வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (3/3)

October 19, 2013

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

19. சோட்டாபீம்  போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?

ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.

அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப்  புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா?

எனக்கு, என்  குழந்தைகள், இந்த மகாமகோ சோட்டாபீம் அவர்களின் கலாச்சாரப் பின்புலம் பற்றி ஒரு இழவும் தெரியாமல் வளர்ந்து விட்டார்களே என்பதை நினைத்தால் மிக வருத்தமாகத்தான் இருக்கிறது. என் செய்வது? :-(

உங்களிடம் ஏதாவது பரிந்துரை இருக்கிறதா? என் குழந்தைகளை மீட்க முடியுமா? தயவுசெய்து எனக்கு உதவவும். :-((

20. நம்மையே விடுங்கள் – நம் குழந்தைகளையும் விடுங்கள்; ஆனால் நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி, சோட்டாபீம், பீபீஸி,  எம்டீவி, போகோ பற்றியெல்லாம் பேசும்போது – நம் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? அந்த உரையாடல்களில் பங்கு பெற முடியுமா அவர்களால்?  முடியாதல்லவா? ஆகவே, அவர்களுக்கு இயலாமை உணர்ச்சியும், ஆத்திரமும், பொறாமையும் வராதா? இப்படி நம் குழந்தைகளை, இளமையில் காயடிப்பது நியாயமா? அவர்களுக்கு எப்படித்தான் நண்பர்கள்  உருவாவார்கள்?

உங்களுக்கு, உங்கள் குழந்தைமேல் இருக்கும் கரிசனமும், பொதுவாக உங்கள் கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்வும் பிடித்திருக்கிறது.

ஆனால், யோசித்துப் பாருங்கள் – நம்முடைய வயதானவர்களின் உலகில் (30+ லிருந்து எனச் சொல்லலாம்) இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் தாழ்மையுணர்வு கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறோமா என்ன? நமக்குப் பிடிப்பதைத் தொடர்ந்து செய்கிறோம். பிடிக்காதவற்றை, நமக்கு அடிப்படையில் மகிழ்ச்சியும் திருப்தியும் கொடுக்காதவற்றைத் தொடர்ந்து செய்ய மாட்டோம்.

நாம் இப்படி இருக்கும் போது ஏன் நம் குழந்தைகளை – அவர்களில் சுற்றுச்சூழலை அனுசரித்து மட்டும் தான் இருக்கவேண்டும் என்கிறோம்? ஏன் அவர்களை திகைக்கவைக்கும் சராசரித்தனத்தில் அமிழ்த்திக் கொண்டே இருக்கிறோம்?

இதற்கு மாறாக, ஏன் அவர்களின் சுயத்தை பலமான அஸ்திவாரங்களின், கட்டுமானங்களின் மீது – சுயச்சார்பு மீது வளர்த்தெடுக்கக் கூடாது?

என் குழந்தைகளுக்கு, வெகு துப்புரவாக — தாங்கள் பொருட்படுத்தத்தக்க உரையாடல்களில் ஈடுபடவும், தேவைப் பட்டபோது நண்பர்களுடன் பழகவும், அவர்கள் பார்வையில் அவர்களுக்குத் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் தெரியும். தங்களை, தங்கள் அறிவை, தங்கள் கேளிக்கை அனுபவங்களை  – சதா மற்றவர்களுடன் பொருத்தி, ஒப்பிட்டு – நான் உயர்த்தி அல்லது தாழ்த்தி என்று நினையாமல்  இருக்கவும் முடியும்.

அவர்களுக்கு சோட்டாபீம் எழவுகள் பார்க்கும் குழந்தை நண்பர்களும் உண்டு. பார்க்காத சில நண்பர்களும் உண்டு.

21. என்ன இருந்தாலும், பள்ளியில் இருந்து, நண்பர்களுடன் விளையாடிவிட்டு வரும் உன் குழந்தைகள், அவர்கள் வீட்டில் இருக்கிறதே, நமக்கும் தொலைக்காட்சி வேண்டும் எனக் கேட்பதே இல்லையா?

கேட்டிருக்கிறார்கள், அவர்களுக்குச் சுமார் ஐந்து வருட வயதாகும் வரை; அப்போதெல்லாம், நாங்கள் உட்கார்ந்து அதைப் பற்றிப் பேசுவோம். எல்லா பக்க நியாயங்களையும் குழந்தைகள் முன் வைத்து – அவர்களையே ஒரு முடிவுக்கு வரச் சொல்லுவோம். பெரும்பாலும் அவர்கள் தொலைக்காட்சி வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

சிலசமயம் வாய்தா வாங்கிக் கொண்டு, திரும்பிப் பேச வருவார்கள்.

