நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்

30/03/2020

அம்மணிகளே+அம்மணர்களே!

பொய் என்றால், முட்டியடி எதிர்வினையாக அதனை நான் வெறுப்பவன் அல்லன் எனச் சொல்லவந்தாலும், அதிலும் ஓரளவு பொய் இருக்கிறது எனச் சொல்லலாமென்றால்…

அப்படிச் சொல்லவருகிறேன் என்பதிலுமேகூட பொய் இருக்கிறதே! ஐயகோ! இந்த அதற்குள்அது ரிகர்ஸிவ் ஏடாகூடத்துக்கு முடிவே இல்லையா? :-(

-0-0-0-0-0-

சரி. சில சமயங்களில் பொய் சொல்வது முக்கியம். ‘அஷ்வத்தாமா அதஹ; குஞ்சரஹ’ என்பதைப் போல. ஆனால் புளுகுகள் அப்படியல்ல.

நான் தர்மசங்கடங்களைப் பற்றிச் சொல்லவரவில்லை – நம் சொந்தப் பிசுக்குகளுக்கு/பொச்சரிப்புகளுக்கு அப்பாற்பட்டுச் சிலசமயங்களில் நாம் பெரிய மனதுபண்ணிச் செய்யும் குலதர்ம/ஜனோதர்ம ‘greater common good’ பிறருக்குச் சொல்லும், நல்லமனதுப் புளுகுகள் (‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’) வகையறாக்களைப் பற்றிப் பேசவில்லை.

பிரச்சினை என்னவென்றால், பல சமயங்களில் ‘நாம் புளுகுகிறோம்’ என்றவொரு ப்ரக்ஞை கூட இல்லாமல் தொடர்ந்து, அநியாயத்துக்குப் பீலா விட்டுவிடுகிறோம் – இத்தனைக்கும் நம்மில் பலப்பலர், வெகுஇயல்பாகப் புளுகும் பிரபல தமிழ் அலக்கிய எழுத்தாளர்கள்கூட இல்லை. :-(

பொய்யென்றறிகிலோம், அதனை ஏன் சொல்கிறோம் என்கிற காரணத்தையும் அறிகிலோம், என்ன செய்ய! படிப்பறிவும் சமனமும் மிக்கவர்கள் என  ‘பெரியவர்களின்’ வார்த்தைகளையும் மனோபாவங்களையும் பார்வைகளையும் உண்மைகளைப் பிரதிபலிப்பதாக நம்பி விடுகிறோம்.

இதற்குமுக்கியமான காரணங்கள், நம் செல்ல சகதமிழர்களின் மகத்தான கல்யாணகுணங்களான 1) வரைமுறையற்ற சோம்பேறித்தனமும் 2) பொதுவான படிப்பறிவின்மையும் 3) நடிக/கலைஞ்ஜ ஜிகினாப் பப்பரப்பாகளுக்கு மயங்கும் தன்மையும் 4) ஊடகப் பேடித்தனமும்… முக்கியமாக 5) தீராவிடத் திராவிடத் தறுதலைத்தனமும்… என்ன செய்ய…

அதுவும், நம் குழந்தைகளிடம் சொல்வது? இது மஹா சோகம்! நம் குழந்தைகளிடம், நல்ல எண்ணத்துடனோ திரியாவரமாகவோ, அல்லது நம்முடைய மகத்தான அறியாமையின் பாற்பட்டோ, நாம் சொல்லும் அற்பப் பொய்களும், அவர்களுக்குச் செய்யும் அயோக்கியத் தனங்களும் கணக்கிலடங்கா, இதனை நினைத்தால்தான் எனக்குத் துக்கம்துக்கமாக வரும்.

இவற்றுக்கு அப்பாற்பட்டு, நாம் பிற சககழுதைவயதையடைந்துள்ள சகமானுடர்களிடமும், ஏன், நம்மிடமேகூட ‘நமக்கு நாமே’ என ஆதூரம் கொடுக்கும் பொய்கள் பல சொல்லிக்கொள்கிறோம். இந்தப் பாவப்பட்ட போலி நிலைமைக்கு முடிவோ விடிவோ இல்லை என்பது பொய்யல்ல, நிஜம்தான். மன்னிக்கவும்.

-0-0-0-0-0-

சரி. பிலாக்கணத்தை விட்டுவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

கீழ்கண்ட புளுகுகள்/புரளிகள் பலவற்றை நானே ஒரு காலத்தில் ஏகோபித்து நம்பி, மேற்கொண்டு வளரவளர, காலாகாலத்தில் ஒவ்வொன்றாக உதிர்த்துத் தப்பிவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொண்டு… ஒரு (அள்ள அள்ளக் குறையாத, மேலதிக விளக்கங்களற்ற, ஒருசில விதிவிலக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு பெருஞ்சித்திரத்தை விரிக்காத, வரிசைக் கிரமமற்ற, மனம்போன போக்கு) ஜாபிதா:

1. நெட்டுரு போடவைக்கும் கல்வி கல்வியேயல்ல.

