இதுதாண்டா மாவோயிஸம்! :-(

March 2, 2014

… இன்றோடு  நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர்,  நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க  முடியும்?

(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன்  நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள  நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)

ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.

ஏனெனில் —  மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.

ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும்  — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.

ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள்  ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.

ஏனெனில், நக்ஸல்பாரிகள் – தங்கள் கருத்துகளுக்கு(!) ஒவ்வாமல் இருப்பவர்களை ‘போலீஸ் கைக்கூலி’ ‘திரிபுவாதி,’  ‘எகாதிபத்தியத்தின் ஏஜென்ட்,’ ‘வர்க்க எதிரி’ என்றெல்லாம் சொல்லி, கொலை செய்பவர்கள்.

ஏனெனில் – நக்ஸல்பாரிகளில் பெரும்பாலோர் படிப்பறிவில்லாதவர்கள் – மார்க்ஸீயத்துக்கும் வெள்ளீயத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்; விமர்சனத்தைக் கொஞ்சம் கூடத்தாங்க முடியாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி வன்முறைதான். அராஜகம் தான்.

ஏனெனில் – அவர்களில் பெரும்பாலோர் குண்டர்கள் – அதுவும் நேர்மையில்லா தொழில்முறை கூலிப்படையினர்.

ஏனெனில் – உழைக்கும் மக்கள் சார்பாகவோ, மலைவாழ்குடியினர்களின் வளர்ச்சிக்கோ, பெண்களின் மேன்மைக்கோ, சமதர்ம சமுதாயத்தைக் கண்டெடுப்பதற்கோ, கல்வியறிவு பெருகுவதற்கோ, மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கோ – எதுவானாலும் சரி – இவற்றுக்காக, சிறிதுகூட உழைப்பவர்கள் இல்லை இவர்கள் –  மக்களை உபயோகித்து நசுக்கிப் பிழிந்து, கொன்றொழித்து அவர்கள் மண்டையோடுகளின்மீது நடனமாடும் காட்டுமிராண்டிகள் மட்டுமேதான் இவர்கள்.

ஏனெனில் – மாவோயிஸ்டுகள் அற்பர்கள். தர்க்கரீதியாகவும், மக்களின் மேன்மைக்காகவும் ஒரு சுக்கையும் செய்யும் திறமையற்றவர்கள்; ஒருவேளை திறமையானவர்களை அவர்கள் இனம் கண்டுகொண்டால், அந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் தங்கள் கட்சிகாரர்களாக இருந்தாலுமே கூட, உடனே அழித்தொழித்தும் விடுவர். அநியாயச் சகோதரக்  கொலை என்பது, இந்த மாவோயிஸ்ட்களின் மரபணுக்களிலேயே இருப்பது.

ஏனெனில் – தங்கள் சுயலாபங்களுக்காக அயோக்கியத் தனத்துடன், தாங்கள் நம்புவதாகப் பம்மாத்து பண்ணும் மார்க்ஸீய-லெனினீய-மாவோ கொள்கைகளுக்கே துரோகம் செய்வதில், அவர்களுக்கு இணை அவர்கள்தாம்.

ஏனெனில் – நாம் தமிழர்கள் புரிந்துகொள்வதுபோலச் சொல்லவேண்டுமானால் – இந்த போராளித்தன மாவோயிஸ்டுகளும் நம்மூர் எல்டிடிஇ பிரபாகரனார், வீரப்பர், அழகிரியார், இசுடாலினார்,  ‘அட்டாக்’ பாண்டியார் போன்றவர்களே. இவர்களுக்குள் ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை.

… ஆக, இவர்களிடமிருந்து வேறு என்னதான் பொதுமக்களால் எதிர்பார்க்க முடியும்?

-0-0-0-0-0-0-0-

சில மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரிடமிருந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார்:  ஒரு சில மாவோயிஸ்ட்களின் அராஜக செயல்பாடுகளினால், அனைத்து மாவோயிஸ்ட்களையும் ஒரே பார்வையில், ஒரே சித்தாந்தச் சிமிழில் அடைக்கக் கூடாது. அவர்களை வெறுக்கக் கூடாது. அவர்களால் எவ்வளவோ நன்மைகள் நடக்கின்றனதானே?