நாம் பெற்றோர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்தால், அவர்களும் அதனை எதிரொளிப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

அவர்கள் இன்னமும் குழந்தைகள் தாம். நம்மைப் போல வளர்ந்து பெரியவர்களாகி அயோக்கியர்களாகிவிடவில்லை என்பதை நினைத்து ஆசுவாசம் பெறவும். கவலை வேண்டேல்.

22. அப்போது உன் குழந்தைகள் படமே பார்ப்பதில்லையா?

நிச்சயம் பார்க்கிறார்கள். அதிக பட்சம் வாரம் ஒரு முறை – எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் (ஆவணங்கள், புனைவுகள்) பார்க்கிறார்கள்.

எதைப் பார்த்தாலும், அவற்றைப் பார்த்து முடித்தபின் அவர்கள் அதனைப் பற்றி சுமார் 2-5 பக்க அளவுகளில் ஒரு கட்டுரை போல அவர்களுடைய நாட்குறிப்புகளில் — குறிப்புகளையும், எண்ணங்களையும், விமர்சனங்களையும் எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய அறிவு விசாலமாதல். தீவிரமாக யோசித்தல் கொஞ்சம் மேலதிகமாகச் சாத்தியப் படுகிறது என நினைக்கிறேன். இதைத்தவிர, மனதொன்றி எழுதுவதால்,  ஃபைன் மோட்டர் அசைவுகளினால் ஏற்படும் ஒத்திசைவுகள் — மூளைக்கு, வாழ்க்கைக்கு உதவிகரமானவை.

யோசித்தால் — எனக்கும் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது. என்ன பார்த்தாலும், படித்தாலும், கொஞ்சம் யோசித்தாலும் — அதனைப் பற்றிச் சில குறிப்புகள், அசை போடுவதற்காக, எனக்காக எழுதிக் கொள்வேன் – இப்படி குறிப்புகளாகவே பல நோட்டுப் புத்தகங்கள் இருக்கின்றன. இக்குறிப்புகளைப் படிப்பதுதான் எனக்குக் கொஞ்சம் கஷ்டம் – என் கையெழுத்து அவ்வளவு மோசம். :-(

23. எல்லாவற்றையும் எனக்குக் கொண்டாடவேண்டும். பிறந்த நாள், பிறக்காத நாள், ஆண் நாள், பெண் நாள், தாய் நாள், நாய் நாள், நண்பன் நாள், ஆசிரியர் நாள், ஆஇராக்கியர் நாள் எனப் பலப்பல நாட்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவேன். தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பதும் ஒரு சந்தோஷமான விஷயம்தானே… ஆகவே, என் குழந்தைகள் இதனைக் கைவிட்டால்  – அவர்களை ஊக்க — ‘ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பேன்’ அல்லது ‘ஒரு புது  கணினிப் பொம்மை கொடுப்பேன்’ போன்ற உந்துதல் தரவேண்டிய விஷயங்களைப் பற்றி…

குழந்தைகளின் நுண்ணுணர்வுகளை அவமானப் படுத்த வேண்டாம். லஞ்சம் வேண்டாம்.

குழந்தைகளோடு உரையாடினாலேயே, அவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருந்தாலேயே அவர்கள் வெகு சீக்கிரமாகப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள்.

இரட்டை வேடதாரிகளை – அவர்கள் தங்கள் பெற்றோர்களாகவே இருந்தாலும் கூட, வெகு நுட்பமாக அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் கண்கள், அவர்கள் பார்க்கும் பார்வை – அவர்களுடைய எண்ணவோட்டங்களைத் தெளிவு படுத்திவிடும்.

24. ஹ்ம்ம். எங்களிடம் இருக்கும் தொலைக்காட்சியை நாங்கள் கட்டுப் படுத்தலாம். ஆனால், உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் இது பிரச்சினையாகி விடுமே! அவர்களை ’பெட்டியை ஆன் செய்யாதீர்கள்’ என்றெல்லாம் சொல்ல முடியுமா?

இது ஒரு நுணுக்கமான விஷயம்தான். இதற்கும் பல வகையான அணுகுமுறைகள் இருக்கின்றன.

உங்களை அழைக்கக் கூடிய நண்பர் / உறவினர் குழாமை, குறைக்கலாம். க்வாலிடி தான் முக்கியம். க்வான்டிடி அல்ல. தரம்தான் முக்கியம், எண்ணிக்கை ஒரு குப்பை.

