#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (1/n)

December 23, 2015

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

கடந்த நான்கைந்து வருடங்களாக என்று, பலப்பல திராவிட மண்ணாங்கட்டி எதிர்ப்புப் பதிவுகளைத்  ‘தேற்றியாகி’ விட்டது. திராவிடலைகளின் மீதான என் கோபத்துக்கு, என் உயிரிரும் உயிரான (அல்லது என்னுடைய விரக்திக் கணங்களில், மயிரினும் மயிரான) படுசெல்லமான தமிழகத்தின்  இக்காலத் திராவிடப் பரிதாப நிலைமை பற்றிய என் ஆதங்கங்களுக்கு  – கொஞ்சத்துக்குக்கொஞ்சமேனும், இப்போதைக்காவது, ஒரு தற்காலிக வடிகால் தேடிக்கொண்டாகிவிட்டது.
ஆக, நான் செய்த மகாமகோ பாவங்களுக்கு, பெரியாரியர்களை-திராவிடர்களின் உண்மையான சொரூபத்தை மறுபடியும் மறுபடியும்  எடுத்துக்காட்டிய தீச்செயல்களுக்கு –  ஒரு மனம்கனிந்த பிராயச்சித்தமாக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது என நினைத்துக்கொண்டும் நீங்கள் இன்புறலாம்.
-0-0-0-0-0-0-0-

சரி. இந்தப் பதிவில் பெரியார் திடல் (கவனிக்கவும்: பெரியார் திட்டல் அல்ல!) பற்றிய என் நினைவிலிருக்கும் விஷயங்களை எழுதலாமென எண்ணம். பயப்படாதீர்கள், நான் ஈவெரா அவர்களை உசுப்பி உலுக்கியெடுத்து, அவரை அவருடைய  கல்லறையிலிருந்து யேசுபோல ஈஸ்டர் மோஸ்தரில் உயிர்த்தெழச் செய்யப் போவதில்லை. எளிமையாக(!) – நான் பலவருடங்கள் முன் திடலுக்குச் சென்ற காதையான பகுத்தறிவுச் சுற்றுலா செய்தியை, அதன் பின்புலத்தைப் பற்றி மட்டும்தான் எழுதப் போகிறேன்.

ஏனெனில் ஈவெரா ‘பெரியார்’ ராமசாமி அவர்களுடைய தமிழ் நாட்டின் மீதான தாக்கத்து என்பது ஒரு முக்கியமான விஷயம். அதனை இனம் கண்டுகொண்டு வெறுக்கலாம், புறம் தள்ளலாம் அல்லது, பரிசீலிக்காமல் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடலாம் – ஆனால் அந்த தாக்கத்தினைப் பற்றிய திடமான கருத்தாக்கங்கள் இல்லாமல், ஒரு சிந்திக்கும்-அசைபோடும் மானுடனால்,  தமிழகத்தின் இன்றைய சோகமான நிலையைப் புரிந்துகொள்வதை நோக்கிச் செல்லவே முடியாது.  இதற்குக் காரணம் ஒன்றுதான்: அவர் முயற்சியால் உருவான வன்முறைமிக்க ஜாதிவெறி திராவிட இயக்க ‘ப்ரேன்ட்’ன் விஷநாளங்கள், தமிழத்தின் சகல சமூகப்பண்பாட்டுக் கூறுகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளன.

