பௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள்

09/05/2020

இளைஞர் ஆர்எஸ் ப்ரபு அவர்களைப் பலவிஷயங்களின் காரணமாக (=அவருடைய களஅனுபவங்கள், படிப்பு, தீர்க்கமான – தமிழகத்தின்மீது கரிசனம்கொண்ட கருத்துகள், வேளாண்மை குறித்த பார்வைகள், முனைப்பு, வேளாண்ஆராய்ச்சி குறித்த ஆதங்கங்கள்…++) மதிக்கிறேன். (ஒரிரு முறை இவர் குறித்து எழுதியிருக்கிறேன்கூட: …நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள் 09/07/2017)

…சிலசமயங்களில் தனிப்பட்ட முறையில், அவருடன், கொஞ்சம்போல மின்னஞ்சல் பரிமாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இருந்தாலும், அவருடைய எழுத்துகளில் பலவற்றை நான் படிக்கும் பாக்கியம் பெறவில்லை என்பதால், அவருடைய அரசியல் நிலைபாடு  பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, கொஞ்சம் குண்ஸாகத்தான் அறிவேன் – ஏனெனில் நான் ‘ஸோஷியல்மீடியா சரணம் கச்சாமி’ அல்லன். அது எப்படியாயிருந்தாலும் எனக்கு எதிர்மறைப் பார்வை கொண்டவராக இருந்தாலும், அவருடைய பிற கல்யாண குணங்களுக்காக அவரைத் தொடர்ந்து மதிப்பதாகத்தான் திட்டம். பார்க்கலாம்.

இருந்தாலும், அவருக்கு நகைச்சுவை உணர்ச்சியும் மிகமிக அதிகம் என்பதை நேற்றுதான் புரிந்துகொண்டேன். :-)

ஏனெனில் நண்பர் ஒருவர் இந்தச் சுட்டியை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். இதில் ஆர்எஸ் ப்ரபு அவர்கள், ஒரு புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டி (“திரு எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய “பவுத்தம்: ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்” என்ற நூலில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்ட வரிகளே மேலே கட்டுரையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.”) ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இம்மாதிரி ஒரு வரலாற்றுச்சோக நகைச்சுவைப் புனைவை, வளமான கற்பனைப் பொழிவுகள் பலப்பல செய்யும் ஜெயமோகன் அவர்களால்கூட எழுதமுடியாது. ஒருவேளை – நம்மிடம் மையம் கொண்டிருக்கும் முப்பெரும்சோகம், எழிலாகிப் பெருக்கம்கொண்டு, நாற்பெரும்சோகமாக பரிமாண வளர்ச்சியடைகிறதோ? :-(

மேலும் – சர்வ நிச்சயமாக பௌத்த மூல/அடிப்படை நூல்கள் ஒன்றையும்கூட, தேர்ந்த ஆராய்ச்சிகளையும் எழில் இளங்கோவன் அவர்கள் சுத்தமாகப் படித்ததில்லை என்பதற்கு அப்பாற்பட்டு, அவற்றைப் பற்றி அவர் அறிந்ததும் கூட இல்லை என்பது தெளிவாகிறது. ரெண்டு புத்தகங்களை (தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய வகை + ஹெர்மன் ஆல்டன்பர்க்… ஆம்பேட்கர் அவர்களின் மேலோட்டக் கருத்துகள் இன்னபிற – ஒருகால் மேற்கோள்களாகவே) படித்துப் புளகாங்கிதமடைந்து ‘ஆரியவெறியால் பௌத்தம் அழிந்தது’  என்றவொரு தரவற்ற காலனியவாதக் கருத்துக்கு வந்து, கூட மானேதேனே சேர்த்து, திரிகடுகம் + மிர்ச்சிசூக்தம் நல்லெண்ணெய் விட்டுத் தாளித்து டமாலென்று பரிமாறிவிட்டார், நம் எழில்மிகு ஆசிரியர்! வாழ்க!

நெடிய நெடிமிகுந்த உளறல். அதுவும் அக்மார்க். எழில்மிகு நன்றி!

…தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலப்பலவற்றையும், புத்தகங்களையும் – முக்கியமாக ஆங்கில/ஸம்ஸ்க்ருத (கொஞ்சம்போல) பாலி மூலங்களையும் எழுத்துகூட்டிப் படித்து (ஸம்ஸ்க்ருதம் ஓரளவு தெரிந்து சிலபல இலக்கண சப்தமாற்று விதிகள் தெரிந்திருந்தால் பாலிக்கு ஏகத்துக்கும் போதும்) – அவற்றின் மீதான பாரத/மேல் நாட்டு அறிஞர்களின் தேர்ந்த ஆய்வுகளையும், சமகால வரலாற்றுப் பதிவுகளையும் ஓரளவுக்குப் படித்துள்ள/சிந்தித்துள்ள எனக்கு, இம்மாதிரி தமிழில் மேதாவித்தனமாக கருத்துகள், படு தெகிர்யத்துடன் ஏகோபித்து அட்ச்சிவுடப்பட்டு புத்தகங்களாக எழுதப்படுவதற்கு அப்பாற்பட்டு, அவை, இந்த ஆர்எஸ் ப்ரபு போன்ற புத்திசாலி இளைஞர்களால் இப்படி இனம்கண்டு கொள்ளப்பட்டு எள்ளி நகையாடப் படுவதுதான் ஆச்சரியமாகப் படுகிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. :-)

மேலும், தமிழில் கறாரான ஆராய்ச்சிகள் உருவாவதற்கு, இப்போதைக்கு, ஒரு வாய்ப்போ மசுறோ இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆமென்.