நான் சொன்னேன், சொல்கிறேன்:  இல்லை. என்னுடைய இளம் வயதில் நானும் இம்மாதிரிதான் நினைத்தேன். ஆனால், வாழ்க்கை அனுபவங்களின், கூர்ந்து கவனித்தல்களின் காரணமாக – மாவோயிஸ்ட்களின் அயோக்கிய அராஜக நடவடிக்கைகளை ஒரு விதிவிலக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மார்க்ஸிய-லெனினிய-மாவோயிஸம் என்பதன் இந்தியப் பரிணாம வளர்ச்சியென்பது போல்பாட்டிஸ்ம் தவிர வேறொன்றல்ல. தாங்கவொண்ணா சதிகளும், அவநம்பிக்கைவாதமும், படுகொலைகளும், ஊழல்களும்தான் இவர்களுடைய பங்களிப்புகள். நாட்டை, சமூகங்களைப் பின்னெடுத்துச்  செல்லல்கள் மட்டுமே இந்த மாவோயிஸ்ட்களால் சாத்தியம்.

மாவோயிஸ அராஜகங்கள் விதிவிலக்குகள் அல்ல. அவை விதிகள் தாம்.

அந்த மகத்தான தலைவன் ஷங்கர் குஹா நியோகியை, தொழிலதிபர்களின் கூலிப் படையினர் கொல்லாமலிருந்தால், இந்த நக்ஸலைட்கள் தாம் கொன்றிருப்பர். ஏனெனில், இந்த அரைகுறைகளின் பார்வையில், ஷங்கர் அவர்கள் சமரசவாதி. அதாவது உண்மையாகவே மக்களின் தொடர்ந்த மேன்மைக்கும் நல்லிணக்கத்துக்கும் உழைத்தவர். ஆகவே புரட்சிகரமாகக் கொலை செய்யப் படவேண்டியவர்தான். (அந்தக்கால நக்ஸலைட்களுக்கு சத்தீஸ்கட் முக்தி மொர்ச்சாவினரின் மீதிருந்த கொலைவெறி / வெறுப்பு பற்றிய அரசல்புரசலான செய்திகள் அப்போதும் வந்துகொண்டுதான் இருந்தன.  ஆனால் நமக்கெல்லாம் தெரியாதா என்ன — புரட்சிக்கான ஏகபோக உரிமை மாவோயிஸ்ட்களிடம் மட்டும்தானே இருக்கிறது?)

-0-0-0-0-0-0-

2 மார்ச், 2011: நியமத் அன்ஸாரி, நக்ஸலைட்களால் கொலைசெய்யப்பட்ட நாள்…

நியமத் அன்ஸாரி அவர்களை நான் நேரில் பார்த்ததோ, பேசியதோ கிடையாது. ஆனால்,  ‘சத்தீஸ்கட் முக்தி மொர்ச்சா’ சார்ந்த என்னுடைய நண்பர்  (இப்போதும் இவர் உயிரோடுதான் இருக்கிறார், அதுவும் அந்த கேடுகெட்ட நக்ஸல் கூலிப்படையினரின் பிரதேசத்தில், ஆச்சரியம், ஆச்சரியம்! இன்னமும் எவ்வளவு நாட்களுக்குள் இவரையும் மாவோயிஸ்ட்கள் கொலைசெய்வார்கள் என்பதை நினைத்தால்…) ஒருவரின் ஆப்த சினேகிதர் இவர். அப்படித்தான் நியமத் அன்ஸாரி அவர்களைப் பற்றி, சுமார் 6 வருடம் முன்னால் அறிந்துகொண்டேன். நியமத் அன்ஸாரி, ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தைச் சார்ந்தவர். மணிகா ப்ளாக்கில் உள்ள ஜெருவா கிராமக்காரர் – இது ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சி-யிலிருந்து சுமார் 160 கிமீ தூரம்தான்…

