கல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்

23/01/2021

உங்களில் எவ்வளவுபேர் 1984ஆம் ஆண்டில் வந்த இந்தக் கல்கி2030 எனும் மகத்தான விஞ்ஞானப் புனைவுத் தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் பேற்றினைப் பெற்றிருப்பீர்கள், பார்த்திருந்தாலும் இன்றுவரை, நினைவிலும் நிறுத்தியிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. (அப்படி யாராவது இருந்தால், என்னைத் தொடர்புகொள்வீர்களா?)

1

அண்மையில் ஃபேஸ்புக் குறிப்பொன்றில் நான் எழுதியது:

“பொதுவாகவே நான் நிறைய தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்ததில்லை, முடிந்தவரை தவிர்த்தே வந்திருக்கிறேன்; இதனைப் பெருமையாகவோ உதாசீனமாகவோ மேட்டிமைத் தனத்துடனோ சொல்லவில்லை – மாறாக, ஒருமாதிரி நன்றிக்கடனுடனும் நிம்மதிப் பெருமூச்சுடனும்தான் சொல்கிறேன்.”

…இருந்தாலும், கல்கி2030 என் மனதையும் அறிவையும் கொள்ளை கொண்ட ஒரு அருமையான திரைப்படம்,  அதுவும் தமிழில் வெளிவந்த ஒன்றைக் குறித்து எழுதியே ஆகவேண்டும் எனும் எண்ணம் கடந்த ஒருவாரத்தில் அதிகமாகிவிட்டது. ஏனெனில், கல்கி2030 தமிழ்ச் சகதிக் கலாச்சாரச் சூழலிலேயே முகிழ்த்த தாமரை. அழகு. இருந்தாலும் பரவலாக அறியப் படாததையே விடுங்கள் – நம்மில் பெரும்பாலோர் இதனைக் குறித்துக் கேள்வி கூட பட்டதில்லை.

ஏன், ‘ராண்டார் கை’ எனப் பரவலாக அறியப் பட்ட மாடபூஷி ரங்கதுரை போன்ற தமிழ்ச்சினிமாவின் பெருமைமிக்க வரலாற்றாளர்கள் (இந்த ரங்கதுரை பல கிளுகிளுப்புப் படவசனங்கள்/கதைகள் கூட எழுதினார் என நினைவு) கூட இதனைக் கேள்விப்பட்டதில்லை – 1990களில் ஒருதடவை அவருடன் கும்பலாக உரையாடிக்கொண்டிருந்தபோது கல்கி2030 குறித்துப் பேச்சு வந்ததுகூட – ஆனால், அவருக்கேகூட இதுகுறித்து ஆச்சரியம். ஆனால், எனக்கோ அதைவிடவும்.

கலாச்சாரரீதியாக இது துப்புரவாக மறக்கப் பட்டது – நம் சொந்த, கிட்டத்தட்ட சமகால வரலாற்றுச் சோகம்தான், என்ன செய்ய.

இருந்தாலும், இது ஒருகாலத்தில் என்னைப்போன்ற சக இளைஞர்களுக்கு மஹோன்னத விகசிப்பை அளித்த படம். ஆகவே, இக்கால இளைஞர்களுக்கும் ஒரு எழுச்சியையும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அளிக்கலாம் எனும் எண்ணத்தில், எனக்கு நினைவிலுள்ளவரை கல்கி2030  குறித்த சிலபல விவரங்களையும் சில முக்கியமான குறிப்புகளையும் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

…1991ல் சில நண்பர்கள் ஒருங்கிணைந்து, ஒருமாதிரி கோலாகலமாகவே, சென்னை லாயிட்ஸ்ரோட் காதிக்ராமோத்யோக் பவனில், ’80-களில் தமிழ் கலை இலக்கியம்’ எனவொரு மூன்று நாள் கருத்தரங்கை நடத்தினோம். (பொதுவாகவே முழி பிதுங்கிவிட்டது, எங்கள் சங்குகளும் பெரும்பாலும் அறுபட்ட நிலைக்கு வந்துவிட்டன!)

இதில் ஒரு எடுத்துக்காட்டாகக் காண்பிக்கலாம் என்றும் ஒருதடவை கல்கி2030 பிரதியை விழுந்துவிழுந்து தேடினேன். ஆனால், கிடைக்கவில்லை. ஆகவே, வேறுவழியில்லாமல் எனக்குப் பிடிக்காமல் இருந்தாலும், அப்போதும் மிகச் சிறந்த தமிழ்ப் படமாக நம்பப்பட்ட ஜான் அப்ரஹாம் அவர்களின் கவைக்குதவாத தண்டக்கருமாந்திரமான ‘அக்ரஹாரத்தில் கழுதை*’யைக் காண்பித்தோம் என நினைவு, நானும் பெரிதாகச் சண்டை போடவில்லை, ஏனெனில் நம் கமல்ரஜினி பாலுமகேந்திரா திருட்டுப் படங்களுக்கு எவ்வளவோ அந்த  ‘அக்ரஹாரத்தில் கழுதை’ தேவலாம்தான் – மேலும் எல்லோரும் கூட்டுகஞ்சா, என்னமோ பெரியமசுர் ‘கலைப்படம்’ பார்க்கிறோம் எனும் மேட்டிமை போதை, என்ன செய்ய. (இந்த ஜான் அப்ரஹாம் பொதுவாகவே ஓவர்ரேட்டட். அவருடைய அம்மா அறியான் உட்பட. ஏகப்பட்ட அறிவுஜீவிப் பிலுக்கல்களும் சராசரித்தனமும் உள்ள ஆக்கங்கள் அவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.)

