ஷங்கர் குஹா நியோகி – சில நினைவுகள்

February 14, 2013

ஆம்.

நான் எப்பொழுதுமே ஒரு பாக்கியசாலியாகத்தான் இருந்திருக்கிறேன், தொடர்ந்தும் அப்படியேதான் இருப்பேன். எனக்குக் கிடைத்த (தொடர்ந்து கிடைக்கும்) அருமையான அனுபவங்கள்,  நிகழ்வுகள், நட்புக்கள் – எனக்கு அவைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் அருகதை இருந்ததோ இல்லையோ, இருக்கிறதோ இல்லையோ – அவை அழகானவை, வாழ்வுக்குச் செறிவூட்டுபவை; நுட்பமும், ஆழமும், வீச்சும் மிக்கவை. அசை போட அசை போட, போதையும்,  சில சமயம் மாளா துக்கமும் தருபவை…

-0-0-0-0-

ஷங்கர்தா ((1943 – 91) என எங்களில் சிலரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஒரு மகத்தான மனிதநேயவாதி கொலை செய்யப்பட்டு 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று உயிருடன் அவர் இருந்திருந்தால் அவருக்கு 70 வயதாகியிருக்கும். ஃபெப்ரவரி 14 பிறந்தவர் அவர்.

ஹ்ம்ம்?  அவர் உயிருடன் இருந்திருந்தாலாவா??

உண்மையில், அவரை சத்தீஸ்கட்சார் தொழிலதிபர்கள் விட்டுவைத்திருந்தாலும் நமது தண்டகாரண்ய இன்னபிற நக்ஸலைட்டுகள் அவரைத் தொலைத்துக் கட்டியிருப்பார்கள். ஏனெனில், பின்னவர்களும் மகத்தான ஊழல்வாதிகளும், அயோக்கிய – சர்வாதிகார வன்முறைகளில் ஈடுபடுபவர்களும், பொறுப்புணர்ச்சியற்றவர்களும், நிராயுதபாணிகளைக் கொல்பவர்களும் தாமே.

-0-0-0-0-

நான் 1980களின் நடுவில் பிலாய் நகரத்தில் (அப்போது அது மத்யப் பிரதேசத்தில் இருந்தது – இப்போது சத்தீஸ்கட்டில் இருக்கிறது) உள்ள மாமாபெரும் இரும்பு-எஃகுத் தொழிற்சாலையில், இளமையும், கனவுகளும் மிகுந்த ஒரு பொறியாளனாகப் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

இருபத்தினாலு மணி நேரமும், ரெயில் வண்டி, ரெயில் வண்டியாக மண்ணும், கல்லும், கரியும், சுண்ணாம்புப் பாறையுமாக வந்து – விதம் விதமான மாபெரும் உருக்காலைகளில் விழுந்து, எரிந்து, உருகி. மீண்டெழுந்து, எறும்புகள் போல வேலை செய்து கொண்டிருக்கும் மனிதர்களாலும்  எந்திரங்களாலும் ஆட்கொள்ளப்பட்டு – தகிக்கும் மகாமகோ ஆரஞ்சுமஞ்சள் பிரவாகமாக  எஃகு வெளிவருவது கண்கொள்ளாக் காட்சி… பல சமயங்களில் அவ்வாலையின் நானாவித அதிசப்தங்களுக்கும், விதம்விதமான மணங்களும், வண்ணங்களும் தரித்த புகைத்திரள்களுக்கும், உயரழுத்த நீராவியின் விசில்களுக்கும், சுட்டுப் பொசுக்கும், அக்னிக்குழம்பாறுகளுக்கும், சுழன்றடிக்கும் புழுதிக்காற்றுக்கும் இடையே, அயர்வான இரவு ஷிஃப்ட்களில், என் பொறுப்பில் இருந்த  உலையின் 120 அடி மேடையில் ஏறினால், அப்போதே கடவுளைக் கூடப் பார்க்க முடிந்திருக்குமோ என்னவோ…

நம் ஜவஹர்லால் நேரு சொன்னது போல, அது புதிய இந்தியாவின் நவீனக் கோயில்களில் ஒன்றுதான். சந்தேகமே இல்லை.