2. பாரதத்தில், முகலாயர்களும் ப்ரிட்டிஷ் கும்பெனியார்களும்தான் முதலில் வரலாற்றை எழுத ஆரம்பித்தனர்.

3. நாமே மறந்துவிட்டிருந்த நம் கலைச் சொத்துகளை, இலக்கியங்களை, அறிவியல்-கணிதங்களை, வரலாற்றுப் பொக்கிஷங்களை – கஷ்டப்பட்டுத் தேடியெடுத்து அவற்றைப் போற்றி வளர்த்தவர்கள் – ஆங்கிலேயர்களும், வெளி நாட்டார்களும்தான். இதற்காக நாம் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.

4. பாரதத்து ‘ஜாதி’ அல்லது வர்ணப் பகுப்பு என்பது அசிங்கமானது. அதில் சமூகநீதியே இல்லை. அது ஒரு கொடுமையான வரலாறு. இதற்காக ஒவ்வொரு பாரதீயனும் வெட்கப்படவேண்டும். ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்.

5. பாரதம் எனும் நிலப்பரப்புக்கு, தேசம் என்ற ஒரு பொது ப்ரக்ஞையை உருவாக்கியது, ப்ரிட்டிஷ் வெள்ளையர்களின் கொடை.

6. மஹாத்மா காந்தி, கத்தியின்றி ரத்தமின்றி நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.

7. க்றிஸ்தவ மிஷனரிகள் வந்திருக்காவிட்டால் பாரதத்தில் எங்கே பள்ளிகளும் மருத்துவமனைகளும் உருவாகி வந்திருக்கும்?

8. ஜே கிருஷ்ணமூர்த்தி (வகையறா) பள்ளிகளில் அன்பும் சகோதரத்துவமும், இரட்டைவேடமின்மையும் அறிவியல் பூர்வமாகக் கேள்விகேட்கும் மனப்பான்மையும் ‘பயமற்ற’ கல்வியும், மேட்டிமைத்தனமின்மையும் புகட்டப் படுகின்றன.

9. பள்ளிக் கல்வி என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமாகத் தேவை; படிப்புக்காக இல்லாவிட்டாலும் பிறகுழந்தைகளோடு பழககிழக அது முக்கியம்.

10. தொலைக்காட்சியில் ஆயிரம் எதிர்மறை விஷயங்கள் இருக்கலாம். ஆனால் பொது அறிவுக்கு, நடைமுறைச் செய்திகளை அறிந்துகொள்வதற்கு அது முக்கியமானதே.

11. குழந்தைகளுக்கு வீடியொ விளையாட்டுகள் சரியில்லை. அவற்றால் அவர்கள் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

12. குழந்தைகளின் கையின் கணிநி உபகரணங்கள் கொடுத்தால் குழந்தையின் கதி அதோகதி.

13. ஸோஷியல் மீடியா என்றாலே சராசரித்தனம் தான். வதந்தி பரப்புதல் மட்டுமே அவற்றில் நடக்கிறது. அவற்றிலிருந்து நாம் எந்த உருப்படியான விஷயத்தையும் கற்றுக்கொள்ளவே முடியாது.

14. தற்காலத் தமிழ் இலக்கியம்.

15. ‘த ஹிந்து’ தினசரிப் பத்திரிகையை நாம் அதன் நடு நிலைவாய்ந்த சீரிய கருத்துகளுக்கு மட்டுமல்லாமல், அதன் ஆங்கிலத் தரத்துக்காகவும் அவசியம் படிக்கவேண்டும்.

16. அறிவியல் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக அதிகஅளவு இந்த லிபரல் ஆர்ட்ஸ் வகைப் படிப்புகள் (சமூகவியல், மானுடவியல், இலக்கியத் திறனாய்வு, தத்துவம் இன்னபிற) முக்கியம். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, அறச்சீலர்களாக விளங்க இந்தப் படிப்புகள் முக்கியம்.

17. தமிழ்த் திரைப்படங்கள் தொழில் நுட்பரீதியிலும் உலகத்தரம் வாய்ந்தவை. உதாரணத்துக்குக் கமலகாசனாரின் மேக்கப்பின் தொழில் நுட்பம்.

18. கலைஞன், எழுத்தாளன் போன்றவர்கள்தாம் சமூகத்தின் மனச்சாட்சிகள். அவர்கள்தாம் தத்தம் காலங்களின் சாட்சியங்கள், பிரதிநிதிகள். அறத்தையும் நேர்மையையும் அடிமட்டத்தில் அமுக்கப் பட்டுள்ளவனையும் பிரதிபலிப்பவர்கள்.

19. இலக்கியம், கலை போன்றவைகளில் உருவாக்கியாகவோ, திளைப்போனாகவோ ஒருவன் ஈடுபடவில்லையானால் – அவன் (அல்லது அவள்) தன் வாழ்க்கையின் உன்னதமான சாத்தியக் கூறுகளை இழந்தவன். முழுமையற்றவன்.

20. பொருளின் பொருள் கவிதை.

21. பாரத முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க எஞ்ஜினீயர்.