மென்று முழுங்கிக் கொண்டிருக்காமல், தைரியமாக,  நீங்கள் சென்றிருக்கும் வீட்டினர்களை – கொஞ்சம் இந்தத் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறீர்களா எனக் கேட்கலாம். (பெரும்பாலும் அவர்கள், ஒரு ஆச்சரியத்துடன் அதனை  அணைத்து விடுவர்)

மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லும் முன்னர் — உங்கள் குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் – அவர்களே, கவைக்குதவாத தொலைக்காட்சிகள் பார்க்காமல் தங்கள் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து விடுவர். (அதாவது அவர்களுக்கே, சுயமாகச் சிந்திக்கக் கூடிய காரணத்தால், ஒருவிதமாக குறிப்பும் கொடுக்காமலேயே தொலைக்காட்சி ஒவ்வாமை  வந்து விடும்)

இன்னொரு வழி: கையில் கொஞ்சம் ப்லாஸ்டிஸைன் களிமண் எடுத்துக் கொண்டு – அவ்வீட்டினர்களின் ரிமோட் கன்ட்ரோலின் முன்பக்கமிருக்கும் இன்ஃப்ராரெட் குமிழ்விளக்கின் முன் அப்பி விட்டால் – அது வேலை செய்யாது. இல்லையேல் அதன் பேட்டரியை எடுத்து விடலாம். அல்லது பேட்டரியும் பேட்டரிபொருத்துவானும் இணையும் இடத்தில் ஒரு சிறிய காகிதத் துணுக்கை செருகி விட்டால் போதுமானது. பல மனிதர்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் இல்லாமல், தொலைக்காட்சியை  இயக்கத் தெரியாது, அல்லது அலைவரிசை மாற்றவேண்டும் போது, டீவி அருகே போய் போய் மாற்றவேண்டுமா என்று தவித்துப் போய் ஒரு வழியாக தொலைக் காட்சியையே அணைத்து விடுவார்கள். (மறக்காமல், கிளம்பும்போது நீங்கள் செய்த குறும்பின் விளைவைச் சரிசெய்ய வேண்டும். ஹ்ம்ம்ம் செய்யாவிட்டாலும் பாதகமில்லைதான்)

ஒரு தொழில்நுட்ப வழி: ஒரு பரந்த அலைவரிசை இன்ஃப்ராரெட் அலை அனுப்புவானை – நீங்களே வடிவமைத்து அதனுடன் இவ்வீடுகளுக்குச் செல்லலாம்.அவ்வீட்டினர்களுக்குத் தெரியாமல், கண்டமேனிக்கும் சேனல்களை மாற்றி மாற்றி, அணைத்து அணைத்து கடுப்பேற்றினால், உங்களை அழைத்த பாவம் செய்தவர்கள் – அலுப்படைந்து தொலைக்காட்சியை விட்டு விடுவார்கள். சோம்பேறிகள், ஏன் இப்படியாகிறது என யோசிக்காமல், தொலைக்காட்சி ஏதோ பழுதடைந்துவிட்டதென்று ரிப்பேர் காரர்களிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

குறிப்பு: மேற்கண்டவை அனைத்தையும் நான் கடைப்பிடித்திருக்கிறேன். மிக வெற்றிகரமாகவே! 8-)

25. சரி. சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் எங்களால் ஒரு சரியான ‘விருந்தோம்பல் செய்ய முடியாதே!

சுவாரசியம்தான். ஆனால் மாட்டிக் கொள்ளாமல் இக் குறும்புக்காரியங்களைச் செய்ய வேண்டும். இது முக்கியம். சில சமயம் – உங்கள் டீவியில் ஏதோ பிசாசு / செய்வினை என்றெல்லாம் சொன்னால் கூட, அவர்கள் நம்பி விடுவார்கள். பாவம்.

சரி, இப்போது உங்களுடைய ’தொலைக்காட்சி விருந்தோம்பல்’ பிரச்சினைக்கு வருவோம்.

அய்யா – புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றில் எல்லாம் – விருந்தோம்பலுக்கு தொலைக்காட்சி அவசியம் என்று அடி-தொடை பிரிப்பதாகத் தெரியவில்லையே? யாராவது தொலைக்காட்சியொடு விருந்தோம்பியார் என்று சங்ககாலத்தில் இருந்திருக்கிறார்களா என்ன?