ஆனால் – இதுவொரு பெரிய பிரச்சினை இல்லை; ஏனெனில் தமிழில் அறிவியல்/தத்துவ ரீதியாக ஒரிஜினல் சிந்தனைகள் என நம் செம்மொழியில் ஒரு மசுத்துக்கும் பாரம்பரியம் இல்லை – அதனால் இது ஒரு பெரிய பிறழ்ச்சியல்ல, எல்லாம் நம் பேர்பெற்ற வரலாறுகளின் நீட்சிதான்; ஆக, பிரச்சினை என்பது இம்மாதிரி புத்தகங்கள் வழியாக மட்டுமே ‘வரலாற்று-தத்துவ ஞானம்’ பெறும் அபாக்கிய நிலையில் இருக்கும் தமிழர்களுக்குத்தான். குண்டுச் சட்டியில் குதிரை ட்ரியோ ட்ரியோ. நன்றி.

கீழே –  ஆர்எஸ் ப்ரபு அவர்களின் நகைச்சுவை உணர்ச்சிமிக்க ஃபேஸ்புக் பதிவிலிருந்து வெட்டியொட்டப்பட்ட விஷயம்; இதனை ஒரு தரவுரீதிக்காகப் பதிக்கிறேன் – like a reminder/placeholder and will take it up when I am in a frivolous mood; ஒரிஜினல் புத்தகத்தை – எழில் இளங்கோவன் அவர்களுடையது – நான் படிப்பதாக இல்லை; ஆனால் முடிந்தபோது, வரிவரியாக இந்த மேற்கோள்களை எடுத்து, தரவு ரீதியாக, இன்னொரு சமயம் துப்புரவாக நிராகரிக்கிறேன். (=நிராகரிக்கலாம்.)

இளம் ஆர்எஸ் ப்ரபு அவர்களுக்கும், பெயர் சொல்லத் தேவையற்ற நண்பருக்கும், இந்த அற்புதமான புத்தக மேற்கோள்களை என் கவனத்துக்குக் கொணர்ந்ததற்கு நன்றி.

—0—ஆர்எஸ் ப்ரபு—-0—

பெளத்தம் – சில குறிப்புகள்.

கபிலவஸ்துவில் அரச குடும்பத்தில் பிறந்த இளவரசனான சித்தார்த்தர் துறவு பூண்டு புத்தரானார் என்றும், அவர் சத்ரிய வம்சம் என்று சொல்லப்படுவது முதல் புரட்டு.

பெளத்த இந்தியாவில் சிற்றரசுகள் ஜன்பத் என்றும் பேரரசுகள் மகா ஜன்பத் என்றும் அழைக்கப்பட்டன. அப்போது கபிலவஸ்து உட்பட பத்து நிலப்பகுதிகளில் முடியாட்சி அல்லாத ஓர் அமைப்பு முறை இருந்திருக்கிறது. அதன் தலைவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்க கனம் அல்லது சங்கம் என்ற அமைச்சரவை போன்ற அமைப்பு இருந்திருக்கிறது.

சாக்கியர் எனும் இனக்குழுவின் (சன்ஸ்த்கார்) அப்போதைய தலைவரான சுத்தோதனாருக்குப் பிறந்த சித்தார்த்தன் நால்வர்ணக் கோட்பாட்டின்படி சூத்திரன். இதை தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, டாக்டர் அம்பேத்கர், பேராசிரியர் மைக்கேல் கேரிதர்ஸ், ஹரிகவா அகிரா, பொன்காரத் லெவின் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சாக்கியர்களின் தாய்மொழி பாலி. தமிழுக்கும், பாலிக்கும் உள்ள தொடர்பை மு. வரதராசனார் விரிவாகப் பேசியிருக்கிறார்.

புத்தரைச் சூத்திரன் என்று ஒரு பிராமணர் அவமானப்படுத்தியதை திரிபிடகத்தின் அம்பக்த சூக்தம் பதிவு செய்து வைத்திருக்கிறது.

சித்தார்த்தரது துறவறம் குறித்து இரண்டு கோட்பாடுகள் உண்டு. ஒன்று கதை, இன்னொன்று வரலாறு. ஒரு முதியவர், ஒரு நோயாளி, ஒரு பிணத்தைப் பார்த்த சித்தார்த்தர் துறவு பூண்டார் என்பது மரபுவழிக் கதை.

சாக்கியர்கள் வாழ்ந்த கபிலவஸ்துவிற்கும், கோலியர்கள் வாழ்ந்த ராம்காமுக்கும் எல்லை ஆறாக இருந்தது ரோகினி ஆறு (இன்று கொஹானா என்று அழைக்கப்படுகிறது).

ரோகினி ஆற்றுநீரைப் பயன்படுத்துவதில் இரண்டு இனக்குழுவுக்கும் சச்சரவு இருந்திருக்கிறது. இன்றுபோல தொழில்முறை விவசாயம், தொழிற்சாலைத் தேவைகள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை இல்லை. யார் முதலில் புழங்குவது என்றுதான் பிரச்சினை.

ஒத்துழைக்க மறுத்த கோலியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சாக்கியர்களின் சங்கம் முடிவு செய்கிறது. இதைக் கடுமையாக எதிர்த்த புத்தர் சங்கத்தை நிராகரித்தார். சங்கம் புத்தரை நிராகரித்து. கபிலவஸ்துவை விட்டுத் துறவியாக வெளியேறினார்.