22. ஜவாஹர்லால் நேரு, கரம்சந்த் காந்தி போன்றோர் வெற்றிகரமான வழக்குரைஞர்கள்.

23. ராமச்சந்திர குஹா, ஒரு தேர்ந்த வரலாற்றாளர். அவர் மட்டுமல்ல – ரொமிலா தாபர், இர்ஃபன் ஹபீப் போன்றவர்களும்தான்.

24. இசுடாலிர், உண்மையில் டாக்டர் இசுடாலிர். தலைமைதாங்கும் பண்பும், சாதுர்யமும் மிக்கவர்.

25. இஸ்லாம், ஒரு அமைதி மார்க்கம்.

26. இஸ்லாமின் வீரியத்துக்கு, பாரதத்தின் அக்கால அரசுகள் தகுந்த பதிலளிக்கமுடியாமல் இருந்ததானால்தான் படையெடுப்புகள் நிகழ்ந்தன.

27. மங்கோலிய மொகலாயர்கள் வந்திருக்காவிட்டால், பாரதப் பண்பாடு இவ்வளவு விகசிப்புடன் இருந்திருக்காது.

28. ‘அக்பர்’ கருணையே வடிவாகவும், ஹிந்துக்களிடம் ஆதூரமாகவும் நடந்து கொண்டவர்.

29. அலெக்ஸாண்டர், த க்ரேட்.

30. க்றிஸ்தவம்  என்பது அன்பு/கருணை மார்க்கம்.

31. ‘ஹிந்துயிஸ்ம்’ ஒரு மதம்.

32. தமிழ்ச் சைவம் என்பது ‘ஹிந்துயிஸ்ம்’ அல்ல.

33. திராவிடர்கள். திராவிடம்.

34. ஆரியர்கள். ‘கைபர் போலன்.’

35. லெமூரியா.

36. எனக்குப் பிறகு  இங்கு வந்தவர்கள், சர்வ நிச்சயமாக வந்தேறிகள்.

37. ஈவெரா, ஒரு பெரியார்.

38. தமிழன் ஒரு தனி இனம்.

39. தமிழனுக்கு இருக்கும் அறிவியல் பாரம்பரியம் பெரிது.

40. க்ரேக்கம், லத்தீன், ஸம்ஸ்க்ருதம் போலவே, தமிழ் மொழியும் ஒரு செம்மொழிதான்.

41. ‘அந்தக் காலத்’ தமிழகத்தில் ஜாதிப் பகுப்பு இருந்திருக்கவில்லை.

42. பௌத்தம் அஹிம்ஸையை, ஜீவகாருண்யத்தை போதிக்கும் மதம் என்பதற்கு அப்பாற்பட்டு, அது ‘ஹிந்து மத’த்திற்கும் ஜாதிப் பிரிவினைக்கும் எதிரானது. பெண்ணுரிமையை உயர்த்திப் பிடித்தது.

43. கோதம புத்தர் ஸாத்வீகி. கடவுள் நம்பிக்கையற்றவர். அவர் வேதங்களை, இதிஹாஸங்களை நிராகரித்தார்.

44. பாரதத்தில் அறிவியல், தொழில் நுட்பப் பாரம்பரியம் இருந்திருக்கவில்லை – ப்ரிட்டிஷ் வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் முன்னேற்றம் ஏற்பட்டது.

45. ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு முன்வரை, பாரதத்தில் ஒரு பிரிவினர் (=ப்ராம்மணர்கள்) மட்டுமே கல்வி பெறமுடிந்தது. பிறருக்குக் கல்வி மறுக்கப்பட்டது.

46. பாரதத்தில் ஒருகாலத்தில் பரவலாக இருந்த ஸதி ப்ரதா (உடன்கட்டை விவகாரம்), பெண்பாலருக்குக் கல்வியில்லாமை, தீண்டாமை போன்றவற்றை ஒரு முடிவுக்குக் கொணரப்பட ஆரம்பித்தது வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பின்னர் தாம்.

47. பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கரும், ரபீந்த்ரநாத் ட்டாகுரும் ஹிந்து மத நம்பிக்கைகள் பலவற்றை எதிர்த்தனர் என்பதற்கு அப்பாற்பட்டு இஸ்லாமைப் போற்றினர்.

48. பாரதத்தின் முதல் கல்வியமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆஸாத், பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி ஸாகிர் ஹுஸ்ஸைய்ன் போன்றவர்கள் ஜிஹாதி வெறியர்கள் அல்லர், அவர்கள் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்கள்.

49. ஜெஸுயிட் ‘ய்யேஸு சபை’ பாதிரிமார்கள் கருணையே உருவானவர்கள், உலகெங்கும் சமாதானத்துக்கும், கல்விக்கும், ஆரோக்கியத்துக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்களிப்பை நாம் எப்படி மறக்கக் கூடும்?

50. ஹோமியோபதி, யூனானி முறைமைகள் அறிவியல் பூர்வமானவை, சிகிச்சைக்குத் தோதானவை.