* ‘அக்ரஹாரத்தில் கழுதை’கதையை எழுதியவர் மஹாமஹோ வெங்கட் சாமிநாதன். இருந்தாலும், படம் தண்டம்.

இன்னொன்றையும் சொல்லியே ஆகவேண்டும்:  கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது இணையம் முழுக்கத் தேடிப் பார்த்தாலும் விதம்விதமாகப் பழங்காக யூஸ்நெட், ப்ரத்யேக ஐஆர்ஸி சேனல்கள், அண்டர்நெட் என நோண்டினாலும் கல்கி2030 குறித்த ஒரு குறிப்பு, ஒரேயொரு குறிப்போ விளக்கமோகூட இல்லை.  அல்லது எனக்குத் தேடும் திறம் குறைந்துவிட்டுமிருக்கலாம். ஆனால் ஐஎம்டிபி திரைப்படத் தகவலாற்றுப்படையிலும் இது குறித்த ஒன்றுமேயில்லை. இதுவும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

நெடுநாட்களாக என் நட்புச்சூழலில்  (என்னை ஓரளவுக்கு அறிந்த எனக்குத் தெரியும், இது எவ்வளவு கடுமையான, கொடுமையான விஷயம் என்று) திடுக்கிடவைக்கும் விதத்தில் ஆச்சரியமாகத் தொடர்ந்து இருக்கும் சில நண்பர்(!)களில் ஒருவன், “டேய்! கரகர்கா தளத்துல பழைய ஆர்கைவ்-ல இந்த கல்கி2030 பத்தி இந்தச் சிறு குறிப்பு வந்திருக்கிறதே! யாரோ எழுதிர்க்காங்களே! பாத்தியா?”

கரகர்கா தளமானது,  கொஞ்சம் கெடுபிடித் தளம், உள்ளே நுழைவது ப்ர்ஹ்மப் பிரயத்தனம் செய்தாலும் முடியாது. தரமான திரைப்படங்கள் + தரமான திரைப்பட ஆர்வலர்களுக்கான உரையாடல் + பிட்டொர்ரெண்ட் திடல். 2000களின் ஆரம்பத்தில், ஸெர்பிய சகஆர்வலர் ஒருவரின் பரிந்துரையில் உள்ளிழுக்கப்பட்டு நானும் உரையாடல்களிலும் படப் பரிமாற்றங்களிலும் ஆவலுடன் பங்குபெற்றுச் சிலவருடங்கள் ஒடின. இப்போது அதற்கெல்லாம் நேரமோ வசதியோ இல்லை. ஆகவே, நான் கராகர்காவில் தொடரவில்லை.

பிரச்சினை என்னவென்றால், சுமார் 2005 வாக்கில் நான் என்னுடைய கரகர்கா புனைபெயரில் இட்டிருந்த  சிறுகுறிப்பைத்தான் அவன் புளகாங்கிதத்துடன் எனக்கே அனுப்பியிருக்கிறான். மண்டையில் அடித்துக்கொண்டேன். :-(

ஆகவே, இந்தக் குறுங்குறிப்புகள், ஒருவழியாக, என் நினைவிலிருந்தும் பழங்குறிப்புகளிலிருந்தும் தொகுக்கப்பட்டு ஒருமாதிரி எழுதப் படுகின்றன.

2

…அந்தக் காலத்திலேயே, பலருக்கும் — எங்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஏனெனில் இது ப்ளூடயமண்ட் எனும் ஸஃபையர் தியேட்டர் குழுமத்தில் (இந்தக் கட்டிடங்கள்,  அண்ணா மேம்பாலத்துக்குப் பக்கத்தில் இருந்தன, இப்போதுமா என அறியேன்) வெளியிடப்பட்ட தேதி 31 அக்டோபர் 1984.

அன்றுதான் இந்திராகாந்தி அவர்கள் காலை பத்தரை மணிவாக்கில் சுடப்பட்டு இறந்தார். ஆகவே எனக்கு இது பளிச்சென்று நினைவில் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் அழைக்கப்பெற்ற நாங்கள் சிலர் 9 மணி ஷோ, முதல் திரையிடலைப் பார்க்கமுடிந்தது; அதன் பின்னர் அப்படத்திற்கு என்னவாயிற்று எனத் தெரியாது, ஏனெனில் தமிழ் கலாச்சாரச் சூழலுக்குத் துளியும் ஒத்துவர முடியாத, உரத்த-தனமில்லாத, பம்மாத்தற்ற, ஆனால் ‘ஆர்ட் பட’ எழவுப் பிலுக்கலுமற்ற அருமையான படம் அது. எப்படியும், இந்திரா கொலையை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன வேறு.  இந்த விஷயமும் அதன் மூடுவிழாவுக்கும், மறக்கடித்தலுக்கும் காரணமாக இருக்கலாம்.

…இதைப் பார்த்தபின்னர் சுமார் ஒன்றிரண்டு மாதங்கள் பிரமையுடன் அலைந்துகொண்டு எதிரில் அகப்படுபவர்களையெல்லாம் பிடித்து, ‘மொதல்ல போய் அந்தப் படத்தைப் பாருங்க…’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறது நினைவில் இருக்கிறது. (ஆனால் எவராலும் அதனைப் பார்க்கமுடியவில்லை என்பது வேறு விஷயம்!)