பேரரசுகளின் ஆளுகைக்கு ஆபத்து வராமலிருக்க இனக்குழு ஆட்சிமுறைகள் அழிக்கப்பட்டன. புத்தரின் காலத்திலேயே கோசல மன்னன் பசனேதியின் மகன் விதுபதன் சாக்கிய இனக்குழுவை அழித்தான்.

பேரரசுகளின் ஆட்சி பரிபாலன சபையில் இராஜகுரு, மகா மந்திரி போன்ற பெயர்களில் அதிகார மையங்களைக் கைப்பற்றினர் ஆரியர்கள். புரோகிதர்கள், சோதிடர்கள், மத குருமார்கள் உருவானார்கள். யாகங்கள், வேள்விகள், பலிகள் உருவாயின. மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கின. கடவுள், விதி, மறுபிறப்பு, தெய்வக்குற்றம் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

ஆட்சியாளர்களும், மக்களும் தெய்வத்தை சமாதானப்படுத்தப் பரிகாரம் வேண்டி ஆரிய பிராமணர்களுக்கு பொருட்களை வாரி வழங்கினார்கள். உழைப்பில்லாமல் வாழும் வர்க்கம் உருவானது.

வேதங்கள் புனிதமானவை, சதுர்வர்ணக் கோட்பாட்டை கேள்வி கேட்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சதுர்வர்ணங்களிடையே சமத்துவம் நிலவக்கூடாது. ஆரியர்களே அனைத்து உரிமைக்கும், ஆதிக்கத்துக்கும் உரியவர்கள். சூத்திரனுக்கு எந்த உரிமையும் இல்லை; அவன் சமூக அடிமை. சூத்திரர்களும், பெண்களும் கல்வி கற்கக்கூடாது என்ற வாழ்க்கை முறை நிறுவப்பட்டது.

இதை எதிர்த்து உருவானதே பெளத்த சங்கம். ஆனால் புத்தர் பவுத்த குருமார்களின் தலைவர் அல்லர். அவரும் பயிற்சி பெறும் துறவிகளுள் ஒருவராகவே விளங்கினார்.

பவுத்தத்தின் புரட்சி ஆரியத்தின் எதிர்ப்பில் இருந்தும், பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்தும் புறப்படுகிறது. அறிவின் பெருமையும், அறியாமையின் சிறுமையும் பவுத்தத்தில் வலியுறுத்தப்படுவதுபோல, வேறு எந்த மதத்திலும் வலியுறுத்தப்படுவதில்லை. மனிதன் தன் கண்களை அகல விரித்து, எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு வேறு எந்த மதமும் இவ்வளவு முக்கயத்துவம் அளிப்பதில்லை.

பின்னாளில் விழிப்புணர்வு என்பதை ஆளாளுக்கு போட்டு அடித்துத் துவைத்து அதன் பேருண்மையைச் சிதைத்துவிட்டனர்.

புத்தர் தன் கருத்தியல் கோட்பாடுகளைப் பவுத்தம் என்று சொன்னதில்லை. ‘தம்மம்’ என்றே பேசி இருக்கிறார்.

புத்தர் ‘நான்கு உண்மைகளில்’ இருந்து பவுத்ததை உருவாக்குகிறார். அவை:

1) மக்கள் வாழ்வில் துன்பம் இருக்கிறது
2) அந்தத் துன்பம் தோன்ற காரணம் இருக்கிறது
3) அதை நீக்க வழியும் இருக்கிறது
4) துன்பத்தை நீக்கி மக்கள் விடுதலை பெற வேண்டும்

துன்பங்களின் தோற்றம் ஆசை என்றும், ஆசையை விட்டொழித்தலே துன்ப விடுதலைக்கான வழி என்றும், இறுதியில் மறுபிறப்பு எடுக்காமல் இருப்பதே துன்பத்தை அழிப்பதற்கான வழி என்றும் பவுத்த நூல்கள் சொல்கின்றன.

அம்பேத்கர் சொல்கிறார்: ‘இவை புத்தரின் உண்மையான போதனைகளின் பகுதிகளாகவா அமைந்துள்ளன? இந்து சமய மரபு முறை பவுத்தத்தின் ஆணிவேரையே அறுத்து எறிவதாக உள்ளது. வாழ்க்கை துன்பமாயின், மரணம் துன்பமாயின், மறுபிறப்பும் துன்பமாயின், அனைத்துக்கும் ஒரு ஒரு முடிவு உண்டு’.

உலகில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்கு மதமோ, தத்துவமோ ஒருக்காலும் உதவாது. துன்பத்தில் இருந்து தப்பிக்க ஒருவழியும் இல்லையென்றால், பின் மதம் இருந்து என்ன செய்ய முடியும்? பிறப்பிலேயே துன்பம், அது எப்போதும் இருக்கும் என்றால் அத்தகைய துன்பத்தில் இருந்து மனிதன் விடுபட புத்தர் என்ன செய்ய முடியும்?

இந்த நான்கு உண்மைகள் பவுத்தர் அல்லாதவர்கள் பவுத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கின்றன. ஏனென்றால் இவை மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாக இருக்ககின்றன.

