நீங்கள் என்ன செய்யவேண்டும்?

   தயவுசெய்து, காலாற நடைபழகச் சென்று திரும்பி வர வழிதெரியாமல் அண்டார்டிகாவில் பரிதவித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய மூளையைத் தேடிப்பிடித்து மண்டைக்குள் சிறைபிடிக்க வேண்டும்.  இல்லாவிட்டால், உங்களுக்கு, உடனடியாக அகழ்வாராய்ச்சித் துறையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் உயரதிகாரியாக நியமிக்கப்படும் கொடூரம் நிகழ்ந்துவிடும். :-((

   கொசுறு அறிவுரை: உங்கள் குழந்தைகளுக்கு (பாவப்பட்டவர்கள்) உடனடியாகத் தடுப்பூசி போடவும். திராவிடடிடிஸ் ஒரு கொடும் தொத்துவியாதி. பரம்பரையாக ஜீன்ஸ் வழியாகவும் வரலாம். ஆக, வெறும் கிழிந்த கோமணத்துடன் அலைந்தாலும் பரவாயில்லை. அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் முக்கியமன்றோ?

   நன்றி.

   (தாங்கவே முடியவில்லை! எங்கேடா என்னோட தடுப்பூசி!) 😭

   • vijay Says:

    மாட்டிகினியா நைனா!!!.யாருகிட்ட!!!!!!


    • :-( யாரென்று சரியாகத் தெரியவில்லை. தெரிந்தால், அவருடைய ஆர்வத்தை மெச்சிக் காலில்விழத் தயாராக இருக்கிறேன். உதவவும். :-(

     திருச்சியில் பொலிவாட், தில்லை நகர் பகுதிகளில் சந்தேகாஸ்பதமான முறையில் நடமாடிக்கொண்டிருப்பதாகத் தகவல்.

 2. Sachidanandam Says:

  இவரும் ஏழரை தான் னு நினைக்கிறேன் நாம் டம்ளர் மாதிரி நாம் திராவிடர்னு டபாய்கிறார்…


  • ஐயா, இவர் ஏழரையல்லர்.

   ஆனால் தமிழ்நாட்டின், தமிழார்வலர்களின் ஆர்வத்தையும் நிதர்சன நிலைமையையும் பார்த்தால் கொஞ்சம் ஷாக்கிங்காக இருக்கிறது.


 3. வாழ்க்கை வெறுத்துவிட்டது. அன்பருக்கு என் மேற்கண்ட பின்னூட்டமும் புரியவில்லை. மேற்படி எகிப்திய-திராவிட விஷயங்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டுமாம். இவையெல்லாம் எனக்கு உண்மையாகவே நடக்கின்றனவா இல்லை என் வளமான கற்பனையா!

  பின்தொடரும் பின்னூட்டத்தின் உரல் என்னை இடித்துக்கொண்டேயிருக்கிறதே!

  ஆக, நாளைமுதல் (இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து) பெங்களூரில் இருக்கமாட்டேன். அந்தர்த்யானம். அம்பேல். வாழ்க்கையின் விளிம்பைத்தேடி ஒரு நெடும்பயணம்.

  ஆக, என்னைச் சந்திக்க விரும்பாத அன்பர்கள் உடனடியாக அலைகடலென ஆர்பரித்து பெங்களூர் வரவும். Bangalore would be safe for you, till I get back. BFN.

  நன்றி.


 4. ப்ரிய ஸஹ்ருதயரே,
  ஸத்யலோபமான இவ்வியாஸமானது ஸாமான்ய வாஸக ஸ்திதியை சற்றும் ஆலோஜிக்காது எழுதப்பட்டது அடியேனுக்கு அதீத விஸனம் அளிக்கிறது.

  ஹாஸ்ய ரஸத்தை தேவரீர் உத்தேஸித்திருந்தாலும், சரித்ர ஸமஸ்யைகளில் துர்ப்ரசாரங்களுக்கு அனுகூலஞ் செய்துவிடலாகா.

  ஸத்யம் ஸமஸ்தலித்திடை கிரி:

  அது எம்பெருமான் ஶ்ரீ பரஶுராமனின் மழு. எம்ப்பெருமானின் அவதார சரித்திரம் அன்றோ அச்சித்திரத்தில் திவ்யமாய் காக்‌ஷியளிக்கிறது?

  பாதுகாஸிரஸார்ச்சனை தான் நமது பாரம்பரியம். அதன்படி ப்ரதானாமாய் கீழிருக்கும் சித்திரத்தை முதலில் நோக்குதலே முறை.

  1) வாலால் உண்ணி ஓட்டும், இறக்கை கொண்ட காமதேனு   தெரியவில்லையா? 

  2) அதன்மேல் “ஆயுதம் தந்து தன் மகனை பணிக்கும் ஜமதக்ன்னி ருஷி” தெரியவில்லையா?

  3) அதன் மேல் உள்ள்ளதை அறிய நாம் இன்னும் புராணப்யாஸஞ் செய்தல் நலம்.

  ஒன்று ஸ்திரமாக துலங்குகிறது: எம்பெருமான் மழுவீசி கடல்பிறகோட்டி ஸ்தாபித்த ஸ்தலம் கேரளம் அல்ல.

  ஓரடியால் உலகளந்தோனின் வீச்சை குறிக்கிக்காட்ட புனையப்பட்ட சைவப்புரட்டு அது.

  ஸத்யத்தின் ஸூர்யப்ரபையை, ஸஹஸ்ரஹஸ்த ப்ரயத்தனம்தான் மறைக்குமோ?

  அவன் வீசியது எகிப்தில். பரஶு என்பது அடைமொழி. ராமன் என்பதே பெயர். அந்த ராமன் (அருள்)வழி வந்தோரே ராமசெஸ் வகையறா.

  மார்ஜர நியாய பூமியாக எகிப்து தேஶம் இருந்தமைக்கு அக்கணையாழியே ஸாக்‌ஷி.


  • தேவரீருக்குத் திமிர் அதிகம் போல!

   திராவிடத்துக்கே ஹிந்துத்துவாவைப் பரிசளிக்கும் திமிர் மெச்சப்படுகிறது. ஆக, சென்னை தங்கசாலை உங்களுக்கே தாரைவார்க்கப்படுகிறது.
   வாழ்க நும் கொட்டம்.

   குறிப்பு: மார்ஜாரம் என்றவுடன் நகுலன் அவர்களின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கூடவே செஷயர்பூனையும். அதன் சிரிப்பும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s