இந்த 1984 படத்தைப் படத்தைப் பார்க்க – என் அன்புக்கும் பெரும் மரியாதைக்குமுரிய சுப்ரமணிய ராஜூஅவர்கள், தம் என்ஃபீல்ட் புல்லட் (என நினைவு) மோட்டர்ஸைக்கிளில் என்னை அழைத்துக்கொண்டு சென்றார் என்பதை ஒருமாதிரி துக்கம் கலந்த இன்பலாகிரியுடன் நினைவு கூர்கிறேன். (விஸ்வநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரையும் நம் தமிழைக் கூறு போடும் நல்லுலகில் எவ்வளவு பேர் அறிவார்கள் அல்லது நினைவில் வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை; இவர் நிறைய எழுதவில்லை, ஆனால் எழுதியவை, பெரும்பாலும் இயல்பான அற்புதங்கள். இப்போது எழுதித் தள்ளும் பலப்பலர் இவரிடம் பிச்சை வாங்கக்கூடத் தகுதியற்றவர்கள் என்பதை நான் அடித்துச் சொல்லமுடியும்; அப்போதைய இளைஞர்களில் பலருக்கு ஆதர்சமாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் அவர்; வெட்டி ஜோடனையில்லை, ஜிகினா இல்லை – வெறும் ஜொலிக்கும் மூளையும் இயல்பான அழகுணர்ச்சியும் மட்டுமே அவரிடம் இருந்தன என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்…)

ஆனால், இவையெல்லாம், பொய்யாய், பழங்கனவாய்… …

ஏனெனில் – சுப்ரமணிய ராஜூ அவர்கள் 1987 வாக்கில், அதே வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு அநியாய விபத்தில் போய்ச் சேர்ந்ததைக் கேள்விப் பட்டபோது நான் இருந்த ஊர், இப்போதைய சத்தீஸ்கட் மாநிலத்தின் பிலாய். உருக்குத் தொழிற்சாலையில் பணி. நொறுங்கி விட்டேன் எனச் சொன்னால் நாடகத்தனமாக இருக்கும், ஆனால்  அது மிகையாகாது.  அவருக்கு அப்போது 40 வயதிருந்தால் அதிகம். அற்புதமான, மிக ஆழமான மனிதர்.

துக்கம் கலந்த பழம் நினைவுகள்.

இம்மாதிரி நினைவுகளை மூளையில் இருந்து துப்புரவாக அகற்றமுடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும்?

“… There is a goddess of Memory, Mnemosyne; but none of Forgetting. Yet there should be, as they are twin sisters, twin powers, and walk on either side of us, disputing for sovereignty over us and who we are, all the way until death.”

–- Richard Holmes  in “A Meander through Memory and Forgetting” (an essay off: Memory: An Anthology/ Wood Harriet Harvey, Byatt AS / Chatto & Windus, 2008/

சரி.

தமிழில் வெளிவந்த இந்த கல்கி2030  எனும் ஒரேயொரு மிக அருமையான, அறிவியல் திரைப்படத்தை மிஞ்ச இன்றளவும் ஒன்றும் எடுக்கப் படவில்லை என்பது ஆச்சரியம்.
என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் – ஆந்த்ரெய் தார்கொவ்ஸ்கி, குரஸாவா அகிரா, ஃப்ரேன்ஸிஸ் ஃபோர்ட் கொப்பொலா, ஸ்டேன்லி க்யூப்ரிக்,  க்வெண்டின் டேரண்டினொ அவர்களுடைய தரங்களை விடவும் மேலெழும்பியிருந்தது என நினைவு.

3

இந்தப் படம் எடுக்கப்பட்டது முழுவதும் ஒரு ஸோனி திரைப்படக் கேமிரா (அந்தக் கால முன்னோடியான பீட்டாமூவி BMC-100P) வழியாக. சில கறுப்பு-வெளுப்புப் பகுதிகள், பல பகுதிகள் பிறநிறங்களிலும். கம்ப்யூட்டர் க்ரேஃபிக்ஸ் இல்லை; ஆனால் சில நூதனமான கோர்வைகளும் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காட்சியமைப்புகளும் இருந்தன.

பதிவு செய்யப்பட்டது ஸோனி பீடாமேக்ஸ் வீடியொ கேஸட்டுகளில்.  இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் ஹோம்மூவி எனப்பட்ட வீட்டுச்சினிமா எடுக்க உபயோகப்பட்ட உபகரணங்கள். இசையைத் தனியே கோர்த்தார்கள்.  எல்லாம் இயக்குநரின் திருவல்லிக்கேணி ஓண்டுக்குடித்தன வீட்டிலேயே  ஒருமாதிரி குடிசைத் தொழில்போல நடந்தது என நினைவு. இதற்குப் பின் இயக்குநரின் சிங்கப்பூர் நண்பர் ஒருவர், அதனை டேப்பிலிருந்து, ஸெல்லுலாய்ட் சுருளுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். படத்துக்கு மொத்த செலவே ஒன்றேகால் லட்சம் எனச் சொன்னார்கள். (அதாவது நடிகர்கள், திரைக்கதையாளர், இயக்குநர், தொழில் நுட்பாளர்கள் என ஒருவரும் ஒரு பைஸா கூட வாங்கிக்கொள்ளாமல் எடுக்கப்பட்ட படம்; இதுவும் ஆச்சரியம்தான்!)