இவை ஆதியில் புத்தரால் போதிக்கப்பட்ட உண்மையான போதனைகளின் பகுதிகளா அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கித் திணிக்கப்பட்டவையா? பவுத்தத்தின் அடிப்படையான நான்கு கோட்பாடுகளை ஆரியம் சிதைக்க முற்பட்டிருப்பதை அம்பேத்கரின் விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

புத்தரின் பேச்சுகள், உரைகள், விவாதங்கள், அவரின் செயல்பாடுகள் ஆகியன பற்றியெல்லாம் புத்தரோ, அன்றி அவரின் சமகாலத்தவர்களோ யாரும் எழுதி வைக்கவில்லை. அவர் மறைந்து ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திரிபிடகம் என்ற பெயரில் நூல்களாக எழுதப்பெற்றன. இடைப்பட்ட காலங்களில் பவுத்தத்தில் இருந்து பிரிந்துசென்ற ஆரியவாத பவுத்தக் குழுக்கள் புத்தரின் போதனைகளை, தத்துவங்களைச் சிதைத்து, திருத்தி, மாற்றிச் சேர்த்திருக்க அல்லது திணித்திருப்பதற்கு பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

புத்தரின் முதல் பேருரையான காசிப்பேருரையில்தான் துன்பம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ‘நான்கு உண்மைகளைக்’ கூறுகிறார்.

இந்தத் துன்பம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வர்ணம், சாதி, வர்க்கம், சுரண்டல், மதம் போன்றவற்றில் ஒன்றைப் போடுவோம்.

1) மக்கள் வாழ்வில் வர்ணம் இருக்கிறது
2) அந்த வர்ணம் தோன்ற காரணம் இருக்கிறது
3) அதை நீக்க வழியும் இருக்கிறது
4) வர்ணத்தை நீக்கி மக்கள் விடுதலை பெற வேண்டும்.

ஆரியம் மக்களுக்குத் துன்பமாகும்.
ஆரியக் கருத்தியல் அதன் தோற்றமாகும்.
ஆரிய எதிர்ப்பு துன்பம் நீங்க வழியாகும்.
ஆரியம் வீழ்ந்தால் துன்பம் வீழும்.
இதுவே சமத்துவத்திற்கான வழி! காசிப்பேருரையின் நான்கு உண்மைகள் குறித்த புத்தரின் இந்த முழக்கம்தான் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் என்று பவுத்தம் காட்டிவிட்டது!

எண்பது ஆண்டுகள் வாழ்ந்த புத்தர் கி. மு. 483-இல் மறைந்தார். அவரது மரணத்தை பரிநிர்வாணம் (பரிநிப்பான்) என்று அழைப்பார்கள்.

புத்தரது மறைவுக்குப்பின் பவுத்தப் பேரவை கூட்டப்பட்டு, அவரது அனைத்து கோட்பாடுகளையும் வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்ம பிடகம் என்று மூன்று பிரிவுகளாகத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார்கள். இதுவே திரிபிடகம் எனப்படுகிறது. பிடகம் என்றால் பிரிவு என்று பொருள். முதலாம் பேரவையில் தொகுக்கப்பட்ட இந்த திரிபிடகம் எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 100 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பவுத்தப் பேரவை வைசாலியில் கூட்டப்பட்டது. இதில் வைசாலியைச் சேர்ந்த வஜ்ஜியத் துறவிகள் புத்தரால் துறவிகளுக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளைச் சொல்லும் வினய பிடகத்தைத் திருத்தி, மாற்ற வேண்டும் என்றனர்.

பேரவைத் தலைவரான துறவி ரேவதர் அந்தத் திருத்தங்களை நிராகரித்தார். உடனே வஜ்ஜியத் துறவிகள் பேரவையைவிட்டு வெளியேறினர். புவத்தம் முதன்முதலாக உடைந்தது.

புத்தரின் மூலபவுத்தம் ‘ஸ்தவிரதம்’ என்றும் பிளவுபட்டுப் பிரிந்த பவுத்தம் ‘மகாசாங்கியம்’ என்றும் அழைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அடுத்த 400 ஆண்டுகளில் 108 பிரிவுகளாகப் பவுத்தம் பிரிந்தது என்று சொல்லப்பட்டாலும் 18 பவுத்தப் பிரிவுகள் பற்றிய செய்திகள் இருக்கின்றன.

பிரிந்து போன முதல் பவுத்தப் பிரிவான மகாசாங்கியத்தின் ஒரு பிரிவான சைதன்யத்தின் தலைமையிடம் ஆந்திரம். அத்தோடு மூலபவுத்தமான ஸ்தவிரதம் தவிர்த்து எஞ்சியிருந்த பவுத்தப் பிரிவுகளின் தத்துவக் கருத்துகளை எடுத்துக்கொண்டு “மகாயானம்” என்ற ஒரு பெரும்பிரிவு ஆந்திராவில் உருவானது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஸ்ரீபர்வதம் எனப்படும் நாகார்ஜுனகுண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகார்ஜுனர் என்கிற ஆரியர் தோற்றுவித்ததே மகாயானம். அதன் வருகைக்குப் பின்னர் மற்ற பவுத்தப் பிரிவுகள் மங்கத் தொடங்கியது.

புத்தர் தோற்றுவித்த மூலபவுத்தமே தேரவாதம். இதில் சொல்லப்பட்டவை எல்லாம் பகுத்தறிவு கருத்துகள். அதாவது நாத்திகம். நாகார்ஜுனர் தோற்றுவித்த மகாயானம் ஒரு மூடநம்பிக்கைப் பிரிவு. கிட்டத்தட்ட ஆரியவாதத்தின் பெரும்பாலானவை உள்வாங்கப்பட்டிருந்தன.