… சுமார் முப்பது வருடங்கள் முன்பு, இப்பகுதிகளில்  நிறையவே சுற்றியலைந்திருக்கிறேன். பசுமையான நினைவுகள் மேலெழும்புகின்றன. எளிமையான, உழைப்பை விரும்பும் மக்கள். மிக மிக  அழகான இயற்கைச் சூழல். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அங்கேயே அவை தீர்த்துக் கொள்ளப் பட்டன – அதாவது  நக்ஸல்பாரிகள் அரங்கில் நுழையும் வரை. பின்பு பொதுமக்கள் பெரும்பாலும் இவர்களால்   நசுக்கப்பட்டார்கள். ஸ்ரீலங்காவில் பிரபாகரன் செய்தது போல, இங்கும் — இளம்கிராமவாசிகள் பலர் வலுக்கட்டாயமாக வீடுகளில் இருந்து பெயர்க்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு சிறு குழுக்களாக (’தளம்’) உருவாக்கப்பட்டு உருமாற்றப்பட்டனர். கூலிப்படைகளாகத் தாழ்வு செய்யப் பட்டனர்.

… பல வருடங்களாக, கொஞ்சம்கொஞ்சமாக – காடுவெட்டும் சுரங்கம் தோண்டும் கான்ட்ராக்டர்கள் + அரசியல் உதிரிகள் + நக்ஸலைட்கள் + அதிகார வர்க்கத்தினர்  சேர்ந்து  ‘கொள்கைக்’ கூட்டணி அமைத்து — அடிப்படை அரசமைப்புகளை, மக்கள் இயக்கங்களைத் தீவிரமாக ஒழித்துக் கொண்டிருக்கின்றனர், ஊழலில் திளைக்கின்றனர். பொறுக்கவேமுடியாமல் – அரசமைப்புகள் இந்த அராஜகங்களை எதிர்த்துப் போராடும்போது, பொதுமக்கள் மேன்மேலும் அவதிக்குள்ளாகின்றனர் — இரண்டு கிடுக்கிப்பிடிகளுக்கிடையில் மாட்டிக்கொண்டு, பாவம்…

அஜய் ஷுக்லா அவர்களின் தளத்திலிருந்து எடுத்த படம்... பாவப்பட்ட பொதுமக்கள். தமிழில் ‘ஆமை புகுந்த வீடு’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதனை, ‘மாவோயிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதி’ என்றும் புரிந்து கொள்ளலாம்...

அஜய் ஷுக்லா அவர்களின் தளத்திலிருந்து எடுத்த படம்… பாவப்பட்ட பொதுமக்கள், அவர்களும் என்னதான் செய்வார்கள்? தமிழில் ‘ஆமை புகுந்த வீடு’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதனை, ‘மாவோயிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதி’ என்றும் புரிந்து கொள்ளலாம்… (எனக்கு ஸல்வா ஜுடும் அமைப்பு உவப்பானதுதான்; இம்மாதிரி அமைப்புகளின் மூலமாக நக்ஸல்பாரிக் கொடூரர்களை எதிர்கொள்வதும் முக்கியம் என நினைக்கிறேன்)

இம்மாதிரியான குழப்பச் சூழ்நிலையில்தான், எக்கணமும் மாவோயிஸ்ட்களால் கொல்லப் படுவோம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தும்  தொடர்ந்து தைரியமாகப் பணியாற்றியவர் நியமத். இவர், பெரும்பாலான தொழில்முறை மனிதவுரிமைக்கார களப்பிணியாளர்கள் போலல்லாமல், நேர்மையானவர். தம் மக்களின் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிப் பணிகள் செவ்வனே நடைபெறுவதற்காக, ஊழல்களுக்கெதிராக,  சாத்வீகமான முறையில் போராட்டங்களை மேலெடுத்துச் சென்றிருப்பவர்.

அவருடைய பணிகளில் ஒன்றாக,  அவர் கொலை செய்யப்பட்டதற்குச் சிலமாதங்கள் முன்பிலிருந்து, அந்தக் கந்தறகோள ‘மஹாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்’ (MNREGA) தொடர்பான அடிமட்ட/நடுமட்ட ஊழல்களை வெளிக் கொணர்வதில் மும்முரமாக இருந்தார்.