படத்தில் வசனம் அதிகமில்லாமல் இருந்தது ஒரு தொழில்நுட்பரீதி அனுகூலமாக இருந்திருக்கவேண்டும் என நினைத்தேன் – ஆனால், கல்கி2030 படத்தைக் குறித்த முந்தைய உரையாடல்களில் சிலபல சிந்தனைக் கீற்றுகள் மின்னல் போல வெளிவந்து என்னைக் கவிழ்த்திப் போட்டன…

…இயக்குநர் + திரைக்கதையாளரைப் பொறுத்தவரை, சினிமாவே ஒரு தனி மொழி. அந்த மொழியில் சிறு அங்கமாக வேண்டுமானால் பேச்சு/உரையாடல் என இருக்கலாம், ஏன் நகரும்படங்களும் கூட திரைப்படத்தின் ஒரு அங்கம் மட்டுமேதான்… திரைப்படம் என்பது அதைப் பார்ப்பவனின் மூளையில் ஓடவேண்டிய விஷயம், அந்த மூளையானது அந்தத் திரைப்படம் குறித்த சகலவிஷயங்களையும் பின்புலங்களையும் (இசை, பிம்பம், அமைதி, எழுத்து, குரல், நகர்வுகள், புதிர்கள், கேள்விகள், குறைபதில்கள், பெருமூச்சுகள், இடைவெளிகள் உள்ளிட்ட அனைத்தையும்) ஒருங்கிணைத்து தனக்குத் தானே பரிமாறிக்கொள்கிறது… இப்படியே போனது அவர்களுடைய காத்திரமான, அழுத்தமான பார்வை…

… அளப்பரிய திருட்டுகளும், வரிசைக்கிரமக் கதையாடல்களும், உரத்துப் பேசித் தீர்த்துக்கொண்டிருக்கும் வீங்கிய நடிகர்களும், விதம்விதமாக மாறுவேடம் மேக்கப் போட்டு நிகழ்த்தப்படும் பம்மாத்துக்களும், தாராள நடிகைகளின் பிதுங்கிவழியும் பாற்சுரப்பிகளும் துடைகளும், ஏகத்தும் வலுக்கட்டாயமாக உள் நுழைக்கப்பட்ட ஆடல்பாடல்களும் சண்டைக்காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும்  இசைக்கோர்வைகளும் நிறைந்த, அவற்றால் கோர்க்கப்பட்ட  தமிழ் சினிமாக்கள் என மட்டுமே அதிகம் பார்த்திருந்த என் தோழர்களுக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகவே இருந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. (ஆனால், என் கல்லூரியின் திரைப்பட க்ளப் வழியாக எனக்குக் கொஞ்சம், ‘திரைப்படம், தரம் என்றால் என்ன’ என்பது குறித்து முன்னனுபவம் இருந்தது என்பது உதவியாக இருந்தது, என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்)

கல்கி2030 படத்தின் மொத்த ஓடும் நேரம்: 1 மணி நேரம், 40 நிமிடங்கள். மொத்தம் நான்கு 20 வினாடி, பொருள் பொதிந்த இடைவேளைகள். சுமார் 14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து 2040 வரை நடக்கும் ஐம்பிரிவுக் கதை. பொதுயுகம் 2030ஆம் வருடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு, தமிழகத்தில் நடக்கிறது; அதனைச் சுற்றி முன்னும் பின்னும் எனக் கதை நகர்கிறது.

படத்தின் மூலக் கதையும் திரைக்கதையும், அக்காலங்களில் இலக்கியத் தரச் சிறுபத்திரிகைகளில் எப்போதாவது, ஆனால், மிக அற்புதமான  கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதிவந்த பண்டித ராமசுப்ரமண்ய ஷர்மா அவர்களுடையது.  பெரியவர், பாரதீயத் தத்துவங்களில் ஆழ்ந்து முக்குளித்தவர். அமைதியானவர்.  இந்திய அறிவியல் கழகம் – பெங்களூரில் இயற்பியல் பிஹெச்டி. கைவேலைகள் பலவற்றில் நிபுணர். ஏழு மொழிகளில் (தமிழ், ஸம்ஸ்க்ருதம் உட்பட) பாண்டித்தியம்.  வரலாற்றுத் தகவல் பெட்டகம், பரந்த + ஆழ்ந்த படிப்பு. இவரைப் போன்றவர்கள்தாம் நம் வரலாறுகளை எழுதவேண்டும்; மாறாக ரொமிலா தாபர்களும் தொ.பரமசிவன்களும் தாம் நமக்கு லபித்திருக்கின்றனர்; இவர், களப்பணியாளரும் கூட; படம் உருவாக்கப்பட்ட + வெளியிடப்பட்ட சமயங்களில், அவர் வேலூர் மாவட்டக் குக்கிராமம் ஒன்றில் ஒரு சிறுபள்ளியை ஆத்மார்த்தமாக நடத்திக்கொண்டிருந்தார் என நினைவு.

இவருடன் தாமல்செருவு எனப்படும் ஆந்திரப் பகுதிக்கு கடும்சுற்றுலா சென்றிருக்கிறேன். அங்கு 1740கள் வாக்கில் நடந்த ஆர்காட்டுநவாப்- மராத்தா போரினை அவர், பாறைபாறையாக, கணவாய் ஒற்றையடிப் பாதைகள் வழியாகச் சென்று நின்று தத்ரூபமாக விவரித்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. (இவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா? உங்களில் யாருக்காவது இவரைக் குறித்த செய்திகள் ஏதாவது தெரியுமா?)