51. அணுக்கரு உலை சக்தி என்றாலே அது கதிரியக்கமும் கூண்டோடு கைலாசமும்தான்!

52. வயதானால் விவேகம் வரும்.

53. மரபணுமாற்ற விதைகள்/பயிர்கள் ஆரோக்கியமானவை இல்லை, அவை கேடு விளைவிக்கும்.

54. வடைஅமெரிக்கா போக, அடிப்படை புத்திசாலித்தனமும், செய்யும் தொழிலில் தரமும், திறனும், அறமும் வேண்டும்.

55. வாழ்க்கையில பணம் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. Money is not everything.

56. பெரிய படிப்பு படித்தவன் புத்திசாலி, சான்றோன்.

57. பெரியபெரிய ப்ளூசிப் வணிக நிறுவனங்கள்தாம் பாரதத்தின் உயிர் நாடி.

58. ஸ்டாக்மார்க்கெட் / பங்குச் சந்தை உண்மையாகவே பொருளாதாரத்துக்கு உதவுகிறது, அதனைப் பிரதிபலிக்கிறது.

59. அரசியல் இஸ்லாம் வேறு, பொது/ஆன்மிக இஸ்லாம் வேறு.

60. ஆர்கனிக், இயற்கைவேளாண்மையில் கெமிக்கல்கள் இல்லை.

61. ஊடகங்கள் நமக்குச் சரியான செய்திகளைச் சேர்ப்பிப்பதற்காகவே செயல்படுகின்றன.

62. ஊடக (பத்திரிகை, டீவி) நிருபர்கள் நேர்மையைச் சந்தேகித்தால் பேதியில் போவோம்.

63. தமிழகத்தின் கல்வி நிலை உச்சத்தில் இருக்கிறது. ஏனெனில் பாரதத்திலேயே அதிக அளவு பிஹெச்டி, எம்ஃபில் ஆய்வாளர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

64 .தமிழனுக்கு வீரம் ஏகத்துக்கும் அதிகம். சான்று: புறநானூறு. அதனால்தான் மொகலாயர்களோ ஸுல்தான்களோ தமிழகத்திடம் வாலாட்டவில்லை.

65. ஈவெரா வந்தபின் தான் தமிழனுக்கு சுயமரியாதை ஆரம்பித்தது.

66. திராவிடப் பகுத்தறிவுதான் உலகத்திலேயே அக்மார்க் பகுத்தறிவு.

67.  திராவிடர்களின் பங்களிப்புகளால்தான் தமிழகம் சுபிட்ச நிலையில், முன்னேற்றத்தை நோக்கிப் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

68. ‘இடதுசாரிகள்’ படிப்பாளிகள் பண்பாளர்கள். நேர்மையானவர்கள்.

69. வயதான, முதிர்ந்த இடதுசாரிப் பார்வையுடையவர்கள், விடலைகள் அல்லர்.

70. ‘வலதுசாரிகள்’ முட்டாட்கள், அஅறிவியல்தர உளறலாளர்கள்.

71. முதலாளிகள் என்றாலே அயோக்கியர்கள்.

72. கம்யூனிஸ்ம், மாவோயிஸ்ம், ஸோஷலிஸ்ம் போன்றவை ஃபாஸ்ஷிஸ்ம் வகைகளுக்கு எதிரானவை.

73. கம்யூனிஸ்ம் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது.

74. கார்ல் மார்க்ஸ் ஏழ்மையில் வாடியவர், உழைத்துச் சம்பாதித்தவர்.

75. ஆம்பேட்கர், இந்திய அரசியல் ஸாஸனத்தை எழுதியவர். பாரத கான்ஸ்டிட்யூஷனின் தந்தை.

76. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.

77. ஏழைகள் என்றாலே நேர்மையானவர்கள்.

78. கோவில்கள் சுற்றுலாத் தளங்கள்; அவை ஒருவேளை, இறைத்தலங்களாகவும் இருக்கலாம்.

79. கோவில் அர்ச்சகர்கள், பூஜாரிகள் பொதுப்பணித்துறைச் சிப்பந்திகள் போலத்தான்.

80. நாங்கள் சொல்லும் பேலியோ, கீடோ வகை உணவுகளைத் தான் அந்தப் பேலியோ காலங்களில் – பழங்குடிமக்கள், வேட்டையாடி உணவைச் சேகரம் செய்பவர்கள் உண்டனர்.

81. பாரதத்தில் ஒரே ஒடுக்கப்படாத ஜாதியினர் ப்ராம்மணர்களே. ஆகவே அவர்கள் பிற ஜாதிகள் அனைத்தையும் ஒடுக்குகிறார்கள். ப்ராம்மணர், ப்ராம்மணியம், ப்ராம்மகணக்குப்பிள்ளை போன்றவர்கள் ஒழிந்தால் ஆட்டொமெடிக்காக பாரதத்தில் சுபிட்சம் தவிர வேறொன்றுமில்லை.

82. மனித உயிரினம், இறைச்சி உணவை உண்பதற்காகத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

83. இயற்கை விவசாயம்.