ஆனால் புத்தர் தோற்றுவித்த தேரவாதம் எனப்படும் மூலபவுத்தத்தை ஹீனயானம் என்று வரலாற்றில் குறிப்பிட்டார்கள். அதாவது இழிவான பாதை. நாகார்ஜுனர் தோற்றுவித்தது மகாயானம். அதாவது பெருவழிப்பாதை. என்ன ஒரு அயோக்கியத்தனம்?

தேரவாதம் (ஹீனயானம்)= பகுத்தறிவு
மகாயானம் = ஆரியக் கோட்பாடு.

மகாயான பவுத்தத்தின் மிகப்பெரிய கேந்திரம் நாளந்தா பல்கலைக்கழகம். அங்கு உடல் உழைப்பில்லாமல் துறவிகள் இருந்த வாழ்க்கை முறையே புத்தரின் மூலபவுத்தக் கோட்பாட்டிற்கு எதிரானது. ஒடுக்கப்பட்ட சூத்திரர்களின் இயக்கமான பகுத்தறிவு பவுத்தத்தை ஒழிக்க வேண்டும் அல்லது மாற்றித் திருத்திவிட வேண்டும் என்பதுதான் மகாயான பவுத்தர்களின் இலக்கு. அதற்காக ஏகப்பட்ட கதைகளை உருவாக்கினார்கள். புத்தரை புதுப்புது அவதாரம் எடுக்க வைத்தார்கள். கிளைக்கதைகளை நுழைத்தார்கள்.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த மகாநாம(ன்) என்பவரால் எழுதப்பட்ட நூல் மகாவம்ச(ம்). இது பாலி மொழியில் இருந்து டோனர் என்பவரால் 1837-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது ஒரு சிங்களர் கதை நூல் போன்றது.

மகாவம்ச, புத்தருக்கு முன் 24 புத்தர்கள் அவதாரம் எடுத்ததாகவும், கடைசி அவதாரமே கவுதம புத்தர் என்றும் சொல்கிறது. நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு புத்தர், பில்லி சூன்யத்தை அடக்கும் புத்தர், இன்னும் பிறக்கக் காத்திருக்கும் புத்தர் என்பதோடு பல்வேறு லோகங்களையும் பேசுகிறது.

வைணவ சமயக் குரவர்களான ஆழ்வார்கள் புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகக் கொண்டுபோய் வைத்துவிட்டார்கள். மச்சாவதராக ஸ்லோகத்தின் ஒன்பதாவது இடத்தில் புத்தர் இருக்கிறார். அப்படியென்றால் ஒன்பதாவது அவதாரமான பரசுராமர் எங்கே?

இதற்கு வித்திட்டது மகாயானப் பிரிவு. புத்தரைப் புத்தபகவான் என்றார் நாகார்ஜுனர். கடவுளுக்கு நிகரான போதிசத்துவர் என்றார். இரத்தமும் சதையுமான உடல் என்பது சூன்யம், அதாவது மாயை. புத்தரின் ரூபகாயமான தோற்றத்தை தர்மகாயம், அதாவது ‘ததாதா’ என்று சொல்கிறது மகாயானம்.

இந்த சூன்ய ததாதா என்ற பெயரைத்தான் ‘ததாகர்’ என்று புத்தரின் பெயராக மாற்றி, திரிபிடகத்தில் நுழைத்துவிட்டார்கள் மகாயானர்கள். ததாதர் என்றால் தெய்வீகம்; புத்தர் தெய்வீகமானவர் என்பதே இதன் பொருள்.

‘மகாயானம் புத்தரை ஒரு தெய்வமாக மாற்றி, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உடையவராக மாற்றியது அவரை வழிபடுவதன் மூலம் எல்லோரும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறுகிறது. புத்தர் மறுத்த கடவுள், அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது. மகாயான பவுத்தம் மூடநம்பிக்கைகள் கொண்ட கழிவுப் பொருட்களுக்கு ஒரு வாகனமாக மாறிவிட்டது’ என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.

காசிக்கு அருகே சாரநாத்தில் தனது முதற் பேருரையில் 1) கொலை செய்யக்கூடாது 2) பொய் சொல்லக்கூடாது 3) திருடக்கூடாது 4) காமம் கொள்ளக்கூடாது 5) கள் அருந்தக்கூடாது என்று ஐந்து ஒழுக்கங்கள் பற்றிப் பேசினார். இவற்றைப் பஞ்சசீலம் என்று பவுத்தம் குறிப்பிடுகிறது.

புத்தர் சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர். பஞ்சசீலம் என்பது துறவிகளுக்கான ஒழுக்கம் மட்டுமல்ல: சமூக ஒழுக்கமும் கூட.

இதைத் திரிபிடகத்தின் ஒரு பிரிவான சுத்தபிடகம் துறவிகளுக்கான ஒழுக்கமாக உபதேசம் செய்யும்போது பஞ்சசீலத்தை மீறுபவர்கள் விலங்கின் யோனியில் இருந்து பிறப்பான், நரகத்துக்குப் போவான் என்று சொல்கிறது.

சொர்க்கம், நரகம், மோட்சம், ஈரேழு லோகம், விலங்கின் யோனியில் மனிதன் பிறக்கும் ஆபாசக் கதைகளை ஆரியப் புராணங்களிலும், ஆரியவாத சிங்கள மகாவம்சத்திலும் பார்க்க முடியும்.