இவருடைய மூலக்கதை  கல்கி2030 (எதோவொரு  நாலுஃபார்ம்-பின்னடித்த ஒரு சிறுபத்திரிகையில் வந்தது என்பது கண்டிப்பாக நினைவில் இருக்கிறது) என் பேஸ்மெண்ட் அறைகளொன்றில் பண்டில் கட்டிப் போடப்பட்டிருக்கும் கத்தைகளில் இருக்கவேண்டும். முடிந்தால் அதனைத் தேடிப் பிடித்துப் பிரசூரிக்கிறேன். (நடுவில் பலவருடங்கள் நான் என் வீட்டில் இல்லாதுபோய் என் புத்தகங்களும், குறிப்புகளும், ஆவணச் சேகரிப்புகளும் பராமரிப்பில்லாமல் இருந்ததால், செல்லரித்துப் போய்விட்டன. இம்மாதிரிப் பல பொக்கிஷங்களை நான் இழந்திருக்கிறேன். கர்மா? ஆனால், என்ன செய்வது.)

படத்தை இயக்கியது மாதவாநந்த் ராவ் புணேகர் அவர்கள், மராத்தியத் தமிழர், அதாவது தமிழை நம்மில் பலரைவிட, மிகமிக நன்றாக அறிந்தவர்,  இலக்கண சுத்தமாகவும் ஸ்பஷ்டமான உச்சரிப்புடனும், மெல்லிய குரலில் தமிழ் பேசக் கூடியவர். ஆனால் இவர், தமிழில் (எனக்குத் தெரிந்து) எதுவும் பெரிதாக எழுதிவிடவில்லை (இதில் நமக்கு நஷ்டமே!) – அவருடைய ஆங்கிலப் புனைபெயரில் (இது நினைவிலில்லை) ந்யூயார்க்கர் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என ஒருமாதிரி  மங்கலாக நினைவிருக்கிறது.

இம்மாதிரி ஒரு அற்புதமாக ஆசாமியை நான் இதுவரை அதிகம் கண்டதேயில்லை; மும்பய் ஐஐடியில் 1970களின் நடுவே படித்தவர் என நினைவு.  மெக்கனிகல் எஞ்சினியர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு சிறுதொழிலை நடத்திவந்தார் – அப்போதே இஸ்ரோ அமைப்புக்கு சிலபல மின்னியல் உபகரணங்களைத் தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தவர். படு உழைப்பாளி. படிப்பாளி. ஆழமானவர். சிறந்த திரைப்பட ரசிகர். சினிமாவின் பலமொழிகளை உணர்ந்தவர். பல விஷயங்களில் மேதமை நிரம்பியவர். ஆனால் வெளியே பெரிதாகத் தெரிய வருவதற்குள் அகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்டார். (தமிழுக்கு இது ஒரு பெரிய நஷ்டம் – இவர்களைக் கண்டுகொள்ளாத, அதற்குத் திறனற்ற திரைப்படமொக்கைகள், போயும்போயும் கண்டகண்ட அதிசராசரித் தண்டக்கருமாந்திரங்களை திரைக்கதை வசனகர்த்தாக்களாகவும் இயக்குநர்களாகவும் வரித்துக் கொள்வது குறித்த சோகம் அளவிடமுடியாதுதான்!)

இவர், எனக்குத் தெரிந்தவரை ஒரேயொரு படத்தைத்தான் எடுத்திருக்கிறார்.

இசையைப் பொறுத்தவரை, மாதவாநந்த் அவர்கள் பெரிதாகப் பணத்தைச் செலவழிக்கவில்லை. முக்கால்வாசி மேற்கத்திய ஸாஹித்ய சங்கீதம் (யோஹான்ஸ் ஸெபாஸ்டியன் பாக், ஹென்றிக் கொரெக்கி, கார்ல் ஆர்ஃப், அன்டன் ப்ரூக்னர் இன்னபிறர்!), மேலதிகமாக அதனுடன் இயைந்த பர்வீன் ஸுல்தானா, எம்எஸ் சுப்புலட்சுமி, மதுரை சோமு, முசிறி சுப்ரமண்ய ஐயர் போன்றவர்களின் பாடற்துளிகள். (இன்றளவும், எந்தவொரு தமிழ்ப் படத்துக்கும் இம்மாதிரி பின்னணி இசையமைப்பு அவ்வளவு அற்புதமாக வந்திருக்கமுடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது; ஆனால், நிறையத் தமிழ்ப் படம் பார்ப்பவர்கள்தாம் சொல்லவேண்டும்.)

நடிகர்கள், ஏறத்தாழ அனைவரும் முன்னர் நடித்தேயிராத கல்லூரி மாணவர்கள் – ஆனால் திரைப்பட ஆர்வலர்கள். படத்தின் திரைப்பிடிப்பு/ஷூட்டிங் பெரும்பாலும் ஹோஸூர் பக்க சூளகிரிக் காட்டுப் பகுதியில் நடந்தது. படத்தின் பெயரையே சூளகிரி என வைக்கலாமா எனவொரு சிந்தனையும் இருந்தது – ஆனால் ஷர்மா அவர்கள் அந்த சிபாரிசை மறுதலித்துவிட்டார் எனச் சொன்னார்கள். கல்கி என்ற பெயர் பாரத மக்களை ஈர்க்கும், அவர்கள் நினைவுப் பரப்புகளில் பொதிந்திருக்கும் தத்துவ, தொன்மவியல் படிமங்களை உசுப்பிவிடக்கூடும் பராக்கிரமம் படைத்தது என்பது அவர் கட்சி.