84. ஆர்கனிக் விவசாயம், உலகத்துக்கே சோறுபோடும்.

85. க்ளோபலைஸைஷேன் – உலகமயமாக்கல் என்பது கடந்த சில பத்தாண்டுகள் சமாச்சாரம். இதனால்தான் உலகமே அயோமயமாகி அழிக்கப் பட்டுக்கொண்டு வருகிறது.

86. ஸோஷலிஸப் பொருளாதாரம்.

87. இந்தக் கால இளைஞர்கள் சுத்த வேஸ்ட்.

88. ‘எங்களோட அந்தக் காலம்’ பொற்காலம்.

89. பார்ப்பன-பனியா சதி.

90. பாரதம், குறுந்தேசியங்களின் சிறைக்கூடம்.

91. ஃப்ரான்ஸ் தேசம்,  அதன் புரட்சிகர பிம்பத்துக்கேற்ப ‘சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்’ என்பதை எப்போதுமே உயர்த்திப் பிடித்திருக்கிறது.

92. ஆஃப்ரிக்க அடிமை வியாபாரம் வெள்ளையர்களால் மட்டுமே, அவர்கள் சுயலாபத்துக்காக நடத்தப் பட்டது.

93. ஃப்ரேங்க்கோஃபோன் இலக்கியம். (சாரு நிவேதிதா ஸ்பெஷல்)

94. இஸ்லாமிய நாடுகளில் இசை இல்லை.

95. இஸ்லாமில் அடிமை முறை இல்லை – எல்லாமே சகோதரத்துவம் தான்!

96. முப்பது வயதுக்குமேல் தொப்பை தள்ளிக்கொண்டு வருவது சகஜமப்பா.

97. நாற்பது வயதுக்குமேல் புதிதாக எதையும் கற்றுக்கொள்வது கஷ்டம்.

98. நாம் நம் மூளையில் 5%யைக் கூட உபயோகிப்பதில்லை. (மாறாக ஐன்ஷ்டீன், 80% உபயோகித்தார்!)

99. தமிழில் தரமான (காகிதக்கூழ்) புத்தகங்களைப் பதித்தால், அவற்றை உடனடியாக வாங்க ஆயிரம்பேர் தயார்!

100. தமிழலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் தரமான ஆர்வலர்கள், குறைந்தபட்சம் 500 பேர் இருப்பர்.

101. பேலியோ உணவுமுறை என்பது ஒரு படுஸீரியஸ் விஷயம், ஒரு அற்ப ஜோக் அல்ல.

:-(

-0-0-0-0-

(இந்த ஜாபிதா, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொகுக்கப்பட்டு மேலதிகமாக வரும், விடாது பொய்ப்பு!)

24 Responses to “நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்”

 1. Sivaaa Says:

  102. ரிக் வேதத்திலேயே அல்ஜீப்ரா இருக்கிறது
  103. புஷ்பக விமானம் ஏரோபிளேன் டெக்னாலஜியை நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே அறிந்திருந்தனர்.


  • மேற்படி ஜாபிதாவில் நான்கூட சிலகாலம் நம்பிய விஷயங்கள் இருக்கின்றன. சில என் ஆப்த நண்பர்கள் நம்பியவை.

   கிண்டல், இடக்குப் பேச்சு எனக்கும் வரும் என்றாலும், நான் ஓரளவுக்கு வேதங்களைக் கற்றவன் (முறையாக அல்ல) என்றவகையில் எனக்கு அம்மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கவில்லை. இதைப் பற்றி, தரம்பால் அவர்களைக் குறித்த குறிப்புகளிலும் இன்னும் பிறவற்றிலும் எழுதியிருக்கிறேன்.

   எனக்குப் பல விஷயங்களில் சமனமின்மையும் அறியாமையும் இருக்கிறது என்பதையும் அறிவேன் – அவற்றிலொன்று, தான் முட்டாள் எனக்கூட அறியமுடியாத  ‘டன்னிங்-க்ரூகர் விளைவு’ முட்டாள் பெருமகன்களுடன் உரையாடும் கலை. இதெல்லாம் எனக்குத் தேவையா எனச் சலித்துவிடுகிறது.

   நீங்கள் எந்தெந்த விஷயங்களை முறையாகவோ அல்லது அப்படியில்லாமலோ கற்றுக்கொண்டு கரையேறியிருக்கிறீர்கள், எதில் விற்பன்னர், எதில் மேதாவி, அல்லது சராசரி, எவற்றில் அறியாமை என்பவற்றைத் துளிக்கூட அறியேன். ஆகவே உங்களைக் குறித்து ஒரு திடமான நிலைக்கு நான் வரவில்லை. (எனக்கு அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இல்லைதான்)

   ஆனால், ஒரு நகைச்சுவைக்காக தாங்கள் இப்படிப் பின்னூட்டமிட்டிருக்கலாம்.

   அவரவரக்கு அவர்கள்தாம் சாட்சி.

 2. K.Muthuramakrishnan Says:

  77. How do you say poor are not honest?


  • This is what I said, siree. “77. ஏழைகள் என்றாலே நேர்மையானவர்கள்.”