இந்தத் திட்டத்தினை வரைந்தெடுத்த முக்கியமான இருவரில் ஒருவரான ழான் ட்ஹ்ரீஸ் (இன்னொருவர் – அமர்த்தியா ஷென் எனும் அறிவுப்போலி) அவர்களுடன் சேர்ந்து, அவருடைய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் அடிமட்டம் வரை ஒழுங்காக வேலை செய்கிறதா எனக் கண்காணிக்கும்  வேலையைச் செய்தார்.

இந்த ழான் அவர்களும், ஒரு  பிச்சைப்பாத்திர, கஞ்சிக்கலய பொருளாதாரவாதிதான். இருந்தாலும் அவரது குறிக்கோட்களைக் குறை சொல்லமுடியாது.  இந்தியாவின் மீது, நம் மக்களின்மீது உண்மையிலேயே கரிசனம் உள்ளவர். ஆனால் மேதகு அமர்த்தியா ஷென் அவர்கள் அப்படியல்லர்.

… என்ன சொல்லவருகிறேன் என்றால் — நியமத் அவர்கள், அமர்த்தியா ஷென் போல பல்கலைப் படிப்பகங்களில் அமர்ந்து தலையணை தலையணையாக  ‘பசி’ பற்றி புத்தகங்கள் எழுதி, இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கியாவது  இந்தியாவை எப்படியாவது முன்னேற்றியேதீர முயலவில்லை – மாறாக அவர், மெய்யாலுமே கீழ்மட்டங்களில் பணிபுரிந்தவர்.

நியமத் இப்படிப் பணிபுரியும்போது ‘மக்களுக்காகத் தாங்கள் உழைப்பதாகச்’ சொல்லிக்கொள்ளும் நக்ஸல்பாரிகளுடன் பல மோதல்கள். பிரச்சினைகள்.

இங்குதான் சிறிது குழம்பும் – நியமத் அவர்களின் குறிக்கோளும் நக்ஸல்பாரிகளின் குறிக்கோட்களும் ஒன்றுதானே – அதாவது மக்களின் மேன்மைதானே என்று. இதில் போய், ஏன் பிரச்சினைகள் ஏற்படவேண்டுமென்று…

-0-0-0-0-0-0-0-

இந்த மாவோயிஸ்ட்களைப் பற்றி பலருக்கு – குறிப்பாக நம் குளுவான் இளைஞர்கள் மத்தியில் – ஒரு வசீகரமான ஈர்ப்பு இருக்கிறது; முன்னவர்கள் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து –ஏதோ சமூக சேவை, போராளித்தனம் மண்ணாங்கட்டி தெருப்புழுதியெல்லாம் செய்கிறார்கள் என்று… அதுவும், இவர்களுடைய ஆயுதம் தாங்கிய புல்லரிப்புப் படங்களைப் பார்த்தால் எனக்கே  அந்த சாட்சாத் மகாமகோ ரேம்போவைப் பார்த்தது போலப் புளகாங்கிதம் ஏற்படுகிறது, என்ன செய்ய…

ஆனால் – நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் — மாவோயிஸ்ட்/ நக்ஸல்பாரி இயக்கங்களுக்கும் பணம் தேவை. அபரிமிதமாகத்  தேவை. இந்தப் பணத்தை இவர்கள் உண்டியல்களைக் குலுக்கிப் பெறமுடியாது. சந்தா சேகரிக்கவெல்லாம் முடியாது. நேர்மையாக உழைத்துப் பணம் சம்பாதிக்கத் துப்பும் கிடையாது.

ஆக,  இவர்கள் –கொள்ளையடித்தும், திருடியும், (போதை மருந்து / கள்ளப்பணம் / ஆயுதம் / மனிதர் இன்னபிற) கடத்தல் செய்தும், ‘பாராளுமன்ற ஜனநாயக’ அரசியல் உதிரிகளுடன் உறவாடி ஊழல் பணங்களைச் சுருட்டியும், தொழில்முனைவோர்களை மிரட்டியும், ‘கட்டப் பஞ்சாயத்து’ செய்தும், கட்டாய வரிவிதித்தும் மட்டுமே காலட்சேபம் செய்துகொண்டிருக்கமுடியும்.

இம்மாதிரி அராஜக கும்பல்களுக்கு, அரைகுறை ராய்களின் ஆமோதிப்பும் ஜால்ராவும் வேறு! பின்புல இசைக்கு, இருக்கவே இருக்கிறார்கள், சாய்வு நாற்காலி அறிவுஜீவிகளும், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்களும்… கேடு கெட்டவர்கள்.