இதில் பெண்பாத்திரமோ,  மானேதேனே மீனே வகைப் பாடல்களோ இருந்திருக்கவில்லை. கொஞ்சம் வசதிதான். ஆனால், பின்னணியில் கொஞ்சம்  அசரீரி போல மஹாமஹோ வடிவுக்கரசி அவர்களின் குரல் வந்ததுபோல நினைவு. (இந்த அற்புதமான, தைரியமிக்க, படிப்பாளி நடிகை இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?)

கல்கி2030  படத்தில் எனக்கு நினைவிருக்கும் வரை, முக்கியமான (மானுடர்களற்ற) பாத்திரங்கள்: ஒரு மாபெரும் ஏரி, ஒற்றைப் பாறையாலான பெருங்குன்று (இதற்கு பெங்களூருக்குத் தெற்கேயுள்ள மாகடி பக்க ஸாவினதுர்க்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது என  சுப்ரமணிய ராஜூ அவர்கள் சொன்னார்கள்), திண்ணைகள் நிரம்பிய வீடுகள் கொண்ட ஒரு குக்கிராமம், ஒரு புளியமரம், ஒரு பெரிய நூலகம் (ஆனால் ஆட்களில்லாமல் வெறும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும்படிக்கு), ஒரு பெரிய வானஸாஸ்திர டெலெஸ்கோப் (இதற்கென வேலூர் காவலூர் பகுதி தொலைநோக்கி நிர்வாக அமைப்பிடம், திரைப்படக் குழுவினர் சென்றிருக்கிறார்கள்; ஆனால் உள்ளே படம்பிடிக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, ஆனால் வெளியிலிருந்தே சில நிழல்வடிவு போன்ற ஷாட்களை எடுத்திருக்கிறார்கள்; ஆக, அதன் கனவுத்தன்மை இன்னமும் மெருகேறியிருக்கிறது எனச் சொல்லலாம்) போன்றவை. 

இதைத் தவிர இருளில் எடுக்கப்பட்ட வான், அவ்வப்போது காண்பிக்கப் பட்டு நரேடிவ்வின் இறுக்கத்தை அதிகப் படுத்தியது  – இதனை எப்படித்தான் எடுத்தார்களோ, இன்றுவரை எனக்கு ஆச்சரியம்தான்!

மேற்கண்ட படச்சுட்டி – இம்மாதிரி ஒரு ஃப்ரேம் அந்தப் படத்தில் இருந்தது.

மானுடப் பாத்திரங்களில் ஒரு தாத்தாவும் ஒரு சிறுவனும் – பிறர் திரள்கள், இளைஞர்களால் உருவாக்கப்பட்டவை; இந்தத் திரள்கள் ஒவ்வொரு பிரிவின் ஆரம்பத்திலும் ஆடும் சிறு நவீனஆட்டக் கோப்பிற்குப் பின்னணி இசை ஒரு, துடிதுடிக்கும் இடைக்கா. இந்த விவரங்கள் இன்னமும் என் கண்முன் இருக்கின்றன; ஏன், செவியிலும் அறைகின்றனதாம்!

தாத்தாவின் பாத்திரத்தில் மிக அழகும் உயரமும் கம்பீரமும் மிக்க, அசப்பில் சிம்மம் போன்றிருந்த (இது அவருடைய வெள்ளிநிகர்  நீள்தலைமுடி காரணமாக இருந்திருக்கலாம்) ஒரு நாயர் முதியவர்; ஷர்மாஜி அவர்களின் நண்பர், இவரும் ஒரு திரைப்பட ஆர்வலர்  – இவர்தாம் இடைக்காவையும் வாசித்தவர்.  உயிர்த் துடிப்பு. ஒருகோணத்தில் அவர் உடலே இடைக்காவாக மாறிவிடும் இந்திரஜாலம்.

குட்டிப் பையன், மாதவாநந்த் அவர்களின் அக்காள் மகன், துறுதுறு. பெருங்கண் அழகு.

இவர்கள் அனைவரும் அந்த முதல்ஷோ-வுக்கு வந்திருந்தார்கள்.

4

…தமிழகம் எப்போது, எப்படி திராவிடத்திலிருந்து மீளக்கூடும் என்பதற்கான காத்திரமான சாத்தியக்கூறுகளையும், நம் மத்தியில் நம்பிக்கையையும் அறிவுபூர்வமாகவும் நடைமுறைச் செயல்பாடுகளாகவும் அறிவியல் பூர்வமான விசித்திரமாக விளக்கும் படம். இம்மாதிரியெல்லாம் படங்கள் எடுக்கப் பட்டிருக்கின்ற ஒற்றை நிகழ்வேபோதும் – நமக்கு நம்முடைய ஒளிரும் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு…