இதற்கு, ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்: இறுகி வரும் ஜாதிவெறி, இளைஞர்களைத் தவறாக வழி நடத்துவது, கட்சி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு சில நிலவுடமை/பணவுடமை ஜாதிகளிடம் மட்டுமே அரசியல் (ஆகவே, சமூக) அதிகாரம் குவிக்கப்பட்டமை, வெட்கமேயில்லாத வகையில் கமுக்கமான தலித் எதிர்ப்பு, ஊடகங்கள் துளிக்கூட வெட்கமேயில்லாமல் அதது ‘தாங்கிப் பிடிக்கும்’ அதிகார மையங்களுக்கு ஜால்ரா போடுவது, ஹிமாலய ஊழல்களை அறிவியல் பூர்வமாகச் செய்வது,  காத்திரமான சமூக உரையாடல்களுக்கு இடம் கொடுக்காமல், உணர்ச்சிகரமான புல்லரிப்புகளை மட்டும் சாத்தியப் படுத்தியிருப்பது, தமிழ்தமிழ் என முழங்கி தமிழின் மேன்மைக்கு-வளர்ச்சிக்கு ஒரு துரும்பையும் அசைக்காமை, தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தல் (‘என் மகள் கனிமொழியும் சர்ச்பார்க்-ல் படித்தவர்தான்; அவர் ஜெயலலிதாவைவிட நல்ல ஆங்கிலம் பேசுவார்!‘ போன்ற கேவலமான, நகைக்கத் தக்க மேடைப்பேச்சுகள் எப்படி தமிழின் மீதான அபிமானத்தை வளர்க்கும்?), பெண்களை நீசமாக மதித்து அதில் ஒருகூறாக, பலதார மணம் புரிந்து பெண்களை நசுக்குவது, பாரம்பரியங்கள் கொச்சைப் படுத்தப்படல், ஜிகினாவகை அடுக்குமொழி பொறுக்கிநடைப் பேச்சுகள், மக்களின் மாளா சினிமா/டீவி மோகம், தமிழகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தமிழகத்தில் காரணம் தேடாமல், வெகு சௌகரியமாக ‘ஆரிய’க் கதையாடல்களில் தேடுவது, பெருங்குடிபோதையில் ஒட்டுமொத்த மனிதத் திரளிலும் தள்ளுவது, மதச் சிறுபான்மையினரின் மனங்களில் விஷத்தையும் பிரிவினைவாதத்தையும் விதைத்து, வெறுப்பியத்தை வளர்த்து, தேர்தல் குளிர்காயல்கள்… … … இன்னபிற (இன்னும் சிலபல இருக்கின்றன – அவற்றை இன்னொரு சமயம் பார்க்கலாம்!)

ஏனெனில் மிக வருந்தத்தக்க அளவில் – ஈவெரா ‘பெரியார்’ ராமசாமி அவர்களின் புதிர்த்தன்மை மிக்க ஆளுமையைப் புரிந்துகொள்வது ஒரு கடினமான விஷயம். பாம்பென்றும் தாண்டமுடியாது. பழுதென்றும் மிதிக்க முடியாது எனும் வகை; ஒரு விசித்திர குணக் கலவை அவர்…

தமிழ்ச் சராசரிகளுக்கெல்லாம், ஒரு அதிதீவிரச் சராசரியாகத் தலைமையேற்று தமிழ்ச் சமூகத்தையே பலபத்தாண்டுகளுக்குக் காயடிப்பதைத் துப்புரவாகச் செய்தவர். தொடர்ந்த-கடினமான உடலுழைப்போ, ஆய்வு மனப்பான்மையோ, படிப்பறிவோ, தத்துவப் பயிற்சியோ, ஆழ்ந்த புரிதல்களோ இல்லாமல் சவடால் பேச்சுகளாலும், முதிராத் தன்மை வாய்ந்த முட்டியடி எதிர்வினைக் கருத்துகளாலும், நீர்க்கடிக்கப்பட்ட- வெகு எளிமையான பார்வைகளாலும், வெறுப்பிய உமிழ்தல்களினாலும், மூர்க்கத்தனத்தாலும்  –  போக்கற்ற (ஆகவே எண்ணற்ற!) தமிழச் சராசரிகளை ஈர்த்து, தமிழகத்தின் அரசியலை. ஸிவில் சமூகத்தை,  சராசரி உதிரிமயமாக்கியவர்.

படிப்பாளிகளுக்கு, அறிவாளிகளுக்கு, சிந்தனையாளர்களுக்கு, சமூகத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கெல்லாம்  எதிரான ஒரு வெகுஜன பாமர சராசரிப்போக்கைக் கொணர்ந்து – அதனால் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, அற விழுமியங்களை எதிர்மறை விளைவுகளுக்கு உட்படுத்தியவர்; தமிழக அரசியலின் பண்பட்ட தலைவர்களுக்கெதிராகப் போராடி, அவர்களுக்கெதிராக உதிரிகளை முட்டுக்கொடுத்து நிற்கவைத்து – நம் மக்களின் தலைமையை, ஏகோபித்துப் பொறுக்கி மயமாக ஆக்கியவர்.