   Just because one is Poor (in terms of economics), we cannot assume that the individual would be honest. That’s all it means. It does NOT mean that being poor could be conflated with lack of ethics.

   Economic status and Ethical status need not go together. Same applies to Rich folks too.

   Otherwise: It is tantamount to assuming that, in a traffic-accident, the bigger vehicle is always at fault. “The small vehiclewallah was just minding his own business, obeying all rules, and this big carwallah suddenly bumped into him!” narrative.

   • Kannan Says:

    77 I agree, here is a story of my friend.

    He helped a poor boy with a cycle and a tea drum on the condition that his money should be paid back. The guy just disappeared on the first day. After much difficulty, my friend tracked him to his home in not a better part of the town. He was surrounded by the boys parents and neighbors and abused him with all sorts of ‘mummy daddy’ words. Finally he gave up and escaped with his clothes intact.

    Few years later I met the boy on the street and he spoke to me really well, but no word about the incident at all.

    பாரத முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க எஞ்ஜினீயர்.

    I’ve seen a photo of APJ sitting on a floor in his trousers and assembling a rocket cone in a small room.

    Do you really think he don’t know about propulsion, navigation and some astronomy ?

    Cheers /-

    Kannan


    • Sir, will respond in some time. Thanks.

     APJAK was a good student, project manager, team player, sweet person who would not offend any one, eventually became a mascot for Indian tech efforts etc etc for other reasons. I am saying this only based on evidence, which unfortunately I cannot share. My aim is not to belittle a person, unless he/she is a modern tamil litter-ateur.

     He can be celebrated for many things, but not engineering.

     There is a difference between a technologist and an engineer. I have seen the photos (more than one), have ‘moles’ in ISRO, and am quite ancient enough to remember quite a few things.

     So.

 3. Rajmohan Says:

  கிராமத்தில் வாழ்பவர்கள் அப்பாவிகள்,ஏமாற்ற மாட்டார்கள்


  • ஆமாம். ;-)

   வெள்ளைத் தோலுடைத்தவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ரூமர்சந்திர குஹா வெள்ளைத் தோலர்.

   நான் கறுப்புத்தோலன். ஆகவே பொய்யன்.

 4. dagalti Says:

  Have you written about 8 and 9 in earlier blogposts here?


  • ஐயா, குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு இவை குறித்து எழுதவில்லை என நினைவு. ஆனால் தரவுகள் ஓரளவுக்கு இருக்கின்றன.

   8. ஜே கிருஷ்ணமூர்த்தி (வகையறா) பள்ளிகளில் அன்பும் சகோதரத்துவமும், இரட்டைவேடமின்மையும் அறிவியல் பூர்வமாகக் கேள்விகேட்கும் மனப்பான்மையும் ‘பயமற்ற’ கல்வியும், மேட்டிமைத்தனமின்மையும் புகட்டப் படுகின்றன.

   -> என் குழந்தைகளின் ஒன்று மூலமாகவும், இன்னமும் பலவாறாகவும் இம்மாதிரிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் பிள்ளைகளையும் அறிந்திருக்கிறேன். (ஒருகாலத்தில் ஒரு ஜேகே பள்ளியில் சேர விருப்பமிருந்து, பின்னர் ஹோம்வர்க் செய்ததில் விட்டுவிட்டேன் – சர்வ நிச்சயமாக, அதற்கு ‘சீ, அந்தப் பழம் புளிக்கும்’ எனும் காரணமில்லை).

   பிரச்சினைகள் யாவையென்றால்: கிருஷ்ணமூர்த்தியின் பார்வையும், வாழ்க்கையும் ஒருமாதிரி முதற்கோணல்கள், அவருடைய ஒன்றிரண்டு மேற்கோள்கள் எனக்கும் பிடிக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு, பின்னர் அதில் சேர்ந்த அடிப்பொடிகளும், அவர்களின் சமூகப் பின்புலமும், ‘உன்னைவிட எனக்குத் தத்துப்பித்துவம் தாஸ்தீ’ மனோபாவமும். அதற்குப் பின்னர் அவற்றின் என்டைட்டில்ட் (திமிர்பிடித்த?) குழந்தைகளும்… (‘உலகத்தைத் திருத்த நான் அவதரித்திருக்கிறேன்! கொஞ்சம் காத்திருங்கள், பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் என்ஜிஓ வேலையில் சேர்ந்து உங்களைத் திருத்தியே விடுவேன்!’ )

   இதைத் தவிர ஓயாத பேச்சு அப்படியொரு பேச்சோதிபேச்சு, போங்கள். சலிக்கவைக்கும் இடியாப்ப விவாதங்கள். மோவாக்கட்டை சொறிதல்கள்.

   (ஆனால், தனிப்பட்ட முறையில், பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் சில வாத்திகளையும், சில விதிவிலக்குக் குழந்தைகளையும் அறிவேன் – இவற்றுக்காக, அம்மாதிரி பள்ளிகளைக் குற்றம் சொல்லமுடியாதல்லவா?)