முதலில் புரிந்து கொள்ளுங்கள் – அவர்கள் உங்களைப்  பார்க்கத்தான் வருகிறார்கள். உங்களுடைய டீவீயை அல்ல. அவர்கள் வருவது — உங்களுடன் உட்கார்ந்து நீயா நானா போன்ற கண்டமேனிக்கு இழவுகள் பார்ப்பதற்காக அல்ல.

இன்னொன்று – உங்களுக்குத் தகாது என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் ஒன்றினை, உங்கள் விருந்தாளிகள் / உறவினர்கள் மேல் கவிழ்த்துவது சரியா? யோசிக்கவும்.

26: சரி, என்னிடம் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை என்ன செய்வது? விற்று விடலாமா?

விற்க வேண்டாம். அப்படிச் செய்தால், நீங்கள் பிரச்சினையை அதனை வாங்குபவர் வீட்டிற்குத் துரத்தி விடுகிறீர்கள். அவர் குடும்பம் ஒழுங்காக வாழ வேண்டாமா என்ன?

அவர் வீட்டுக் குழந்தைகள் சரியாக வளர வேண்டாமா என்ன?

அது  சரியில்லைதான்.

இதற்குப் பதிலாக, அந்தப் பெட்டியை உங்கள் குழந்தைகளின் உதவியுடன் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி – கிடைக்கும் உதிரி பாகங்களை வைத்து — பல பரிசோதனைகள் செய்யலாம். ஷாக் அடித்துக் கொள்ளலாம்.

இந்தச் செயலின் மூலமாக நீங்கள் மெய்யாலுமே தொலைக்காட்சிப் பெட்டியிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடியவை நிறைய.

முதல் பரிசோதனைக்குப் பரிந்துரை: செட்-டாப் பெட்டியைப் பிடுங்கி விடவும். பின்னர் உங்கள் தொலைக்காட்சியின் அன்டென்னா இணைப்பையும் பிடுங்கி விடவும்.

இப்போது, உங்களுடைய தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்னிணைப்பு கொடுக்கவும். திரையில் பொரி பொரியாக பொரிந்து கோடுகோடாக ஒரு கலங்கிய சித்திரம் வரும்.

இந்தச் சமிக்ஞைகள் மிகப் பழமையானவை. தொன்மையின் ஆரம்பமானவை.

பின்புலக் கதிரியக்க ப்ரஹ்மம். நன்றி: http://scarlettracery.files.wordpress.com/2013/09/8-1162915-television-static.jpg
பின்புலக் கதிரியக்க ப்ரஹ்மம்.
நன்றி: http://scarlettracery.files.wordpress.com/2013/09/8-1162915-television-static.jpg

இவைதான் – சுமார் 13.8 பில்லியன் வருடங்கள் முன்பு நிகழ்ந்த மகாமகோ பெருவெடிப்பின் (=‘big bang’) அண்மையிலிருந்து வெளிவந்து, தொடர்ந்து பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கும் பின்புலக் கதிரியக்கத்தின் சமிக்ஞைகள்.

ஆஹா!

ஆனந்தக் கூத்திடுங்கள்.

தொலைக்காட்சிப் பெட்டியைக் கூடத்தின் நடுவில் வைத்து சுற்றி நடனமாடி, கும்மியடியுங்கள்.

புற நானூற்று ’யாதும் ஊரே’ கவிதையின் – படு பிரசித்தி பெற்ற முதல் இரண்டு வரிகளுக்கு அப்பால்  உள்ள பகுதியைப் புரிந்து கொண்டு  உச்சாடனம் செய்யுங்கள்.

அழகில், சொல்லாடலில், தருக்கத்தில், நேர்மையில் மயக்கும்  நாஸதீய சூக்தத்தை கணீரென்று சொல்லுங்கள்.

பரலோக ராஜ்ஜியத்தையே விடுங்கள்.  இகலோக ராஜ்ஜியமும் உங்கள் குழந்தைகளுடையதுதான்.

ஆமென்.

12 Responses to “வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (3/3)”

  1. kavi Says:

    ரொம்ப குசும்பு சார் உங்களுக்கு !


