கோவிடெல்லா புராணம்

17/08/2020

என்னிடம் குழந்தைகள் யாராவது வசமாக மாட்டிக்கொண்டால்…

அவர்களுக்குப் பிரச்சினை, பாவம்.

-0-0-0-0-0-

இப்படியாகத்தானே என்னை நண்பனாகக் கருதும் ஒரு பெங்காலி-ஹைதராபாதி பாபு, அவனுடைய இருபையன்களுக்கு தினம் அரைஅரை மணிநேரம் ஆன்லைன் வாத்தியாக இருக்கும்படிக்குக் கேட்டுக்கொண்டான். (இந்தச் சீனாக்கார கோவிட் சமயத்தில் பிள்ளைகளை மேலாண்மை செய்து நாக்கு தொங்கிவிட்ட்தாம்!)

ஆகவேதானே நானும் தினமும் புதிர்கள் குதிர்கள் அறிவியல் கணிதம் வரலாறு புவியியல் எனச் சகல திசைகளிலும் மனம்போனபோக்கில் கடந்த நான்கு கோவிட் மாதங்களாகக் குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். (ஆயிரம் நாய் அலைச்சல்வேலைகளில் இதுவும் ஒன்று – ஆனால் இவ்விஷயங்கள் எனக்குப் பிடித்தமானவை)

என் மனைவி+துணைவி+ என்மகளின் தாயார் என (எல்லாரும் ஒருவரேதான், பொறாமைப் படாதீர்கள்; நான் திராவிடனல்லன்!) கூடக் கோர்த்தும் விட்டேன்.

அதனால்தானே இந்தச் சிறுவர்களின்  ஆறுவயதுக் குட்டித்தங்கைக்கு – ‘ஏன் எனக்கு மட்டும் அங்கிள்(!) ஒரு படிப்பும்(!!) சொல்லிக் கொடுக்க மாட்டேனென்கிறார்‘ எனும்  மாபெரும் மனத்தாங்கல்…

…என்னிடம் குழந்தைகள் யாராவது வசமாக மாட்டிக்கொண்டால்…

-0-0-0-0-0-

இரண்டு நாட்கள் ஒரு முத்தாய்ப்பு போல – நானும் அச்சிறுமியும் எங்கள் வாழ்க்கைமுறைகளைக் குறித்த சிறு, முக்கியமான அடிப்படைத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். (மொத்தம் அரைமணி நேரம் – இதில் பாதி நேரம் அது கிளுக்முளுக் எனச் சிரித்துக்கொண்டே இருந்தது… ‘யு ஆர் எ ஃபன்னிமேன், அங்கிள்!’)

அவளுக்கு மூன்று அத்யந்த நண்பர்கள். அதில் ஒன்றுக்குச் சுருட்டைமுடி. இன்னொருவளை ‘நிறைய வருடங்களாக, எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும்..’  இன்னொருத்தன் பையன், ஒன்றுமே பேசமாட்டான் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நான் சொன்னதைச் செய்வான். என் கணித டீச்சர் ரொம்ப குண்டு. என் அப்பாவுக்குக் கதை சொல்லவே தெரியாது, எப்போதும் டீவி இல்லையானால் ஃபோன்.

எனக்கு ஃபேரி டேல் (Fairy tale)- தேவதை வகையறாக் கதை வேண்டாம். ஆனால், நிஜமாகவே நடப்பது போல வேண்டும்.

-0-0-0-0-0-

சரி. நான் உன்னுடைய தகப்பனின் பலபத்தாண்டு நண்பன். ஆனால் எனக்கு அவன் நண்பனல்ல. உன் அம்மா சமைத்த சாப்பாட்டை நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன் நீ உன் அம்மாவின் தொப்பையில் இருந்ததிலிருந்தே எனக்கு உன்னைத் தெரியும்…

உனக்கு ஸின்டரெல்லா கதைமாதிரிச் சொல்லட்டா, தினமும் பத்து பதினைத்து நிமிடம் போல?

ஐயோ! எனக்கு ஸிண்டெரெல்லா (Cinderella) கதை எல்லாம் ரொம்ப போர்.