இப்படிப்பட்ட அதிமனிதரான, கல்யாணகுணங்களைக் கொண்டவரான ஈவெரா அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றுமேயில்லாமல் இல்லை. என்னைப் பொறுத்தவரை, அவை இரண்டு; இரண்டு மட்டுமேதான்:

  1. ஸென்டிமென்ட் கின்டிமென்ட் என்ற எழவெல்லாம் பார்க்காமல், தமிழ்மொழி செம்மொழி என்று கயமையுடன் உளறிக்கொட்டாமல்  – தமிழை வளப்படுத்தும் ஒரு முயற்சியாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்னெடுத்தது.
  2. கொச்சையான/பண்பாடற்ற வாதங்களை முன்வைத்தாலும் (+அவர் வழக்கமேபோலக் கவலையேபடாமல் முன்பின் முரணாகப் பேசினாலும், பெண்களைப் பற்றித் தொடர்ந்து இழிவான கருத்துகளை முன்வைத்தாலும்) – அதே சமயம், அவர் பார்வையில் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வந்தது.

அவ்வளவுதான்.

தண்டமிழ் திராவிடர்களால் எங்கோ மலையுச்சியில் வைத்து கொண்டாடப்படும் இவர் பிம்பத்தை இவ்வளவு குறைவாக, அதல பாதாளமாக மதிப்பிடுவதை நான் தவிர்க்க மாட்டேன்.

ஏனெனில், நான்:
  1. பெரியார் எழுத்துகள் அனைத்தையும் (ஏறத்தாழ அல்ல, தாழத்தாழ!) + முக்கால்வாசி பிற சுயமரியாதைப்(!) பிரச்சார நிறுவன புத்தகங்களையும்கூட படித்து ஜீரணித்திருக்கிறேன்(!), அறிவாளி நண்பர்களுடன் விவாதித்தும் இருக்கிறேன்; அவருடைய ‘மரண சாஸனம்’ கடைசிச் சொற்பொழிவுக்குச் சென்றிருக்கிறேன்.
  2. என்னுடைய விடலைப் பருவத்தில் (சுமார் 13 வயதுமுதல் 17 வயதுவரை) பெரியார் உபாசகனாக, அவரை ஆராதித்தனவாக இருந்திருக்கிறேன்.
  3. பலப்பல சான்றோர்களின், திராவிட இயக்கம் தொடர்பான ஆராய்ச்சிகளைப் படித்திருக்கிறேன். அவற்றை விமர்சன ரீதியாகப் பார்த்து, அவற்றின் சாதகபாதகங்களைப் பற்றி யோசித்தும், நேரடியாகச் சிலபல அவ்வெழுத்தாளர்களுடன் உரையாடியும் இருக்கிறேன்.
  4. குப்பை வம்புச் சண்டைகளில் (=நேரடி வன்முறைகள்) பொதுவாக ஈடுபடாமல் இருந்தாலும், ஜாதிவெறியற்றவனாக இருந்தாலும், என் தகப்பனார் காமராஜ் அபிமானியாக இருந்து ஹரிஜன்களுடனும் அவர்கள் மேன்மைக்காக உழைத்த பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் – ஒரு சமயம், திராவிட இயக்க குண்டர்களிடம், ஒருவிதமான பின்புலமுமில்லாமல், சீண்டலில்லாமல், என் ஜாதி காரணமாக மட்டுமே மகத்தாக அடி வாங்கி இருக்கிறேன். திருப்பிக் கொடுத்தும் இருக்கிறேன். ஆனால், அச்சமயம் ஏழெட்டு குண்டர்களால் முட்டுச்சந்தில் சூழப்பட்ட நிலையில் தனியொருவனால் மேலதிகமாக ஒன்றும் செய்திருக்க முடியாது. இவற்றைப் பற்றி எழுதுவதில் எனக்கு வெட்கமில்லை;  என்னை வீரம் செறிந்தவனாகச் சித்திரித்துக்கொள்ளளவும் ஆசையில்லை; ஆனால், பெரியார் மாயையில் இருந்த எனக்கு, இந்த நிகழ்வு, ஒரு பெரிய சித்தாந்தத் திறப்பாகவே இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். (இவை நடந்தது எனக்கு 17 வயதுபோல இருந்தபோது; இதற்குப் பிறகும் கடந்த 2011 தேர்தல் ஜுரத்தின்போதும் சில திராவிடத்தன ‘தள்ளுமுள்ளு’கள் இருந்தன; ஆனால் இவற்றில் திமுக குடிகாரர்கள்தாம் பிரதானம், இதற்குப் பெரியாரை நேரடிக் காரணமாக்க முடியாதுதான்!)
  5. கடந்த 40 ஆண்டுகளாக, எங்கோ போயிருக்கவேண்டிய தமிழகம், அற்பப் பிச்சை இலவசங்களுக்காக கொள்ளைக்காரத் திராவிடர்களின் காலடிப் புழுதி மண்ணில் கஞ்சிக் கலயங்களுடன் சோம்பேறித்தனமாக நிற்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
  6. இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக – ‘சாதி ஒழிப்பு’ என்று சொல்லிக்கொண்டே, தொடர்ந்து கமுக்கமாக அவ்வியக்கம், தலித்களைப் பொருளாதாரசமூக ரீதியாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் கூடப் படுகேவலமாக ஒடுக்குவதைப் பார்த்துவருகிறேன்; இது மிகவும் சோகமான விஷயம்.
வயிறு எரிகிறது.
-8-8-8-8-8-8-8-8-