புத்தர் ஒரு பகுத்தறிவாளர், சிறந்த நாத்திகர், மனித நேயத்தைப் பேசும் சமநீதிப் போராளி.

பகுத்தறிவை ஏற்காத, நாத்திகத்தை ஏற்காத, மனித நேயத்தை ஏற்காத, சமநீதியை ஏற்காத, திராவிடருக்கு எதிரான ஆரியம், மகாயானம் என்ற ஆரிய பவுத்தமாக உருமாறி, புத்தரைச் சிதைத்து, அவரின் நேரிய கருத்துகளை புராண மூட்டைகளுக்குள் நுழைத்திருக்கிறது.

பஞ்சசீலக் கோட்பாடு என்பது சமூக ஒழுக்கத்தை முன்னிருத்தும் ஆரிய புராண எதிர்ப்பு முழக்கமாகும்.

காதல், காமம் என்பது அனைவருக்கும் இயல்பானதாகும். ஆனால் மகாபாரதத்தில் வரும் உடலுறவுக் கதைகள் அருவருப்பின் உச்சமான ஆபாசக் கதைகள். தந்தை மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு, தாய் மகன் உறவு என்று சமூக ஒழுக்கத்தின் உயர்வை, மரபியலின் அடிப்படையை சிதைக்கக் கூடியவை. அசுவமேத யாகம் நடத்தும்போது, பலியிடப்படும் குதிரையுடன் முதல்நாள் யாகம் ஏற்பாடு செய்யும் அரசனது மனைவி உடலுறவு கொள்ள வேண்டும். விலங்குப் புணர்ச்சி கதைகள் ஆரிய வேதங்களில் ஏராளம்.

இத்தகைய முறையற்ற காமப் புணர்ச்சிகள் கூடாது என்று புத்தர் குறிப்பிட்டது பிற்காலத்தில் துறவிகள் காமத்தில் ஈடுபடக்கூடாது என்று சுருக்கப்பட்டது.

கள் அருந்துதலிலும் யாகங்களுக்குப் பயன்படும் சோமபானம், ஆரம்ப காலத்தில் பிராமணர், சத்ரியர், வைசியர்களுக்கு மட்டுமே உரியது. சூத்திரர்கள் விலக்கப்பட்டனர்.

யாகங்களில் விலங்குகள் பலியிடப்படுவது மேலுலகத்தில் பேரின்பத்தைப் பெறுவதற்காக, தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த என்று சொல்லப்பட்டது. யாகங்களின்போது பொன், பொருள், கிராமங்கள் தானமாகப் பெறுவதற்காக ஆரியர்கள் மோட்சம், நரகம், தெய்வ குற்றம் போன்ற கதைகளைப் பயன்படுத்தினர்.

அகிம்சை, கொல்லாமையை பவுத்தம் வலியுறுத்துகிறது. ஆனால் பவுத்தத் துறவிகள் இறைச்சி உண்டிருக்கின்றனர். வேட்டை விதிகளின்படி உணவுக்காக ஆண் ஆடுகள், ஆண் பசுக்கள், ஆண் செம்மறி ஆடுகள், ஆண் பன்றிகள், மீன்கள் போன்றவற்றை தேரவாதத் துறவிகள் உண்கிறார்கள் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆரியர்கள் பசுவை வழிபட்டாலும் புத்தர் பசுக்களிடம் தனிப்பரிவு எதுவும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”நிர்வாணமாயிருத்தல், குடுமி வைத்தல், மொட்டையடித்தல், உரோமத் தோலாடை அணிதல், யாகத்தீ வளர்த்தல், எதிர்காலப் பேரின்பத்தை வாங்கித்தர புதிய வழிகளைக் கூறுதல் ஆகியவைதான் தீமை தருவது, ஒழுக்கக் கேடானது. இறைச்சி உண்பது தீயதும் அல்ல, ஒழுக்கக் கேடும் அல்ல!” என்கிறார் புத்தர்.

தேரவாத பவுத்தத்தில் அத்தனை சாதிகளிலிருந்தும் துறவிகள் இருந்திருகின்றனர்; பெண்களும் துறவிகளாக இருந்திருக்கின்றனர்.

பிறப்பும், மாதவிடாயும் தீட்டு அதனால் பெண்கள் தீட்டானவர்கள், மோட்சம் அடைய முடியாது என்கிறது மனுஸ்மிருதி.

பெண்களைக் காமப் பெட்டகமாக்கி, கீழானவர்களாக வைத்து, துறவுக்கு தகுதியற்றவர்களாக மாற்றியது ஆரியவாதப் பவுத்தமான மகாயானம்.

தேரவாதப் பவுத்தக் கோட்பாட்டைப் பின்பற்றிய பேரரசர் அசோகர் இலங்கையின் பவுத்த நூலான மகாவம்சத்தில் சண்டாளன் என்று தூற்றப்பட்டிருக்கிறார். அந்நூல் முழுவதும் ஆரியச் சார்பு நிலையே காணப்படுகிறது.

புத்தரே நேரில் வந்து இலங்கையில் பவுத்தத்தை போதித்தார் என்று மகாவம்ச சொல்கிறது. பின்னர் சங்கமித்ரையும், மகிந்தரும் பவுத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தார்கள் என்றும் சொல்கிறது; ஆனால் அசோகரின் பெயரை மறைத்துவிட்டது.