சரி. ப்ளண்டரெல்லா (Blunderella) கதை? இது வேறுமாதிரி, தப்புக்கு மேல் தப்பாகச் செய்து ரொம்ப ஜோக்கா இருக்கும்!

வேண்டாம்! ப்ள்ண்டர்னா என்ன?

கண்ணே, அது உன் அப்பன் சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யும் வேலை.

அங்கிள், புரியலயே!

சரி, அதுவேண்டாம். வேற ஏதாவது… சரி… கோவிட் என்றால் என்னவென்று தெரியுமா?

தெரியுமே! அது வைரஸ்; மாஸ்க் போட்டுக்கொண்டால் வராது…

அதே அதே! கோவிட் பற்றி ஒரு கதை சொல்லட்டா? அதிசாகஸக் கதை…

சரி. க்ரேட்.ஹை ஃபைவ். தேங்க்ஸ் அங்கிள். ஸுப்பர்!

-0-0-0-0-0-

கோவிடெல்லா பிறந்தாள்!

-0-0-0-0-

கடந்த 15-20 நாட்களில் நடந்த கதைச் சுருக்கம் கீழே!

கோவிடெல்லா-வின் பிறப்பு ஒரு புதிர். சீனாவில் ஒரு ஃபேக்டரியில் ஒரு வௌவாலுக்கும் கோழிக்கும் பிறந்தவள் என ஒரு மந்திரவாதி சொல்லியிருக்கிறார் – இது உண்மையில்லை என கோவிடெல்லா நினைக்கிறாள்…

இது உண்மையில்லை என நான் நினைக்கிறேன். நீ?

ஆனா அங்கிள், வௌவாலுக்கு வௌவால்தானே பிறக்கும்?

கண்ணே, உனக்கு உன் கதைவேண்டுமா, என் கதை வேண்டுமா?

கதை வேண்டும்!

பொதுவாக நம்மைப்போன்ற உயிர்களை மம்மல் (Mammal) என்றுதானே சொல்வோம் – ஆனால், இந்தக் கோவிடெல்லா பப்பல் (Pappal), அப்பாவிடமிருந்து பிறந்தவள்.

கோழி அப்பா. வௌவால்  அம்மா.

நிஜம்மாவா அங்கிள்?

எனக்கு நிஜமில்லை. ஆனால் கோவிடெல்லாவோட மந்திரவாதி ஃப்ரெண்டுக்கு இது நிஜம்!

ஆனால் கோழிக்கும் வௌவாலுக்குப் பிறந்த கோவிடெல்லா எப்படிப் பெண்ணாகும்?

நீ கொஞ்சம் வளர்ந்தபின் இது என்ன ஜென்டர் ஆண்பாலா  பவின்பாலா என்பது பற்றியெல்லாம் தீவிரமாக ஆராய்ந்தபின் சொல்கிறேன், சரியா? இப்போதைக்கு கோவிடெல்லா உன்னைப் போல ஆறுவயதுச் சிறுமி, ஓகேவா?

அப்போ இது கோவிடெல்லாவுக்குக் கதை ஆனால் மந்திரவாதிக்கு நிஜம் – சரியா?

ஆமாம் கண்ணே இது நிஜமாகவே நடந்த கதை!  உனக்கு நிஜமும் வேண்டும் கதையும் வேண்டுமல்லவா?

நிஜத்தை கதையா சொல்லப் போகிறீர்களா, அல்லது…

இல்லை கண்ணே, எனக்கு கதையை நிஜம்போலச் சொல்ல வராது, அதற்கு ஜெயமோகன் ஜெயமோகன் என ஒரு அங்கிள் இருக்கிறார்…ஆனால் நான் நிஜத்தைத் தான் உன்னிடம் கதையாகச் சொல்லப்போகிறேன்…

ஹை! ஸூப்பர், அவர் கிட்ட நீங்க கதை கேட்டுட்டு எனக்கு நிஜம்மா சொல்லுங்க…

சரி கண்ணே! கதை இதுவரை பிடித்ததா?