   9. பள்ளிக் கல்வி என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமாகத் தேவை; படிப்புக்காக இல்லாவிட்டாலும் பிறகுழந்தைகளோடு பழககிழக அது முக்கியம்.-

   > என் குழந்தைகளில் ஒன்று ;ஹோம் ஸ்கூல்’ செய்கிறது. இன்னொன்று, ஏறத்தாழப் பறந்தாயிற்று. நான் தீவிரவாத வாத்தியாகவும் இருந்திருக்கிறேன். பள்ளி நிர்வகிப்பு அதுயிது எனக் காலம் ஓடியிருக்கிறது. பலவிதமாக வளர்ந்த/வளர்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கிறேன். ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பார்க்கிறேன். பள்ளிகளில் உள்ள கிடுக்கிப் பிடிப் பிரச்சினைகளையும் சமூகத்தின் தேவைகளையும். ஆகவே. இருந்தாலும்.

   பள்ளிகளும், குறிப்பிட்ட சூழல்களில் தேவையாக இருக்கலாம். ஆனாலும் அவை neither necessary nor sufficient.

   As always, YMMV.

   • dagalti Says:

    விரிவான பதில் கமெண்ட்டுக்கு நன்றி.

    8 – அட கிஷ்ணமூர்த்தின்னா கிஷ்ணமூர்த்தியே தானா. கொஞ்சம் மேலோட்டமா உள்கிவாங்கிக்கிட்டு கேள்வி கேட்டேன். எனக்கு மூன்றாம் கை தகவல் கூட கிடையாது.

    என் விசனம் வேறு: பொதுவா இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்ல மரமே இல்லை (ஆதலால் மரத்தடி இல்லை) மைதானம் அப்படின்னு சும்மா கணக்கு காட்டுறாங்க. ஆசிரியர்: மாணவர் ரேஷியோ எல்லாம்….மூச். பிரபல மைய நீரோட்ட பள்ளிக்கூடங்கள் அனேக கதி இது.

    இதெல்லாம் அவ்வளவு முக்கியம் கிடையாது, காம்பென்ஸேட் பண்ணிக்கக்கூடியது தானோ என்னவோ.

    9 – As a reader of several of your older posts on schooling I must say I’m still a bit surprised. I somehow thought you hold the ‘joy of learning together’ in high regard – e.g. the post about kids assembling DNA helix from leaves.

    Anyway, home schoolingலாம் ஆழ்ந்த அறிவுழைப்பும், உத்வேகமும் கோருபவை. சாதரணர்களோம் risk circumscribing kids’ growth by subjecting them to our tutelage.

    அதுனால உங்க Test conditionsல வர்ற mileage இது – என்பதை மட்டும் கூறிக்கொண்டு… :-)

 5. விஜயராகவன் Says:

  ஒத்திசைவு வாசகர்கள் மொத்தம் 7.5 பேர் தான்.
  ராமசாமி பொழுது போகாமல் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.


  • ஏன்? அப்படி எழுதக் கூடாதா? என்ன பிரச்சினை??

   எனக்கு, எழுத்துப் பயிற்சிக்காக எழுதுகிறேன். படிக்கும் பாவப்பட்டவர்கள், புதிர் அவிழ்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாகத் தெரிகிறார்கள். எனக்கும் புதிர்களில் ஆர்வம்.

   ற்றொம்பத் துள்ளினால், நீவிர் ஏழரைகளில் இருந்து விலக்கப்படுவீர்.

   ஊக்கபோனஸ்ஸாக, கொரோனாவால் கொடூரமுடிவு காண, சபிக்கவும் படுவீர் எனச் சொல்லிக்கொண்டு… …

   சபிச் சக்ரவர்த்தி.

   • விஜயராகவன் Says:

    மன்னிக்கவும். “நம் பொய்கள்” பட்டியலுக்கு நான் எழுதியது, உங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எனக்கு உம்மை விட்டால் யாரிருக்கிறார்கள். சபித்து விடாதீர்கள் ராஜரிஷியே.


    • யோவ்!

     எண்ணிக்கை வரிசை போட்டோ, அல்லது இளைஞர் லெனி போன்று # போட்டோ உங்கள் ‘பொய்’ வரிசையை நீட்டித்திருந்தால் இந்த ராஜரிஷி பட்டம் எனக்குக் கிடைத்திருக்குமா? :-(

 6. Leny Says:

  சார், என் சிற்றறிவுக்கு தெரிந்தது
  “# ப்ராம்மணர்கள் அசைவம் (கோழி, ஆடு, மாடு, பன்றி) சாப்பிடாதவர்கள்”

 7. Ranga Says:

  Sir.

  7.5 is a poi. That’s what vijayaraghavan wrote.


  • யோவ்! அது உண்மைதான். ஆகவே ஜாபிதாப் பொய்.

   ஏழரை நாட்டுச் சனி போல 7.5 ஒரு எண்ணிக்கைக் கணக்கு.