-0-0-0-0-0-

பாபா ஆம்டே, சுந்தர்லால் பஹுகுணா, சி வி சேஷாத்ரி, டி கருணாகரன், தரம்பால், மேதா பட்கர், அனில் குப்தா போன்ற அற்புதமான மனிதர்களோடு, ஷங்கர் குஹா நியோகி அவர்களையும் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேன், படித்திருந்தேன் – என் கல்லூரி நாட்களில்.

ஆனால், எனக்கு பிலாய் போனபின் தான் தெரிந்தது, ஷங்கர்தா அவர்களும் அவ்வூர்வாசிதான் என்று! ஆச்சரியம், ஆச்சரியம்

ஆக, ஷங்கர்தா அவர்களுடன் நான் கழிக்கக் கிடைத்த சில காலங்கள் அற்புதமானவை – பல மாதங்கள் தூரத்திலிருந்தும், சில மாதங்கள் மிக அருகிலும் – மீண்டும் சொல்கிறேன், நான் மிகவும் கொடுத்துவைத்தவன்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அவர். உயர்வு நவிற்சியாக இப்படிச் சொல்லவில்லை – ஆத்மார்த்தமாக நான் இப்படித்தான் உணர்கிறேன்.

  • தொழிற்சங்கத்துக்கும் சங்கத்தொழிலுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு எப்படிப் பணியாற்ற வேண்டும்,
  • அவனுக்கு ஏற்படும் தர்ம மயக்கங்களை எப்படி நேர்மையாக அணுக வேண்டும்,
  • எப்படி மற்றவர்களை – அவர்கள் அரசியல் / வாழ்வியல் எதிரிகளாக இருந்தாலும் மதிக்க வேண்டும்,
  • மூலதனம், உபரிமதிப்பு உருவாவது எப்படி,
  • மார்க்ஸியத்தின், வன்முறையின் எல்லைகள் யாவை,
  • புரட்சி எனும் புல்லரிப்பை எப்படி அணுக வேண்டும்,
  • ஊடகங்களை எப்படி அணுகவேண்டும்,
  • சுயசார்பு – சுயசிந்தனை என்பவற்றை எப்படிப் புரிந்துகொள்வது, செயல்படுத்துவது,
  • நம் அனைவரிலும் உறைந்திருக்கும் இந்தியச் சிந்தனை மரபுகளை, வாழ்வியல் தத்துவங்களை, பாதைகளை உதாசீனம் செய்யாமலிருத்தல்,
  • மார்க்ஸியத்தை எப்படி காந்தியச் செயல்பாடுகளுடன் தொடுத்தெடுப்பது,
  • தன்னலமற்ற சேவை செய்யும் மனப்பான்மையையும், தாம் நம்பும் கோட்பாட்டின் பொருட்டு தியாகம் செய்வதையும் எப்படி தான் ஒரு முன்மாதிரியாக இருந்து, தன்னைத் தொடர்பவர்களையும் அப்படி நடக்க முற்படவைக்கவேண்டும்,
  • எப்படி ஒரு பரந்துபட்ட இயக்கத்தை, தொய்வில்லாமல், குவிமையம் மாறாமல் நடத்திச் செல்வது,
  • எப்படிப்  புலம்பாமல், எதிர்காலத்தின்மேல் நம்பிக்கைவைத்து முறையாக, படிப்படியாக முன்னேறுவது,
  • தனிமனிதன் தலைமையில் இருக்கும் இயக்கத்தை எப்படி ஒரு அறங்கள் / கொள்கைகள் / நியாயங்கள் சார் இயக்கமாக மாற்றுவது,
  • தொழிலாளர் முன்னேற்றத்திற்கு அப்பால், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மேன்மை சார்பாகவும், குடி/கூத்துகளுக்கு எதிராகவும் திட்டவட்டமாக எப்படி வாழ்க்கையை, சமூகத்தை அணுகுவது,
  • ஆழ்ந்த படிப்பறிவு மட்டுமில்லாமல் எப்படி செயலூக்கத்துடனும் விடா முயற்சியுடனும் பணிபுரிவது,
  • எப்படி எண்ணத்திற்கும் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஒத்திசைவுடன் செயல்படவேண்டும்,
  • எப்படி அவநம்பிக்கைவாதத்தை ஒதுக்கி, செய்ய வேண்டிய காரியங்களை அயராமல் செவ்வனே செய்வது,
  • எப்படி அடுத்த கட்ட தலைவர்களை கண்டுகொண்டு வளர்த்தெடுப்பது
  • இயல்பாகவே எப்படி அப்பழுக்கற்ற நேர்மையுடன் செயல்படுவது,
  • எப்படி ஆத்மார்த்தமாகச் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பது,
  • ஏழ்மையில், குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்ந்தாலும் எப்படி கண்ணியத்துடன் இருப்பது,
  • இந்திய மனதை, அதன் பாரம்பரியத்தை, எப்படிப் புரிந்து கொள்வது,
  • நம் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொண்டு அவற்றை சமகாலத்தில் எப்படி விஷயங்களை, நிகழ்வுகளைத் தந்திரோபாயமாக பயன்படுத்திக் கொள்வது
  • எப்படி அனைத்துச் சாராருடனும் சதா உரையாடலில் இருப்பது,
  • தெள்ளத் தெளிவாக – கிண்டலில்லாமல், நக்கலில்லாமல் –  எப்படிப் பேசுவது
  • அதிர்ந்து, நுரைதள்ளப் பேசாமல் அமைதியாக அனைத்துத் தரப்பு நியாயங்களையும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது,
  • விருந்தோம்பும் பண்பு,