ஹாங்! ஆமாம் அங்கிள், கதை ஜோரா இருக்கு…டெய்லி ஒரு மணி நேரம் சொல்லுங்களேன்! 15 நிமிடம் போதவேயில்லை…

அம்மா குழந்தை, இது வெண்முரசு இல்லை, வெறும் கோவிடெல்லா கதைதான், சரியா? தினமும் ஒரு மணி நேரம் என்றால் எனக்கு நாக்கு தள்ளிவிடும், அங்கிளுக்கு வயசாய்டிச்சு குழந்தாய்…

சரி, ஸாரி அங்கிள், கதை சொல்லுங்க…

-0-0-0-0-0-

கோவிடெல்லா ஒரு கருணைமிக்க வைரஸ்ஸாயினி. எல்லோருக்கும் முடிந்தபோதெல்லாம் உதவி செய்துகொண்டே, தன்னுடையதைப் பிறருக்குத் தந்தவண்ணம் இருப்பாள்.

இப்படி ஒரு காக்கையுடன் நட்பு. (இதற்கு ஒரு கிளைக்கதை – அதாவது கிளையில் உட்கார்ந்து அந்தக் காகம் பட்டையைக் கிளப்புவது போல)

காகத்தின் பெயர் சனி. (சட்டென்று இந்தப் பெயர்தான் மண்டையில் உதித்தது…)

மும்பய் மாநகரில் வர்லி ஸீஃபேஸ் அருகே ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வசித்துக்கொண்டிருந்த கோவிடெல்லா ஒரு பார்ட்டிக்கு (திராவிட கட்சியல்லாத – ஆகவே பாரதீய ஜனதா பார்ட்டி) போக ஆசை.  ஆனால் கோவிடெல்லாவுக்கு ஒரு மாற்றாந்தாய். (அதே  ஸிண்டரெல்லா ஃபார்முலா)

கோவிடெல்லாவின் பிறப்பு+வளர்ப்பு ரகசியம் இரண்டுமாதங்களுக்குப் பின் தெரியவரலாம்.

சரி. இந்த மாற்றாந்தாய் ஸ்டெப் மதர் Stepmom. இவள் ஒரு ஸ்டெப் லேட்டர் (ஏணி, StepLadder) செய்யும் தொழிற்சாலை நடத்திக்கொண்டு, ஒழிகிற நேரத்தில் கோவிடெல்லாவைத் துன்புறுத்திக்கொண்டு கிடப்பவள். அவளுக்கு இரு சொந்தக் குழந்தைகள். ஒன்றுக்கும் உபயோகமில்லை. எப்பப் பார்த்தாலும் டீவி வீடியொகேம்ஸ்… யூஸ்லெஸ் ஸ்பாய்ல்ட் ப்ரேட்ஸ். செல்லம் கொடுத்துக் கொடுத்துக் கெடுக்கப்பட்ட குழந்தைகள்.

அங்கிள், எனக்கு போகோ சேனல் பிடிக்கும், அது மட்டும்தான்!  நான் என் அம்மாஅப்பாவுக்குச் செல்லம், ஆனால் ஸ்பாயில்ட் இல்லை!

சரி கண்ணே! நீ ஸ்பாய்ல்ட் என்றால் உனக்கு என் கதையைக் கேட்கும் பாக்கியம் கிடைக்குமா, சொல்?

…பின்னர் கோவிடெல்லா வீட்டிலிருந்து தப்பித்தல் – பஸ் பயணம் – பேருந்திலிருந்து அவள் பெயரில் கோவிட் இருப்பதால் நடத்துநரால் இறக்கி விடப்படல்…

இல்லைன்னா அங்கிள், இன்ஃபெக் ஷன் எல்லாருக்கும் வந்துருமே!

பேய்க்காற்று. அடைமழை. சாலையில் தனியாக ஐஸோலேட் செய்யப்பட்ட கோவிடெல்லா. குளிர். நடுக்கம். சனி வருகிறது. உதவுகிறது. “நான் உன்னை பார்ட்டி நடக்கும் இடத்துக்குக் கூட்டிப் போகிறேன்…”

சனி இப்போது காகங்களின் இளவரசன். அது கூட தன்னுடைய ஆயிரம் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் வண்ணாந்துறைக்குப் போய் 200 கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொள்கிறது…

திருடவில்லை; உபயோகித்துவிட்டுப் பின்னர் சலவை செய்து திருப்பிக் கொடுக்கத்தான் திட்டம்.