வருடம் சற்று முன்னேபின்னேயிருக்கலாம் – 1987 அல்லது 1988 வாக்கில் என்னுடைய ஐஏஎஸ் நண்பன் ஒருவனுடன், அவன் என்னை அநியாயத்துக்குப் பிடுங்கி எடுத்ததால், சென்னை வேப்பேரியில் உள்ள தினத்தந்தி அலுவலகம் அருகே, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள அந்த மகாமகோ பெரியார் திடலுக்குச் சென்றேன். அந்த வளாகத்திலிருந்த வீரமணி அவர்களின் அலுவலகம், விடுதலை அலுவலகம், பெரியார் நினைவிடம்,  பெரியார் சிலை  (+பல்கலைக்கழக அலுவலகம்,  திருமண மண்டபம் ஆகியவை அப்போது இருந்தனவா என்பது நினைவில் இல்லை!) அனைத்தையும் தீவிரமாகப் பார்த்து இறும்பூதடைந்தேன்.

ஒர்ரே புல்லரிப்பு.

என்னுடைய சிலபல முக்கியமான குழப்பங்களை, நேரடியாக நிவர்த்தி செய்து கொண்டேன். வீரமணி அவர்களுடன் சுமார் இருபது நிமிடம் போலப் பேசவும் பேச முடிந்தது. இப்பேச்சில் ஒரு பெரிய தத்துப்பித்துவார்த்தமும் இல்லை. ஒரு வாக்குவாதமும் இல்லை. ஏனெனில் நான் வெறுமனே வீரமணி அவர்கள் சொல்வதை, நண்பனின் கேள்விகளை, அவற்றுக்கு அவர் பதில் அளித்த பாங்கை – உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன்; அதிக பட்சம், ஏழெட்டு வாக்கியங்களைப் பேசியிருப்பேன் அவ்வளவுதான்.

முதலில் மூன்று விஷயங்கள்:
1) வளாகம் பிரத்தியட்ச குப்பைகூளம் ஒன்றுமில்லாமல் தூய்மையாக இருந்தது.
2) அவருடைய தடாலடி மேடைப்பேச்சுகள் போலல்லாமல் – நேரடிப் பேச்சுக்கு, பொதுவாக, மிகவும் பண்பானவராகத்தான் வீரமணி இருந்தார். மிகுந்த மரியாதையுடன்தான் பேசினார், சிலபல பதற்றங்களையும் குழப்படிகளையும் தவிர.

3) ஒவ்வொரு சாதா சுயமரியாதையுள்ள தமிழனும், சுயமரியாதையற்ற திராவிடனும் தம் வாழ்வில் ஒரு முறையாவது அவசியம் இப்பகுத்தறிவுக் கோவிலுக்குப் போய் புல்லரிப்புப் பெறுவது முக்கியம்! (இல்லாவிட்டால், பெரியார் கனவில் வந்து கண்ணைக் குத்தி விடுவார்; ஊக்க போனஸாக அடுத்த ஜென்மத்தில் பல்லாயிரம்கோடிசொத்து திராவிடர் கழகத்தில் சேர்ந்து வீரமணியின் பேரர்களின் காலடியில்வேறு பகுத்தறிவுடன் புரள வேண்டியிருக்கும். ஜாக்கிரதை)

-0-0-0-0-0-0-0-

அடுத்த பதிவில்: #பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (2/n)

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)

சாமினாதன்: மறுசுழற்சி 13/02/2014

முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014

சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் 07/02/2014

 

One Response to “#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (1/n)”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...