உண்மையில் சங்கமித்திரை என்ற பெண் அசோகரின் மகளே அல்லள். இஃது ஒரு கற்பனைப் படைப்பு. மகிந்தன் அசோகரின் தம்பி, மகன் அல்லன். அசோகரின் கல்வெட்டுகளில் இடம்பெறாத மகிந்தனும், சங்கமித்ரையும் வரலாற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மகாவம்சத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்கிறார் பேராசிரியர் ஓல்டன் பர்க்.

பவுத்தத்தை அழிக்க முயன்ற ஆரியம் தோல்வியடைந்த்தால், பவுத்தத்தை ஆரிய மயமாக்க முனைந்தது. அதை நாகார்ஜுனரின் மகாயானம் மூலம் நிறைவேற்றியது. சமூக நீதி, சமூக விடுதலை, மனித சமத்துவத் தலைவரான புத்தரை வெறும் அகிம்சாவாதியாக ஆக்கியது ஆரியம். அது புத்தரைக் கடவுளாகக் காட்டியது; விஷ்ணுவின் அவதாரம் என்று திரித்துக் கூறியது.

பவுத்த திரிபிடகங்களிலும்கூட திரித்தல் வேலைகள் செய்து அதையும் மதநூலாக மாற்றும் முயற்சியில் ஆரியம் முனைந்தது. பவுத்தத்தின் போர்வையில் மகாவம்ச போன்ற இனவெறி, கொலைவெறியைத் தூண்டும் நூல்கள் உருவாக்கப்பட்டன.

ஆரியத்தின் மவுடீகத்தை வீழ்த்தி, நாத்திகத்தின் சமநீதிக்காக முதல் குரல் கொடுத்தவர் புத்தர். அவர் உருவாக்கிய இயக்கம் பவுத்தம்.

==================================

திரு எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய “பவுத்தம்: ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்” என்ற நூலில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்ட வரிகளே மேலே கட்டுரையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விதிகளை மீறியதாக இருப்பின் ஆசிரியர் மன்னிப்பாராக.

—0—ஆர்எஸ் ப்ரபு—-0—

சரி.

ஊக்கபோனஸ்: எழில் இளங்கோவன் அவர்கள் அளவுக்கு அபாரமான நகைச்சுவை இல்லாவிட்டாலும், பின்னூட்டங்களும் அழகாக மிளிர்கின்றன. பல தன்னார்வல ஞானிகள் புற்றீசல்கள் போல கிளம்பியிருக்கிறார்கள் என்பது இதனால் தெளிவாகிறதும்கூட. நன்றி!

…அவற்றிலும் எஸ்ராமகிருஷ்ணத்தனமான மாதுளைமுத்துகள் – அதிலும் பலப்பல குட்டி ஜோக்குகள்.

விபஸ்ஸனா தியான முறையை கோதம புத்தர் தொடங்கவில்லை, விபஸ்ஸனா என்றால் ‘தூய்மைப் படுத்துதல்’ இல்லை என்பதற்கு அப்பாற்பட்டு — மாதிரிக்கு – வெகு தெகிர்யத்துடன் ஸத்யேந்த்ர நாத் கோயங்கா (விபஸ்ஸனா ஆசாமி) அவர்களை ராம் நாத் கோயங்கா (இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நிறுவனம், தினமணி குழுமத்தினர்) குடும்பத்துடன் குழப்பியடிப்பதும்!

நீவிர் வாழ்க! மன்னிக்கவும், நீவிரும் எழிலுடன் மிளிர்ந்து வாழ்க!

இது சரியென்றால், ‘எல்லாம் இந்த ராஹுல்காந்திக் கோமாளியார், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தியின் குடும்பம்தான்!’

நன்றி!

B-)

5 Responses to “பௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள்”

 1. Anonymous Says:

  //காசிப்பேருரையின் நான்கு உண்மைகள் குறித்த புத்தரின் இந்த முழக்கம்தான் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் என்று பவுத்தம் காட்டிவிட்டது!

  So Caldwell has been taken to Kashi! 🤣🤣🤣


  • அம்மணீ! திரு ‘கிணற்றைக் கூப்பிட்டேன்’ அவர்களைப் பற்றி ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

   சரி. நாம் இது குறித்து பேசினோம். என்னைப் பொறுத்தவரை, ஆர்எஸ் ப்ரபு, புத்திசாலி இளைஞர். நான் அவரைப் படித்துள்ளவரை, அவருக்கு அறிவியலும் உண்மையை அறிதலும் முக்கியம் என நினைக்கிறேன். மற்றபடி அவரைப் பற்றி, திரியாவரமா இல்லையா என்றெல்லாம் எனக்குப் பெரிதாகத் தெரியாது. அதற்கு அவசியமும் இல்லை. பொதுவாக ஒருவர் சுயசிந்தனையுள்ளவர் என்கிற அனுமானத்திலிருந்துதான் நான் ஆரம்பிப்பேன், பின்னர் தரவுகள் சேரச்சேர அனுமானம் வேறுபடலாம் அல்லது…

   மேலும், யாரும் யாரையும் திருத்தவேமுடியாது. நான் திருந்தவா போகிறேன், சொல்லுங்கள்? ப்ரபு, அந்தப் புத்தகத்தின் நகைச்சுவையை மெச்சித்தான் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார் என நம்பவே எனக்கு ஆசை.

   எது எப்படியோ. அவரவர்க்கு அவரவர் வசதிக்கும் குலப்பண்பாடுக்கும் சூழலுக்கும் ஏற்ப இடுகாடு/சுடுகாடு. எனக்கு என்னுடைய மின்சார க்ரிமெட்டொரியம். அவ்ளோதான்.