மொத்தம் எத்தனை காகங்கள்?

1+ 1000 = 1001

அவற்றை தையற்கடைக்குக் கொண்டுபோய் ஸ்லீப்பிங் பேக் (Sleeping Bag) போலத் தைத்துக்கொள்கிறது.

(இவற்றில் பல உபகதைகள், எப்படி ஆயிரம் காகங்களுடன் அந்த ஸ்லீப்பிங் பேக்கை அலாக்காக அப்படியே தூக்கிக் கொண்டு பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது என்றெல்லாம் ஒரு திட்டம்…)

பின்னர் கோவிடெல்லா அதற்குள் அடைக்கலம். புயல். மும்பய் மழைக்காலம்…

அங்கிள், நேற்று என் வீடடுக்கு முன்னால் இருந்த மரம் விழுந்து விட்டது… அதிலே ஒரு காக்கைக் கூடு இருந்ததே!

ஐயோ! அதில் இருந்திருக்கும் காக்கைக் குஞ்சுகள் என்னவாகியிருக்கும்? கண்ணே, அங்கு என்னவாயிற்று??

நோ ப்ராப்ளம் அங்கிள். அந்தக் காகங்களெல்லாம் சனியோடு கோவிடெல்லாவுக்கு உதவப் போயிருக்கின்றனவே!

குழந்தை எனக்கே கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாள்!

…பின்னர் புயற்காற்றில் அந்த ஸ்லீப்பிங் பேக் பறந்து பறந்து மேகங்கள் கிட்டவே போய்விட்டது.

(இதில் ஆயிரத்தெட்டு சாகஸங்கள்!)

…பாவம் கோவிடெல்லா., ஒரே மின்னல் இடி டம டம டமா பளிச் மினுக் மினுக்… ஸவுண்ட் எஃபெக்ட்ஸ்…

தப்பிக்கவேண்டுமே!

மறுபடியும் சனி ஒரு திட்டம் வகுக்கிறது. அதாகப் பட்டது மாற்றாந்தாயின் ஏணி ஃபேக்டரியிலிருந்து காகங்களெல்லாம் சேர்ந்து இருப்பிலிருக்கும் ஏணிகளையெல்லாம் திருடி…

…திருடவில்லை; உபயோகித்துத் திருப்பித் தந்துவிடத்தான் திட்டம்!

அதனை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி மேகங்களில் கம்பளிப் பையில் மிதந்துகொண்டிருக்கும் கோவிடெல்லாவைக் காப்பாற்றுவதாகத் திட்டம்+…

(இன்னமும் இதன் உபகதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அநேகமாக அடுத்த பத்து நாட்களில் கோவிடெல்லா மேகங்களில் இருந்து மீட்கப்படுவாள் என நினைக்கிறேன்.)

மே கம் பேக், ஐ மீன்… இல்லையென்றால் ஸெப்டெம்பரில்…

-0-0-0-0-0-

இப்படியாகத்தானே… …

இன்று, கோவிடெல்லா குறித்த  இரண்டு படங்கள் (அந்தக் குழந்தை வரைந்தவை) வந்து சேர்ந்தன. அதனுடைய அம்மா, இவற்றைப் பெருமையுடன் அனுப்பியிருக்கிறார்.

:-)

எங்கெங்கு காணினும் கோவிடெல்லாவடா!

—END

2 Responses to “கோவிடெல்லா புராணம்”

  1. jay673 Says:

    “Alice laughed. ‘There’s no use trying,’ she said. ‘One can’t believe impossible things.’

    I daresay you haven’t had much practice,’ said the Queen. ‘When I was your age, I always did it for half-an-hour a day. Why sometimes I’ve believed as many as six impossible things before breakfast. ”

    ― Lewis Carroll


  2. […] கோவிடெல்லா (Covidella) புராணத்தில் அண்மையில் சேர்ந்திருக்கும் மூன்று பாத்திரங்கள்: டெஸிபெல்லா (Decibella), பப்பாளி & பப்பாளன். […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s