… என, இன்னும் பல தளங்களில் விரிவது இம்மனிதரின் ஆளுமை.

[இந்தப் பின்புலத்தில், நான் அன்னாஸாஹேப் ஹஸாரே போன்ற, ஒருகாலத்தில் சாதனைகள் பல செய்த மனிதர்களின் செயல்பாடுகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன் – முழுவதும் புரிந்துகொள்ள முயல்கிறேன் – பல சமயம் முடிவதில்லை. என் குறைபாடுதான்]

ஷங்கர் குஹா நியோகி அவர்களின் மனைவியும் (அவர் பெயர் ஆஷா என நினைவு, அல்லது விமலாவா?) பல விதங்களில் ஒரு அற்புதமான மனுஷி. அவர் புன்னகை மன்னி. எனக்குத் தெரிந்த தக்கணியிலோ அல்லது இலக்கணசுத்தமான சொற்ப ஹிந்தியிலோ பேசினால், அவர் ஏதேதோ அவர் வட்டாரமொழியில் சொல்வார் – எனக்குப் புரியாதபோது, “பாய் சாப், (ஸ+ஜ)/2ரா ஸுனியே” எனத் திரும்பிச் சொல்வார். திரும்பவும் எனக்குப் புரியாது. அதன் பின் பற்கள் பளிச்சிடும் ஒரு குழந்தைச் சிரிப்பு. எனக்கு உடனே எல்லாம் புரிந்தது போலிருக்கும்.

…தயங்காமல் நான் நிச்சயம் சொல்வேன் – ஷங்கர் குஹா நியோகி, சில முக்கியமான தளங்களில், நம் காந்திக்கு, பாபுஜிக்கு இணையானவர்.

ஆனால், இப்படிப்பட்ட பல கல்யாண குணங்களைக் கொண்ட ஷங்கர் குஹா நியோகியை, அவர் தன் குடிசையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, 28 செப்டெம்பர், 1991 அதிகாலையில், அநியாயத்துக்கு, நாற்பத்தெட்டே வயதில் சுட்டுக் கொன்று விட்டார்கள், பாவிகள்.

ஆனாலும் இவர் ஆரம்பித்த பரந்துபட்ட இயக்கங்கள், செயல்பாடுகள் நன்றாகத் துளிர்த்து, இன்று வரை, பல தளங்களில் வன்முறையில்லாமல் மகத்தான பணியாற்றி வருகின்றன.

… இவருடைய கொலை வழக்கில் சில முக்கியக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் (இவர்கள் தொழிலதிபர்கள்) விடுதலை செய்யப் பட்டுள்ளனர்; சிலருக்கு ஏதோ  தண்டனை. நான் என் அசிரத்தையால் இந்த வழக்கைப் பற்றிய விவரங்களைத் தொடரவில்லை, படிக்கவில்லை –  அவற்றை அறிந்துகொண்டு என்னதான் பயன்…

ஆனால், மறப்பேனா ஷங்கர் குஹா நியோகி அவர்களை?