   ஆனால் அம்மணி, எழில்மிகச் சிந்தித்தால் – அதாவது, திராவிடக் கருத்துக் கழுதையை ட்ரியோட்ரியோவென ஓட்டிக்கொண்டு சென்றால், இன்றில்லாவிட்டால் நாளை, ஆர்க்டிக் ப்ரதேசத்துக்கே சென்றுவிடலாமே! கால்ட்வெல் துணையுடன் வெறும் காஷிக்குத் தானே, அதுவும் 500 பிஸிஇக்குத்தானே சென்றிருக்கிறார்கள், சொல்லுங்கள்?

   இன்னமும் கொஞ்சம் நேரம் கொடுத்தால், திராவிடமானது 13.7 பில்லியன் வருடங்கள் முன்சென்று பெருவெடிப்பு பிக்பேங் எழவுக்கே சென்றுவிடுமே! கவலை வேண்டேல்!

   நன்றி.

 2. Sivaaa Says:

  அட நீங்க வேற இந்த புக்கை எழுதியவரெல்லாம் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் முன்பு ஒன்றுமே கிடையாது. அவர்கள் புத்தரையே மதுரை பக்கம் திருனெல்வேலிப்பக்கம் பிறந்தவராக ஆதாரத்துடன் தெறிக்க விடுவார்கள். இவரெல்லாம் இன்னும் நிறைய வளர வேண்டும். சோட்டா பச்சா…

 3. dagalti Says:

  While it is important to deal with the empirical questions, as you supposedly intend to, here, don’t you also find it tiresome that seldom are theoretical questions asked.

  Why is the casteless equality hunky-dory-ness such an automatic apriori assumption of the state of affairs in yonder past?

  For instance here the questions are: What was Buddha’s perceived caste? Was Buddhism an anti-varna crusade? Is the term Mahayana itself supercilious?….and so on

  And then of course the wonderful assertion that …whatever is good is of essence, and whatever isn’t is an (external, schemingly added) pollutant. Such a reduction betrays an anxiety to receive the complexity of cultural history in simplistic boxes of blame.

  Even if one isn’t all informed about all aspects above, it is clear to see that such an approach is full of defect. One can argue till the cows come home about the factual rightness of the questions (and one should, as they enlighten) but they are still limited questions aren’t they?

  Wouldn’t the larger question be: how would a pre-industrial society ever organised itself without caste and also kept overt social violence to a minimum?

  Endogamous occupational groups, coerced into occupation by social order translating gradually to social hierarchy seems, dare I use the word, natural. And how were societies to be organised if these were to be abandoned?

  For instance, what rights could land-serfs have under a King suddenly seized with the supposed Buddhist afflatus for equality (I’m not even asking for an example of a Buddhist King, what he did and  ‘what rights did serfs have in his rule’….just asking a theoretical…’what could they have had’)

  These kind of questions can be asked equally of, say, Sangam era
  and what not.

  Sure, the specifics of how history progressed is important. And not all of us are equipped with the wherewithal to be persuaded one way of the other, reading the cutting edge research on history.

  But surely, the average persoனோம் can very easily ask the question how could we have had a degree of social equality – in its modern sense – in large empires, organised agrarian systems etc. 

  In fact if there was a time in history when some place, time, culture gave out ‘equality’ vibes, it was probably a flat, simple band..to change soon. That is relatable:  Fast paced growth they said, start-up culture they said, no cubicles they said, open door policy they said…and then they went for Series B funding.

 4. RC Says:

  அன்பு ஐயா,நன்றி பதிவுக்கு.அவரின் பல பதிவுகள் படிக்க நேரின்,அவர் ஒரு right leaning centrist ஆகத்தான் எனக்குப் படுகிறது.குறிப்பிட்ட பதிவில் (பின்னூட்டமும் சேர்த்து) தனது கருத்தாக ஏதும் வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.வயது ஏற ஏற எந்த இஸத்திலும் சிக்காமல் இருப்பது கடினமெனவே படுகிறது.
  சமீபத்திய பதிவான https://m.facebook.com/story.php?story_fbid=10157594921063773&id=595298772
  போன்ற பதிவுகளும் அவரைப் புரிந்துகொள்ள எனக்கு முக்கியமானவை.நீங்களும் கணக்கில் கொள்வீர்கள் என்பதும் புரியும்.அவரின் பௌத்தம் தொடர்பான அப் பதிவு எனது புரிதலுக்கு அப்பாற்பட்டது. இவரைப்போலவே களஅனுபவங்கள்,விவசாய வணிகம் சார்ந்து முகநூலில் எழுதும் திரு.சரவணன் சந்திரனின் குறிப்புகளும் படிப்பதுண்டு (விவசாயம் மற்றும் மீன் வணிகம் செய்பவர்,ஊடகம் சார்ந்தவரும் கூட)நெகிழ்ச்சியான பின்புலத்தில் பலது எழுதப்பட்டிருப்பினும்,அவற்றை வடிக்கட்ட பழக்கப்படின் தொடர்ந்து படிக்கப்படலாம்.
  hierarchy எதிர்ப்பு மனநிலையை என்னால் இவர்களைப்போன்றோரின் எழுத்துகளில் உணரமுடியும்.அவர்கள் சென்று சேரக்கூடிய இடம் பெரியாராய் இருப்பினும் (யூகம் தான்),இந்த வயதில் அதைத் தவறென சொல்ல முடியாது அல்லவா!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s