-0-0-0-0-0-0-0-

நியமத் அன்ஸாரி அவர் நண்பர் பூகன் சிங் அவர்களுடன் இணைந்து அவர் வசித்த பகுதியில் கிராம சுயராஜ்ய விழிப்புணர்வு இயக்கம் (’கிராம் ஸ்வராப் அபியான்’) ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் –  இதன் மூலமாக வேலை, தகவலறிதல், உணவு தொடர்பான உரிமைகளை (Rights to Work, Information, Food etc) முன்னெடுப்பதையும் ஊழல்களுக்கெதிராகவும் தன்னலம் பாராமல் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நக்ஸலைட்களுக்கு இது பிடிக்காமல் போனதில் ஆச்சரியமேயில்லை. 2008 வாக்கில் இவர் வீட்டில் புகுந்து இவரை அடித்துத் துவைத்தனர். (இச்சமயம்தான் நான் இவரைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்; கீழ்கண்ட விவரங்களை என் நண்பரிடமிருந்து பெற்றேன்)

பின்னர் அவரை ஒரு வீட்டுச் சிறையில் வைத்தனர். கூடவே பூகன் சிங் அவர்களையும்.

ஆனால் தொடர்ந்து நக்ஸலைட்டுகளும் கான்ட்ராக்டர்களும் இன்னபிறரும் சேர்ந்து செய்த ஊழல்களை அம்பலப் படுத்திக்கொண்டே இருந்தார் நியமத். கடைசி காலங்களில் ‘மஹாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்’ தொடர்பான ஊழல்களுக்கெதிராகப் போராடினார் இவர். இது மாவோயிஸ்ட்களின் ஊழல் அடிமடியிலேயே கையை வைப்பதாக இருந்ததும் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால், மாவோயிஸ்ட்கள் அவர்கள் வழக்கம்போல –  ‘போலீஸ் உளவாளி’ என்றும், ‘பணம் கையாடினார்’ என்றும், ‘வனங்களை அபகரித்தார்’ என்றும் இவரைப் பற்றி பொய்கள் பலவற்றைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். அவர்கள் நடத்தும் ’மக்கள் நீதிமன்ற’த்திற்கு (’ஜன் அதாலத்’) கூப்பிட்டனர். இந்த நீதிமன்றங்கள் பொதுவாகவே கேடுகெட்ட ‘கட்டப் பஞ்சாயத்துகள்’ — அவ்வளவே! ஆகவே நியமத் இந்த அலங்கோலங்களுக்குப் போகவில்லை.

மார்ச் 2, 2011 அன்று  நியமத்தின் வீட்டுக்கு மாவோயிஸ்ட்களும் ஒரு கான்ட்ராக்டரும் கும்பலாக வந்து அவரை ஒரு மணி நேரம் அடிக்கின்றனர். நக்ஸல்பாரிகளுக்குப் பயந்த அப்பாவி சக-கிராமமக்கள் உதவிக்கு வரவில்லை.

பின்னர் கையைக் கட்டி இழுத்துப் போய், ஊர்க் கொடிக்கம்பத்தில் கட்டி மறுபடியும் அடிக்கின்றனர். போய்க் கேட்ட நியமத்தின் சகோதரனையும், மனைவியையும் மிரட்டி வீட்டிற்கு அனுப்புகின்றனர்.

பின்னர் கோடரியால் கழுத்தில் இரண்டு வெட்டு. ஆனால் மிக ஆழமாக இல்லை. அவர்களுக்குத் தெரியும், நியமத் துடித்துத் துடித்து மெதுவாகச் சில மணி  நேரங்களுக்குப் பின் இறப்பார் என்று. இந்த தண்டனையானது, நக்ஸல்பாரிகளை எதிர்க்கும் துணிச்சல் இருக்கக் கூடிய எவருக்கும் ஒரு எச்சரிக்கை என்று…

இடதுபக்க  மேலிலிருந்து கடிகாரச் சுற்றில்... பூகன் சிங் + நியமத் அன்ஸாரி; நியமத் அன்ஸாரியின் ஓட்டுனர் உரிமப்படம்; ழான் ட்ஹ்ரீஸ்;   சோகத்தில்  நியமத் அவர்களின் மனைவி ராஜ்மனி +  6, 3  வயது குழந்தைகளும் + பிறந்து சில நாட்களே ஆகியிருந்த கைக்குழந்தையும் அனாதைகள்...