-0-0-0-0-0-

ஜல்பைகுரியில் (அப்போதைய மேற்கு வங்காளம்) பிறந்த ஷங்கர், ஏழ்மையிலும் தொடர்ந்த துயரங்களிலும் வளர்ந்து – 1961 வாக்கில், தன் 18 வயதில், மத்திய அரசின் பிலாய் உருக்காலையில் வேலைக்குச் சேர்ந்தார்.

தன் இளமையில் இடதுசாரி எண்ணங்களாலும் கலாச்சாரத்தினாலும் கவரப்பட்ட ஒரு ‘உரத்த’ தொழிற்சங்க வாதியான அவர் எழுப்பிய பிரச்சினைகள் கொடுத்த தொந்தரவினால், உருக்காலை நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப் பட்டார்.

அடுத்த பதினான்கு-பதினைந்துஆண்டுகள், அவர் அண்டைய சத்தீஸ்கட் வட்டார ஆதிவாசி கிராமங்களில், வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டும் – அதே சமயம் கிராம மக்களைத் திரட்டி, அவர்களின் பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடவும் செய்தார்.

இளம் வயது ஷங்கர் குஹா நியோகி

இளம் வயது ஷங்கர் குஹா நியோகி

இந்த சமயம்  –  தானிய பதுக்கல்காரர்களுக்கு, ஊழல் கிராம அதிகாரிகளுக்கு, பொய் ஆன்மீக வாதிகளுக்கு எதிராக என – அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவர் தலைமை தாங்கிய இயக்கங்கள் – அவருக்கு பெருத்த மரியாதையையும், ஒரு பரந்துபட்ட மக்கள் தலைவர் எனும் (மிகச் சரியான) பிம்பத்தையும் அளித்தன.

சுமார் 33 வயதில் அவர் பிலாய் உருக்காலை நடத்திக் கொண்டிருந்த தனிதோலா க்வார்ஸைட் சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்தார், நம் சமகால சங்கத்தொழில்வாதிகள் போலல்லாமல், அவர் சுரங்க வேலை நேரத்தில் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார் – வேலை நேரத்திற்குப் பின் தான் தொழிற்சங்கவேலைகள்! கொஞ்சம் கொஞ்சமாக அவர் சத்தீஸ்கட் சுரங்கங்களில் வேலை செய்பவர்களின் சங்கத்தை வளர்த்தெடுத்தார், CMMS – சத்தீஸ்கட் மைன்ஸ் ஷ்ரமிக் ஸங் எனும் பெயரில் அது அதிகாரபூர்வமாக 1977ல் இருந்து பணி புரிய ஆரம்பித்தது.

இச்சமயம் அவர், ஒரு ஆதிவாசிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

… காலப்போக்கில், மற்றச் சுரங்கப் பணியாளர்களும் (தால்லி, ராஜரா போன்றவை) ஸிஎம்எம்எஸ்ஸில் சேர்ந்தனர். படிப்படியாக இந்த அமைப்பு சத்தீஸ்கட் முழுவதும் இருந்த சுரங்களுக்கும் பரவியது – சத்தீஸ்கட் முக்தி மொர்ச்சா-வாக (CMM) உருவெடுத்தது.

ஷங்கர், அவர் முப்பதுகளில்...

ஷங்கர், அவர் முப்பதுகளில்…

… ஷங்கர் குஹா நியோகி, எமெர்ஜென்ஸி சமயம் மிஸாவின் (MISA) கீழ் கைது செய்யப் பட்டுச் சிறையில் இருந்திருக்கிறார்; பின் என்எஸ்ஏ (NSA) வின் கீழும் கூட.   மிகுந்த அவமரியாதை செய்யப் பட்டு அடி உதையெல்லாம் பட்டிருக்கிறார், (நம் தமிழகத்தில் இருந்திருந்தால் இவர் மிஸா ஷங்கரனார் எனப் பெயர் வைத்துக் கொண்டு, 70 வயதில் CMM-ன் இளைஞர் அணித் தலைவருமாகியிருப்பார் – பின் Chief Minister Morcha வின் அதிபதியாகவும் ஆகியிருப்பார் அல்லவா?)