இப்படத்தின் திரைக்கதையை எழுதலாமா வேண்டாமா என ஒரு தட்டுத் தடுமாற்றத்தில் இருக்கிறேன். ஏனெனில், அது ஒரு மாதிரி திகில்/ஸஸ்பென்ஸ் கதையும் கூட. கர்ட் வான்னிகட், ராபர்ட் அன்டன் வில்ஸன், ஸ்டேனிஸ்லாவ் லெம், ஃபிலிப் டிக், நீல் ஸ்டெஃபன்ஸன், ரே ப்ரேட்பரி, நீல் கெய்மன், ஹெச்பி லவ்க்ரேஃப்ட்  போன்றவர்கள், ஏன், என் உள்ளம்கவர் கள்ளி அர்ஸ்யுலா லெக்வின் அவர்கள் கூடத் தோற்றார்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இன்றுவரை எனக்கு அந்தப் படத்தின் சுருளோ, கேஸட்டோ, ஏன் துகள்களோகூடக் கிட்டவில்லை — ஆனமட்டும் தேடிப்பார்த்துவிட்டேன். குறைந்த பட்சம் ஸென்ஸார் போர்டுக்கு அனுப்புவதற்காவது இந்தச் சுருள் இருந்திருக்கவேண்டுமே, வெறுமனே கேஸட்டுகளாக மட்டுமே இருந்திருக்க முடியாதே என்றெல்லாம். புணே நகரின் திரைப்பட ஆவணக் காப்பகத்துக்கும்  நேரடியாகச் சென்று தேடிவிட்டேன். இதுவரை எனக்கு வெற்றி கிட்டவில்லை…

இந்தக் கட்டுரையையும் படித்து, நம் கலாச்சாரமேன்மையிலும் ஆர்வமிருக்கும் யாராவது இவற்றை வெளிக்கொணர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால், என்னால் முடிந்தது என்னவென்றால் – அந்த கல்கி2030 கதையின் மூலம் (அதாவது, ஷர்மா அவர்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன் நீளமான ஒரு நாவெல்லாவாக எழுதியது) கிடைத்தால் அவசியம் பிரசூரிக்கிறேன்.  கிடைக்கவில்லையேல் அதன் சாராம்சத்தையாவது.

அதுவும், உங்களில் யாருக்காவது அது குறித்த விருப்பமோ ஆர்வமோ இருந்தால்தான். எனக்கு நேரமும் கிடைக்கவேண்டும்.

பார்க்கலாம்.

(இந்தக் குறுநாவலின் பிரதி கிடைத்தால், அதனை மறுபடி (ஆனால் அழகுணர்ச்சியுடன், அடிக்குறிப்புகளுடன்… ஏனெனில், முதற்பதிப்பு ஒரு சிறுபத்திரிகை சாணிப்பேப்பரில் பிழைகளுடன் அச்சடிக்கப் பட்டிருந்தது) பதிப்பிக்கக் கூடச் செய்யலாம் – ஏனெனில் அது அவ்வளவு முக்கியமானதொன்று. தமிழில் தரமும் சாத்தியம் எனக் காத்திரமாக நிறுவுமது.

இது குறித்து ‘கிழக்கு பதிப்பக’ பத்ரி சேஷாத்ரி அவர்களிடம் பேசலாம் என ஒரு எண்ணம். இதற்கான பதிப்புரிமையை ஓடியாடி, ஷர்மாஜி குடும்பத்தினருடன் அல்லது அவரிடமிருந்தே (அவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில்) வாங்கி விடலாம் எனும் ஒரு குண்டுதைரிய நம்பிக்கையும் இருக்கிறது.

எப்படியும் பத்ரி அவர்கள், வெண்முரசு -> தலையணை வ்யாவாரத்துக்கு மாறுவதற்குள் இதனை என்னால் தொடரமுடிந்தால் வசதி…)
.

*** star (& navel) gazing JournalEntry: 20thFeb2010

24 Responses to “கல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்”


 1. (since some folks have DM’d)


 2. எரிகா பால்ஸம் அவர்களின் இந்த மகத்தான புத்தகத்தில் நம்முடைய ஒரு தமிழ்த் திரைப்படம்கூடத் தேறவில்லை – போகிறபோக்கில் சொல்லப்படும் ஒரு குறிப்பு கூட இல்லை; தமிழகத்தின் அளவிலும் மக்கள்தொகையிலும் சுமார் 3% இருக்கும் சிறு நாடுகளெல்லாம் இதில் பங்கு பெற்றிருக்கின்றன.

  இதுதான் கோடிகோடியாக அள்ளிக்கொண்டிருக்கும், தமிழர்களையும் நம் ஆன்மாக்களையும் ஜேப்படி செய்து, சதா சுரண்டிக்கொண்டிருக்கும் நம் திரைத்தொழில் காப்பிக்கடைக்காரர்களின் தரம்!

  (கல்கி2030 பிரதி இருக்குமானால் – அது கிடைக்குமானால், அதனைப் பற்றி யாராவது ஆர்வலர் முனைய முடிந்திருக்குமானால், சர்வ நிச்சயமாக அது உள்ளிடப்பட்டிருக்கும், முடியுமானால் அடுத்த பதிப்பிலாவது நல்லது நடக்கும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை)

  …ஆனால், நமக்கு, மாஸ்டர் படத்தில் குவியத்துடன் வில்லம்பு விடுபவர்களைப் பார்த்து முட்டிமைதுனம் செய்துகொள்ளவே நேரம் போதவில்லையே, அம்மணிகளே அம்மணர்களே!


 3. some comments received via some other channels:

  உனக்கு அத்புதமான அநுபவங்கள் கிடைத்திருக்கின்றன. பொறாமையாக இருக்கிறது.

  சட்டுப்புட்டென அதை கண்டுபிடித்துப் போடு

  சார், அந்த நாவலை பற்றி எழுதலாமே. சாராம்சாமாக – எதிர்காலம் நம்பிக்கை கொடுக்கும்னு எழுதிருக்கீங்களே.