இடதுபக்க மேலிலிருந்து கடிகாரச் சுற்றில்… பூகன் சிங் + நியமத் அன்ஸாரி; நியமத் அன்ஸாரியின் ஓட்டுனர் உரிமப்படம்; ழான் ட்ஹ்ரீஸ்; சோகத்தில் நியமத் அவர்களின் மனைவி ராஜ்மனி + 6, 3 வயது குழந்தைகளும் + பிறந்து சில நாட்களே ஆகியிருந்த கைக்குழந்தையும் அனாதைகள்… (படங்கள் இணையத்திலிருந்து, கூக்ல் உபயத்தில்)

… குற்றுயிரும் குலையுயிருமாகப் பின்னே விட்டுச்செல்லப்பட்ட இறந்து கொண்டிருக்கும் நியமத் அவர்களைக் காப்பாற்ற முனையக் கூட, அந்த கிராமத்தில் எவருக்கும் துணிவில்லை. நக்ஸல்பாரிகளின் அராஜகக் கொலைவெறிக் கீர்த்தி அப்படிப் பட்டது.

ஆக, ராஜ்மனியும், நியமத்தின் உடல் ஊனமுற்ற சகோதரனும், நியமத்தின் வயதான தாயாரும் – மூவரும் சேர்ந்து – ஒரு கயிற்றுக் கட்டிலில் மயக்கத்திலிருந்த நியமத்தைப் போட்டுக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள (= மூன்று மணிநேரம்) காவல் நிலையத்திற்கு ஓடோடிச் செல்கின்றனர். அங்கிருந்து காவல் துறையினர் ஏற்பாடு செய்துகொடுத்த ஆம்புலன்ஸ் மூலமாக மாவட்ட மருத்துவமனை செல்வதற்குள்… கேல் கதம்.  :-(

… பூகன் சிங், இதற்குப் பின், பொதுவாகத் தலைமறைவாகவே இருக்கிறார், முடிந்தபோது பணி செய்கிறார். எந்நேரமும் இவரும் கொல்லப் படலாம்.

மாவோயிஸ்ட்கள் ஆட்சி செய்தால், மார்க்ஸ் தின்பார் நேர்மையாளர்களின் பிணங்களை.

ஆமென்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு காலத்தில் (எனக்குத் தெரிந்தே)  இந்த நக்ஸல்பாரி இளைஞர் குழுக்களில் – நன்கு படித்த, நேர்மையான, செயலூக்கம் கொண்ட பலர் இருந்தனர், அவர்களுடைய தலைவர்கள் (குறிக்கோட்களும் நடைமுறைகளும் ஒப்புக்கொள்ளமுடியாது இருந்தாலும்) அவர்களளவில் ஓரளவுக்கு மதிக்கப்படக் கூடியவர்களாகவே இருந்தனர்  – ஆனால், இக்காலங்களில் இந்தக் குழுக்கள், வெறும் ஆயுதம் தாங்கிய பொறுக்கிக் கும்பல்களாக மாறிவிட்டன.

ஒருவேளை, மாவோயிஸத்தின் நீண்டகாலத் தாக்கத்து என்பது பொறுக்கிகளை, ஆயுதம் தாங்கிய பொறுக்கிக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல்தானோ? யோசித்துப் பார்த்தால், இந்தக் கந்தறகோள காமிஸார்கள் பொறுக்கிகளாக மாறாவிருந்தால், சீனாவில் ஆகியிருப்பது போல பெருவூழல் முதலாளிகளாகத் தான் ஆகியிருப்பர்.  ஆனால், பின்னது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான்.

எப்படி இருந்தாலும், மானுடத்தின் அடிப்படைகளுக்கு கோர எதிர்மறைகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மாவோயிஸ்ட்கள், நக்ஸல்பாரிகள் –  விஷக் கிருமிகள்; ஆக, இவர்கள் தயவுதாட்சணியமில்லாமல் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள் என்பதில், எனக்குச் சந்தேகமே இல்லை.