…  மக்களுடைய உள்ளார்ந்த சக்தியைக் குவித்து, அவர்களை அயராமல் மேன்மேலும் உன்னதத்தை நோக்கி முன்னேற அயராது பாடுபட்டது ஸிஎம்எம். அது வளர வளர, கூட பல உண்மையான, தகுதியுள்ள தலைவர்களை வளர்த்தெடுத்தார் அவர். தன்னையும் ஸிஎம்எம்மின் தலைவர்களில்,  தொண்டர்களில் ஒருவராக மட்டுமே தன்னை வரித்துக் கொண்டார். (நம் தமிழகமாக இருந்திருந்தால், அவருடைய குடும்பத்தினர் மட்டுமே பெருந்தலைவர்களாயிருந்திருப்பார்கள்)

… அவர் என்ன சொன்னாலும் – அதனை வேதவாக்காக நினைத்து,  சிரமேற்கொண்டு காரியங்கள் செய்ய ஒரு மாபெரும் தொழிலாளர் கூட்டமும், ஒரு இளைஞர் பட்டாளமும் இருந்தன. ஆனால் அவர் இந்தத் திரளை, நேர்மையான, அறம் சார்ந்த ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே உபயோகித்தார். (நம் தமிழகமாக இருந்திருந்தால்,  இவர் அழகிரிசாமியின் மருதை என மந்தஹாசப் புன்னகையுடன் உலாவி, ஆட்களை ஏவி, கொலைகளும், கொள்ளைகளும் இன்னபிற அட்டூழியங்களையும் செய்து கொண்டு சுகமாக இருந்திருப்பார்)

அவர் செயல்பட்டுக் கொண்டிருந்த இடம், தரமான, செறிவான கனிமங்களும், மற்ற இயற்கை வளங்களும் (இன்னமும்) பொலிந்து கொண்டிருக்கும் இடம். கான்ட்ராக்டர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பெருந்தொழில் முனைவோர்களும், நக்ஸலைட்களும் (ஆம், நக்ஸலைட்டுகளும்தான்) கும்பலாக, ஒத்துழைத்து மகாமகோக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் இடம். (நம் தமிழகமாக இருந்திருந்தால் ‘தேனை எடுத்தவன் புறங்கையை மட்டும் நக்கியே’ அவர்  நம்பவே முடியாத அளவு ஒரு பெரிய பணக்காரராக ஆகியிருக்க முடியும்)

ஹ்ம்ம்ம்.

கற்பூரத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது கழுதைகளை உள்ளே விட்டதற்கு (அவைகளின்மேல் ஜீவகாருண்யம் சார்ந்து எனக்குப் பரிதாப உணர்ச்சி இருந்தாலும்) என்னை தயவுசெய்து, தயவுசெய்து மன்னிப்பீர்களா?

-0-0-0-0-0-

ஏன் சத்தீஸ்கட் முக்தி மொர்ச்சா ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக இருந்தது, இருக்கிறது? அப்படி என்ன பெரிதாகச் செய்து விட்டார் இந்த ஷங்கர் குஹா நியோகி?

அவருடைய கல்யாண குணங்களையே விடுங்கள் – நாம் அவர் விதை விதைத்து போற்றிப்போற்றி வளர்த்த ஸிஎம்எம் என்ன செய்தது / செய்கிறது என்பதை மட்டும் பார்க்கலாம்:

  • படிப்பில்லா, ஏழைச் சுரங்கத் தொழிலாளிகளை ஒன்றுபடுத்தித் தொழிற்சங்கமென்று மட்டும் செயல்படாமல், கூட்டுறவு சங்கங்களையும் நிர்மாணித்து, பல தளங்களில் அவர்களை முன்னெடுத்துச் சென்றது.
  • வறட்டுவாதம் செய்யாமல், முழு இயந்திரமயமாக்கத்தை மட்டும் எதிர்த்து,  தேவையான இடங்களில் உற்பத்தியாக்கத்திற்கு இயந்திரமயமாக்கத்தை ஆதரித்தமை.
  • ராஜ்நந்த் கான்வ் ஜவுளித் தொழிலாளர்களின் பாதுகாப்பான வேலைச்சூழலுக்காகவும், வேலை நிரந்திரத்திற்காகவும் போராடியதும் வெற்றி பெற்றதும்.
  • ஆதிவாசிகளின் நிலமீட்புப் போராட்டங்களுக்கும் அவர்களின் கானக உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காகப் போராடியதும் வெற்றி பெற்றதும்..
  • அந்தந்த கிராம மக்களால் அவர்களே சிறு அணைகள் கட்டிக்கொண்டு அவர்களின் நீராதாரங்களைப் பெருக்கிக் கொள்ளப் போராடியதும் வெற்றி பெற்றதும்.
  • சத்தீஸ்கட் பிரதேசத்தின் அமுழுமையான அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பாடுபட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப் போராடுவதும், படிப்படியாக வெற்றி பெறுவதும்.
  • வேலைவாய்ப்புகளையும், வாழ்வாதாரங்களையும் நோக்கி, சத்தீஸ்கட் வாழ் மக்கள் புலம் பெயர்தலை தொடர்ந்து குறைத்து வருவது.
  • சுயசேவைகளினாலும், ஷ்ரமதானத்தினாலும், உபரி சேமிப்புகளினாலும் – தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே சாதித்துக் கொள்ளும் சுயசார்பு மனப்பான்மையை வளர்த்தெடுப்பது
  • ஜனநாயகத்தை, கூட்டுத் தலைமையை, தொடர்ந்த உரையாடல்களை எல்லா படிகளிலும் ஊக்கி வளர்த்து வருவது
  • அழகாக, தூய்மையாக – தொடர்ந்து சத்தீஸ்கட் வாழ் மக்களுக்குப் பணி செய்து வரும் ஷஹீத் மருத்துவமனையை (தால்லி-ராஜரா) நிறுவி மருத்துவ வசதிகளை மேன்மையுறச் செய்வது. சுற்று வட்டாரத்தில் சிறிய மருத்துவ முகாம்களை, ஒற்றை அறை மருத்துவமனைகளை நிறுவி நடத்துவது.
  • குடிக்கு எதிராக, பெண்கள் தலைமையில் நூதன போராட்டங்களை நடத்தி, தொடர்ந்து போராடியதும் வெற்றி பெற்றதும்
  • பெண்களுக்குச் சமகூலியும், அவர்களுக்குத் தேவையான வசதிகளும் பெற்றுத்தரப் போராடியதும், குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றதும்
  • ஒரு காலத்தில் லோகமான்ய திலக், மஹாராஷ்ட்ரத்தில் உள்ளுறைத்திருக்கும் ஷிவாஜி, வினாயகர் போன்ற கலாச்சார/வரலாற்று பிம்பங்களை  உபயோகித்து – மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து எழுச்சி கொள்ள வைத்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் திருப்பியது போல – வீர் நாராயண் சிங் என்கிற ஆங்கிலேயராட்சிக்கு எதிராகப் பாடுபட்ட, போரிட்ட ஆதிவாசி வீரனைக் கொண்டாடும் விதமாக ‘ஷாஹித் திவஸ்’ என்று 19 டிஸெம்பர் வருடாவருடம் கொண்டாடுவது. அதனூடே, போராட்டங்களில் உயிர் நீத்த ஸிஎம்எம் நண்பர்களைக் கொண்டாடி, போற்றி – ஒற்றுமையும் எழுச்சியும் பெறவும், வருடாந்திர ஊக்கப் படுத்தலுக்கும் பயன் படுத்துவது
  • கிராமப்புரத் துவக்கப் பள்ளிகளை நிறுவி நடத்துவது
  • தொழிலுட்பக் கல்லூரி நிறுவி (ஐடிஐ) – தேவையான தொழில் நுட்பாளர்களைத் தயார் செய்து கொள்வது
  • ஒரு கராஜ் (வண்டிகள் சீரமைக்கும் இடம்) பள்ளி அமைத்து ஓட்டுனர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தேர்ந்த மெக்கானிக்குகளை உருவாக்குவது
  • ஒரு செயற்கைக் காட்டை அமைத்து – எப்படி அதில் விலங்கினங்களும், தாவரங்களும் வாழ்கின்றன எனப் படித்து, புரிந்து கொண்டு – காடுகளை உருவாக்குவது.