  கல்கி2030 (1984) – if i may say, this story is almost George Orwellian in a positive way. where a good thing comes out , never to be found again and is gone without a trace or documented for posterity

  i seriously thought you were writing a parody when i started reading that post

  END

 4. Seetha Says:

  Thanks for introducing Ursula Le Guin.I felt very important to know I have read most of the authors who influenced her , thanks to my 87 year old father .( Cheap thrills).
  OTOH( again as you like to write), today’s post distressed me and made me feel so annoyed about us in general as an aesthetics devoid society .Moreover lack of respect for invaluable art doesnt seem to enter into our brains at all.

 5. Raj Chandra Says:

  +1 to publish it as a book.


  • 🙏🏿 Let me first figure out.

   In the meantime… why don’t you write about the books that you are reading? (and about others)

   (if you already maintain your writing/site somewhere, please provide pointers)

   • Raj Chandra Says:

    படிப்பேனே தவிர புத்தகங்களைப் பற்றி எழுதியதில்லை.  ஒரே காரணம்தான்…ஒன்றைப் படித்தால் அதைத் தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்தாக வேண்டும்.  அதனால் எழுதுவது தள்ளிப் போகிறது.  இருந்தாலும் சொல்வனம் பத்திரிக்கையின் நண்பர்கள் சில கட்டுரைகளை எழுத வைத்தார்கள் (நன்றாக இருந்தால் அவர்களின் எடிட்டிங் திறமை , கருத்துப் பிழைகள் தென்பட்டால் அது என்னுடையது).  Highlight அசோகமித்திரன் பற்றி எழுதியது.  ஏறக்குறைய 15 நாட்கள் எழுதி செப்பனிட்டோம்.  படித்துவிட்டு தொடர்பு கொண்டார்.   
    https://solvanam.com/author/rajesh_chandra/


    • ஐயய்யோ! நீங்கள் ஒரு என்ஆர்ஐ போலிருக்கிறதே! 🤨🤐

     (ஆனால், உங்கள் கட்டுரைகளில் ஒன்றிரண்டை நான் படித்திருக்கிறேன், ஆனால் நீங்கள்தான் அவற்றை எழுதியவர் எனத் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை)

    • Raj Chandra Says:

     அய்யோ…நான் இன்னும் “மேலைத் தத்துவத்துக்கும், இசைக்கும் ஈடு கிடையாது.  இந்திய மேதைகளெல்லாம், இசையெல்லாம்  வேஸ்ட்.  மேலை பேராசிரியர்கள் எழுதும் அத்தனையும் உண்மை, உண்மை தவிர வேறில்லை” அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே.  நான் எப்படி என் ஆர் ஐ ஆகமுடியும்?!!! :)))


    • இப்படிப் போகிறபோக்கில், என் பேராசானும் பிரபல பப்ளிக் இன்டெல்லெக்சுவலுமான அரவிந்தன் கண்ணையன் அவர்களை, தாங்கள் போட்டுக் கொடூரமாகத் தாக்குவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன், உங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறேன். .

     இவண்,

     தலைமைச் சீடர், இந்தியக் கிளை
     அனைத்தமெரிக்க அரவிந்தன் கண்ணையன் வழிபாட்டு மன்றம்.

 6. Anonymouse Says:

  Ram, thanks for this post. Humility is not a virtue, especially for a person like who has been there done that and have walked the whole nine yards. A “frog-leap” narrative that detailed happenings of four decades and many a thanks again, for introducing two seekers of perfection.


  • Hey! 🙏🏿

   For a few seconds, couldn’t figure out what this darn’frog leap’ was. Thanks for the reminder. 🤣

   🐸 As the apocryphal saying/usage effectively goes, ‘Illegitimi non carborundum’.

 7. seethayv Says:

  From Swarajya link you gave :

  ‘seductive Bhikshatana here.‘

  Yes no doubt there .Remember standing bewitched looking at the handsome Bikshatana the ultimate Hippie in Chidamabaram a beautiful moment in my life,very dramatic one.

  Yes I recall this article my A.Nee in the Swarajaya mag, and at that time more impressed by Ursula’s looks.No wonder she is your உள்ளம் கவர் கள்ளி.’


  • Nice. (but both my spouse and her grouse are fans of Ms. Le guin)

   I need to share an image of Shiva Bhikshatana – with a short (probably unnecessary) annotation.

   Will do that in the next couple of days, need to hunt it down. (not of Thillai)


 8. காவலூர் ‘வைணு பப்பு’ தொலைநோக்கி அமைப்பு, ஜவ்வாது மலை/தொகுப்பு:

  https://www.iiap.res.in/?q=vbo.htm

 9. திரைமொழி ஆர்வலன் Says:

  தமிழில் இப்படியும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது என இன்றுவரை நான் அறிந்திருக்கவில்லை, அதுவும் இன்றைய தொழில்நுட்ப வசதிகள் ஏதுமற்ற அக்காலத்திலேயே, அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா. ஆனால், இத்தனை முயன்றும் அப்படத்தின் ஒரு பிரதி கூட கைவரப்பெறாமல் போனது சோகமே, நீங்கள் எடுத்த/எடுக்கும் முயற்சிகளுக்காகவாவது அத்திரைப்படம் கிடைத்து பலரைச் சென்றடைய வேண்டும்.

 10. Chandrakumar Says:

  I have met late Sri. Subramanya Raju in person in 1977/78 in Coimbatore when publisher/writer Saavi arranged for one of its kind celebration for Balakumaran’s “Merkurip Pookkal”. S Raju was gem of a person, and I have read his stories as well. As you pointed out, it was a huge loss for Tamil Literary World. Thanks for sharing a detailed note on him.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s