ஏனெனில், அடிப்படை மானுடத்தன்மையே இல்லாத இந்த ஜந்துக்களை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை  —  மானுடத்தின் நீதிகள், விழுமியங்கள் போன்றவற்றின் மூலமாக கண்டுகொள்ள முடியாது.  ஏனெனில் சமூக மேன்மைகளுக்கும், வளர்ச்சிகளுக்கும் இவர்களுக்கும் – ஒரு சுக்கு தொடர்புமில்லை.

-0-0-0-0-0-0-0-0-0-

சரி. கீழே இன்னொரு காரணம், மோதி பிரதமராகவேண்டும் என்பதற்கு; அதாவது, இவரைப் போன்ற தைரியசாலி மனிதர், சக்தியுடனும், வீரியத்துடனும் பணிபுரிய முடிந்தால் –  பரந்துபட்ட இந்தியாவுக்கும் அதன் பல்வேறு மக்கள்திரள்களுக்கும் என்ன நடக்கலாம் என்பதற்கு…

www.manjul.com/IndianCartoons/narendra-modi-on-naxalism/ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, கத்தறிக்கப் பட்ட படம்...

மஞ்சுள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, கத்தரிக்கப் பட்ட, பின்புலம் வெட்டப்பட்ட படம்… ஆம். இந்த நக்ஸல் கூலிப்படையினரை எதிர்கொள்ள, அடிப்படையில், இவர்களுடைய அராஜகங்களை சகித்துக் கொள்ளவே முடியாத மனவுறுதி வேண்டும். அது மோதிக்கு நிச்சயம் இருக்கிறது என்பது என் கருத்து.

நியமத் அன்ஸாரி பற்றிய மேலதிக விவரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், கீழ்கண்ட இரண்டு (ஆங்கில மூல) சுட்டிகளைப் படித்தால் ஒரளவுக்கு இவரைப் பற்றி, இவருடைய கொலையின் பின்புலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்: (1)  நியமத் அன்ஸாரியின் கொலை; (2)  Statement on the killing of Niyamat Ansari and “apology” by the CPI (Maoist).

பின்குறிப்பு: நேற்று (சனிக்கிழமை) நான், என் பள்ளிக் குழந்தைகளுக்கு – காலை கூட்டுப் பிரார்த்தனையின்பின் சுமார் 20 நிமிடம் எடுத்துக்கொண்டு – நியமத் அன்ஸாரி அவர்களின் கதையைச் சொன்னேன். பல குழந்தைகளுக்குப் பாவம், கண் கலங்கிவிட்டது.  நக்ஸல்பாரிகளைப் பற்றி, கூறுகெட்ட வன்முறையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் சொன்னேன். பின்னர் அவர்கள் கேட்டார்கள்,  நம்மூரிலும் இந்த MNREGA வேலை நடந்ததே? அதிலும் ஊழல்தானா? ஆமென்றேன். மாலையில் போய் ஊர்த்தலைவரிடம் கேட்கிறோம் என்றார்கள். முதலில் உங்கள் பெற்றோர்களிடத்தில் பேசுங்கள், பிறகு பார்க்கலாம் என்றேன்.

… என்னால் ஒரு குழந்தையாவது, பிற்காலத்தில் ஒரு வெறுக்கத்தக்க மாவோயிஸ்ட்டாக ஆகாமல் இருந்தால், அதை என் விருதாகக் கருதுவேன். ஆம், இது என்னுடைய அரசியல்தான்.

-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பக்கங்கள்/பதிவுகள்:

One Response to “இதுதாண்டா மாவோயிஸம்! :-(”

  1. சான்றோன் Says:

    நக்சல்பாரிகள் மட்டுமல்ல…..இடதுசாரி சித்தாந்தமே அழிவுசக்திதான்…..

    அரளிச்செடியில் அடியென்ன? நுனியென்ன ? எல்லாம் விஷம்தான்……

    என்ன….மார்க்சிஸ்டுகள் ஸ்லோபாய்சன்…… நக்சலைட்டுகள் சயனைட்……


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...