இன்னமும் நிறைய இருக்கின்றன, இந்த இயக்கத்தின் கல்யாண குணங்கள்…

-0-0-0-0-0-

ஜூலை 1991 வாக்கில் ஷங்கர் குஹா நியோகி எழுதிய சுற்றுப் புறச் சூழல் பற்றிய கட்டுரை – ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.  இது ரஜ்னி பக்‌ஷி அவர்களால் ஆங்கிலமாக்கம் செய்யப் பட்டு இணையத்தில் கிடைக்கிறது. இந்த பிடிஎஃப் ஆவனத்தில், ஸிஎம்எம் பற்றிய மேலதிக விவரங்களும் உள்ளன.

நமது இந்தியாவின் மீது, நமது சுற்றுப் புறச் சூழல் மீது, நமது எதிர்காலம் மீது அக்கறையிருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இது.

-0-0-0-0-0-

அவர் இறந்த சமயம் (1991), ஒரு அரதப்பழசு ட்ரெடில் இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டு மூன்று மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த, (அகால மரணமடைந்த) பொன் விஜயன் அவர்களின் ’புதிய நம்பிக்கை’  இதழில் ஷங்கர் அவர்கள் பற்றிய ஒரு இரங்கல் செய்தி எழுதியிருந்தேன். அதற்காகச் செய்யப் பட்ட ஷங்கர் அவர்களின் புகைப்பட ப்ளாக் இன்னமும் என் மேஜையில் இருக்கிறது. அவரைப் பற்றி ஒரு 16 பக்க (ஒரு ஃபார்ம் – ஆயிரம் பிரதிகள்) புத்தகமும் வெளியிட்டோம் – இரண்டு ரூபாய் விலையில். அது விற்கவும் இல்லை. பொன் விஜயனை நான் அவற்றை இலவசமாக 1992 சென்னை புத்தகச் சந்தையில் மக்களுக்கு முடிந்தவரை பகிர்ந்தளிக்கச் சொன்னேன். ஆனால், இப்போது ஆவணத்துக்காகக்கூட கையில் ஒரு பிரதி இல்லை. வெட்கக்கேடு.

 நான் பார்த்தபோது  ஷங்கர் குஹா நியோகி இப்படித்தான் இருந்தார்...

நான் கடைசியில் பார்த்தபோது ஷங்கர் குஹா நியோகி ஏறக்குறைய இப்படித்தான் இருந்தார்…

ஷங்கர்தாவும் அவர் மனைவி – இருவரும் அழகாக வெட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கருப்பு-வெள்ளைப் புகைப்படம் (கடன் வாங்கிய ’கோனிகா-சகுரா’காமிராவில்) நான் எடுத்தேன் – என்னுடைய அசிரத்தை காரணமாக எங்கே போயிற்றோ அதுவும், எல்லாம் வல்ல அந்த இயற்கைக்கே வெளிச்சம். அதையாவது ஸ்கேன் செய்து பதித்திருந்தால் எனக்குத் திருப்தியாக இருந்திருக்கும்,

-0-0-0-0-0-

இருந்தாலும், மறப்போமோ நாம், நம் ஷங்கர் குஹா நியோகி போன்றவர்களை?

-0-0-0-0-0-

 நன்றிகளும், குறிப்புகளும்:

  1. மனுஷி 66ஆம் (செப்டெம்பெர்-அக்டோபெர் 1991) இதழிலிருக்கும் ஸிஎம்எம்எஸ்-ஸின் சுதா பரத்வாஜ் அவர்களின் கட்டுரை பல விவரங்களுக்கு, என் நினைவுகளைக் கிண்டுவதற்கு, உதவியாக இருந்தது.
  2. அதேபோல, ரஜ்னி பக்‌ஷி அவர்களால் ஆங்கிலமாக்கம் செய்யப் பட்டு இணையத்தில் கிடைக்கிற  ’ஷங்கர் குஹா நியோகி: அவர் எண்ணங்களும், பணியும்’ எனும் ஆவணமும்.
  3. புகைப்படங்கள்  – இணையதளங்களிலிருந்தும், மேற்கண்ட ஆவணங்களிலிருந்தும் எடுக்கப் பட்டவை.