   (ஆக்சுவலாக இன்னமும் கம்மி; ஆனால் மருவாதியக் காப்பாத்திக்கணும், வாத்யாரே!)


 8. Ram,

  Atleast, in the list above, please write a brief about the below lies.
  (Had given below my reason too why I request you to write about that point)

  4. பாரதத்து ‘ஜாதி’ அல்லது வர்ணப் பகுப்பு என்பது அசிங்கமானது. அதில் சமூகநீதியே இல்லை. அது ஒரு கொடுமையான வரலாறு. இதற்காக ஒவ்வொரு பாரதீயனும் வெட்கப்படவேண்டும். ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்.
  Should caste need not be abolished? Or you argue that it’s not possible.

  16. அறிவியல் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக அதிகஅளவு இந்த லிபரல் ஆர்ட்ஸ் வகைப் படிப்புகள் (சமூகவியல், மானுடவியல், இலக்கியத் திறனாய்வு, தத்துவம் இன்னபிற) முக்கியம். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, அறச்சீலர்களாக விளங்க இந்தப் படிப்புகள் முக்கியம்.
  I had seen many people advocating this a lot. The CEO of the company which I work for advocates this too. So would like to know why you consider it as a lie.

  21. பாரத முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க எஞ்ஜினீயர்.
  Again, why you discard him?

  22. ஜவாஹர்லால் நேரு, கரம்சந்த் காந்தி போன்றோர் வெற்றிகரமான வழக்குரைஞர்கள்.
  Do you mean to say they were not so successful? (esp. I had read Gandhi’s biography from which I realise that he’s is _indeed_ a successful advocate)

  40. க்ரேக்கம், லத்தீன், ஸம்ஸ்க்ருதம் போலவே, தமிழ் மொழியும் ஒரு செம்மொழிதான்.
  Ah. Why Sanskrit is classic and Tamil is NOT?

  46. பாரதத்தில் ஒருகாலத்தில் பரவலாக இருந்த ஸதி ப்ரதா (உடன்கட்டை விவகாரம்), பெண்பாலருக்குக் கல்வியில்லாமை, தீண்டாமை போன்றவற்றை ஒரு முடிவுக்குக் கொணரப்பட ஆரம்பித்தது வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பின்னர் தாம்.

  53. மரபணுமாற்ற விதைகள்/பயிர்கள் ஆரோக்கியமானவை இல்லை, அவை கேடு விளைவிக்கும்.

  59. அரசியல் இஸ்லாம் வேறு, பொது/ஆன்மிக இஸ்லாம் வேறு.
  Do you mean to say Islam is totally one and the same and is intolerant?

  67. திராவிடர்களின் பங்களிப்புகளால்தான் தமிழகம் சுபிட்ச நிலையில், முன்னேற்றத்தை நோக்கிப் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது.
  This is advocated by many I respect (even people like Dr.Bruno whom I consider, to be honest, & trustable)

  75. ஆம்பேட்கர், இந்திய அரசியல் ஸாஸனத்தை எழுதியவர். பாரத கான்ஸ்டிட்யூஷனின் தந்தை.

  83. இயற்கை விவசாயம்.
  84. ஆர்கனிக் விவசாயம், உலகத்துக்கே சோறுபோடும்.

  85. க்ளோபலைஸைஷேன் – உலகமயமாக்கல் என்பது கடந்த சில பத்தாண்டுகள் சமாச்சாரம். இதனால்தான் உலகமே அயோமயமாகி அழிக்கப் பட்டுக்கொண்டு வருகிறது.
  Do you refuse that Globalisation is the reason for many of our problems?

  86. ஸோஷலிஸப் பொருளாதாரம்.
  Again, please write/point some links. (many argue against it but am lazy enough to find the right books/articles as to how socialism spoiled)

  100. தமிழலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் தரமான ஆர்வலர்கள், குறைந்தபட்சம் 500 பேர் இருப்பர்.
  (Do you estimate even below numbers?)

  101. பேலியோ உணவுமுறை என்பது ஒரு படுஸீரியஸ் விஷயம், ஒரு அற்ப ஜோக் அல்ல.


  • ஐயய்யோ. 101 வரை மூச்சுமுட்டப் படித்த முதல் ஆள் தாங்கள்தான். 🙏🏿🤔

   உங்களுக்குப் பதில்(!) அளிக்காமல் வேறு யாருக்கு பதிலளிக்கப்போகிறேன், சொல்லுங்கள்? 🐸


 9. பட்டியலில் அவரவர்களுக்கு ஆர்வமான பொய்யைப் பற்றி கேட்டு, நீங்கள் பதிலளித்து கமெண்ட்ஸ் நெஸ்டிங் உக்கிரமாகி, தமிழ் எழுத்துரு ஜாபனீஸ் போல மேலிருந்து கீழ் ஒழுகப்போகிறது.


  • ஐயா, நீங்கள் நினைப்பதுபோல அவ்ளோ அதிகம்பேர் இதெல்லாம் படிப்பதில்லை. கவலைவேண்டேல். கூடுகட்டுதல் எல்லாம் இல்லை.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s