  2. ஆங்கிலத்தில் Idiot Box – முட்டாள் பெட்டி என்று சொல்வார்கள்.இன்றோ தொலைக்காட்சிபேட்டிகள் SMART ஆகிவிட்டன. நாம் முட்டாள்கள் ஆகி விட்டோம்.நல்ல பதிவுகள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  3. saravanakumar939@gmail.com Says:

    தோள்கள் தினவெடுக்கின்றன……கைகள் பரபர‌க்கின்றன……வீட்டுக்குப்போனவுடன் [ என்னுடைய பி.சி பழுதானதன் காரணமாக சில நாட்களாக பிரௌசிங் சென்ட்டரே துணை ] டி.வியை உடைத்துவிட்டுத்தான் மறுவேலை…….. [ எதுக்கும் சன் .டி வில என்ன படம் போட்டிருக்கான்னு மொதல்ல பாத்திருவோமே? ]

  4. சான்றோன் Says:

    தோள்கள் தினவெடுக்கின்றன……கைகள் பரபர‌க்கின்றன……வீட்டுக்குப்போனவுடன் [ என்னுடைய பி.சி பழுதானதன் காரணமாக சில நாட்களாக பிரௌசிங் சென்ட்டரே துணை ] டி.வியை உடைத்துவிட்டுத்தான் மறுவேலை…….. [ எதுக்கும் சன் .டி வில என்ன படம் போட்டிருக்கான்னு மொதல்ல பாத்திருவோமே? ]

  5. Prabhu Says:

    After your post on ‘aseptic homes’, these posts about TV made be read more than once. Very very few people even realize that there’s actually much more you can do if you don’t own a TV or even don’t watch it. One article that constantly came to my mind while reading these was Jeyamohan’s post about சராசரிகள்.

  6. Manikandan V Says:

    Thank your Sir Excellent Article – The Less you watch TV more you can look into yourself and better the life

  7. A.seshagiri Says:

    எவ்வளவோ ‘மேட்ச் பிக்சிங்’ நடந்த பிறகும் டிவியில் கிரிக்கெட் பார்ப்பதை மட்டும் நிறுத்த முடியவில்லையே சார்.

  8. kiwiyan Says:

    உங்கள் தொலைகாட்சி தொடர் படித்த பின் ஏதோ கொஞ்சம்நஞ்சம் (news, current events,docu, xfactor, david letterman, sports) பார்பதையும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்திவிட்டேன் (ஒரு பரிட்சார்த்த முயற்சிதான்). நிறைய நேரம் கிடைத்தமாதிரி இருக்கிறது. புத்தகம் படிக்க, சமைக்க, காலியான பாட்மிண்டன் ஷட்டில் டப்பாவில் பேனா-ஸ்டாண்டு செய்யவது என்பன போன்றவற்றுக்கு…ஆனாலும் ஒன்னு விடுபட்டு போச்சோன்னு தோனுது. நம்ம சமூகத்துல ”கேபிள் டிவி கனெக்ஷன் வாங்க வக்கு இல்ல இப்படி ஒரு புண்ணாக்கு பிலாசபி சொல்லருது”ன்னு ஒரு முதுக்குக்கு பின் பேச்சு உங்களை பாதிக்காது ஆனாம் அநேகக மக்கள் இதை தாங்க மாட்டார்கள். இதை பற்றி எழுதவும்.

    உங்க வலையில் வலது பக்கம் போட்டிருக்கும் கிரேக்க எழுத்துக்கு (தானே??) என்ன அர்த்தம்? ஒரிவேளை font சரியாக வராமல் போன சமஸ்கிருத ஸ்லோகமா?

  9. Jataayu Says:

    அருமையான பதிவு சார். அதுவும் முதல் பாகத்தில் உள்ள கால்வீன் கார்ட்டூன்கள் சிறப்பான தேர்வு. நன்றி. எனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி உள்ளது. அதன் பயனபாட்டை மிகக் குறைத்து சராசரியாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம், அதிக பட்சம் ஒரு மணி நேரம் என்ற அளவில் கொண்டு வந்துள்ளேன்.. சில நாட்களில் தொலைக்காட்சி ஆன் செய்யப் படாமே இருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. அதை டிவிடிக்கள் பார்க்கவும், கணினியுடன் இணைத்து நல்ல யூட்யூப் வீடியோக்களை பெரிய திரையில் பார்க்கவுமே அதிகம் பயன்படுத்துகிறோம்.


  10. ஹாஹா, அருமையான பதிவுகள். உங்கள் பதிவை நாளைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவிட்டுச் சுட்டியைக் கொடுக்கிறேன். நன்றி. :)))


  11. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதிற்கு எனது வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட இதோ-http://blogintamil.blogspot.com/2013/11/blog-post_10.html?showComment=1384047144990#c4502813204804188909
    ——————————————————————————–
    வாருங்கள் அன்புடன்…புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
    உயிரில் பிரிந்த ஓவியமாய்(கவிதையாக)
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


  12. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_10.html


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...