காந்தியாயணம்…

6 Responses to “ஷங்கர் குஹா நியோகி – சில நினைவுகள்”


  1. ஷங்கர் குஹா நியோகி அவர்களைப்பற்றிப்படித்து நெஞ்சம் கணக்கிறது.

    தங்களது அனுபவம் என்னைப் பொறாமைப்பட வைக் கிறது.

    என் வாழ்வில் மலரும் நினைவுகளாக எதுவும் இல்லை. துன்பம் என்று குறிப்பிடும் அளவுக்கு நீளாத, துளைக்காத சிறு சிறு துன்பங்களுக்கிடையில் வாழ்ந்தவன் நான்.

    அனுபவம் என்று எடுத்துக்கொண்டால் பொரிய பூஜ்ஜியம் தான் அதாவது ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உளவியல் பேராசிரியனாகப் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் என்னைப் பக்குவப்படித்தியது இது என எதையும் சுட்டும் அளவுக்கு ஒரு அனுபவமோ அல்லது தொடர்போ எனக்கில்லை.

    பத்தோடு பதனொன்றாக இதுவும் ஒன்று எனக் கழியும் என் வாழ்வில் கடந்த நான்கு வருடங்களாக (புத்தகக் கட்டுகள் என் வீட்டில் இல்லை இல்லை என் மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும்) புத்துணர்ச்சி தருகிறது என் திருக்குறள் பணி.

    “வள்ளுவம் அலலது வாழ்க்கையே வழிபாடு”

    என்ற என்னுடைய அடுத்த புத்தகத்தை வேக் வேகமாக எழுதி வருகிறேன்.

    தங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி

  2. Anonymous Says:

    போற்றிப் புகழவேண்டிய பொறியாளர் வரிசையில் தங்கள் அனுபவம் மின்னுகிறது மனித நேய வடிவில். அறச்சார்பில்லா பொறியாளராகி விடுகிறார் தாம் ஆய்ந்ததை அவனிக்குச் சொல்லாவிட்டால். ஆபத்தில்லாத தொழிற்சங்கவாதியை பார்ப்பது கடினம். அன்பை மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த ஷங்கர் குஹாவைப்பற்றி தங்கள் மூலமாக அறிய முடிந்தது.

  3. dr suneel Says:

    உண்மையில் இப்படிப்பட்ட ஆளுமை ஒருவர் வாழ்ந்தார் என்பதை அறிவது வியப்பை அளிக்கிறது. இவரை பற்றி மேலும் வாசிக்க விரும்புகிறேன். நன்றி ராமசாமி சார்.

  4. Rajesh Says:

    Lovely service to the memory of someone who has made a difference to you and many others!

    As an aside, how did you become this fluent in Tamil?


    • ​அய்யா ராஜேஷ், நன்றி.

      உங்களைப் போன்ற பெரிய இடத்து ஆசாமிகள், உச்சாணிக்கிளைக்கார புத்திசாலிகள் – ஒத்திசைவையும் படிப்பது பயத்தைத் தருகிறது. ;-)

      சரி.

      1. ​நான் தமிழ்வழிக்கல்வி(!) கிடைத்த பேறு பெற்றவன்.

      2. தினமும் சுமார் 500 வார்த்தைகளாவது தமிழில் எழுதியே தீரும் பழக்கமுடையவன். (அவற்றில் பல இன்னமுமே சிடுக்கலாக இருக்கும்!)

      அவ்வளவுதான். மற்றபடி நான் கோர்வையாகவோ எளிதாகப் புரிந்துகொள்ளும்படிக்கு எழுதுவதாகவோ பிரமைகள் இல்லை.


  5. […] கொஞ்சம் வருத்தத்துடன், மஹாமஹோ ஷங்கர் குஹா நியோகி அவர்களிடமும் இதுகுறித்து […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...